காலாட்டா கல்யாணம்!

Kalattakalyanam

ஒருவர் வீடுதேடி வந்தார். தாடியுடன் சோர்ந்த முகம், பட்டன் பிய்ந்த சட்டை என இருந்தபோதே தெரிந்தது, உதவி இயக்குநர் என்று. “வாங்க” என்றேன். கையிலிருந்த மாபெரும் கோப்பு வேறு நம்பிக்கையூட்டியது, ஒருவேளை ராஃபேல் ஊழல் சம்பந்தமான ஆவணங்களாக இருக்கலாமோ? திரைக்கதை என்றால் இப்படி இருக்காது. ஒருவேளை தொலைக்காட்சி தொடரோ? ஆனால் அதற்கு முழுக்க எடுத்து எடிட்டிங் முடிந்த பின்னர்தானே திரைக்கதை வசனம் எழுதுவார்கள்?

உதவி இயக்குநர் அமர்ந்தார். டீ குடித்தார். குரலை மீட்டுக்கொண்டு “ஒரு கத வச்சிருக்கேன் சார், படம்பண்ணணும்” என்றார். படம் என்பது பண்ணப்படவேண்டியது என்பதில் ஓர் ஒத்திசைவு உள்ளது. பண்ணுவதுதானே பண். ஆங்கில fun அல்ல. அது ஒரு ஹிட் கொடுத்தபிறகு. “சொல்லுங்க” என்றேன். “நம்ம படத்தோட தலைப்பு வேலண்டைன்ஸ் டே” என்றார். “ஏற்கனவே காதலர்தினம்னு ஒரு படம் வந்திருக்கே?” என்றேன். “ஆமா சார், ஆனால் இது வேலண்டைன்ஸ் டே” என்றார். “எங்கவீட்டு வேலன்னு கூட ஒரு படம் வந்திருக்கு. வருவான் வடிவேலன்னு கூட…” அவர் “இதுவேற சார்” என்றார். “சரி” என்றேன்.

“நம்ம படம் காஃபிடேயிலே ஆரம்பிக்குது” என்றார். “இல்ல, வேலண்டைன்ஸ் டேன்னீங்க?” அவர் பொறுமையாக “சார் காஃபிடேங்கிறது ஒரு ஓட்டல். அங்கதான் லவர்ஸ் சந்திப்பாங்க. ஒரு காப்பிய சாப்பிட்டுட்டு மத்தியான்னம் முழுக்க பேசிட்டிருக்கலாம்.” நான் “ஓகோ” என்றேன். தொடர்ந்து “அது ஒரு ஹாலிடே” என்றார். “இல்ல, காஃபிடேன்னீங்க?” அவர் பொறுமையை திரட்டுவதைக் கண்டு “ஸாரி” என்றேன். “எவ்ரிடே அங்க அவங்க ரெண்டுபேரும் சந்திக்கிறதுண்டு.” நான் மெய்யாகவே குழம்பிவிட்டேன். “என்னடே இது?” என்று மனதுக்குள் கேட்டேன்.

அவரை ஆறுதல்படுத்துவதற்காக “சரி சரி” என்றேன். “அன்னிக்கு வேலண்டைன்ஸ் டே. நம்ம ஹீரோ எல்லா டேயையும் கொண்டாடுபவர். அதுக்காக காலையிலேயே கூகிள் புரஃபைல்ல பாத்திருவார். மதர்ஸ்டே, ஃபாதர்ஸ் டே, சிஸ்டர்ஸ் டே, சித்தப்பா டே எல்லாத்தையும் கிஃப்ட் குடுத்து கொண்டாடுவார். ஆர்கிமிடீஸ் டேன்னு ஒன்னைக்கூட கொண்டாடுவார்னா பாத்துக்கிடுங்க”.

நான் “அது என்னது?” என்றேன். “அன்னிக்கு காலம்பற குளிச்சுட்டு துணியில்லாம ஓடணும்… சுரேகா சுரேகான்னு கத்திக்கிட்டு.” நான் “ஓ” என்றேன். அவர் ஜாக்ரதையாக “ரூமுக்குள்ளே ஓடினாப்போரும்” என்றார். ”பாருங்க, அந்தமட்டும்…” என நான் ஆறுதல்கொள்ள அவர் “ஆனா அதை செல்ஃபி எடுத்து டிக்டாக்லே போடணும்” என்றார். பீதியுடன் “அதை காட்டுறோமா?” என்றேன். “இல்ல, நம்முளுது யூ செர்டிபிகெட் படம்… நெட்ப்ளிக்ஸ்ல சான்ஸ் இருந்தா அதையும் எடுத்துரலாம்.” நான் பெருமூச்சுடன் தலையசைத்தேன்.

“இப்ப அவங்க ரெண்டுபேரும் காஃபிடேயிலே சந்திக்கிறாங்க இல்ல?” நான் கவனமாக “ஹாலிடேயிலே” என்றேன். ‘ஆமா, ஆனா அது வேலண்டைன்ஸ் டே” என்றார். “சரிடே” என அறியாமல் சொல்லிவிட்டேன், அவர் கவனிக்கவில்லை. “அவங்க ரெண்டுபேரும் அங்க உக்காந்து ஒரே காபிய மாறிமாறி குடிக்கிறாங்க”. நான் “ஏன்?” என்றேன். “அங்க காஃபி ரொம்ப காஸ்ட்லி சார்.” நான் “ஓ” என்றேன்.

“அப்ப நம்ம ஹீரோயின் டாய்லெட்டுக்கு ஒண்ணுக்குப்போறா” நான் “பாவம், போய்க்கட்டும்… அங்க நாம பாட்டுபோடுறோமா?” என்றேன். “ஆமா’ என்றார். “அப்ப யாரோ ஒரு பொண்ணு வந்து அந்த டேபிள்லே ஹீரோ முன்னாடி உக்காருது. ஹாய்னு சொல்லுது” நான் “நாட்! நாட்!” என சொல்லிக்கொண்டேன். “ஹீரோ ஹாய்னு சொல்றார். அந்தப்பொண்ணு யாருக்கோ ஒரு வாட்ஸப் பண்ணுது”

“அப்பதான் சடார்னு இந்துமஹாசபை இஸ்லாமிய மஹர்சபை ரெண்டு பேரும் அல்லாஹூ அக்பர், பாரத் மாதாகீ ஜேன்னு கலந்து கட்டி கூப்பாடு போட்டுட்டு உள்ளே வந்திடறாங்க. பச்சத்துண்டு மஞ்சத்துண்டு பச்சமஞ்சத்துண்டுன்னு ஒரே ரகளை. அங்க இருக்கிற ஜோடிகள அப்டியே கோழிய அமுக்குறா மாதிரி அமுக்கி கையச் சேத்துக் கட்டி தூக்கிட்டு போறாங்க”

நான் பீதியுடன் “ரேப்பா?” என்றேன். “இல்ல” என மந்தஹாசம் செய்தார். “கல்யாணம்!”. நான் “அடப்பாவமே” என்றேன். “கொடூரமான டிவிஸ்டா இருக்கே”. அவர் மகிழ்ந்து ‘ஆமா சார். ஜோடிகள அடிச்சு உக்காரவச்சு கையிலே மஞ்சக்கயித்தக் குடுத்து கட்ரா தாலியன்னு சொல்லி செம அடி. பல்லுமுழியெல்லாம் பேந்துடுது. டேப்ல மந்திரம்போடுறாங்க, மாங்கல்யம் தந்துனானே. அந்தப்பக்கம் முஸ்லீம் மந்திரம், அங்க ஒரு ஜோடி கதறி அழுதிட்டு இஸ்லாமிய கல்யாணம் பண்ணுது. நம்ம ஹீரோ அந்த யாருன்னே தெரியாத பொண்ணு கழுத்திலே தாலிய கட்டுறான்”

நான் பெருமூச்சுவிட்டேன். “பேத்தோஸ்!” என்றார் உதவிஇயக்குநர். “அவங்க ஒண்ணுமே சொல்லலையா?” என்றேன். “சொன்னாங்க… ஆனால் அடிபட்டு உதடு வீங்கியிருந்ததனால அவங்க பேசினது மூன்றாம்பிறை கிளைமாக்ஸ்ல கமல் பேசுற மாடுலேஷன்ல கேட்டுது. யாருக்கும் ஒண்ணும் புரியல…”

நான் “ஆத்தா ஆடுவளத்தாங்க… அதானே?” என்றேன். அவர் இரக்கத்துடன் “அதுமாதிரி ஒண்ணு” என்றபின் “அந்தப்பக்கம் ஹீரோயின் வந்து கதறுறா… அப்ப ஒருத்தன் ஓடிவர்ரான். அவன்தான் நம்ம ஹீரோ கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணோட ஹஸ்பெண்ட்”

நான் எழுந்துவிட்டேன். “அய்யயோ!” என்றேன்.  “அவன் குலுங்கிக்குலுங்கி அழறான் சார்” என்றார். “அங்க நாம பாட்டு போடலையே” என்றேன். “போடுறோம்… இளையராஜாவே பாடுறார், நான் எங்கிட்டுப்போவேன், என்னன்னு சொல்வேன், எப்டி பாய்போடுவேன், என்னப்பெத்த கிளியே, தேன்மானேன்னு உருகி உருகி பாடுறார்”

நான் வாயடைந்து அமர்ந்திருந்தேன். “இப்ப அடுத்த டிவிஸ்ட் வைக்கிறோம் சார். கல்யாணம் பண்ணிவச்சவங்களுக்கு ஒரே செண்டிமெண்ட். கட்ன தாலிய அவுக்கக்கூடாது. அதனாலே அவங்க ஹீரோயினுக்கு அந்த கணவனை கட்டிவைக்கிறாங்க”.

நான் “வேடிக்கையா இருக்கே” என்றேன். “வேடிக்கைக்கு வேற காமடி டிராக் இருக்கு… யோகி பாபு ஒரு தாலியோட அலையறார். எனக்கு கல்யாணம் பண்ணிவைங்கய்யான்னு… ஆளுங்க தெறிச்சு ஓடுறாங்க.” நான் “நியாயம்” என்றேன். “இன்னொரு டிராக் தம்பி ராமையா… அவரும் அவரோட காதலியும் லவ்வு. அவங்களும் நாங்களும் லவ்வர்ஸ்னு வண்டியிலே ஏறுறாங்க.. அவங்கள எல்லா வண்டியிலே இருந்தும் எறக்கிவிட கடைசியிலே அவங்க ஆம்புலன்ஸிலேதான் ஒண்ணா சேந்து போறாங்க. பெரிசுங்க லவ்வே பண்ணக்கூடாதான்னு கண்ணீரோட கேக்குறாங்க”

நான் ஒருமாதிரி ‘செட்’ ஆகி “ரைட்!” என்றேன். “அப்றம் கதை பல டிவிஸ்ட்களோட மேலே போகுதுசார்… அந்தக் கணவன் தன் மனைவிய நான் இன்னும் டைவர்ஸ் பண்ணல்லன்னு இங்க வர்ரான். இவரு நான் அவள மறக்கமுடியாதுன்னு அங்க போறான். இவங்க ரெண்டு ஜோடியும் பஞ்சாயத்துக்கு அந்த இந்துத்துவ ஆளுங்கள தேடிப்போறாங்க. அவங்க பாரத்மாதாகீ ஜேன்னு கூச்சல்போட்டுட்டு தப்பி ஓடுறாங்க… இவங்க துரத்துறாங்க. என் தாலிக்கு பதில்சொல்லுடான்னு ஹீரோயின் ஆக்ரோஷமா கேக்குறா. இவ்ளவுபெரிய கேள்வீன்னு தெரியாது சிஸ்டர்னு அவங்க அழுதுகிட்டே பதில் சொல்றாங்க…”

நான் சோர்வுடன்  “கிளைமாக்ஸ் என்ன?” என்றேன். “அதான் சார் யோசிக்கணும். அதுக்குத்தான் உங்களத் தேடிவந்தேன். அடுத்த வருஷம் வேலண்டைன்ஸ்டேயிலே கிளைமாக்ஸ்”. நான் “ஹாலிடேயிலே” என்றேன். “ஆமாசார்” என்றார். நான் “மைக்கேல் ஃபாரடேயிலே” என்றேன். “சார் அது காஃபிடே” என்றார். “ஆமா, அங்கதான்” என்றேன். “ஆனா அங்க என்ன நடக்கும், அதான் தெரியலை” என்றேன்.

“என்ன சார் பண்ணலாம்?” என்றார் சோகமாக. “இப்டி பண்ணலாம்… ஹீரோ ஹீரோயினை கொல்றார். ஹீரோயினோட ஹஸ்பெண்டை வேற யாராவது கொல்றாங்க” என்றேன். அவர் “சார், அப்ப இது கில்லர்ஸ்டே ஆயிரும் சார்… அது வேறடே” நான் கடுமையாக “மரியாதையா பேச கத்துக்கிடுங்க” என்று சொன்னபின் “வேற என்னென்ன டேடே இருக்கு?” என்றேன்.

“ஓல்ட்மேன்ஸ்டேன்னு ஒண்ணு இருக்கு” என்றார். “ஆ, அம்பது வருசம் கழிச்சு நாலுபேரும் அங்க சந்திச்சுக்கிடறாங்க… கூட நாப்பது பேர் இருக்கிறாங்க. எல்லாருமே கிழவாடிகள்” என்றேன். “அவங்க யாரு?” என்றார். “இதேமாதிரி அடுத்தடுத்த வருசங்களிலே இதே கும்பல் புடிச்சு கட்டிவச்ச கப்பிள்ஸ். ஒவ்வொருத்தருக்கும் நாலஞ்சு கணவன் மனைவிங்க… ஒண்ணுரெண்டு கட்டாயக் கல்யாணத்துக்குப் பின்னாடி இவங்கள்லாம் வேணும்னே பிப்ரவரி 14 அன்னிக்கு கெளம்பி வெளிய லாந்தி இவனுங்ககிட்ட திட்டம்போட்டு மாட்டி கல்யாணம் கட்டிக்கிட்டே இருந்திருக்காங்க” என்றேன்

“அட!” என்றார் “இது நல்ல நாட்டா இருக்கு சார்”. நான் “அவங்களோட புள்ளைங்கள்லாம் வெளியே பெரிய கூட்டமா நின்னுட்டிருக்காங்க… அவங்க மேலே காமிரா பறந்துபோகுது…” அவர் “மழைபெஞ்சா நல்லாருக்கும் சார்” என்றார். “ஆமா, பெய்யணுமே” என்றேன். “அப்ப ஒரு மியூசிக் பிட் போட்டுடலாம்… மெட்ராஸே மழையிலே நனைஞ்சு நின்னிட்டிருக்கு” என்றார். நான் “ஜோர்!” என்றேன்.

“அப்ப உக்காந்திடலாம் சார்” என்றார் ஆர்வமாக. “ஆனா பேர மாத்தணுமே” என்றேன். “ஆமால்ல?” என்றபின் “மறுபடியும் வேற கிளைமாக்ஸ் யோசிப்போம் சார்” என்றார். “நம்ம படத்தோட பேரு வேலண்டைன்ஸ் டே இல்ல?” என்று இன்னொருமுறை கேட்டபின் மோவாயை தடவினேன். பின்னர் “ஆ! நாம பேர கலாட்டாக் கல்யாணம்னே வச்சிருவோம்..”.அவர் “ஆனா அது பழைய படம்ல?” என்றார். “நம்முளுது வேற … இது காலாட்டா கல்யாணம் ” என்றேன்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி : வீரப்பிரகாசம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-54