அலகிலா ஆடல்- சைவத்தின் கதை வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் விழைகிறேன்.
இது ஒரு சாதாரணக் கடிதம் தான். ஐயம் கேட்கும் வாசகர் கடிதம் அல்ல. வேலைப்பளுவின் மத்தியில் (குறிப்பாகச் சொன்னால் வெண்முரசுப் பளுவின் மத்தியில் ) இதைப் படிக்கிறீர்கள் என்றால், பிறகொரு முறை ஆறுதலாகப் படித்து பதிலிறுக்கலாம்.
என் “அலகிலா ஆடல்: சைவத்தின் கதை” நூல் தங்கள் கரம் சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தலைப்பிலிருந்து அதன் உள்ளடக்கத்திற்கு சில தகவல்களைத் தந்தது வரை எனது நூலில் உங்கள் பங்கு இருக்கிறது. எனவே இந்நூல் பற்றி உங்களிடம் சில சொற்கள் கூறியாக வேண்டும் என்பதற்காக இந்நூலும் இம்மடலும்.
இம்மடல் அதைத் தபாலில் சேர்த்த அன்றே எழுதியது. எப்படி எழுதுவது, எதை எழுதுவது என்று புரியாமல் பல தடவை அழித்துத் திருத்திய வரிகளைத் தான் இப்போது படிக்கிறீர்கள். ஏனெனில், இது உங்களுக்கான என் முதல் மடல். ஆனால் உங்கள் எட்டாண்டு வாசகன் நான். எனவே பரவசம், அச்சம், தயக்கம் எதிலும் குறையில்லை.
ஈழத்தின் கீழைக்கரையின் ஒரு கோடியில் அமைந்திருக்கும் என் பிறந்தகம், அங்குள்ள கண்ணகி கோவிலால் புகழ் பெற்றது. கண்ணகியின் கண்காணிப்பில் நான் வளர்ந்த சூழல், தமிழுக்கும் சைவத்துக்கும் அணுக்கமானது. தமிழ், பண்பாடு, வரலாறு என்பவற்றை வாசித்தபடி, நான் இணையத்துக்கு அறிமுகமானது இருபது வயதில். இங்கு பலரையும் புரட்டிப்போட்ட அதே “நான் இந்துவா?” தான் நானும் உங்கள் தளத்தில் வாசித்த முதல் கட்டுரை.
மேற்படிப்பு அறிவியல் துறையிலேயே இருந்தாலும், தனிப்பட்ட ஆர்வம் சமயம், இலக்கியம், வரலாறு என்றே சுற்றி வந்தது. அதன் பயனே இந்த “அலகிலா ஆடல்: சைவத்தின் கதை”. இந்நூல் தொடர்பாகச் சொல்ல விரும்பியதையெல்லாம் அதே நூலின் முன்னுரை “திருச்சிற்றம்பலத்தி”லும், எனது இந்தப் பத்திரிகை செவ்வியிலும் சொல்லி விட்டேன். எஞ்சியிருக்கும் சில சொற்களை இங்கே பகிர்கிறேன்.
‘அலகிலா ஆடலை’ எழுதுவதற்கு பல ஆய்வேடுகள் – நூல்களிலிருந்து சுமார் ஓராண்டு காலம் சேமித்த தகவல்கள் உதவின. உண்மையைச் சொன்னால், அந்தத் தகவல்களைச் சேமித்த போது நூல் எழுதும் எண்ணம் எதுவும் இருக்கவில்லை. விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதுவதற்குத் தான் அந்த நூல்களை முதலில் படிக்க ஆரம்பித்தேன். “இப்படியா? அப்படியா?” என்று மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்த புத்தம்புது ஆய்வுத்தகவல்கள்.
ஐம்முகமும் பதின்கரங்களும் கொண்டு வீற்றிருக்கும் அன்னை காயத்திரி, பிரமனின் துணைவி அல்ல; அவள் சதாசிவனின் தேவி. தும்புரு, தம்புரா மீட்டிக்கொண்டிருக்கும் ஒரு வெறும் கந்தர்வன் அல்ல; அவன் வாமாசார சைவத்தின் முழுமுதல் இறைவன். சண்டிகேசுவரர் மும்முறை கைதட்டி நூலைப் போட்டு வழிபட்டுத் திரும்பும் சாதாரண சிவபரிவாரம் அல்ல; அவரே பாசுபதத்தின் முழுமுதல் இறைவன். இப்படி எத்தனை எத்தனையோ.
சைவம் மற்றும் தமிழ் தொடர்பாக தமிழ் விக்கிப்பீடியாவிலோ ஆங்கில விக்கிப்பீடியாவிலோ கிடைக்கின்ற தகவல்களெல்லாமே வரலாற்று ரீதியில் குறைபாடானவை. அவற்றைத் திருத்தவோ இற்றைப்படுத்தவோ முயலும் போது, தமிழ் – வடமொழி மோதல்கள். சில முன்முடிவுகள், சில கருத்துத் திணிப்புகள் என்பவற்றுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ‘தான் விரும்புவது போலவே வரலாறு இருக்கவேண்டும்; அப்படி இல்லாதது வரலாறு இல்லை’ என்றெண்ணுபவர்களே இங்கு மிகுதி.
விக்கிப்பீடியாவை யாரும் திருத்தலாம். எனவே, ஆதாரங்களோடு இருக்கும் வாசகங்களை போலிக்கணக்கில், போலிப்பெயரில் வந்து திருத்துவது, அழிப்பது, மாற்றுவது அடிக்கடி இடம்பெற்று வந்தது. இதனாலெல்லாம் மனம் வெறுத்திருந்த போது தான் நூல் எழுதும் எண்ணம் உண்டாகியது. ஆதாரங்களோடு எழுதுகின்ற நம் புத்தகத்தை யார் வந்து திருத்தமுடியும்?
இப்படிப் பிறந்தது தான் ‘அலகிலா ஆடல்’. கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர், உடன்பிறவா சகோதரர் மரு.கி.பிரதாபன் உதவியில் இந்த நூல் வெளியீடு சாத்தியமாயிற்று. நூல் உருவாகிக் கொண்டிருந்த போது சில உரையாடல்கள் மூலம் அந்நூலை வளப்படுத்திய ந.சிவேந்திரன் அண்ணாவுக்கும், நூல் வெளியீட்டின் பின்னர் இந்நூல் தொடர்பான விரிவான உரையாடல் மூலம் புதிய கோணங்கள் பலவற்றை அறிமுகம் செய்த பேராசிரியர் சி.மௌனகுரு ஐயாவுக்கும் இந்த இடத்தில் நான் நன்றி பகரக் கடமைப்பட்டவன்.
தமிழின் பெரும்பாலான இலக்கியங்கள் ‘உலகத்தை’ப் பாடியே தொடங்குகின்றன. உலகளாவிய சைவத்தைப் பாடும் எனது நூலுக்கும் பெரிய புராணத்துக்கு ஈசன் தந்த முதல் வரியான “உலகெலாம்” எனும் முதற்சொல்லையே பெயராகச் சூட்டவேண்டும் என்று ஆசை. அது நிறைவேறவில்லை. அதே பெயரில் பல நூல்களும் ஏற்கனவே வந்திருந்தன. வேறு பெயர் சிந்தித்தபோது அதே பாடலின் “அலகில் சோதியன்” எனும் வரி கண்முன் வந்து நின்றது. மிகச்சிறு வயதிலிருந்தே என்னைக் கவர்ந்த வரி அது. அந்தச் சொல் என்னை இட்டுச் சென்ற இடம், உங்கள் ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை பற்றிய கட்டுரையில் வருகின்ற ‘அலகிலா ஆடலுக்கு’! நூலின் பெயரான அலகிலா ஆடல் மலர்ந்தது இப்படித்தான்.
நல்லசாமிப்பிள்ளை கட்டுரை மாத்திரமன்றி, உங்கள் வேறு நூல்களும் கட்டுரைகளும் இந்நூலின் ஆக்கத்தில் பல இடங்களில் உதவியிருக்கின்றன. மிஷல் தனினோவின் “சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு” பற்றி அறிந்தது உங்கள் தளத்தில் தான். கொற்றவையின் முதல் பாகம் நீரில் வருகின்ற மூவிழியன் சிவன், என் கனவுகளில் அடிக்கடி வருபவன். (பிறந்த மண் காரணமாக கண்ணகி மீது பித்துக்கொண்டவன் என்பதால் உங்கள் ‘கொற்றவை’யும் ‘கொடுங்கோளூர் கண்ணகி’யும் என் மனதுக்கு மிக நெருக்கமானவை)
இந்நூலாக்கத்தில் உங்கள் தளம் பல இடங்களில் முரணியக்கமும் ஆற்றி இருக்கிறது. குறிப்பாக இரண்டைச் சொல்லலாம். ஒன்று, ஆதாரம் எதுவுமேயின்றி மீளமீளச் சொல்லப்படும் ‘சங்கரரின் ஷண்மதஸ்தாபனம்’ என்ற கோட்பாட்டை மறுதலிப்பது. அடுத்து, ‘மூன்று தளங்களில் இயங்கும் இந்து மதம்’ என்ற உங்கள் கருத்திலிருந்து கண்டடைந்த ‘சமகால ஆறு இந்துப்பிரிவுகள்’.
பல மேலைநாட்டுப் பேராசிரியர்களின் பல ஆய்வேடுகள் இந்நூலின் ஆக்கத்தில் உதவிய போதும், நான் குறிப்பாக இரசித்தது, பேராசிரியர் அலெக்சிஸ் சாண்டர்சனை. சைவம் தொடர்பாக அவர் நிகழ்த்தியுள்ள ஆய்வுகள் அற்புதமானவை. அதிலும் டோக்கியோ பல்கலைக்கழக வெளியீடான “Genesis and Development of Tantrism” (2009) எனும் நூலில் இடம்பெற்ற அவரது மகத்தான ஆய்வுக்கட்டுரை ‘The Saiva Age‘ இந்நூலின் ஆக்கத்துக்கு பெரும்பங்காற்றியிருக்கிறது. தாந்திரீகம், சைவம், பௌத்தம், சைனம் தொடர்பாக அவரது நூற்றுக்கணக்கான ஆய்வேடுகள் தரவேற்றப்பட்டிருந்த www.alexissanderson.com என்ற வலைத்தளம் இரண்டாண்டுகளாக இயங்கவில்லை என்பது மிகப்பெரிய இழப்பு நமக்கு..
இந்த நூலை வெளியிடும் நாள் நெருங்க நெருங்க, நான் பொறுமை இழந்திருந்தேன். ஏனென்றால், எழுதியவற்றை விட, எழுதாமல் விடப்பட்டவை மீதே என் அச்சமும் கவலையும் இருந்தது. எடுத்துக்காட்டாக, இந்நூல் ஹரப்பா நாகரிகக் காலத்திலேயே சைவத்தின் தொடக்கத்தை ஆரம்பிக்கிறது. மாறாக, கற்காலம், வெண்கலக்காலம், இரும்புக்காலம் என்ற பின்னணியில் வரலாற்றைத் தொடங்க முயன்றிருக்கலாம் என்பதை பேராசிரியர் சி.மௌனகுரு சுட்டிக்காட்டியிருந்தார். சைவமே தாந்திரீகத்தின் ஊற்றுமுகமாக இருக்க, நீங்கள் சொல்கின்ற “சோழர்கள் சைவத்தைப் போற்றினார்கள், ஆனால் தாந்திரீகத்துக்கு எதிரானவர்களாக இருந்தார்கள்.” என்ற வாதத்துக்கு வலுவான எதிர்வாதங்களை சேகரித்துக்கொண்டிருந்தேன். அவையும் இந்நூலில் இடம்பெறவில்லை. சைவத்தின் சமகாலப் போக்கை விரிவாக ஆராயும் இறுதிப்பகுதியான “நேற்று – இன்று – நாளை” பாகங்கள் மிகமிகச் சுருங்கிவிட்டனவோ என்று படுகிறது. அதிலும் 20ஆம் நூற்றாண்டில் நாவலருக்குப் பின்னும் ஈழத்தில் தொடர்ந்த சைவ மறுமலர்ச்சியையும், நாராயண குருவின் “ஈழவ சிவன்” முதலான முக்கியமான தகவல்களையும் தவறவிட்டுவிட்டமை மிகவும் உறுத்துகிறது.
எவ்வாறாயினும், எந்தவொரு படைப்பும் படைப்பாளிக்கு நூறு விழுக்காடு திருப்திகரமாகவோ முழுத்தகவல்களுடனோ வெளிவரமுடியாது என்பதே மெய். “உன் நூல், ஒரு கல்விப்புல வாசகனுக்கு சைவம் தொடர்பான மேலோட்டமான அறிமுகத்தை வழங்கவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. அது சைவம் தொடர்பான கலைக்களஞ்சியமோ, பொதுவாசகன் ஒருவனுக்குரிய அடிப்படை விளக்க நூலோ அல்ல” என்று கூறி சுய ஆறுதல் கொள்ள வேண்டி இருந்தது.
நண்பர்கள் பலர் “இந்நூல் அழுத்தமான நடையில் இருக்கிறது” என்றார்கள். இது ஆய்வுநூல். இதை சுவையான கதை போல எழுத முடியாது எனப் பதிலளித்தேன். ஒரே ஒரு நண்பன் மட்டும் “உன் எழுத்தில் ஜெமோவின் தாக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது” என்றான். அவன் உங்களைத் தொடர்ந்து வாசிப்பவன்.
ஒரு விமர்சகரின் பார்வையிலிருந்து இந்நூல் பற்றித் தாங்கள் சில சொற்கள் கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அது உங்கள் வாசகனாக, ஒரு வரலாற்று ஆர்வலனாக, நான் எந்தளவு வெற்றியடைந்திருக்கிறேன் என்பதை மதிப்பிடவும், என்னைத் திருத்திக்கொள்ளவும் அவசியமானது. என்னைப் பொறுத்தவரை, ஆலமர் செல்வன், அந்த நூலைப் பற்றி, ஆக்குநனிடம் சொல்ல விரும்பும் சொற்கள் அவை.
என் வணக்கங்களும் அன்பும்.
அன்புடன்,
விவேகானந்தராஜா துலாஞ்சனன்,
தம்பிலுவில்,
இலங்கை.
thulanch.blogspot.com
அன்புள்ள துலாஞ்சனன்,
நலம்தானே?
பயணம் முடிந்து வந்ததும் உங்கள் நூலை கண்டேன். வாசிக்கத் தொடங்கிவிட்டேன். முதல்நோக்கில் சாதாரணமாக புரட்டிப்பார்த்தபோதே முக்கியமான நூல் என்னும் எண்ணம் ஏற்பட்டது.
தமிழகத்தில் 1850 முதல் நூறாண்டுகாலம் மெல்லமெல்ல ஒரு சைவ மறுமலர்ச்சி அலை உருவாகி நிறைவுற்றது. சைவநூல்கள் அச்சுக்கு வந்தன. சைவ சித்தாந்தம் மரபார்ந்த கோணத்திலும் ஐரோப்பிய தத்துவசிந்தனைகளின் நெறிகளினூடாகவும் விளக்கப்பட்டது. சைவ வழிபாட்டுமுறைகள், சைவ ஆகமங்கள் ஆகியவற்றைப்பற்றிய ஆழ்ந்த விவாதங்கள் நிகழ்ந்தன. அவற்றினூடாக உருவான தெளிவு சைவம் இன்றைய வடிவை அடைய உதவியது
அன்றைய சைவப்பெரியார்களில் பெரும்பாலானவர்கள் பேச்சாளர்கள். ஞானியார் சுவாமிகள் முதல் மறைமலை அடிகளார் வரை. ஆனால் ஏராளமான நூல்களும் எழுதப்பட்டன. அன்றைய அலை உருவாக்கிய சைவப்பிரகாச சபைகள், சைவசித்தாந்த விளக்கமையங்கள் இன்றும் தமிழகமெங்கும் உள்ளன. பெரும்பாலானவை செயலிழந்துவிட்டன. சாதிச்சங்கங்களாக உருமாறியவை உண்டு. அவற்றின் நூலகங்களில் அன்றைய சைவநூல்கள் பொடிபடிந்து கிடக்கின்றன.
இன்று சைவம் பற்றி பேச ஆளில்லை. சைவத்தை இனவாத அரசியலுடன், மொழிவெறி அரசியலுடன் பிணைத்து எதிர்மறையான மனநிலைகளை வளர்ப்பவர்களே பேச்சாளர்கள் என எங்கும் தெரிகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு அடிப்படைகளே தெரியாது. ஆங்காங்கே அரசியல்மேடைகளில் கேட்ட வெறுப்புப்பேச்சுக்களை சைவத்தைப்பற்றிய எளிய செய்திகளுடன் கோத்து ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
சைவத்தைப் பற்றி மெய்யாக அறியவிழைபவர்கள் தருமபுரம் ஆதீனம் போன்ற உண்மையான அறிஞர்களை தேடிச்சென்றாலொழிய நச்சுக்கிண்ணங்களை மட்டுமே பெறுவார்கள். எங்கோ சைவம் இங்குள்ள திராவிட அரசியலுடன் உரையாடத் தொடங்கியதன் விளைவு இன்று அதிலிருக்கும் காழ்ப்பு. அடிப்படையில் சைவம் ஒரு மெய்ஞானவழி. அதன் முதல்முடிவான நோக்கம் மெய்மையினூடாக வீடுபேறே. அதைவிடுத்து அரசியல்காழ்ப்புகளை சைவம் என்றபேரில் கொட்டுபவர்கள் சைவத்தை அழிப்பவர்கள்.
இன்றைய சூழலில் தமிழில் சைவம் பற்றி மேடைகளில் பேசுபவர்களில் இலங்கை ஜெயராஜ் அவர்களை மட்டுமே கருத்தில்கொள்ளப்படவேண்டியவர் என்று கருதுகிறேன். இச்சூழலில் இத்தகைய நூல் மிக முக்கியமான ஒன்று. ஏற்கெனவே வெளிவந்த நூல்களில் இரா.இராஜசேகரனின் ‘சைவப்பெருவெளியில் காலம்’ ஒரு குறிப்பிடத்தக்க நூல். சைவம் சார்ந்த செய்திகளின் பெருந்தொகை அது. சமீபத்தில் வெளிவந்த நூல்களில் ‘தமிழகத்தில் லகுலீச பாசுபதம்’ [புதுஎழுத்து வெளியீடு] ஒரு ஆழமான ஆய்வுநூல். உங்கள் நூலும் அவ்வரிசையில் வருவது.
விரிவாக வாசித்துவிட்டு எழுதுகிறேன்
அன்பும் வணக்கமும்
ஜெயமோகன்