பால் – மேலும் கடிதங்கள்

mil

நீர்க்கூடல்நகர் – 1

அந்த டீ – ஒரு கடிதம்

பால் – கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

பால் பற்றிய கடிதங்களை பார்த்தவுடன் எனக்கு யாரவது தயிர் பற்றியும் எழுத மாட்டார்களா என்று தோன்றியது. உண்மையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் எதுவுமே இயற்கையாக கிடைக்கும் அல்லது தயாரிக்கப்படும் பால், தயிர் போல தோற்றத்தில் இருக்குமே தவிர தரம், மணம், சுவையில் இயற்கையாக கிடைக்கும் பொருளுக்கு நிகராக இருக்க முடியாது. இது பால், மஞ்சள் தூள் முதல் ஐஸ் கிரீமில் சேர்க்கப்படும் வெண்ணிலா எசன்ஸ் வரை அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும்.

இது அனைவரது வீட்டிலும் உள்ள சமையல் செய்ய தெரிந்த அம்மாக்களுக்கோ மனைவிகளுக்கோ மிகவும் நன்றாக தெரியும். ஆனால் இத்தகைய முழுவதும் செயற்கையான (வெண்ணிலா எசன்ஸ்) அல்லது பாதி செயற்கையான (பால், தயிர்) உணவு பொருள்களுக்கான தேவை சந்தையில் இருந்தே தீரும். ஏனென்றால் இயற்கையாக உற்பத்தி செய்து நுகர்வோருக்கான தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய முடியாது. அப்படியே உற்பத்தி செய்தாலும், சந்தை விலை அதிகமாகும் அதனால் லாபம் குறையும். மேலும் அதிக நாட்கள் வைத்திருந்து உபயோக படுத்த முடியாது. அதனால் உணவு துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து இயற்கையான உணவு பொருளை போலவே இருக்கும் செயற்கை அல்லது பாதி செயற்கையான பொருள்களை உருவாக்குகிறார்கள்.

ஆனால் இத்தகைய பொருட்களை எப்படி பால் என்றும் தயிர் என்றும் அவர்கள் விற்பனை செய்யலாம் என்று எனக்கு புரியவில்லை. பொதுவாக எந்த ஒரு உணவு பொருள் பாக்கெட்டிலும் அதில் உள்ள மற்ற சேர்மானங்களை பற்றி கண்டிப்பாக குறிப்பு இருக்க வேண்டும். அப்போது தான் நுகர்வோருக்கு தான் குடிப்பது இயற்கையான பால் அல்ல என்றும் அது வேறு காரணங்களுக்காக மற்ற பல பொருள்களை சேர்த்து பால் போலவே தயாரிக்கப்படும்  ஒரு பொருள் என்றும் தெரியும். ஆனால் நடப்பது என்னவோ அவையுமே உண்மையான பால் மற்றும் தயிர் போலவே விற்கப்படுகின்றன. இன்னும் சில வருடங்களில் பாக்கெட் பால் தான் உண்மையான பால் போலவும் மாட்டில் இருந்து கரக்கப்படும் பால் சுகாதாரமற்ற அசுத்தங்கள் உள்ள பொருள் என்றும் அதை சுத்தம் செய்து ஆரோக்கியமான முறையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பது போலவும் ஒரு பிம்பம் மிக அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைக்கப்படும். இப்போதே வெண்ணிலா எசென்ஸ் இயற்கையாக ஒரு செடியில் இருந்து கிடைப்பது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவது இல்லை.

பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்படும் பொருட்களில் உள்ள மற்ற சேர்மானங்கள் அனைத்தையும் பாக்கெட்டுகளில் அச்சடித்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதை ஒரு விதியாக கொண்டு வர நுகர்வோர் மற்றும் அரசு முயற்சி செய்ய வேண்டும். இந்த விதி வந்தால், பாக்கெட்டில் இருந்து குடிக்கும் பாலில் – திரவ பால், பால் பவுடர், யூரியா, ஹைட்ரஜன் பெராக்சைடு (இது செப்டிக் ஆன புண்ணை சுத்தம் செய்ய மருத்துவர்கள் பயன்படுத்தும் ரசாயனம்) போன்ற பல பொருட்களும் சேர்க்கப்பட்டு உள்ளன என்பது நுகர்வோருக்கும் தெரியும். எதனால், இப்போது பால் மற்றும் பால் பொருட்களின் மேல் இவை குறிப்பிடப் படுவது இல்லை என்பது எனக்கு புரியவில்லை.

நன்றி.

டாகடர் அருண் குமார்

ஜெ,

வரவர உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிப் புரிய வைப்பது  மிக சிரமமாக உள்ளது. ஆம் வயோதிகத்தின் கரங்கள் உங்களை தீண்ட துவங்கிவிட்டது. வயோதிகர்கள் சொன்னதை நான் அவ்வாறு சொல்லவில்லை என கூறிக்கொண்டே இருப்பார்கள் பிறர் சொன்னதை தாங்களாக ஒரு சொற்களில் கோர்த்து அப்படித்தான் நீ சொல்கிறாய் என திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

நீதித்துறையில் உள்ளது 100% ஊழல் என சொல்வது பூஜ்ஜியம் சதவீதம் என சொல்வதைப்  போலவே அபத்தமானது. நீதித்துறையில் மிக முக்கியமான ஒரு விஷயம் இங்கு ஊழல் மறைக்கப்பட இயலாது. அதாவது தினமும் நீதிமன்றத்திற்கு செல்லும் ஒரு வழக்கறிஞர் அறியாமல் நீதிபதி பணம் பெற இயலாது. நீதித்துறை ஊழியர்கள் வக்கீல் குமாஸ்தாக்கள் மற்றும் காவலர்கள் வரை அனைவருக்கும் அது தெரியும். தமிழகமெங்கும் இதுதான் நிலவரம். ஊழல் செய்யாத ஒருவரை ஊழல் செய்கிறார் என்றோ செய்யும் ஒருவரை நேர்மையாளர் என்றோ எண்ணிக்கொள்வது அல்லது அவ்வாறு சொல்லிக்கொள்வது அனேகமாக நீதித்துறையில் இயலவே இயலாத ஒன்று.

இருபது ஆண்டுகள் வழக்கறிஞராக நீதிமன்றத்திற்குச் தினமும் செல்லும் ஒருவர் நீதித்துறையில் ஊழலின் அளவு என்ன என்பதை அறிந்தே இருப்பார் கூடவே யார் யார் ஊழல்வாதிகள் என்பதையும்.

என்னை இவ்வளவு ஆண்டுகளாக நீங்கள் அறிவீர்கள். நடைமுறை எதார்த்தத்தை மீறி கற்பனையாக ஒரு விஷயத்தை புனைந்து கொள்பவன் அல்ல நான் என்பதையும்.

இப்போதும் சொல்கிறேன்  அவர் ஊழலில் திளைப்பவராக இருந்தாலும் நமது அந்த வழக்கறிஞர் நண்பரை விட தமிழகத்தில் ஊழலின் அளவு என்ன என்பது எனக்கு கூடுதலாக தெரியும். அவரும் இதை ஒப்புக் கொள்வார் என நினைக்கிறேன். மேலும் அதீதமாக ஊழலைப் பற்றி கூறுபவர்கள் புத்திசாலிகள் எனவும் அதை அறியாத அப்பாவிகள் அறியாமையில்  அமர்ந்திருக்கிறார்கள்  எனவும் உங்களைப் போன்றவர்களுக்கு ஒரு எண்ணம் உள்ளது.

நான் சொன்னது இதுதான் “கீழமை நீதித்துறையில் (உயர்நீதிமன்றம் தவிர்த்துு) ஊழல் உள்ளது, அது நான் வந்த 2000 ஆண்டு காலகட்டத்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி  என்பதிலிருந்து  கணிசமாக குறைந்துள்ளது, இப்போது கிட்டத்தட்ட கால்வாசி பேர் தான் ஊழல்வாதிகள் என  சொல்ல முடியும்”

கிருஷ்ணன் ஈரோடு

ஜெ

நான் உணவு ஆய்வாளனாக பணியாற்றி இப்போது உயிர்வேதி ஆய்வாளனாக இருக்கிறேன். பல முறை நான் என் அனுபவத்தில் அறிந்த ஒன்று, நாம் பருகும் பால்பொருட்களில் கணிசமானவைபால் அல்ல என்பதுதான். வைட்னர் என்னும் பெயரில் வரும் பால்பொடிகள், பலவகையான ஐஸ்கிரீம்கள், சாக்லேட்கள் செயற்கைப் பாலால் செய்யப்படுபவை.சமீபத்தில் ஒரு ஐஸ்கிரீம் நிறுவனம் நீதிமன்ற ஆணைப்படி தன் தயாரிப்புகளில் பால் இல்லை என அறிவிக்க நேர்ந்தது.

அதேபோல மிக மலிவான, அதாவது ஒரு கிலோ அறுபது ரூபாய்க்குள் விற்கப்படும் பால்பொடிகள் இன்று எந்த லேபிளும் இல்லாமல் வெறும் பாலிதீன் உறைகளில் வினியோகமாவதைக் காணலாம். பல டீக்கடைகளில் பாலுடன் அதைச் சேர்ப்பார்கள். அது பால் அல்ல, செய்ற்கைப்பால்பொடிதான். தமிழகத்தில் அருந்தப்படும் பாலில் கணிசமான பகுதி கலப்படப்பால், செயற்கைப்பால்தான். மிக எளிதாகவே தெரியும், காய்ச்சப்படும்போது பிளாஸ்டிக் அல்லது ரப்பர் பொசுங்குவதுபோன்ற மிக மென்மையான ஒரு நாற்றம் வரும். அதுதான் அடையாளம்

இந்த தொழில் ‘சட்டபூர்வமான ஆவணங்களுடன்’ எல்லா அரசு அமைப்புகளுக்கும் தெரிந்து நடக்கிறது. கொள்ளைலாபம் அளிக்கும் தொழில். ஆகவே பங்கில்லாதவர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்தவிதமான சட்டநடவடிக்கையும் சாத்தியம் அல்ல.

சங்கர் நாராயணன்

முந்தைய கட்டுரைகும்பமேளா கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைஇலக்கியத்தில் அன்றாடம்