அரவான் சொன்னான்: ஜயத்ரதனை அள்ளித் தூக்கிக்கொண்ட அதலன், அஹோரன் முதலிய ஏழு மாநாகங்கள் பன்றிவடிவ முகம்கொண்டு தேற்றைகளால் மண்ணைப்பிளந்து உள்ளே கொண்டுசென்றன. பிளந்து பிளந்து அவை செல்லச்செல்ல இருள் எடைகொண்டதுபோல் ஆழம் வந்து அவனை சூழ்ந்துகொண்டது. அவன் மூச்சுத் திணறி துடித்து ஓசையின்றி அலறி அந்நாகங்களிலிருந்து விடுபடுவதற்காக துடித்தான். அவற்றின் பிடி ஆயிரம்மடங்கு ஆற்றல்கொண்ட யானைத் துதிக்கைகளைப்போல் அவனை சுற்றிக் கவ்வியிருந்தது. பின்னர் இறுதி மூச்சும் குமிழியாக மாறி அகல அவன் நெஞ்சுக்குள் எடையின்மை எழுந்தது. அவன் எண்ணங்களும் முறுக்கவிழ்ந்தன. அவன் இனிய துயிலில் என மயங்கி அமிழ்ந்துகொண்டே இருந்தான்.
அவன் உடல் சிறுமகவென்று ஆகியது. கட்டைவிரலை வாய்க்குள் இட்டு உடலைக் குறுக்கி கண்மூடி இன்துயிலில் அமைந்தான். துளியெனச் சிறுத்து மேலும் மேலும் சுருங்கி அணுவென்றாகி ஆழத்தில் பெருகிக்கிடந்த இருளில் கரிய உருவங்களாக நிறைந்திருந்த மாநாகங்களில் ஒன்றின் செதில்மலையின் ஒரு சிறு இமைப்பொளியாக பதிந்தான். அங்கே அவன் தன்னை என்றுமிருப்பவனாக உணர்ந்தான். அவன் தலைக்குமேல் இடியோசை எழுந்தது. மின்னலில் நாகச்செதில்கள் மலைமுடிகள் என அதிர்ந்தணைந்தன. எதிரொலிகள் மலைமடிப்புகள் தோறும் மடிந்து எழுந்து அகன்றன. “என்ன அது? என்ன?” என்று அவன் கூவினான். “அஞ்சற்க! அது பாசுபதம்… இங்குள்ள வான்வெளியில் அதன் ஓசையும் ஒளியும் மட்டும் வந்துள்ளது” என்றது அருகே இருந்த இருள்தெய்வம்.
ஈ போனற சிறகுகளும் வட்டப் பெருங்கண்களும் சுருண்ட கொடுக்கும் கொண்டிருந்தது அது. “என் பெயர் உபப்பிராணன். இந்த இருளுலகை நிறைத்திருக்கும் முடிவிலாக் கோடி தெய்வங்களில் ஒன்று” என்று அது சொன்னது. “நீ இங்கே காக்கப்பட்டுள்ளாய்… அங்கே அந்தி எழும்வரை நீ இங்கிருப்பாய்.” ஜயத்ரதன் பெருமூச்சுவிட்டு “நான் என்றுமே உயிருக்கு அஞ்சியதில்லை. வில்லெடுத்து முதல் அம்பை தொடுக்கையில் ஆசிரியர் சொல்லும் அறவுரை அது. முதல் அம்பெடுத்து நாணிலேற்றியவன் தானும் அம்பால் கொல்லப்படலாமென தெய்வங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறான். அதை அளித்துவிட்டே அம்பை எடுக்கவேண்டும். இருந்தும் இதோ அஞ்சி அமர்ந்திருக்கிறேன். ஏன்?” என்றான்.
மெல்லிய சிறகொலியுடன் எழுந்தமைந்த உபப்பிராணன் சொன்னது “நீ அஞ்சவில்லை. உன்னிலிருப்பது உன் தந்தையின் அச்சம்.” மீண்டுமொருமுறை அது எழுந்தமைந்தது. “அவர் எப்போதும் தனக்காக அஞ்சியதில்லை. தந்தையர் மைந்தருக்காகவே அஞ்சுகிறார்கள்.” விண் வெளுத்து விழிமறையும் ஒளிபொழிய மின்னல் ஒன்று கடந்துசென்றது. விழிமீண்டுகொண்டிருக்கையில் செவி அதிர்ந்து தலைக்குள் எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு முழக்கமிடும்படி இடியோசை எழுந்தது. “பாசுபதம் இப்புடவியை ஏழுமுறை சுற்றிவந்துவிட்டது. அது உன்னை கண்டடையப் போகிறது” என்றது உபப்பிராணன். “அது என்னை கண்டடையட்டும் என்றே விழைகிறேன்… இனி என்னால் இயலாது” என்றான் ஜயத்ரதன்.
“அங்கே நூறு சூரியன் சேர்ந்து எழுந்ததுபோல் அது பெருங்கடல்களை கொதிக்கச் செய்கிறது. மலைமுடிப்பாறைகள் வெடித்து உருள்கின்றன. நதிகள் நீர்புகைந்து சேற்றுத்தடங்களாகின்றன. சுனைகள் வறண்டு அனலூறத் தொடங்குகின்றன” என்றது உபப்பிராணன். “இதற்குமேல் என்னால் இயலாது… இச்சிறுமையே எனக்கு போதும்!” என்றான் ஜயத்ரதன். “எனில் எழுக… நீ செய்யவேண்டியதொன்றே. இந்த வானம் ஓர் இருண்ட திரை. அந்த உடைவாளை எடுத்து அதை கிழி. வெளியே கடந்துசென்று நெஞ்சுநிமிர்ந்து நில். அவனுடன் பொருது. தலையெனில் தலைகொடு. எழும் சொல்வெளியில் ஆண் என நின்றிருப்பாய்.” ஜயத்ரதன் அசையாமல் அமர்ந்திருந்தான். பின்னர் “என்னால் இயலாது. எந்தைக்கு நான் அளிக்கக்கூடியது இது ஒன்றே” என்றான். உபப்பிராணன் நகைத்து “என்றும் இது இவ்வாறே நிகழ்கிறது. மானுடர் ஊன் புழுத்து ஊனுண்டு ஊனில் மறைபவர். சிறகுகொண்டு எழுவோர் சிலரே” என்றது.
வெற்புகள் உடைந்து சரிவதை ஜயத்ரதன் கண்டான். “இது பன்னகம் என்னும் மாநாகம். முப்புரமெரித்தவனின் கழுத்தின் அணி” என்றது உபப்பிராணன். “இங்கே பாசுபதம் வந்தடைய இயலாது…” ஜயத்ரதன் மிக அப்பால் ஓர் அசைவை கண்டான். “யார் அது? என் ஆடிப்பாவையா?” என்றான். “ஆம், நீயேதான்” என்றபடி எழுந்து சுழன்று பறந்துமீண்டது உபப்பிராணன். “அது உன் தந்தை… உன்னைத் தேடி வந்துகொண்டிருக்கிறார்.” ஜயத்ரதன் “இங்கா? என்னைத் தேடியா?” என்றான். அதற்குள் “மைந்தா!” என்று கூவியபடி பிருஹத்காயர் அவனை நோக்கி இரு கைகளையும் விரித்தபடி ஓடிவந்தார். “மைந்தா! எழுக! பொழுதணைந்துவிட்டது. நாம் வென்றோம்!” ஜயத்ரதன் அஞ்சி பின்னடைந்தான். “இல்லை, நீங்கள் பொய்யுரு… அவர்கள் அனுப்பிய மாயன்” என்றான்.
“மைந்தா, நான் உன் தந்தை. என் தவத்தால் உன்னை இங்கு அனுப்பியவன்” என்றபடி பிருஹத்காயர் மேலும் அருகே வந்தார். “இங்கே நான் உன்னை தொடமுடியும்… என் கைகளை தொட்டால் நீ அறிவாய் நான் உன் தந்தை என.” அவருடைய கைகள் அவன் தோளை தழுவின. அவன் உடல்நெகிழ “தந்தையே” என்றான். கால்தளர்ந்து அவர் கைகளிலேயே சரிந்தான். அவன் தோளை தன் தோள்களுடன் அணைத்து தலையை அள்ளி நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டார் பிருஹத்காயர். “மைந்தா! மைந்தா!” என விம்மி அழுதார். அவருடைய விழிநீர் அவன் குழல்முடிச்சின்மேல் சொட்டியது. அவர் வெறிகொண்டு அவனை முத்தமிடத் தொடங்கினார். அவன் கன்னங்களிலும் தோள்களிலும் கழுத்திலும் தலையிலும் அவர் முத்தங்கள் விழுந்துகொண்டே இருந்தன. “மைந்தா! மைந்தா! மைந்தா!” என அவருடைய வாய் புலம்பியது.
பின்னர் அவர் அவனை தோள்பற்றி நிறுத்தி “நீ வென்றுவிட்டாய்… செல்க!” என்றார். “இல்லை, தந்தையே… அங்கே இன்னமும் இடியோசை சூழ்ந்துள்ளது!” என்றான் ஜயத்ரதன். “அறிவிலி… அது மழையின் ஓசை… அந்தி எழுந்துவிட்டது. அர்ஜுனன் உயிர்விடுவதை நீ பார்க்கவேண்டாமா? எழுக!” என்று அவர் அவன் கைகளைப்பற்றி அழைத்துச் சென்றார். “செல்க!” என பின்னின்று உந்தினார். அஞ்சிய கால்களை அவன் மெல்ல எடுத்து அப்பால் வைத்தான். அவன் நடக்க நடக்க இருளின் திரை விலகிக்கொண்டிருந்தது.
ஏகாக்ஷர் சொன்னார்: தேரைச் செலுத்தி படைகளைப் பிளந்தபடி வந்த யுதிஷ்டிரர் “சகதேவன் எங்கே? நகுலன் எங்கே?” என்று கூவிக்கொண்டிருந்தார். அவரை நோக்கி புரவியில் வந்த சாத்யகி “அரசே, அனைத்து முனைகளிலும் போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இளைய பாண்டவர்கள் அனைவருமே போரிலிருக்கிறார்கள்” என்றான். “என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்…” என்றார் யுதிஷ்டிரர். “அரசே, கௌரவ மூத்தவரையும் எஞ்சிய தம்பியரையும் பீமசேனர் எதிர்க்கிறார். சல்யரை சகதேவரும் கிருபரை நகுலரும் எதிர்கொள்கிறார்கள். துரோணருக்கும் திருஷ்டத்யும்னருக்கும் போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கடோத்கஜன் அங்கே பால்ஹிகப்பேருருவரை எதிர்த்து நின்றிருக்கிறார்” என்றான் சாத்யகி. “பாஞ்சஜன்யத்தின் ஓசை கேட்கவில்லை. தேவதத்தமும் ஒலிக்கவில்லை. எங்கே என் இளையோன்? அவனுடன் இருப்பவர்கள் எவர்?” என்றார் யுதிஷ்டிரர்.
“அரசே, அவர் ஆற்றல்மிக்க அம்புகளால் கௌரவப் படையை பிளந்து மிகவும் உள்ளே சென்றுவிட்டார். ஜயத்ரதனை நெருங்கிக்கொண்டிருக்கிறார். போர் முடிவுக்கு வர இன்னும் சற்றுநேரமே உள்ளது… கால்நாழிகைப் பொழுதேனும் எஞ்சுமா என்று தெரியவில்லை” என்றான் சாத்யகி. “மந்தனிடம் சொல், அர்ஜுனனை பின்தொடர்ந்து செல்லும்படி. இளையவன் தனித்துவிடப்படலாகாது. ஜயத்ரதனை கொல்லவேண்டும் என்ற அவனுடைய வஞ்சினமே பொறியென்றாகி அவன் அவர்களுக்குள் சென்று சிக்கிவிடக்கூடும்… செல்க!” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “என்னை தங்களுக்குக் காவலாக இங்கே அமர்த்தினார் திருஷ்டத்யும்னர்” என்றான் சாத்யகி. “எனக்கு ஒன்றும் ஆகாது. என் இளையோன் உயிர் எனக்கு என்னைவிட முதன்மையானது. செல்க… அவனுடன் மந்தன் இருக்கவேண்டும். அவன் மைந்தன் சுருதகீர்த்தி வலம்காக்கவேண்டும்… செல்க!” என்று யுதிஷ்டிரர் கூச்சலிட்டார். சாத்யகி தலைவணங்கி திரும்பிச்சென்றான்.
யுதிஷ்டிரர் படைகளினூடாக தேரில் சென்றார். பாண்டவப் படையினர் சோர்வடைந்திருப்பதை உணரமுடிந்தது. வானில் ஒளி அமையத் தொடங்கியது. யுதிஷ்டிரர் இரு கைகளையும் வானை நோக்கி விரித்தபடி தேர்த்தட்டில் திகைத்து நின்றார். வானம் நோக்க நோக்க ஒளியடங்கியது. கைவீசி அதை தடுத்து நிறுத்திவிடமுடியுமா? அல்லது வாளெடுத்து என் சங்கறுத்து விழுந்தால் அதை நிறுத்த இயலுமா? ஒருகணம் அவர் உள்ளம் அப்போரில், அனைத்து மானுடச் செயல்பாடுகளில் இருந்த பெரும்பொருளின்மையை உணர்ந்து மலைப்பு கொண்டது. ஒவ்வொன்றும் காலத்தில் உருகி நழுவி ஓடிக் கடந்து மறைந்துகொண்டிருக்கின்றன. மானுடர் போரிடுவதெல்லாம் அதனுடன் மட்டுமே. ஒவ்வொரு போரும் கேலிக்கூத்து. ஒவ்வொன்றும் அறிவின்மை.
அப்பாலிருந்து பாய்ந்துவந்த சுருதசேனன் “தந்தையே, அங்கநாட்டரசர் பெரிய தந்தை பீமசேனரை தடுத்து நிறுத்தியிருக்கிறார். அங்கே அவர்களிடையே கடும்போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றான். “செல்க, அங்கன் மந்தனை கொன்றுவிடக்கூடும்… சுதசோமனும் சர்வதனும் அவன் இரு கைகளென நின்றிருக்கவேண்டும்!” என்றார் யுதிஷ்டிரர். “ஆனால் பெரிய தந்தை இதுவரை இல்லாத விசை கொண்டிருக்கிறார். அங்கரை அறைந்து பின்னடையச் செய்கிறார்” என்றபின் சுருதசேனன் கடந்துசென்றான்.
அவர்கள் எவருமே வானை நோக்கவில்லை. காலம் எண்ண எண்ண நீள்வது என அவர்கள் கருதியதுபோல் தோன்றியது. கணங்கள் கணங்களாகவே அவர்கள் கணக்கிட்டனர். யுதிஷ்டிரர் தலையை தன் கைகளால் பற்றிக்கொண்டார். மூச்சை நிறுத்தினால் காலம் நின்றுவிடுமா? எண்ணத்தை நிறுத்தினால் நின்றுவிடுமா? ஆனால் எண்ணத்தை நிறுத்துவதெங்ஙனம்? அவர் சூழ்ந்திருந்தோர் எழுப்பிய ஓசையை கேட்டார். அது மெல்ல உருமாறிக்கொண்டிருந்தது. ஒலியடங்கிக்கொண்டே செல்வதாகத் தோன்ற விழிதிறந்து நோக்கினார். உண்மையில் ஒலி மிகுந்திருந்தது. அத்தனைபேரும் வானை நோக்கிக்கொண்டிருந்தார்கள்.
இருள் தெற்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் பரவி வந்து வானை முழுமையாக நிறைத்தது. இடியோசை மிக அப்பால் எழுந்தது. மின்னல்கொடி ஒன்று தெற்கே துடித்தணைந்தது. குளிர்ந்த காற்று குருக்ஷேத்ரத்தை மூடிக் கடந்துசென்றது. முகிலெழுந்து வானை மூடிவிட்டதா? ஆனால் முற்றாகவே கருமையாக மூடி நிறைந்திருந்தது வான்பரப்பு. மேலும் மேலும் இருண்டபடியே சென்றது சூழல். தேர்முகடுகளின் வளைவுகளும் படைக்கலங்களின் கூர்களும் ஒளித்துளிகள் சூடியிருந்தன. படைவீரர்கள் மெல்ல மெல்ல அசைவிழந்தனர். வாள்கள் தழைந்தன. வில்களில் நாண்கள் தொய்ந்தன. போரின் விசையில் உளம் தனிமைகொள்ள ஒவ்வொருவராக ஆகிவிட்டிருந்த படைவீரர்கள் தங்கள் அணிகளை நோக்கி சென்று இணைந்து மீண்டும் படையென்றாக குருக்ஷேத்ரத்தின் நடுவே இரு படைகளுக்கு இடையே இடைவெளி உருவாகி அகன்று விரிந்தது.
படைகளிடையே குளிரெனப் பரவிய அமைதி இறுகி இறுகி மூச்சடைக்கச் செய்தது. அருகே பறந்த கொடியின் ஓசை தன் தலையில் வந்துவந்தறைவதுபோல் யுதிஷ்டிரர் உணர்ந்தார். “அதை நிறுத்துங்கள் எவரேனும்…” என ஓசையின்றி கூச்சலிட்டார். எரியும் விடாயா, நெஞ்சக்குழியின் எரிச்சலா, மூச்சுநின்றுவிட்ட இறுக்கமா என்றறியா தவிப்புடன் நின்றார். காலமில்லா ஊசிமுனையில் அத்தவிப்பும் அசைவிழந்திருந்தது. பின்னர் உச்சியில் முடிச்சொன்று அவிழ அனைத்தும் சரிந்து பேரோசையுடன் மண்ணை நோக்கி விழுந்தன. உண்மையில் அக்கணத்திற்கு மறுகணத்தில்தான் பொழுதணைவதை அறிவித்தபடி முரசுகள் முழங்கத் தொடங்கின. அவ்வோசையை யுதிஷ்டிரர் விழிகளால் கேட்டார். அவர் உடல் நடுக்கு கொண்டிருந்தது. பின்னர் இடப்பக்கமாக அவருடைய உடல் தூக்கி வீசப்பட்டதுபோல் தளர்ந்து சரிந்தது. தேர்த்தட்டை பற்றிக்கொள்ள முயன்றபோது அது வளைந்து அப்பால் சென்றது. அவர் உடல் ஓசையுடன் தேர்த்தட்டை அறைந்தது. உதடு தேர்த்தட்டில் பட்டு குருதிச்சுவைகொள்வதை உணர்ந்தார்.
கையூன்றி எழுந்தமர்ந்தபோது இருவர் அவரை தூக்கியிருப்பதை உணர்ந்தார். அதற்குள் எத்தனை பொழுது ஓடியது! பெருங்குரலில் படைகள் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தன. “வெற்றி! வெற்றி! வெற்றி!” அவர் “இளையோனே! மைந்தா!” என்று கூவியபடி புரண்டு அப்பால் கிடந்த அம்பை எடுத்து தன் கழுத்துக்கு கொண்டுவருவதற்குள் அந்தக் கையைப் பற்றி தேர்த்தட்டுடன் அழுத்தியபடி நகுலன் சொன்னான் “மூத்தவரே, பார்த்தர் வென்றுவிட்டார். வீழ்ந்தான் ஜயத்ரதன்!” யுதிஷ்டிரர் நீர்நிறைந்த பித்துவிழிகளுடன் அவனை நோக்கினார். தலை நடுங்கிக்கொண்டே இருக்க “என்ன? என்ன?” என்றார். “வீழ்ந்தான் ஜயத்ரதன்! ஜயத்ரதன் கொல்லப்பட்டான்! நம் இளையவர் வஞ்சினம் முடித்துள்ளார்!”
யுதிஷ்டிரர் “மெய்யாகவா? மெய்யாகவா?” என்றார். “ஆம், அரசே. அவன் தலை மண்ணில் உருண்டது. இளையவர் இந்திரன்போல் தேரில் அமர்ந்திருக்கிறார். நம் படைகள் வெறிகொண்டு வாழ்த்துக்கூச்சலிடுகின்றன!” யுதிஷ்டிரர் கையூன்றி ஒருக்களித்து தனக்கு சுற்றும் பார்த்தார். “ஆம்!” என்றார். பின்னர் நெஞ்சில் கைவைத்து “தெய்வங்களே! மூதாதையரே!” என விசும்பி அழுதார். அவர் தோள்களை சகதேவன் பற்றிக்கொண்டான். அவர் உடல்குறுக்கி தோள்கள் குலுங்க கால்கள் இழுபட்டு அதிர அழுதுகொண்டிருந்தார்.
அர்ஜுனன் தன்னை எதிர்த்து நின்றிருந்த துரியோதனனிடம் போரிட்டுக்கொண்டிருந்தான். அவன் கௌரவப் படைகளை எரித்தழித்தபடி செல்ல ஊடுருவித் தடுத்த துரியோதனனும் தம்பியரும் அவனை சூழ்ந்துகொண்டு அம்புகளை பெய்தனர். “விலகுக! விலகுக!” என்று அர்ஜுனன் கூவினான். “இது என் வஞ்சினம்… நான் என் சொற்களால் ஆளப்படுபவன்… அகல்க! அகல்க!” துரியோதனன் “இன்று என்னை கொல்லாமல் நீ என் மைத்துனனை தொடப்போவதில்லை, பாண்டவனே” என்றான். அர்ஜுனனின் அம்புகளை எதிர்த்து நிகர் அம்பு தொடுத்து களம்நின்றான். துச்சாதனனை சுருதகீர்த்தி எதிர்த்தான். துச்சகனையும் துர்முகனையும் சுருதசேனன் எதிர்கொண்டான். விசைகொண்டு முன்னடைந்த அர்ஜுனனை அவர்கள் தடுத்துவிட்டிருந்தனர்.
“இன்னமும் சில வினாழிகைகள்… வினாழிகைகள் மட்டுமே” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “என்னால் இனி இயலாது, யாதவரே. அவன் இங்கே எங்குமில்லை என்றே என் உள்ளம் சொல்கிறது. களத்திலிருந்தே அவனை அகற்றியிருக்கிறார்கள்” என்றான். துரியோதனனும் தம்பியரும் பின்னடைய அம்புகளால் அறைபட்டு விழுந்த கௌரவப் படைகளின் நடுவே உருவான பாதையில் பின்னால் சுருதகீர்த்தியும் சுருதசேனனும் அம்புகள் தொடுத்தபடி துணைவர தேர் விரைந்தோடியது. “காற்று இருள்கிறது… வானொளி அவிகிறது. முரசுகள் அந்தியை அறிவிக்க இன்னும் பொழுதில்லை” என அர்ஜுனன் வானை நோக்கியபடி கூவினான். “படையினர் பொழுதுணர்வை அடைந்து படைக்கலம் தாழ்த்துகின்றனர். ஒலியடங்கி குருக்ஷேத்ரம் அணைந்துகொண்டிருக்கிறது.” இளைய யாதவர் “பொழுதிருக்கிறது!” என்றார்.
அக்கணம் அந்திமுரசுகள் ஒலிக்கத் தொடங்கின. அவ்வோசை ஒவ்வொரு உலோகப்பரப்பிலிருந்தும் மீள ஒலித்தது. யானைப்பள்ளைகள், புரவிமயிர்ப்பரப்புகள் அதிர்ந்தன. கொடிகள் அவ்வோசையில் நுடங்கின. வாள்முனை ஒளிப்புள்ளிகள் அவ்வதிர்வில் நடுங்கின. கௌரவப் படையின் பேரோசை வெடித்துக்கிளம்பியது. நூறாயிரம் முரசுகள் வெற்றிமுழக்கமிட்டன. பல்லாயிரம் தொண்டைகள் “வெற்றி! சைந்தவருக்கு வெற்றி! ஜயத்ரதருக்கு வெற்றி! எழுக கரடிக்கொடி! எழுக அமுதகலக்கொடி! வெற்றி! வெற்றி!” என்று கூச்சலிட்டன. அஸ்வத்தாமன் “என்ன இது? வேண்டாம்! ஆணை! படைகள் நிலைமீள்க… நிலைமீள்க படை!” என்று கூச்சலிட்டான். “அவர் சங்கறுத்து வீழ்வது வரை போர் முடியவில்லை. நிலைமீள்க!” அவன் ஆணையை முரசுகள் ஓங்கி ஒலித்தன. ஆனால் கௌரவப் படைகளின் பெருமுழக்குக்கு நடுவே அவ்வோசை முற்றாகவே மறைந்தது.
கௌரவப் படைகளுக்கு நடுவே நீண்ட பெருங்கழையில் கரடிக்கொடி எழுந்தது. அப்புள்ளி நோக்கி நான்கு திசைகளிலிருந்தும் செறிந்து பாய்ந்து அதை சுழியென்றாக்கியது கௌரவப் படை. சைந்தவ வீரர்கள் வெறிகொண்டு கூவி துள்ளி கூச்சலிட்டனர். ஒருவர் மேல் ஒருவர் ஏறி குதித்தனர். வேல்களையும் விற்களையும் வாள்களையும் வானில் எறிந்து பற்றி ஆர்ப்பரித்தனர். தலைப்பாகைகள் அலையலையாக எழுந்தமைந்த வெளியில் ஜயத்ரதன் பாம்பு படமெடுப்பதுபோல் எழுந்தான். அவனைக் கண்டதும் “சைந்தவர் வெல்க! வெல்க ஜயத்ரதர்!” என்று படைகள் கூச்சலிட்டன. எங்கோ “இனி பாஞ்சாலத்தரசி சைந்தவர்க்கே!” என ஒரு குரல் கூவியது. அத்தனை கொந்தளிப்பிலும் அதை சில செவிகள் கேட்டன. “கவர்க பாஞ்சாலியை! கொள்க திரௌபதியை! திரௌபதியே சைந்தவ அரசி!” என சைந்தவர்கள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டனர். சிரித்தபடி, சிரிப்பு புரைக்கேறி அழுதபடி நடனமிட்டனர்.
கைகளின் அலைகளுக்குமேல் ஜயத்ரதன் ததும்பி அங்குமிங்கும் சுழன்றான். கைகளை வீசி “வெற்றி! வெற்றி!” என அவன் ஆர்ப்பரித்தான் “சொல் காக்கட்டும் இளைய பாண்டவன்! சங்கறுத்து விழுந்து நெறி நிற்கட்டும் இளைய பாண்டவன்! இளைய பாண்டவன் வீழ்க! சொல் எழுக! வீழ்க விஜயன்!” என கௌரவப் படை கூவியது. பல்லாயிரம்பேர் வாள்களை உருவி வீசி பாண்டவர்களை நோக்கி அச்சொற்களை கூற தீச்சொல் பெற்றவர்களைப்போல பாண்டவப் படை பின்னடைந்தது. களத்தில் அர்ஜுனனின் தேர் மைந்தர் தேர் உடன்நிற்க தனித்து நின்றது. இளைய யாதவர் கடிவாளங்களைப் பிடித்தபடி மாயாத மென்புன்னகையுடன் ஜயத்ரதனை நோக்கிக்கொண்டிருந்தார்.
அர்ஜுனன் “ஆம்!” என்றபடி தன் அம்புத்தூளியிலிருந்து பிறையம்பை எடுத்தான். எண்ணாமல் கைசென்று எடுத்த அந்த அம்பை நோக்கி அவன் வியந்தான். வெண்ணிற ஒளிக்கூர் கொண்டிருந்தது. தூய புன்முறுவல்போல். எச்சிறப்பும் அற்றது. பெயரிடப்படாதது. எவரோ ஓர் எளிய வீரனுக்கென கருதப்பட்டது. அவன் அவ்விந்தையுணர்வால் வெடித்துச் சிரித்துவிட்டான். கைசுழற்றி அவன் அம்பை தன் கழுத்தை நோக்கி கொண்டுசென்றபோது வானம் வெடித்து ஒளிக்கீற்று ஒன்று மண்ணிலிறங்கியது. அங்கிருந்த தேர்முகடுகளும் வாள்முனைகளும் கண்கூச ஒளிகொண்டன. அஞ்சிய கௌரவர்கள் கலைந்து ஒலியெழுப்பியபடி அங்கிருந்து விலகி ஓடினர். அந்த ஒளிக்கற்றை கணம் கணமெனெப் பெருகி அகல அங்கே செங்குத்தென ஓர் ஒளிரும் ஏரி நின்றிருந்ததுபோல் தோன்றியது.
வானை மூடியிருந்தது கருமுகில் பரப்பெனத் தெரிய பாண்டவர்கள் “தொடங்குக போர்! அந்தியெழவில்லை! தொடங்குக போர்!” என்று கூவியபடி வாள்களையும் விற்களையும் தூக்கிக்கொண்டு ஓடிவந்தார்கள். கௌரவர்களால் அதை சொல்லென்றாக்க இயலவில்லை. அவர்களின் ஓசைகள் விலங்குகளின் ஒலி போலிருந்தன. முதலில் நிலைமீண்ட சகுனி “சூழ்ந்துகொள்க! சைந்தவரை அனைத்து வீரர்களும் சூழ்ந்துகொள்க!” என்று ஆணையிட்டார். முரசொலி கேட்டதும் துரியோதனன் “படைகள் அணிதிரள்க…” என்று கூவியபடி ஜயத்ரதனை நோக்கி தேரை செலுத்தினான். கர்ணனும் துரோணரும் கிருபரும் சல்யரும் ஜயத்ரதனை நோக்கி திரும்பினர். “விரைக! சூழ்ந்துகொள்க!” என்று சகுனியின் அறைகூவல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
ஜயத்ரதன் திகைத்து செயலிழந்துவிட்டிருந்தான். அவனை தூக்கியவர்களும் எண்ணமழிந்து வானை நோக்கினர். வான்பிளவு அகன்று அகன்று இரு எல்லைகளாக மாறிச்செல்ல நடுவே எழுந்த நீலவானில் சாய்கதிரின் ஒளி நிறைந்திருந்தது. முகில்விளிம்புகள் கூர்கொண்டு சுடரிட்டன. அந்திப்பறவைகள் சில எழுந்து வானொளியில் சுழன்று களியாடின. “பார்த்தா, நிமிர்ந்து நோக்கும் அவன் தலையை வெட்டுக!” என்றார் இளைய யாதவர். அச்சொல் முடிவதற்குள் அர்ஜுனன் ஜயத்ரதனின் தலையை வெட்டினான். “அவன் தலை நிலம் தொடலாகாது. அது விண்ணிலேயே நின்றிருக்கட்டும்” என்றார் இளைய யாதவர். மேலும் மேலுமென அம்புச்சரடுகளை அறைந்து அந்தத் தலையை காற்றில் எழுப்பினான் அர்ஜுனன். அம்புகள் பறவைகளாகி கொத்திக்கொத்தி அதை கொண்டுசென்றன.
ஜயத்ரதனின் உடல் அவன் படைவீரர்களின் மேலேயே சரிந்து விழுந்தது. வெங்குருதி அவர்கள் மேல் குடம் கவிழ்ந்ததுபோல் பொழிந்தது. அஞ்சி அப்படியே அவ்வுடலை நிலத்திலிட்ட பின் அவர்கள் விலகி ஓடினர். “வீழ்ந்தார் சைந்தவர்! சைந்தவர் வீழ்ந்தார்” என முரசுகள் ஒலித்தன. துரியோதனன் கால்தளர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்தான். கர்ணனின் விஜயம் கைநழுவியது. கிருதவர்மன்தான் முதலில் சூழுணர்வு கொண்டான். “அந்தத் தலையை அவர் மண்ணில் வீழ்த்தியாகவேண்டும்… இளைய பாண்டவரை சூழ்ந்துகொள்க… அவரை அம்புதொடுக்க முடியாதபடி செய்க… தாக்குக! தாக்குக!” என்று அவன் கூவினான். அவ்வாணையை முரசுகள் ஒலிக்கத் தொடங்கியதும் வில்லவர் எழுவரும் அர்ஜுனனை நோக்கி சென்றனர். ஆனால் சுருதகீர்த்தியும் சுருதசேனனும் தங்கள் அம்புகளுடன் அவர்களை எதிர்கொண்டார்கள்.
“அந்தத் தலை நிலம்படலாகாது. அதை வானிலேயே வடமேற்கே கொண்டுசெல்க! குருக்ஷேத்ரத்தில் ரக்தவாஹா என்னும் ஓடைக்கரையில் தவம் செய்யும் அவன் தந்தை பிருஹத்காயரின் மடியில் அது விழவேண்டும்… கொண்டுசெல்க!” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனனின் அம்புநிரை ஒன்று தொட்டு ஒன்றென எழுந்து அந்தத் தலையை கொண்டுசென்றது. நோக்கிலா விழிகளுடன் குருக்ஷேத்ரத்தை நோக்கியபடி ஜயத்ரதன் சென்றான். அவன் செல்வதை பாண்டவப் படையும் கௌரவப் படையும் திகைப்புடன் அண்ணாந்து நோக்கி நின்றன. குளிர்ந்த காற்று சுழன்றடிக்கத் தொடங்கியது. அதில் நீர்த்துளிகள் நிறைந்திருந்தன. சில கணங்களிலேயே அத்தனை கொடிகளிலிருந்தும் நீர் தெறித்தது. தேர்மகுடவிளிம்புகள் குருதியூறிச் சொட்டின. ஜயத்ரதனின் தலை வானில் சிறிதாகி குருக்ஷேத்ரக் காட்டுக்கு அப்பால் மறைந்தது.
பார்பாரிகன் சொன்னான்: குருக்ஷேத்ரப் பெருங்காட்டில் அமைந்த ரக்தவாஹாவின் கரையில் பிருஹத்காயர் தன் மாணவர்களுடன் தவத்திலிருந்தார். இரு கைகளையும் கொடையேற்பு என மடியில் மலரவைத்து விழிமூடி நாகவேத நுண்சொற்களை நாவில் நிறைத்து உள்ளம் ஏழு ஆழங்களுக்கு அடியில் சென்றுவிட்டிருக்க அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் எழுந்த கனிவைக் கண்டு அங்கு என்ன நிகழ்ந்தது என அவருடைய முதன்மை மாணவன் விகிர்தன் வியந்தான். அவர் விழிகள் நிறைந்து கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. ஆனால் முகம் பேருவகையில் நெளிந்துகொண்டிருந்தது. உதடுகள் முத்தம் ஈபவைபோல சுருங்கி அதிர்ந்தன. அப்போது அவர் முலையூட்டும் அன்னையெனத் தோன்றுவதாக அவன் நினைத்தான்.
தலைக்குமேல் பறவைகள் கலைந்து ஓசையிட்டதைக் கேட்டு விகிர்தன் எழுந்து நோக்கினான். மேலிருந்து சுழன்று இறங்குவது ஒரு கரிய பறவை என அவன் எண்ணினான். மறுகணம் அது பிருஹத்காயரின் கைகளில் வந்து விழுந்தது. அவர் திடுக்கிடவில்லை. மிக மெல்ல விழிமலர்ந்து குனிந்து நோக்கினார். அவர் இருந்த அவ்வுலகிலிருந்து மீளவேயில்லை என்று தோன்றியது. காய்ச்சல்படிந்த சிவந்த விழிகளால் அவர் தன் கையிலிருந்த அந்தத் தலையை பார்த்தார். அதை தைத்திருந்த அம்புகள் அனைத்தும் சுழற்சிவிசையில் உதிர்ந்துவிட்டிருக்க காற்றால் நீவி ஒதுக்கப்பட்ட குழல்கற்றைகளுடன் அந்தத் தலை அணிகொண்டு வந்ததுபோல் இருந்தது. விழிகள் அப்போது துயிலெழுந்தவைபோல் விழித்திருந்தன. உதடுகள் முலைகுடிக்கும் மகவுபோல் கூம்பியிருந்தன. அவர் முகத்திலிருந்த அந்தப் பேருவகையும் கனிவும் ஜயத்ரதன் முகத்திலும் இருந்தது.
பிருஹத்காயர் மிக மெல்ல ஜயத்ரதனின் தலையை நிலத்தில் வைத்தார். “ஆம்!” என்றார். வலப்பக்கமாகச் சரிந்து மண்ணில் விழுந்தார். அவர் உடல் சிலமுறை இழுத்துக்கொண்டது. பூசகர்கள் குனிந்து நோக்கி அவரை மெல்ல புரட்டினர். அவர் மூக்கிலிருந்தும் செவிகளிலிருந்தும் குருதி வழிந்துகொண்டிருந்தது. பூசகர் விகிர்தனிடம் “இறந்துவிட்டார், உத்தமரே!” என்றார். அவர் கால்களைத் தொட்டு வணங்கி “விழைந்தவற்றை அடைக, நிறைவுறுக!” என்றான் விகிர்தன்.