கடிதங்கள்

bu

மங்காப் புகழ் புத்தர்

டெசுக்காவின் புத்தர்

வணக்கம்.

இன்று மதுரை ரயிலடியில் உங்களைப் போன்றே ஒருவர் பாண்டியன் ரயிலுக்கு அவசரமாக போய் கொண்டிருந்தார். ஒருவேளை நீங்கள்தானோ. ஒரு புன்னகையை விடுப்பதற்குள் கடந்துவிட்டதை நினைத்து எழுதுகிறேன். உங்களை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி

கண்ணன் கே

அன்புள்ள கண்ணன்

சுந்தரராமசாமியின் யாரோ ஒருவனுக்காக என்னும் கவிதை ‘அச்சு அசலாக என் நண்பனைக் கண்டேன்” என்று தொடங்கும். “அவ்வாறு எண்ணாமலிருந்தால் அவனே வந்திருப்பான்” என முடியும்.

நீங்கள் ஒரு புன்னகை அளித்திருக்கலாம்.

ஜெ

அன்புள்ள ஜெமோ ,

பிரபஞ்சனை  பற்றி  தங்கள்  எழுதும் பொழுது “தன் எல்லைகளைக் கடந்து தன் கனவுகளை அடையும் எழுத்தை உருவாக்க அவருக்கு சாத்தியப்படவில்லை. அதற்குக் காரணம் அவர் எழுத்தையே வாழ்வாக தெரிவுசெய்துகொண்டது”. இவ்வாறு எழுதி உள்ளதை  பார்த்தால்  ஒருவன்  எழுத்தாளனாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி செல்ல முடியாது என்பது எதார்த்தம் இது சற்று வருத்தம் அளிப்பதாகவே உள்ளது .

அன்புடன்

நாகூர்ப்பிச்சை

அன்புள்ள நாகூர்ப்பிச்சை,

இதில் வருத்தமளிக்க என்ன உள்ளது? உலகமெங்கும் இன்றுள்ள நடைமுறை இது. சென்றகாலங்களில் நிலப்பிரபுத்துவமுறை கலை இலக்கியங்களைப் பேண சில அமைப்புக்களை உருவாக்கியது. இன்றைக்கு அத்தகைய அமைப்புகள் எதுவும் ஜனநாயகத்தில் இல்லை. ஜனநாயகம் மக்களின் அதிகாரம். ஆகவே மக்களுக்குரியதே புகழும் பணமும் பெறுகிறது. மக்களை கடிந்து வழிநடத்தும் நிலையில், மக்களுக்காக விலகிநின்று செயல்படும்நிலையில் இருக்கும் எவருக்கும் மக்களின் ஆதரவு இருக்க வாய்ப்பில்லை. இதை ஒன்றும் செய்யமுடியாது.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

அவர்களுக்கு, வணக்கம்.

டெசுக்காவின் புத்தரை நானும் வாசித்து வருகிறேன். இது குறித்து கருத்து கூறிய திரு.செல்வக்குமார் ஜப்பான் மற்றும் முரகாமி குறித்து சில பொது விமர்சனங்களை பதிவு செய்துள்ளார். நான் முரகாமியின் அனைத்து படைப்புகளையும் வாசித்தவன். பல ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் விரிவாக பயணம் செய்தள்ளேன். தனிமை மற்றும் வாழ்வின் அர்தமற்ற கணங்களை முரகாமி தனி பாணியில் எழுதினார். மாற்று கருத்தும் உண்டு.

ஆனால் உலகபுகழ்பெற்ற நூலில் நமக்கு சராசரயான அனுபவமே கிடைக்கும் என்பது சரியாகாது. பல தரப்பினரும் வாசிக்கூடிய படைப்பாக இருப்பதாலேயே எதுவும் சராசரி படைப்பாகவோ தனித்தன்மை இழந்ததாகவோ ஆகாது.

அன்புடன்

பா.ரவிச்சந்திரன்

அன்புள்ள ரவிச்சந்திரன்

நான் சொன்னது ஒரு பொதுவான பதிவுதான். எதன்பொருட்டு உலகப்புகழ்பெறுகிறது, எவர் நடுவே உலகப்புகழ் அமைகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56
அடுத்த கட்டுரைகும்பமேளா கடிதங்கள் – 2