தொல்பொருள் அழிப்பு மனநிலை

https://twitter.com/i/status/1091718932204060673

ஜெ

சில நாட்களுக்கு முன், ஹம்பியில், விஷ்ணு கோவிலில்,  நான்கு இளைஞர்கள் (இதில் இருவர் பெங்களூருவிலிருந்தும் ஒருவன் ஐதராபாத்திலிருந்தும்)  புராதன கற்றூண்களை  இடித்து தள்ளும்  பதிவைப் பார்த்து மனம் பதைக்கிறது ஐயா.

மூவரும் தவறை ஒப்புக்கொண்டதாகவும், உற்சாகம் கருதி செய்ததாக சொல்வதாகவும்,  வரலாற்று முக்கியத்துவம் தங்களுக்கு தெரியாதென்று  சொல்வதாகவும் காவலர்கள்  அறிக்கை விடுகிறார்கள்.

பிரச்னை என்ன?

  1. மனது கொந்தளிப்பை கட்டுப்படுத்துவது எப்படி? (இபுபுரோபென் டாக்டரின் பரிந்துரைப்படி முழுங்க வேண்டியிருக்கிறது)
  2. நாம் நம் இளைஞர்களுக்கு என்னகற்றுக் கொடுக்கிறோம்? அதில் ராஜா  எனும் ஒருவன் பிஇ படித்துள்ளான்.

முத்து

 

அன்புள்ள முத்து,

இது அறியாமைதான். இல்லையேல் தாங்களே படம் எடுத்து அதை இணையத்தில் ஏற்றியிருக்க மாட்டார்கள். ஆனால் இந்த அறியாமை எங்கிருந்து வருகிறது? கடுமையான தண்டனை இருக்குமிடத்தில் இந்த அறியாமை வருமா?

மனக்கொந்தளிப்பு என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டவேண்டியதில்லை. நல்ல அறை விட இங்கே ஆளில்லை. வேறெந்த காரணமும் இல்லை.

பலமுறையாக எழுதிக்கொண்டே இருக்கிறேன். படித்த கீழ்மகன்கள் தொல்லியல் இடங்களை அழிப்பதை. கருக்கியூர் குகைஓவியங்களை தீயிட்டு கருக்கியவர்கள் தமிழகப் பொறியியல் மாணவர்கள். அத்தனை குகை ஓவியங்களிலும் ஆங்கிலத்தில் கிறுக்கி வைத்திருப்பவர்கள். கல்லூரிமாணவர்கள்தான். முக்கியமான அத்தனை தொல்லியல்நிலைகளிலும் இளைஞர்கள் அட்டூழியம் செய்வதை பார்க்கிறேன்.

இந்த கீழ்மகன்கள்  முன்னுதாரணமாக தண்டிக்கப்பட்டிருக்கவேண்டும். மக்கள் முன் நிறுத்தப்படவேண்டும். இன்றைய சட்டம் இவர்களை சில்லறை அபராதத்துடன் விட்டுவிடும். அது நிகழக்கூடாது.

*

நாம் ஆராயவேண்டியது இந்த மனநிலையைத்தான். எப்படி இந்த வகையான ‘அறியாமை’ இவர்களுக்கு ஏற்படுகிறது? இவர்கள் ரோமுக்குச் சென்று கொலோசியத்தில் ஒரு கல்லை நகர்த்தி வைப்பார்களா? மாட்டார்கள். ஏனென்றால் அது வரலாற்று முக்கியத்துவம் கொண்டது, அரியது என திரும்பத்திரும்ப கற்பிக்கப்படுகிறது. அதேசமயம் இதன் முக்கியத்துவம் எவ்வகையிலும் சொல்லப்படுவதில்லை. நேர் மாறாக இது சார்ந்த பாரம்பரியம் தொடர்ச்சியாக இழிவுபடுத்தப்படுகிறது. அதன் அர்த்தம் குலைக்கப்பட்டு அதன் பெருமை திரிக்கப்பட்டு மிக எதிர்மறையான ஒரு சித்திரம் இளைஞர்களுக்கு அளிக்கப்படுகிறது

இந்தியாவின் போலி முற்போக்குத் தரப்பு இந்தியப் பண்பாட்டின்மேல் செலுத்திய மாபெரும் வன்முறைக்காக வரலாற்றில் ஒருநாள் கூசிநிற்கத்தான் வேண்டும். புத்தமதத்தின் தடையங்களை அழித்த மாவோவுக்காக இன்றைய சீனா கூசுவதுபோல. கத்தோலிக்கத் தடையங்களை அழித்தமைக்காக இன்றைய பிரிட்டன் கூசுவதுபோல. நூறாண்டுகளாக இவர்கள் இந்திய மரபின் மெய்யியல், பண்பாடு, கலைச்செல்வங்களை சிறுமைசெய்து இழிவுபடுத்தி திரித்து உருவாக்கிய இருட்டை நாம் கடக்க இன்னும் ஒருநூறாண்டு ஆகும்.

சென்ற நூறாண்டுகளாக தமிழகத்தில் நம் மாபெரும் கலைக்கோயில்களைப் பற்றி என்ன கற்பிக்கப்பட்டிருக்கிறது? சீரங்கம் கோயிலையும் சிதம்பரம் கோயிலையும் பீரங்கி வைத்து பிளக்கும்படி சொன்ன ‘அறிவியக்கங்கள்’ தானே இங்கே இருந்தன. உலகம் வியக்கும் மாபெரும் கலைச்சின்னங்களான இவற்றைப்பற்றி நான்குவரிகளாவது சொல்லத் தெரிந்த இளைஞர்கள் தமிழகத்தில் எத்தனைபேர் இன்றிருக்கிறார்கள்? மரபு குறித்த முழுமையான அறியாமையும் அதன் விளைவான மூர்க்கமான எதிர்ப்பும் ஏதோ புரட்சி என்றும் கலகம் என்றும் இங்கே அறிவிலிகளால் கற்பிக்கப்பட்டு அறிவிலிகளால் நம்பப்படுகிறது. அது ஓர் அறிவுத்தரப்பென்றே கொள்ளவும் படுகிறது.

இந்தியா முழுக்க இந்நிலைதான். நம் கல்வியில் மரபின் மெய்ஞானமோ கலைச்சிறப்போ தத்துவங்களோ இல்லை. மதச்சார்பின்மை என்றபேரில் தேசியமே புறக்கணிக்கப்பட்டது. இன்று அதை புகுத்தநினைப்பவர்களுக்கு பண்பாட்டுக்கும் வெற்றுநம்பிக்கைகளுக்கும் இடையே வேறுபாடு தெரியவில்லை. இன்று நாம் இருப்பது ஓர் இருண்ட ஆழம். இருளில் புழுக்கள்தான் பெருகும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅந்த டீ – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55