ஏகாக்ஷர் சொன்னார்: மீண்டும் வில்லவர் எழுவரும் ஒன்றென்றாகி நிரை வகுத்தனர். அப்பால் பீமனை பால்ஹிகர் எதிர்த்துக்கொண்டிருக்கும் செய்தியை முரசுகள் அறிவித்தன. திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் துரியோதனனையும் துச்சாதனனையும் எதிர்த்துக்கொண்டிருந்தனர். “இன்னும் சற்றுபொழுது! இதுவரை வந்துவிட்டோம்! இன்னும் சில நாழிகைப் பொழுதே!” என்று சகுனியின் ஆணை கூவிக்கொண்டிருந்தது. பூரிசிரவஸ் கீழ்வானில் மின்னல்கள் வெட்டத் தொடங்கியதை பார்த்தான். ஆடி மாதமாகையால் மழை ஒவ்வொருநாளும் மூண்டும் பின் எண்ணி ஒழிந்தும் விளையாடிக்கொண்டிருந்தது. எப்போதும் விண்ணில் மின்னலும் இடியும் இருந்தது.
வரவிருக்கிறது பெருமழை என்று அஸ்வத்தாமன் எண்ணினான். அனைத்தையும் அள்ளிக்கூட்டிச்சென்று யமுனையில் கரைக்கும் மாமழை. புதுத்தளிர் எழச்செய்யும் வானருள். இடியோசை எழுந்து குருக்ஷேத்ரம் நடுங்கியது. குளிர்ந்த காற்று தென்கிழக்கிலிருந்து வீசத் தொடங்கியது. கொடிகள் பறவைச் சிறகென படபடக்கத் தொடங்கின. காற்றில் பசுங்குருதியின் மணம் இருந்தது. அர்ஜுனன் கவசப் படைகளிலிருந்து எத்திசையிலிருந்தும் வெளிவரவில்லை. அவன் புண்பட்டிருக்கக்கூடும் என்று அஸ்வத்தாமன் எண்ணினான். “எங்கும் அவனை எதிர்நோக்குக! எங்கும் காத்திருங்கள்” என்று சகுனியின் ஆணை ஒலித்தது.
குருக்ஷேத்ரக் களத்தில் ஒவ்வொருவரும் தங்கள் உடல்களில் காலத்தை உணரத் தொடங்கினார்கள். நாழிகைகள் கணங்களாயின. ஒவ்வொரு கணமும் பலநூறு எண்ணங்களாக விரிந்து பரந்தது. ஒரு கணத்தில் வாழ்ந்து சலித்து உந்தி விடுபட்டு அடுத்த கணம் நோக்கி செல்லும் விந்தையை அவர்கள் அறிந்தனர். “இன்னும் ஆறு நாழிகைப் பொழுது! இன்னும் ஆறு நாழிகைப் பொழுது!” என்று முரசுகள் முழங்கின. “ஆறு நாழிகைப் பொழுது! ஆறு நாழிகைப் பொழுது!” என்று கொம்புகள் அறைகூவின. “ஆம்! ஆறு நாழிகைப் பொழுது! ஆறு நாழிகைப் பொழுது!” என்று சூழ்ந்திருந்த பல்லாயிரம் தொண்டைகள் அலறின. “ஆறு நாழிகைப் பொழுது!” என்று யானைகள் பிளிறின. “ஆறு நாழிகைப் பொழுது!” என்று புரவிகள் கனைத்தன. மாபெரும் முரசுத்தோற்பரப்பென குருக்ஷேத்ரம் “ஆறு நாழிகைப் பொழுது! ஆறு நாழிகைப் பொழுது!” என முழங்கிக்கொண்டிருந்தது.
யுதிஷ்டிரர் உளம் கலங்கி வில் தாழ்த்தி தேர்த்தட்டில் தலைகுனிந்தமர அவருடைய பாகன் தேரை பின்னுக்கிழுத்து பாண்டவப் படைகளுக்குள் கொண்டுசென்றான். அவரைத் தொடர்ந்து வந்த சகதேவன் “என்ன இது, மூத்தவரே? நீங்கள் பின்னடைவதை படைவீரர் பார்க்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் சீற்றத்துடன் பற்களைக் கடித்தபடி “பார்த்தாயல்லவா, வடமலை அடுக்குகள்போல் நின்றிருக்கிறார்கள் கௌரவர்கள். அப்பால் எங்கோ ஒளிந்திருக்கிறான் அவ்வீணன். இளையவன் எப்படி அவனை கொல்ல இயலும்? எந்த அம்பு அங்கு வரை சென்று சேரும்? முதலில் அவன் எங்கிருக்கிறான் என்று எவருக்குத் தெரியும்? இல்லை, இன்றுடன் போர் முடிகிறது, இன்றுடன் நாம் அழிகிறோம்” என்றார்.
பின்னர் மேலும் சீற்றத்துடன் எழுந்து “நான் ஒன்று உரைக்கிறேன். இப்புவியில் என் இளையோர் ஒருவர் உயிர்விட்டாலும் மறுகணமே நானும் உயிர்விடுவேன். இளையோரின்றி இங்கு வாழமாட்டேன். இது தெய்வங்கள் மேல், மூதாதையர் மேல், நெறிகளின் மேல் ஆணை!” என்றார். சகதேவன் “மூத்தவரே, தாங்கள் சொற்களை வீணாக்க வேண்டியதில்லை. இளைய பாண்டவரை வெல்லும் ஆற்றல் கொண்ட எவரும் இங்கில்லை. உடனிருப்பவர் தெய்வம் மண்ணிலெழுந்த மானுடர். இங்கு அவர் எண்ணுவதே நிகழும்!” என்றான். “ஆம், மீளமீள நானும் அதையே சொல்லிக்கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு நாளும் உளம் தளர்கிறேன். இப்போது அவனையன்றி நான் அடிபணிவதற்கு எவருமில்லை. அவனே நமக்கு காப்பு” என்றபடி யுதிஷ்டிரர் மீண்டும் தேர்த்தட்டில் அமர்ந்தார்.
சகதேவன் திரும்பியபோது “இளையோனே, மந்தன் என்ன செய்கிறான்?” என்றார். “அவரை பால்ஹிகர் தடுத்து நிறுத்தியிருந்தார், மூத்தவரே. பால்ஹிகரும் கௌரவரும் உருவாக்கிய வலயத்திலேயே அவரும் சுதசோமனும் சர்வதனும் இப்பகல் முழுக்க சிக்கியிருந்தார்கள். அங்கிருந்து அவர் பின்னடைந்தபோது கௌரவ அரசரால் எதிர்கொள்ளப்பட்டார். கௌரவ மைந்தர்கள் எழுபதின்மரை அவர் கொன்றார். கௌரவர்கள் நால்வர் அவருடைய கதைக்கு பலியானார்கள். அவர் இப்போது அங்கருடன் பொருதிக்கொண்டிருக்கிறார்” என்றான். “எங்கு நோக்கினும் அவர்கள் எழுவரும் சூழ்ந்து நின்றிருக்கிறார்கள். எத்திசையில் எழுந்தாலும் அங்கு விற்படையே தெரிகிறது” என்று யுதிஷ்டிரர் சொன்னார்.
“ஆம், அவர்கள் இப்போது நமது போர்முறைக்கு பழகிவிட்டனர். வில்மேலோர் எழுவருமே எக்கணமும் இளையவர் தங்கள் முன் வில்லுடன் எழுவார் என்று உளம்கொண்டு நின்றிருப்பதனால் குறுகிய பொழுது போர்புரிந்து அப்படியே மீள்வதொன்றையே அவரால் செய்யமுடிகிறது” என்றான் சகதேவன். கொம்புகள் உரக்க முழங்கின. பால்ஹிகருக்கும் பீமனுக்கும் நிகழ்ந்த போர் உச்சத்தை அடைகிறதென்று உணர்ந்த யுதிஷ்டிரர் “செல்க, அங்கு செல்க! மந்தனின் அருகே நில்!” என்றார். “என் படைத்துணை அவருக்கெதற்கு?” என்றான் சகதேவன். சீற்றத்துடன் எழுந்த யுதிஷ்டிரர் “நம் அனைவரின் படைத்துணையும் அவனுக்கு வேண்டும். இப்படி எண்ணி தயங்குவதற்குரிய தருணமல்ல இது. நாமனைவரும் ஒன்றாக நின்றாக வேண்டும்…” என்றார். “செல்க… இளையோர் இருவரும் நம் அனைவராலும் சூழ்ந்து காக்கப்படவேண்டும்.”
“அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, மூத்தவரே!” என்றான் சகதேவன். பொருளில்லா சினத்துடன் எழுந்து “வீணன்! வீணன்!” என்றபடி யுதிஷ்டிரர் தன் வில்லை தேர்த்தட்டில் அறைந்தார். “எதை எண்ணி அந்த வஞ்சினத்தை எடுத்தான்! மூடன்! மூடன்!” என்றபின் “நீ அறிவாயா அவன் தந்தை மூவிழியனிடமிருந்து சொற்பேறொன்றை அடைந்திருப்பதாக கதைகள் உண்டு. அவன் தலையை நிலம் வீழ்த்துபவர் எவரோ அவர் தலை உடைந்து தெறிக்கவேண்டுமென்று” என்றார். சகதேவன் “அதெல்லாம் வீண் கதைகள்” என்றான். “அனைத்துமே கதைகள்தான்… இதோ இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பதே ஒரு பொருளில்லாத கதைதான்” என்று யுதிஷ்டிரர் கூவினார். “கதைகள் பொருளில்லாதவை அல்ல. கதைகள் பொருளில்லாதவை என்று சொல்பவன் பொருளில்லா வாழ்க்கையை உணராத அறிவிலி.”
பின்னர் மூச்சிரைக்க “அவை முளைத்து பெருகியிருக்கலாம். ஆனால் முதல் விதையின்றி எழாதென்று அறிக… அவனை கொன்றால் அவன் தந்தையின் சொற்பேறு தெய்வப் படைக்கலமென எழும்… ஆம், ஐயமே இல்லை… அவனை கொல்லாவிடில் தானே சங்கறுத்து விழவேண்டும். கொன்றால் தலையுடைந்து இறக்கவேண்டும்… எனக்கொன்றும் புரியவில்லை” என்றார். பின்னர் கைவீசி “விலகிச் செல்க! எவரும் என்னருகில் வரவேண்டியதில்லை. என் இளையோன் உயிரோடிருக்கிறான் என்ற செய்தி மட்டும் இனி என்னை வந்தடைந்தால் போதும்” என்றார்.
சகதேவன் ஓசையின்றி தலைவணங்கி புரவியை திருப்பிக்கொண்டு விரைந்து அகன்று சென்றான். யுதிஷ்டிரர் தன்னை சூழ்ந்தொலித்த முழவோசைகளை, முரசொலிகளை, கொம்பொலிகளை கேட்டபடி ஒவ்வொரு கணமும் உடல் விதிர்க்க கைகள் நடுங்க அமர்ந்திருந்தார். “ஐந்து நாழிகை! இன்னும் ஐந்து நாழிகை! ஆம், ஐந்து நாழிகை!” என்று அது அவரை நோக்கி கூவிக்கொண்டிருந்தது.
பார்பாரிகன் சொன்னான்: சகதேவன் படைமுகப்பிற்கு வந்தபோது பூரிசிரவஸுடனும் சல்யருடனும் போர் முடித்து அர்ஜுனன் படைகளுக்குள் பின்னெழுந்திருந்தான். அவனருகே சென்ற சாத்யகி “அரசே, துரோணரை எதிர்கொள்ள பாஞ்சாலர்களால் இயலவில்லை. இன்று அவர் வெறியில் அனைத்தையும் மறந்தவர் போலிருக்கிறார்!” என்றான். அர்ஜுனன் பித்து தெரிந்த முகத்துடன் தலையசைத்து முகத்தில் வழிந்து உதட்டை தொட்ட குருதியை துப்பினான். புரவியில் விரைந்து அவனருகே சென்று வணங்கிய சகதேவன் “இப்போர் இவ்வண்ணமே இன்னும் நான்கரை நாழிகை மட்டும் நீடிக்க முடியும், மூத்தவரே!” என்றான். அர்ஜுனன் “ஆம்” என்றான். அவன் தான் சொல்வதை புரிந்துகொள்கிறானா என ஐயம் கொண்ட சகதேவன் “நமக்கு பொழுதில்லை… நான்கரை நாழிகைகள் மட்டுமே” என்றான்.
அர்ஜுனன் இளைய யாதவரை நோக்கி “ஆம், அது ஒன்றே வழி” என்றான். பற்களைக் கடித்து கைகளை முறுக்குவதைப் பார்த்து திகைத்த பின் சகதேவன் இளைய யாதவரை பார்த்தான். அர்ஜுனன் “அரிய அம்புகள் எவற்றையும் இப்போரில் எடுப்பதில்லை என்று வஞ்சினம் உரைத்திருந்தேன். அந்நெறியை அவர்களே மீறிவிட்டார்கள். இனி நான் அஞ்சுவதற்கும் தயங்குவதற்கும் ஏதுமில்லை” என்றான். வெற்றுநகைப்புடன் “ஆம், வீரத்தால் அல்ல வெறும் விந்தையால் வென்றான் விஜயன் என்று என்னைப்பற்றி சூதர்கள் பாடுவார்கள். அது நிகழ்க!” என்றபின் திரும்பி ஆவக்காவலனிடம் “அசுராஸ்திரம்!” என்றான். ஆவக்காவலன் ஒருகணம் திகைத்தபின் கைவீசினான்.
அர்ஜுனனின் தேருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த மூடுண்ட பெருந்தேரிலிருந்து இரு ஆவக்காவலர்கள் இரண்டாள் நீள கழையொன்றை எடுத்தனர். சினையுற்ற மலைப்பாம்புபோல் அது புடைப்பும் வீக்கமும் கொண்டிருந்தது. இரண்டு மானுட உடலின் எடைகொண்டிருந்தது. அர்ஜுனன் காண்டீபத்தின் கீழ்முனையை காலால் கவ்வி மேல்வளைவை இருமுறை பிடித்திழுத்தபோது அது நீண்டு மும்மடங்கு உருக்கொண்டதாயிற்று. சகதேவன் “மூத்தவரே!” என்று சொல்ல நாவெடுத்தான். “போதும்! இனி என்னிடம் நெறிகள் எதையும் எவரும் உரைக்க வேண்டியதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். அர்ஜுனனின் தேரின் பின்சகடத்துடன் இணைந்திருந்த முட்சகடத்தில் தோல்பட்டை ஒன்று பொருத்தப்பட்டது. அதை காண்டீபத்தின் மேல்முனையில் இணைத்தான்.
“செல்க!” அவன் கைநீட்டி ஆணையிட்டதும் இளைய யாதவர் சவுக்கை சொடுக்கி தேரை முன் செலுத்தினார். ஏழு புரவிகளும் பாய்ந்தெழுந்த விசையால் தேர்ச்சகடம் உருள அந்தத் தோல்பட்டையால் இழுக்கப்பட்ட காண்டீபம் கிளைமுறியும் முனகலோசையுடன் வளைந்தது. அக்கணமே அதன் நாணை இழுத்து அதே விசையில் அந்தப் பேரம்பை அதில் தொடுத்து ஏவினான். கவசநிரை கடந்து அப்பால் பாய்ந்த தேரிலிருந்து பாறை பிளக்கும் ஒலியை எழுப்பியபடி அசுராஸ்திரம் சீறியெழுந்து விண்ணில் பாய்ந்து வளைந்து கௌரவப் படைகளுக்குள் சென்று விழுந்தது. அது விழுந்த இடத்தில் பெருவெடிப்போசை எழுந்தது. அங்கிருந்து நூறு சிறு மின்னல்கள் கிளம்பி படைப் பகுதிகளை அதிரச்செய்தன. ஒன்றின் மேல் ஒன்றென எழுந்த மூன்று கரும்புகைச் சுருள்கள் வளர்ந்து தேவதாரு மரம்போல் நின்று கீழ்க்காற்றில் மெல்ல கலைந்து அப்பால் சென்றன.
கௌரவப் படைகளின் அலறல்களையும் கூச்சல்களையும் சகதேவன் கேட்டான். மரம் விழுந்த இடத்தின் பறவைக்கூட்டம்போல் கௌரவர்கள் அங்கிருந்து பறந்தகன்றனர். “கைவிடுபடைகள் தொடர்க!” என அர்ஜுனன் கூவ அந்த ஆணை முழவொலியென எழ யானைகளாலும் புரவிகளாலும் இழுக்கப்பட்ட பெருவிற்களில் இருந்து எரிப்பொதிகளுடன் அம்புகள் எழுந்து கௌரவப் படைகள் மேல் விழுந்து வெடித்தன. இடித்தொடர்களால், மின்னல்களால் குருக்ஷேத்ரம் அதிர்ந்தது. புகைமுகில்கள் எழுந்து களக்கொந்தளிப்பை மூடின. கௌரவப் படையினர் அஞ்சி விலக உருவான இடைவெளியினூடாக அர்ஜுனன் உள்ளே நுழைந்தான்.
அரவான் சொன்னான்: அசுராஸ்திரம் இருள் வடிவானது. வெளவால் போன்ற மடிப்புகள் விரிந்து அகலும் பெருஞ்சிறகுகள் கொண்டது. நூறு கூகைகளின் ஓசை எழுவது. கூரலகு திறந்து அனல் உமிழ்வது. அது கௌரவப் படைகளுக்கு மேல் எழுந்து நூறு முறை சுழன்றது. அதன் அனல் பட்ட இடங்களில் வீரர்கள் பொசுங்கி உயிர்விட்டனர். யானைகள் உடலெங்கும் தோல் உரிந்து செந்தசை வெந்து வெளுக்க தோலிருந்த நாகமென வெந்த துதிக்கை நெளிய கதறியபடி சுழன்றோடின. புரவிகள் குஞ்சிமயிர் தழலுடன் பறக்க துள்ளித் தெறித்து விழுந்து நிலத்தில் புரண்டு குமிழிகளாக வெடித்து உடற்கொழுப்பு நீலச்சுடராக நின்றெரிந்தன. தேர்கள் அனல் கொண்டு உருண்டு சென்று புரண்டு எரிந்தெழுந்து பிற தேர்களை பற்ற வைத்தன. அனல் எரிந்த வளையம் விரிந்து அகல அங்கு கருகிய உடல்களும் பொசுங்கிய தேர்களும் பரவிய சாம்பல் வெளியொன்று உருவாகியது. அங்கே இன்னமும் உயிரணையாத உடல்கள் கரிய புழுக்களைப்போல் கிடந்து துடித்தன.
அர்ஜுனன் அந்தப் பரப்பிற்குள் நுழைந்து கண் நோக்கும் விரைவைவிட விசை கொண்டு அதை கடந்து கௌரவப் படைகளுக்குள் புகுந்தான். அக்கணம் மண்ணுக்குள் திறந்த பலநூறு புற்றுவாய்களிலிருந்து எழுந்த பல்லாயிரம் நாகப் பேருருக்கள் சொடுக்கப்படும் சாட்டைகள்போல் உடல் நெளிய எழுந்து அவனை சூழ்ந்துகொண்டன. அவை துரோணரின், கிருபரின், பூரிசிரவஸின், சல்யரின், அஸ்வத்தாமனின், அங்கரின் அம்புகளில் சென்று குடியேறி சீற்ற ஒலியுடன் எழுந்து சென்று அர்ஜுனனை தாக்கின. அவன் ஊர்ந்த தேர் மீதும் புரவிகளின் மீதும் விழுந்து கரிய நாக உடல்கள் சுருண்டு நெளிந்தன. புரவிகளைச் சுற்றி இறுக்கி இழுத்து கீழே தள்ளின. தேர் சரிந்து ஒருபக்கமாக ஓட இளைய யாதவர் தன் கையிலிருந்த சவுக்கால் அறைந்து அறைந்து அந்நாகங்களை அப்பால் தள்ளினார். சலியாத அம்புகளால் அந்நாகங்களை அரிந்து துண்டுகளாக்கி அச்சாம்பல் வெளியிலிட்டு அவை புழுப்பெருக்குகளென செறிந்து நெளிந்து கொப்பளிக்க அவற்றின்மேல் தன் தேரை உருட்டிச்சென்றான் அர்ஜுனன்.
மேலும் மேலுமென நாகங்கள் ஏழு வில்லவர் அம்புகளில் எழுந்து அர்ஜுனனை தாக்கின. அர்ஜுனன் ராக்ஷஸஅஸ்திரத்தை எடுத்தான். தேரின் விசையில் வில்லை குலைத்து நாண் இழுத்து அதை ஏவினான். அக்கணம் போர்க்களம் முற்றாக இருண்டது. இருளுக்குள் அம்புகளின் சீறல் ஒலிக்க கூர்முனைகள் மோதிக்கொள்ளும் மின்னல்கள் மட்டுமே தெரிந்தன. அவ்விருளுக்குள் ஓசைகளினூடாகவே பாதை தெரியக்கண்டு கௌரவப் படையைத் தாக்கி மேலும் உட்புகுந்தான். இருளுக்குள் நிலையழிந்த கௌரவர் ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டனர். தங்கள் உடல்களில் கால்சிக்கி தங்களவர் மீதே விழுந்தனர். தழுவிக்கிடந்த அவர்களை கொன்று அழித்தன பாண்டவர்களின் கைவிடுபடைகளிலிருந்து எழுந்த கண்ணிலா அம்புகள்.
கர்ணன் தன் கையிலிருந்த விஜயத்தை இழுத்து தமோஹம் என்னும் நாக அம்பை எய்தான். அதில் அமைந்திருந்த ஏழுதலைகொண்ட பாதாள நாகம் இருளுக்குள் வழி உசாவிச்செல்லும் கட்செவி கொண்டது. அர்ஜுனனின் தேரை அறைந்து அது கவிழ்ந்து உருளச்செய்தது. தேரிலிருந்து வில்லுடன் தெறித்து விலகி அப்பால்சென்ற அர்ஜுனன் முழந்தாளிட்டு அமர்ந்து தன் தலைகொய்ய வந்த தமோஹத்திலிருந்து தப்பினான். தேரிலிருந்து கையூன்றி எழுந்த இளைய யாதவர் அப்போதும் கடிவாளத்தை விடாமல் ஆணையிட்டு புரவிகளை விசை குறையாது உந்தி தேரை திருப்பினார். பக்கவாட்டுப் புரவி ஒன்று கனைத்தபடி துள்ள அவ்விசையில் தேரை எழுப்பிவிட்டார். அதற்குள் ஏழு அம்புகளால் தமோஹனை அறைந்து துண்டித்துவிட்டு அர்ஜுனன் பாய்ந்து மீண்டும் தேரிலேறிக்கொண்டான்.
பூரிசிரவஸும் சல்யரும் எய்த அம்புகளில் குடியேறி பாதாள நாகங்கள் கடல் ஊற்றெடுப்பதுபோல பெருகிப்பெருகி எழுந்து ராக்ஷஸஅஸ்திரத்தை தாக்கின. ஆயிரம் பெருநாகங்கள் அதன் மேல் விழுந்து அழுத்தி மண்ணுடன் பற்றிக்கொண்டன. ஒளி மீண்டதும் அக்கணமே அர்ஜுனன் ஐந்திரம் என்னும் அம்பை அனுப்பினான். விண்ணில் இடியோசை எழுந்தது. தொலைவில் மின்னல்கள் வெட்டி வெட்டி அதிர்ந்தன. ஐந்திரம் ஏழு முறை சுழன்று விண்ணிலெழுந்தது. அதன் விசையில் போர்களத்திலிருந்த ஆடைகளும் கொடிகளும் தங்கள் இணைப்புகளிலிருந்து விடுபட்டு ஒன்றாகிச் சுழன்று தூண்போல் மேலெழுந்தன. வேல்முனைகளும் ஈட்டிக்காம்புகளும் கூட அச்சுழற்காற்றால் மேலே தூக்கப்பட்டன. வீரர்கள் அஞ்சி அப்பால் விலக அத்தூண் போர்க்களத்தை உலைத்தபடி கௌரவப் படைகளுக்குள் கடந்து சென்றது. அதை தொடர்ந்து சென்ற அர்ஜுனன் சிதறி ஓடிய கௌரவப் படைகள் ஒவ்வொருவரையும் வில்கொண்டு அறைந்து வீழ்த்தினான்.
நாகர்கள் மண்ணிலிருந்து உருகிய இரும்புக் கொந்தளிப்பென எழுந்து அச்சுழலை கவ்விக்கொண்டனர். ஒருவர் வாலை ஒருவர் கவ்வித் தொடுத்து வலையென்றாகி அதன் மேல் ஏறி தாங்களும் சுழன்றனர். கரிய உறையென்றாகி அக்கோபுரத்தை மூடினர். விண்ணளவுக்கு எழுந்து சென்ற நாகங்களின் எடையால் ஐந்திரம் தன் விசையழிந்து மண்ணில் விழுந்தது. வானில் தூக்கப்பட்ட ஈட்டிகளும் அம்புகளும் உடைந்த தேர்ப்பகுதிகளும் ஒன்றன் மேல் ஒன்றென விழுந்து ஒரு குன்று உருவாகியது. அதிலிருந்து நாற்புறமும் சிதறி எழுந்த நாகங்கள் பத்திகளை நிலத்தில் அறைந்து சீறி தலையெழுப்பி நா பறக்க விழி மின்ன வஞ்சம் உரைத்தன.
அர்ஜுனன் வாருணம் எனும் அம்பை எய்தான். அனைவரும் மெய்ப்புகொள்ளும் குளிர் அங்கே எழுந்தது. மறுகணம் அப்பகுதியெங்கும் மழை சீறி அறைந்தது. கொடிகள் நனைந்து படபடத்தன. தேர்முகடுகளில் இருந்த உலர்ந்த குருதி கரைந்து செங்கொழுமையெனச் சொட்டியது. ஆடைகள் உடலில் ஒட்ட வீரர்கள் நிலையழிந்தனர். தேர்ச்சகடங்களும் புரவிக்குளம்புகளும் செம்மண்ணுடன் குருதியைச்சேர்த்து மிதிக்க உழுது புரட்டிய புது வயலென்றாயிற்று குருக்ஷேத்ர நிலம். மழைத்திரைக்குள் புகுந்த அர்ஜுனன் கௌரவப் படைவீரர்களை கொன்றான். அவர்கள் விழிமறைத்த நீருக்குள் மூச்சுத்திணறினர். குளிரொளித் தூண்களென நின்றிருந்த மழைக்காட்டுக்குள் முட்டிமுட்டி திசையழிந்தனர். ஊடுருவி வந்த அம்புகளால் கொல்லப்பட்டு உதிர்ந்தனர்.
பிருஹத்காயர் தன் வஞ்சினக் களத்திலிருந்து அதை கண்டார். “எழுக தெய்வங்கள்! எனைக் காக்கும் பாதாள மூர்த்தங்களே எழுக!” என்று இரு கைகளையும் விரித்துக் கூவினார். தன் முன்னிருந்த அவிப்பொருட்களை அள்ளி அள்ளி அடியிலா சிறு துளைக்குள் போட்டு வணங்கினார். அப்படையல்கள் சென்று பாதாள உலகத்தில் ஒருவரோடு ஒருவர் பின்னி முண்டி மேலெழுந்த நாகங்கள் மேல் விழுந்தன. நெய்யுண்ணும் தழல்கள்போல் பாதாள நாகங்கள் அவற்றை பிளவுநா நீட்டி எட்டி எட்டி உண்டன. சீறி விசைகொண்டு குருக்ஷேத்ரத்தின் அனைத்து பாதாள வாயில்களினூடாகவும் அவை மேலெழுந்தன. ஒன்றையொன்று அறைந்து உடல் பின்னி நெளிந்தும் பத்தி விரித்தும் அவை வான்கூரை போலாயின. குருக்ஷேத்ரத்தை முற்றாக மூடி வாருணத்தின் ஒரு துளி நீரும் மண்ணை வந்தடையாமல் மறைந்தன.
மழை ஓய்ந்த வெளியில் நின்று கொண்டிருந்த அர்ஜுனனை நோக்கி இளைய யாதவர் “மாயாஸ்திரத்தை எடு…” என்றார். அர்ஜுனன் எய்த மாயவாளி களத்திலிருந்த அனைவர் விழிகளையும் நுண்ணிதின் நடுக்குறச் செய்தது. அதிர்ந்த விழிகளிலிருந்து நோக்கு மறைய அவர்கள் வெண்ணிற இருளையே எங்கும் கண்டனர். பொருட்களை துலக்கும் ஒளி பால் திரிவதுபோல் பல நூறு வண்ணங்களென்றாகி எதையும் காட்டுவதற்கு ஒவ்வாததாக மாறியது. பாதாள நாகங்கள் தங்கள் நாக்குகளை, வாய்களைத் திறந்து நாகமணிகளை ஒளியெழக் காட்டின. பல்லாயிரம் நாகமணிகளிலிருந்து எழுந்த இளநீல ஒளி அப்பகுதியை துலங்கச் செய்தது. கௌரவப் படைவீரரும் வில்லவர் எழுவரும் முற்றிலும் புதிய ஒளியில் குருக்ஷேத்ரத்தை கண்டனர்.
விழைவதை மட்டுமே காட்டும் அவ்வொளியில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் அனற்கோடென துள்ளிய காண்டீபத்தை, அதை ஏந்தி நின்ற செம்புகை வண்ணம் கொண்ட வீரனை, அவன் முன் அமர்ந்திருந்த நீலச்சுடர் என உடல் அமைந்த பாகனை, வெண்தழல்போல் நெளிந்தோடிய புரவிகளை கனல் என எரிந்த தேரை நாகங்கள் கண்டன. “கொல்லுக! கொல்லுக!” என்று கூவியபடி அவனை தங்கள் வால்கூர் அம்புகளால் அறைந்தன. அர்ஜுனன் கௌரவப் படையின் பாதியைக் கடந்து உள்ளே சென்றுவிட்டிருந்தான். “இன்னும் இரு நாழிகைப் பொழுது!” என்று தொலைவில் காந்தாரர் சகுனியின் ஆணை கேட்டது. “இருள் எழவிருக்கிறது! இன்னும் இரு நாழிகைப் பொழுது!” என்று படைகள் கூவிக்கொண்டிருந்தன.
அர்ஜுனன் சந்திராஸ்திரத்தை தொடுத்தான். அனைவரும் உளம்கலங்கி சிரித்தும் வெறிகொண்டு கூச்சலிட்டும் அலைய பன்னிரு நாகங்கள் அவ்வம்பைச் சுற்றி கவ்வி விழுங்கின. அவன் பௌமாஸ்திரத்தை தொடுத்து மண்ணைத் துளைத்து அவற்றை துரத்திச் சென்றான். அவனை ஆயிரம் நாகங்கள் குடையென கவிந்து தாக்கின. அவன் சௌபர்ணாஸ்திரத்தால் அவற்றை தாக்கினான். அது சிறகுகள் கொண்டு நூறாயிரம் பறவைகளாக மாறி நாகங்களை பறந்து பறந்து கொத்திக்கிழித்தன. நாகங்கள் அவன் தேர் உருண்ட மண்ணில் பரவி அவனை அள்ளி வானில் தூக்கின. அவன் கருடாஸ்திரத்தால் அவற்றை தாக்கி தன் தேரை மீண்டும் மண்ணில் விழச்செய்தான். ஆக்னேயாஸ்திரத்தால் நாகங்களை எரித்தான். வாயுவாஸ்திரத்தால் அவற்றை அள்ளிச்சுழற்றி பெரிய உருளைகளாக்கி திசைகளுக்கு அப்பால் எறிந்தான். விசோஷனாஸ்திரத்தால் புழுதிச்சுழல்களை எழுப்பினான். சைலாஸ்திரத்தால் மண்ணை அறைந்து நிலநடுக்கை உருவாக்கினான். வஜ்ராஸ்திரத்தால் மண்ணைப் பிளந்து அவ்வாயில் பாம்புகளை உள்ளே தள்ளினான். அவை எண்ணி எண்ணிப் பெருகும் தன்மைகொண்டிருந்தன. எதிரியின் எண்ணங்களிலிருந்து எழும் ஆற்றலையும் பெற்றிருந்தன. தங்கள் எண்ணப்பெருக்காலேயே அவை அனைத்தையும் வென்றன.
அவன் அந்தர்த்தானஸ்திரத்தால் தன்னை இன்மையென்றாக்கி ஒளியில் மறைத்துக்கொண்டான். அவை தங்கள் நிழல்களைக்கொண்டு ஓர் அர்ஜுனனைப் படைத்து அவனை தாக்கின. அந்நிழல் அடைந்த தோல்வியும் தன்னதே என்று உணர்ந்த அர்ஜுனன் தோற்றம் கொண்டு ருத்ராஸ்திரத்தால் அவர்களை அழித்தான். அது ஆயிரம் அனல்நாவெழுந்த எரிகுளமாக விரிய அதில் அரவுத்திரள் அவியாகியது. தங்களை அவியிட்டு அந்த வேள்விப்பயனால் அவை மேலும் பேருருக்கொண்டு எழுந்தன. சம்மோஹனாஸ்திரத்தால் அவன் அவற்றை மயங்கச்செய்தான். அவை அம்மயக்கில் கனவுகண்டு அக்கனவில் ஒன்று ஆயிரமெனப் பெருகி எழுந்தன. கந்தர்வாஸ்திரத்தால் அவன் அக்கனவுகளில் புகுந்துகொண்டு அவற்றை கொன்றான். அந்தப் போர் காலமின்மையில் என நிகழ்ந்துகொண்டே இருந்தது. கொல்லக் கொல்லப் பெருகி அர்ஜுனனை சூழ்ந்தன நாகங்கள். வெல்ல வெல்ல சினம்கொண்டு அவன் எழுந்துகொண்டே இருந்தான்.
இளைய யாதவர் “பாசுபதம் எழுக!” என்று கைதூக்கி கூவினார். உறுமியபடி பாசுபதம் எழுந்தது. குகைவிட்டெழுந்த சிம்மம் என அதன் ஓசை கேட்டு கௌரவர்கள் நடுங்கினர். அக்கணமே கர்ணனின் அம்பிலிருந்து பன்னகம் இடியோசை முழக்கி எழுந்து பாசுபதத்தை நோக்கி சென்றது. பாசுபதம் எருதுமுகம் கொண்டிருந்தது. நூறு சிறகுகளும் சிம்ம உகிர்கள் கொண்ட ஆயிரம் கைகளும் அதற்கிருந்தன. பன்னகம் முதலைத் தோல்பரப்பும் முதலைக் கைகள் ஆயிரமும் அனலுமிழும் வாயும் எண்ணியதை சென்று தொட்டு தெறிக்கும் நெடுங்கதிரென நாவும் கொண்டிருந்தது. பாசுபதமும் பன்னகமும் விண்ணில் போர்புரிந்தன. அப்போர் ஒருகணத்திற்குள் விரியும் யுகங்களில் நிகழ்ந்தது. ஆழங்களிலிருந்து எழும் அனைத்து ஆற்றல்களையும் பன்னகம் கொண்டிருந்தது. உயரங்களிலிருந்து இறங்கும் விசைகள் அனைத்தையும் தன்னிடம் கொண்டிருந்தது பாசுபதம். நாகர்களே நாகமும் காளையுமாகி முதலும் முடிவுமாகிய சிவம் தன்னுடன் தானே போரிட்டுக்கொண்டிருந்தது.