பத்மபிரபா நினைவு விருது

kal

என்றாவது வெகுதூரப் பயணத்துக்குப் பிறகு வீடு திரும்பும் நேரம் ஏதோவொரு நாளின் குளிரடங்காத அதிகாலையாகவே இருக்கிறது. கதவைத் திறந்த அம்மா கைப்பையை வாங்கியதும் இளைத்துப் போனாயே என்று கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். காய்சலோ  வேறு தொந்தரவோ என்று நெற்றியையும் கன்னத்தையும் தொட்டுப் பார்க்கிறாள். குளிரில் நடுங்கும் உடலில் மேலும் அவள் தொடுகை சில்லிடுகிறது.

அப்படித்தான் கவிஞர் கல்பற்றா நாராயணனின் சொற்கள். அவர் தன் கவிதைகளைச் சொல்வதோ தன் நிலத்துக்கே உரிய குளிராக. இரவில் மலையேற்றமும் காணத்தோன்றாத உறக்கத்தில் வயநாடு வரும்போதும் தொட்டுப் பார்க்கும் நான் எப்போதும் உணர்ந்திருந்த குளிரையே தன் நிலத்தின் அடையாளமாகச் சொல்கிறார். அந்நிலத்திலிருந்து கிளைத்து வளர்ந்த பெருமரத்தின் விதையும் மலரும் அச்சொற்கள். அவர் அப்படித்தானே எழுதமுடியும்.

எப்போதும் தளத்தில் நிகழ்வுகளின், பயணங்களின் தேதி முன்னரே அறியக் கிடைப்பதில்லை. அது திட்டமிட்ட நண்பர் சந்திப்பாக இல்லாத பட்சத்தில். அப்படியானவையுமே பெரும்பாலும் அந்நாளுக்கு ஒன்றிரண்டு தினங்களிருக்கவே தயாராக முடியாதபடி தெரியவரும். நீங்கள் இரண்டு மணிநேர தொலைவில் இருக்கிற பட்டாம்பி வந்து சென்றும் நிகழ்வு முடிந்த பிறகே தெரிந்துகொள்ள முடிந்தது. இம்முறை கல்பற்றா நிகழ்வுக்கு ஒரு தினம் இருக்கவே ஏற்பாடுகள் செய்துகொண்டு கிளம்பிவிட்டேன். அங்கே பாரியும் மணவாளனும் வந்திருந்தார்கள் என்பதாலும் உற்சாகம். அங்கிருக்கையில் உங்களின் மாணவர்களானாலும் சுஹ்ருத்துகளாக அல்லவா நாங்கள் அறியப்படுவோம்.

அறையில் உங்களோடான உரையாடலுக்குப் பிறகு உரை தயாரிக்கவும் ஓய்வெடுக்கவும் அமர்ந்த உங்களை விட்டுவிட்டு அருகிலிருந்த (பழைய) சமணக் குகைக்குப் போய் வந்தோம். அனுமதி இல்லாத அந்த இடத்துக்கு கல்பற்றா அவர்களின் நண்பர் திவாகரன் சொன்னதால் விட்டார்கள். அப்படியே விழா நிகழும் இடத்திற்கு பக்கத்திலேயே இருக்கிற காந்தி நினைவிடம். அங்கிருந்த புகைப்படங்களும் காந்தியின் உரையும் நல்ல அனுபவம். (ஏற்கெனவே பார்த்திருந்த ஒரு காந்தியின் புகைப்படத்தில் கூட இருக்கிற பிரிட்டிஷ் அழகர், சார்லீ சாப்ளின் என்கிற விவரம் தெரிந்ததும் ஒரு அழகான ஆச்சரியம். அதற்கு முன் வரிசையில் தில்லையாடி வல்லியம்மையின் புகைப்படம்.)

திவாகரனின் விமர்சனங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அவரோடு பேசுகையில் சக்காரியா பற்றி என் வாசிப்பின்  அடிப்படையில் கேள்வி எழுப்பியபோது, இப்போது சக்காரியா படைப்புகள் முன்னர் போலில்லை என்றார். எனக்கோ அவரின் படைப்புகள் தற்கால கேரள சமூகத்தின் வாழ்வில் நுழையாமல் ஒரு ஐந்து வருடம் முன்னரே நின்றுவிடுகிறவை போலிருக்கிறது. அதாவது என் கண்ணில் நான் பார்க்கும் எத்தனையோ நடப்புகளுக்கு அக்கதைகளின் ஆன்மாவே முதற் காரணங்கள், அதைக் கடந்து அவை வந்துவிட்டிருக்கின்றன (இப்படியான ஒற்றை வரி விமர்சனத்துக்கு மன்னிக்கவும்). ஒருவேளை அவை எழுதுவதற்காகக் காத்திருப்பவையோ என்னவோ.

அறைக்கு வந்து உங்களுக்காகவே காத்திருந்தோம். உங்களுடன் கல்பற்றாவும். அவரோடு முன்பு தொலைபேசியில் பேசியிருந்தது மட்டுமே. இப்போது நேரில். எப்போதும் போலவே அந்தச் சூழலில் என்னால் அதிகம் பேச முடியவில்லை. புதுக்காதலன் போல் அவர் முன்னர் குறைவாகவே பேசியபடி நின்றிருந்தேன். அவரின் சமீப கவிதை ஒன்றை உரையாடலின் நடுவில் படித்துக் காட்டினார். எப்படி கம்யூனிசத்துக்கு கடன் பட்டோரோ, அப்படியே அம்மரத்து வீண் கனிகளே கம்யூனிச எதிர்ப்பாளர்களும் என்பதான கவிதை. அப்போது சக்கரியா பற்றிய திவாகரனின் விமர்சனம் நினைவுக்கு வந்தது. அவர் கல்பற்றாவின் விமர்சன முறையும் ரசனையையும் பகிரும் தோழர். அவரையும் விமர்சிக்கத் தயங்காதவர். அவர் மூலமாக கல்பற்றாவின் படைப்புகளைப் பற்றிய விரிவான பார்வையின் வரைவு கிடைத்தது.

நீங்கள் தமிழ் சரஸ்வதியையும் மலையாள சரஸ்வதியையும் அழைத்து எங்களிடம் பேசியதற்கும் கல்பற்றாவிடம் சொன்னதற்கும் வாக்கிய அளவில் என்ன வேறுபாடோ அவ்வளவே அவ்விரு சரஸ்வதிகளுக்கிடையிலான இடைவெளி என்று தோன்றியது. இரு அன்னை செல்லப்பிள்ளையாக இருக்க முடியாதா என்ன. நிகழ்வில் உங்கள் இருவரின் உரையே அத்தனை முக்கியமானதாக இருந்தது. உக்ரேனிய எழுத்தாளரின் உரையிலும் முக்கியமான விஷயங்களை எடுத்துப் பேசினார். அதே நேரம் சிறந்த பகடிகளும் அறிந்தும், இயல்பாகவும் செய்தவாறு இருந்தார். மிக்காய்ல் படைப்பை வாசித்தது குறித்து, கோகோல் வாழ்வு குறித்து என அவர் தீவிரமானவையும் சொல்லிச் சென்றார்.

kal2

உங்கள் உரையில் கவிஞர் கண்டராதித்தனுக்கான விருது வழங்கும் விழாவில் பேசியவற்றின் (குறிப்பாக படிமம்) ஆரம்ப கட்ட வடிவங்களைக் குறித்து சுருக்கமாகப் பேசினீர்கள். அதனால் சற்றே குழம்பிப் போனேன். அதன் பிறகு தற்கால மலையாளக் கவிதைகளின் இயல்பை நான் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்படியும் நீங்கள் விளக்கப் புகுந்தால் அதற்கு நேரம் போதாது என்றும் புரிந்தது. வந்திருந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள். அரங்கு நிறைத்து அமர்ந்திருந்த கூட்டத்தில் பெரும்பகுதி நிகழ்வு முழுமைக்கும் தொல்லை தராமல் அமர்ந்திருந்தது. இருட்டும் முன்னரே நிகழ்வு முடிந்தாலும், சற்றே கலைந்து சென்றவர்களும் ஊர் போய்ச் சேர்வதில் இருக்கிற சிக்கல்கள் (பேருந்து போன்ற) காரணமாகவே சென்றார்கள் என்று நிச்சயம் சொல்வேன்.

என் நண்பருக்கு (உங்கள் வாசகரும்கூட) புத்தகத்தில் கையெழுத்துப் பெற்றுத் தந்தது மட்டுமில்லாமல் புகைப்படமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்கள் ரயில் பிடிக்கிற அவசரத்தில் இருந்தீர்கள். சென்று சேர்ந்தீர்களா என்று பிறகு தொடர்பு கொண்டும் இணைப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் வேறொரு அழைப்பில் இருந்தீர்கள். எனவே சென்று சேர்ந்தீர்கள் என்று சமாதானம் செய்துகொண்டேன். எத்தனை பயணங்கள் செய்கிறவர். ஆனால் என் எண்ணங்கள் சமயத்தில் சிறு பிள்ளைத் தனமானவை. என்ன செய்வது.

இன்னும் இன்னும் விளக்கமாக எழுதவேண்டும் என்கிற ஆவலே எழுதுகிற காலத்தையும் நேரத்தையும் தள்ளிப் போட வைக்கிறது. இப்போதைக்கு வந்த வேகத்தில் அமர்ந்து எழுதிவிட்டேன். இந்த நினைவு முக்கியமானதாகையால் எழுதியாகவேண்டும் .

பேரன்புடன்,

நாகபிரகாஷ்

kal3

அன்புள்ள நாகப்பிரகாஷ்,

நான் இரவு பத்தரைக்கு கோழிக்கோட்டிலிருந்து ரயில்பிடிக்கவேண்டியிருந்தது. ஆகவே அவசரமாக கிளம்பினேன். வழக்கம்போல வாசகர்கள் நிறையபேர் வந்து படம் எடுத்துக்கொண்டு, புத்தகங்களில் கையெழுத்துவாங்கிக்கொண்டு சூழ்ந்திருந்தனர். மாத்ருபூமியின் அமைப்பாளர் கட்டாயப்படுத்தினார். ஆகவே அவசரமாக கிளம்பினேன். பாரி, மணவாளன் இருவரும் என்னுடன் வந்தனர்.

அன்றைய நாளும் முந்தைய நாளும் உற்சாகமூட்டுவனவாக அமைந்தன. முந்தையநாள் சன்லைட் வேலி என அழைக்கப்படும் சாலியாறு தாழ்வரையை மலையுச்சியின் பாறைமுனைமேல் நின்று பார்த்தோம். அந்த அந்தி நினைவில் என்றும் நீடிப்பது. திவாகரன் வேலைபார்த்த மலைவாசிகளுக்கான பள்ளிக்கூடத்திற்குச் சென்றதும் மன எழுச்சியூட்டும் அனுபவமாக அமைந்தது.

அன்றைய உரையில் சில புதியவற்றை சொன்னேன்.மிழில்கூட ஒரு கட்டுரையாக எழுதலாம்.கவிதையின் தனிமொழியைப்பற்றி, மொழி தேய்வழக்குகளினூடாகச் செயல்படுவதைப் பற்றி. மலையாளக் கவிஞர்கள் கவிதைக்கான தனிமொழியையே காலப்போக்கில் பிறிதொருவகை தேய்வழக்காக ஆக்கிக்கொண்டுவிட்டதைப்பற்றி.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50
அடுத்த கட்டுரைதஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா – கடிதம்