ஒளிரும் விழிகள்
குழையும் வால்
நம்மை விளையாட அழைக்கிறது பிரபஞ்சம்
நாயின் உருவில் .
ஒரு ஜென் கவிதை
இந்திய நாயினங்கள்- தியடோர் பாஸ்கரன் – நூல் வாங்க
இனிய ஜெயம்
நினைவு தெரிந்த நாள் முதலாக, என் வாழ்வு ஏதேனும் ஒரு நாயுடனே பிணைக்கப்பட்டு நகரும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. நான் கொலை செய்த மணி முதல் கடந்த வருடம் என்னை விட்டுவிட்டுப் போன ஒற்றைக்கண் பிளாக்கி வரை. எங்கள் குலதெய்வத்துக்கு வீட்டு விலங்காக நாய் வைத்திருப்பது என்பது தெய்வ குத்தம். எங்கள் இல்லம் சந்திக்கும் ஒவ்வொரு சரிவுக்கும், வீட்டுக்குள் வைத்து நாய் வளர்ப்பதே காரணம் அந்த தெய்வ குத்தத்தை நிறுத்து என்று சொல்லி, வருடா வருடம் குல தெய்வ கோவில் கொடைக்கு செல்லும் அப்பா வசம் மன்றாடுவார் அய்யம்மா.
அப்பா ஒரு புன்னகையுடன் அதை தவிர்த்து விடுவார். எங்கள் வீட்டில் நாய் இடம் பிடித்த பல காரணிகளில் ஒன்று நான். அழுது அடம் பிடித்து மணியை குட்டியாக வாங்கினேன். விளையாட்டின் ஒரு பகுதியாக அதை கொன்றேன். அந்த விளையாட்டில் அது செத்துப்போகும் என்று அந்த வயதில் எனக்குத் தெரியாது. அப்பா ஒரு முறை திருவாரூர் அழைத்து சென்றார்.ஏதோ திருவிழா. முதன்முதலாக அம்பாரி வைத்த யானையை பார்த்தேன். யானை மேல் அம்பாரியில் அமர்ந்து பயணம் செய்யவேண்டும் நான் என்று கேட்டு, அடம்பிடித்து அது வன்முறையாக மறுக்கப்பட்டு,கதறக்கதற வீடு கொண்டு வந்து சேர்க்கப்பட்டு, அறைக்குள் எறியப்பட்டேன்.
விசும்பிக்கொண்டிருந்த என்னை மணி ஆறுதல் செய்தான். சரி வா நாம விளையாடுவோம் என்று கூப்பிட்டான். சமையல்கட்டில் இருந்த மனைக்கட்டையை,மணிப்பயல் முதுகில் போட்டு,அம்பாரியாக்கி அதன் மேல் ஏறி அமர்ந்தேன். அதன் பின் பலபத்து நாய்களுடன்,நாய்கள் மட்டுமே நல்க இயன்ற உணர்சிகரமான உறவுத் தருணங்களுடன் என் ஆயுள் கழிந்திருக்கிறது. அத்தனை நாய்கள் வழியாகவும் பிறந்து பிறந்து வந்து என்னைக் கொஞ்சுவது மணிதான். பதிலுக்கு அத்தனை நாய்களையும் கொஞ்சிக் கொஞ்சி அதனூடே மன்றாடி இப்போதும் நான் உள்ளுக்குள் சொல்வது ”சாரிடா இப்டி ஆகும்னு எனக்கு தெரியாது …” என்பதே.
நிகர்வாழ்விலும், ஹச்சிகோ போன்ற திரைப்படங்கள் ஊடாகவும், வெள்ளிமலை போன்ற கதைகள் வழியாகவும் என்னோடு பின்தொடர்ந்து வரும் என் நான்குகால் நண்பனை குறித்து, வரலாற்று ரீதியான முழுமையான அடிப்படைப் புரிதல் ஒன்றை அளித்தது, சமீபத்தில் நான் வாசித்த, காலச்சுவடு பதிப்பக வெளியீடாக, , தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய இந்திய நாயினங்கள் எனும் ஆய்வு நூல் . வாசிப்பு வசதி கருதி, மூன்று பகுதிகளாக பிரிக்கத்தக்க,பத்து அத்யாயங்கள் கொண்ட இந்த நூலின் முதல் பகுதி, மானுடவியல் போல நாய் இனவியல் என சொல்லலாம். நாற்பதாயிரம் வருடம் முன்பு துவங்கி சமீப காலம் வரை வீட்டு விலங்காக பரிணமித்திருக்கும் நாய்கள் குறித்த, வரலாற்று வரைவு.
இரண்டாம் பகுதி பாரத நிலத்தில் கற்காலம் தொட்டு இன்று வரையிலான நாய்களின் வரலாறு.இன்றைய நிலை இவற்றை பேசுகிறது. மூன்றாம் பகுதி இந்திய நிலத்தை பிறப்பிடமாகக் கொண்ட, தனித்துவமான பாரம்பரியப் பின்புலம் கொண்ட, இமையம் முதல் குமரி வரையிலான நிலத்தை அடிப்படையாகக் கொண்ட இருபத்தி ஐந்து நாயினங்களை குறித்த அடிப்படை அறிமுகம். இந்த அலகுகளுக்குள் அமைந்த செறிவான ஆய்வு நூல்.
1950 இன் துவக்கத்தில், உலகு தழுவிய ஒருங்கிணைந்த ஒன்றாக, உலகின் வெவ்வேறு நிலப்பரப்பில், நாய்கள் குறித்த ஆய்வுகள் வேகம் பெறுகின்றன. ஓநாய்களில் இருந்து கலப்பில் உருவான நாயினங்கள், அதன் வழியே மனிதர்களுடன் அது கொண்ட தொடர்புக்கு கிட்டத்தட்ட நாற்பதாயிரம் அல்லது அதற்கும் மேலான அகவை இருக்கலாம் என முடிவுக்கு வந்தது வியன்னா நிகழ்த்திய ஆய்வு.
இந்த துவக்கம் ஐரோப்பிய நிலத்தில் நிகழ்ந்திருக்கும் என பின்லாந்து ஆய்வுகளும், மத்தியக் கிழக்கில் நிகழ்ந்திருக்கும் என கலிபோர்னியா பல்கலை ஆய்வுகளும் முடிவை முன்வைக்க, நோபல் வென்ற ஆய்வாளர் காண்ட்ராட் லோரேன்ஸ் வளர்ப்பு நாயின் தோற்றம் மத்திய இந்தியா என ஆய்வு முடிவை முன்வைக்கிறார். மரபணுரீதியாக மனித குலம் தோன்றியது கிழக்கு ஆப்ரிக்கா என முடிவுக்கு வந்ததை போல, அதே மரபணு வழியில் பின் தொடர்ந்து சென்று, அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், நாய்களின் தோற்றுவாய் நிலம் மங்கோலிய நிலம் என்பது வரை, நாய்களின் பிறப்பிடம் குறித்த ஆய்வுகளின் வளர்ச்சி வந்து நிற்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தை சார்ந்த கிரேக்கர் லார்சன் இன்றய தேதிகளில், நாய்கள் குறித்த இத்தகு ஆய்வுகளை, உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்து முன்னெடுப்பவர்களில் முதல்வராக இருக்கிறார். இஸ்ரேலில் கிடைத்த பன்னிரண்டாயிரம் வருட பழமையான வளர்ப்பு நாய்க்குட்டி புதை படிவம் துவங்கி, நான்காயிரம் வருடத்துக்கு முன் பெயர் குறிப்பிட்டு,கழுத்துப் பட்டியுடன் இருக்கும் நாய் குறித்த வரலாற்று குறிப்பு வரை, விரிவாக அறிமுகம் செய்கிறது முதல் பகுதி.
சிறுவயதில் [ஓம் சக்தி இதழ் என நினைவு] நான் வாசித்த கதை சத்ரபதி சிவாஜி வளர்த்த [ஓவியத்தில் அல்சேஷன் அல்லது ஜெர்மன் ஷபாத் நாய் இருந்தது] நாயின் கதை. அவர் குதிரையுடன் இணைந்து அது செய்த சாகசங்கள்,சிறுவயது கற்பனை பரபரப்புக்கு ஊக்கம் சேர்ப்பவை. சிவாஜி குறிப்பிட்ட முறையில் விசில் அடித்தால், அந்த குதிரை ஓடி வரும். குதிரை மேல் நாய் நின்றிருக்கும். இப்படி பல சம்பவங்கள் நிறைந்த கதை. கதையின் இறுதில் சிவாஜி செத்துப் போகிறார்.அவர் சிதை எரிகிறது. அவர் வளர்த்த குதிரை கண்ணீர் சிந்தியபடி அருகே நிற்கிறது. நாயை மட்டும் காணவில்லை. உணர்ந்து சுற்றத்தார் தேட முனையும் கணம், எங்கிருந்தோ பாய்ந்து,கூட்டத்தை பிளந்து ஓடி வருகிறது நாய். ஒரே தாவல் . தானும் சிதைத் தீயில் பாய்ந்து சிவாஜியுடன் சங்கமித்து விடுகிறது. அன்றிரவு நினைக்க நிகைக்க கண்ணீர் வழிய என்னில் கவித்த துக்கத்தின் தூய தொடுகையை விவரிக்க முனைந்தால் மொழி கைவிட்டு விடும். அந்த நாய்க்கு, சிவாஜியின் செல்லப் பிள்ளைக்கு,சிவாஜின் ராய்கர் கோட்டையில் ஒரு சிலை இருக்கிறது. இப்படி பல கதைகள் அந்த நாயை சுற்றி உலவுகிறது எனும் குறிப்புடன் இதை சுட்டுகிறது இந்த நூலின் அடுத்த பகுதி.
வரலாறு தொட்டு, தொல்லியல் ,பண்டைய இலக்கியம்,கலைகள் ஓவியம், வணிகம் இவற்றில் இந்திய நிலத்தில் இந்திய நாயினங்களின் நிலை என்னவாக இருந்திருக்கிறது. இங்கிருந்து கிளம்பி வணிக தொடர்புகள் வழியே, விலை உயர்ந்த செல்வம் என இந்திய நாய்கள்,உலகம் முழுக்க பரவிய விதம், ஹரப்பா காலம் தொட்டு, பாளையப்பட்டு காலம் வரை, வேட்டை சமூகம் முதல் மன்னர் குடி வரை,இந்திய நாயினங்கள் பெற்றிருந்த இடம், மத்திய பிரதேசத்தில் சிந்தூர் நகரில் பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாய்க்கான கோவில் முதல் ஹோசூரில் [திப்பு சுல்தான் துவங்கியது] செயல்படும் பெட் செமட்ரி வரை விரிந்து பரவுகிறது இரண்டாம் பகுதி.
ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு, இந்தியப் பாரம்பரிய நாயினங்கள் இடையே நிகழ்ந்த இனக் கலப்பின் வழியே,நிகழ்ந்த சரிவு, அலங்கு,மலைப்பட்டி போன்ற உள்ளூர் நாயினங்கள் முற்றிலும் மறைந்து போனமை. எழுபத்தி இரண்டில் போடப்பட்ட வேட்டை தடுப்பு சட்டத்தின் ஒரு முகமாக, வேட்டைத் தொழிலை விட்டு விலகி, அதன் பயனாக கவனிப்பாரற்று, வளர்த்து எடுக்கும் காரணிகள் துண்டிக்கப்பட்டு, அறுகிப்போன இந்திய வேட்டை நாயினம் . இவற்றை தடுக்க தமிழ் நிலத்தில் நிகழ்ந்த முன்னெடுப்புகள், கர்நாடக நிலத்தில் நடந்த முன்னெடுப்புகள், இவற்றின் வெற்றி தோல்வி, உலக அளவில் பாரம்பரிய நாய்களுக்கான கண்காட்சிகள், அவற்றில் இந்திய நாயினங்களின் இடம், நாய்களுக்கான மருத்துவம் பராமரிப்பு போன்ற பிற துறை வளர்ச்சி, இவற்றை மையம் கொள்கிறது மூன்றாம் பகுதி.
இந்த நூலில் நான்காம் பகுதியாக, வாசித்தும்,விவாதித்தும்,நேரில் கண்டும், வகுத்துக்கொண்டு, பாஸ்கரன் அவர்கள் பட்டியலிட்டு விவரிக்கும், ஹிமாலயன் மிஸ்டிப், மூதோல்,கன்னி,சிப்பி,கொம்பை போல இருபத்தி ஐந்து இந்திய நாயினங்களின் பாரம்பரிய வகைகள் இந்த ஆய்வு நூலை, ஒரு கிளாசிக் நிலைக்கு உயர்த்துகிறது. வேறொரு எல்லையில்,நாளைய களப்பணி ஒன்றுக்கும் இந்த நூல் முக்கிய ஆதாரமாக அமையக் கூடும். உதாரணமாக இந்த நூலுக்குள்ளேயே என்பதி ஒன்றில் தமிழ் நிலத்தில் கோமதி ஸ்ரீநிவாசன் எனும் அமைச்சர், பாரம்பரிய நாயினங்களை பாதுகாக்க, பெருக்க உருவாக்கிய அமைப்பு கண்ட இடரை குறிப்பிடலாம். இந்த அமைப்பை ,இது சரியாக செயல்பட வில்லை ஆகவே மூட வேண்டும்,என ஒரு பன்னாட்டு மிருக ஆர்வலர் அமைப்பு, வழக்கு தொடுத்து இறுதியாக அதில் வெற்றியும் பெறுகிறது. அந்த அமைப்பின் பெயர் பீட்டா.
இது ஆய்வு நூல் ஆகவே,உணர்சிகரமோ,குற்றம் சொல்லும் சார்பு நிலையோ இன்றி, இது இப்படி துவங்கியது,அதில் இது இவ்வாறு நிகழ்ந்தது என்று உணர்சிகள் கலவாத புறவயமான தகவலாக மட்டுமே மிக குறைவான சொல்லில் இதை சொல்லி கடந்து விடுகிறது. ஜல்லிக்கட்டில் இதை இணைத்து பார்த்தோம் என்றால் இதன் வீரியம் புரியும். ஜல்லிக்கட்டில் பீட்டா கேட்ட தடைகளில் ஒன்று, காளைகளை காட்சி விலங்காக முன்வைப்பதை எதிர்த்து. இந்த நூல் உலக காட்சி அரங்குகளில், பாரம்பரிய நாயினங்கள் எனும் வகைமையின் கீழ், இந்திய நாயினங்கள் பங்கேற்க இயலாமல் போவதன் பின்னணயில் உள்ள இடரை விரிவாகவே பேசுகிறது. அந்த இடரில் இருந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் வழியே மேலெழுந்து வர, அடிப்படைக் கையேடாக தியடோர் பாஸ்கரன் அவர்களின் இந்த நூலும், பாஸ்கரன் அவரது பணிக்காலத்தில் முயன்று வெளிக்கொண்டு வந்த,இந்திய நாயினங்கள் சிலவற்றுக்கான தபால் தலைகளும் மிக முக்கிய பங்கு வகிக்கும். அது போக இந்த நூல் கர்நாடக நிலத்தில் பாரம்பரிய நாயினமான மூதொல் இனத்தை ,காக்க பெருக்க அமைச்சர் கோவிந்த் கார்ஜோல் மேற்கொண்ட, வெற்றி கண்ட நடவடிக்கைகளை பட்டியல் இடுகிறது. மூதொல் இன நாய்களை காத்து,வளர்த்து .பெருக்கி, காட்சி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெரும் பொறுப்பை அமைச்சர்,பட்டியல் வகுப்பினர் இடையே ஒப்படைக்கிறார். அவர்களுக்கு மானியம் ,குறிப்பிட்ட அளவு ஊதியம்,போட்டிகள் வழியே பரிசுகள் அனைத்தும் அறிவிக்கிறார். மண்ணின் பெருமிதம் ஒன்றை மீட்டெடுக்கும் வரலாற்று சந்தர்ப்ப மகிழ்வு ஒன்றை, அவர்களை முன்னிலைப் படுத்தி முடுக்கி விடுகிறார். இந்த நூல் பரவினால், தமிழ் நிலமும் இதை பின்பற்றிப் பார்க்கலாம் எனும் வகை விரைவில் எழலாம். இப்படி எல்லா அலகுகளிலும் இந்த நூலை ஒரு கையேடாக கொள்ள முடியும்.
2014 இல் இயல் விருது பெற கனடா செல்லும் பாஸ்கரன் அவர்களை சந்தித்து, இந்திய யானைகள் குறித்து முக்கியமான நூல் ஒன்றை எழுதிய தாமஸ் திரௌட்மன் இப்படி ஒரு நூலை எழுதச்சொல்லி ஊக்குவிக்கிறார். அதன் பயனான இந்த நூல், மீசையை முறுக்கி பீட்டாவை நொறுக்கக் கிளம்பிய தமிழ்த் தங்கங்கள் அதில் வெற்றி கொள்வதற்கு முதல், என் போன்ற உணர்வுக் கொந்தளிப்பாளன் சமநிலை காண்பதற்கு என்பது வரை அனைத்து நிலைகளிலும் முக்கியமானது. இந்த ஆய்வு நூலுக்கு துணை நின்ற நூல்களின்,கட்டுரைகளின் பட்டியல் அது இந்த மொத்த ஆய்வுநூல் அளவே முக்கியமானது.
1968இல் ராஜபாளையம் இனத்தை சேர்ந்த மது, பாஸ்கரன் வீட்டில் முதன் முதலாக எட்டு வைத்து நுழைகிறான் அவன் நினைவுகளை முதலாகக் கொண்டு துவங்குகிறது இந்த நூல். நெல்லை அருகே தொடர்வண்டி நிற்க, நிறுத்தத்தில் தனது தொடர்வண்டிக்காக, நாய்களுடன் காத்து நிற்கிறார் ஒரு கிராமத்து மனிதர். அங்கே இறங்கி அவர் வசம் பேசி, இந்த நாயினம் குறித்து அறிந்து கொண்ட கணமே,பாஸ்கரனுக்கு இந்த நாய் ஒன்றை வளர்க்கும் ஆசை எழுகிறது. அவரிடமே குட்டி ஒன்றுக்கு விலை பேசி,தொகை அளித்து,முகவரி தந்து விட்டு ,வண்டி ஏறும் பாஸ்கரன்,அத்துடன் அதை மறந்தும் போகிறார்.ஆறேழு மாதம் கழித்து ஒரு நாள்.திருச்சியில் அவர் வீட்டுக் கதவு தட்டப் படுகிறது. திறந்து பார்த்தால் கையில் மது குட்டியுடன் அந்த கிராமத்து நண்பர்.
68 .தொடர்பு வசதிகள் குறைவு. அந்த மனிதர் ஒப்புக்கொண்ட ஒன்றை,மாதங்கள் கழிந்தும் தேடி வந்து நிறைவேற்றி விட்டு சென்றிருக்கிறார். இத்தகு மனிதரை இன்றைய சூழலில் தேடித்தான் கண்டடைய வேண்டும். வெறும் ஐம்பது ஆண்டுகள். மனிதன் என்னெனவோவாக மாறி நிற்கும் ஐம்பது ஆண்டுகள். ஆனால் அவன் காலடியில் பிரியத்தின் உடலால் கொஞ்சியபடி, ஐம்பதாயிரம் ஆண்டுகளாக மாறவே மாறாத ஒரு இனம். நாயினம் .
யானை யானையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய். [நாலடியார்]
கடலூர் சீனு.