இலக்கியத்தில் அன்றாடம்

prathaman

அன்புடன் ஆசிரியருக்கு

பிரதமனுக்கு நீங்கள் எழுதிய சிறிய முன்னுரை ஒருவகையான நிறைவை அளித்தது. எப்போதுமே உங்களுடைய நூல் முன்னுரைகள் ஒரு தொகுப்புத் தன்மையை கொண்டிருக்கும். விஷ்ணுபுரத்தின் முன்னுரைகளை திரும்பத் திரும்ப வாசிப்பேன். நேற்று பிரதமன் தொகுப்பின் அட்டைப்படத்தை நண்பர் ஒருவர் பகிர்ந்து இருந்தார். இந்த நூலுக்கான உங்களது முன்னுரை எவ்வாறு இருக்கும் என மீள மீள யோசித்தேன். ஆனால் அந்த சிந்தனைக்குத் தொடர்பில்லாததாக அதேநேரம் மிகக் கச்சிதமாக இச்சிறுகதைகளை எழுத வேண்டிய தேவையை இம்முன்னுரை சொல்லி விடுகிறது. அயினிப்புளிக்கறி என்ற அழகும் எளிமையும் மிளிரும் காதல் கதையும் ரயிலில் என்ற எந்த மனிதரும் விடுபடமுடியாமல் தவிக்கும் பழிச்சரடினை தொட்டெடுக்கும் கதையும் இத்தொகுப்பில் உள்ளன. வெண்முரசில் போர் உச்சம் பெரும் தருணத்தில் எழுதப்பட்ட இக்கதைகளை வரலாற்று அழுத்தமும் தத்துவச் சிக்கல்களும் கொண்ட அந்தப் பெருமானுடர்களிடமிருந்த ஒரு விடுபடலாக சொல்கிறீர்கள்.

எழுத்தாளனாக இப்படி “பிரிந்து” நிற்பது அவசியம் என்றே எண்ணுகிறேன். வரலாற்று மனிதர்கள் வாழ்க்கை அளிக்கும் துயரையும் பொருளின்மையையும் கடந்தவர்கள். ஏதோவொரு வகையான வீம்புடன் அன்றாடத்தின் நிகழ்வுப் பெருக்கில் ஒரு தனிப்பாதையை அமைத்துக் கொண்டு உறுதியுடன் வாழ்வை கடந்து சென்றவர்கள். அவர்களது வாழ்க்கை இங்கு மீள மீள சொல்லப்பட்டே ஆகவேண்டும். அவர்களை பற்றிக்கொண்டு கடந்து செல்வது மட்டுமே வாழ்வின் பொருளின்மையை உணர்ந்தவர்களால் செய்யக்கூடுவது. ஆனால் இங்கு பெரும்பாலும் அன்றாடமே எழுதப்படுகிறது. அன்றாடத்திலும் கைக்கு சிக்கக்கூடிய ஒரு ஆழம் இருக்கவே செய்கிறது. ஆனால் அதைத்தொடமால் அன்றாடத்தின் மேல்மட்ட சலனங்கள் மட்டுமே மீணடும் மீண்டும் புனையப்படுகிறதோ என்ற சந்தேகத்தை இதழ்களில் வெளியாகும் பெரும்பாலான புனைகதைகள் ஏற்படுத்துகின்றன. அவ்வகையில் அன்றாடத்தில் இருக்கும் அழகுகளையும் கோணல்களையும் வஞ்சங்களையும் சுட்டுகின்ற கதைகளாக பிரதமன் தொகுப்பில் உள்ள கதைகள் இருக்கும்.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

அன்புள்ள சுரேஷ்,

கதை எழுதுபவர்களில் இருவகையினர் உண்டு. ஒருசாரார் எழுதுவதற்கு ஒரு கதைக்களம், ஒரே அழகியல் மட்டுமே கொண்டவர்கள்.  அவர்களின் அடிப்படைக் கேள்விகளும் ஒருசிலவாகவே இருக்கும். அவர்கள் பழகிய அந்த அழகியலுக்குள் நுட்பங்களை தொடர்ந்து அடைந்துகொண்டிருப்பார்கள். மௌனியோ லா.ச.ராவோ ஆதவனோ  வண்ணதாசனோ அவர்களின் எழுதுமுறையில் மாற்றங்கள் எதையும் நிகழ்த்தியதில்லை.

ஆனால் இன்னொருவகை எழுத்தாளர்கள் அடிப்படையான வினாக்களை ஒன்றிலிருந்து ஒன்று என விரித்துக்கொண்டே செல்பவர்களாக இருப்பார்கள். அதற்கேற்ப கதைக்களத்தை மாற்றிக்கொண்டிருப்பார்கள். கதைசொல்லும்முறையில்கூட பெரிய மாறுபாடுகள் நிகழும்,. தமிழில் அதற்கு முதன்மையான உதாரணம் புதுமைப்பித்தன்தான். அவர் வெளிப்பட்ட களங்கள் ஏராளமானவை. சொல்லப்போனால் பின்னர் பிறர் எழுதிய அத்தனை கதைகளுக்கும் புதுமைப்பித்தனே முன்னோடியான கதையை எழுதியிருப்பார். சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் ஜி.நாகராஜனும் மட்டுமல்ல லா.ச.ராமாமிருதமும் புதுமைப்பித்தனிலேயே தொடக்கம் கொண்டிருக்கிறார்கள்.

சுந்தர ராமசாமியின் கதையுலகில் லவ்வு போன்ற கதைகள் ஒருபக்கம் என்றால் கொந்தளிப்பு போன்ற கதைகள் மறு எல்லையில் உள்ளன. அசோகமித்திரனின் கதையுலகில் மாலதி போன்ற யதார்த்தவாதக்கதைகள் நடுவேதான் காந்தி போன்ற எண்ணப்பெருக்கு மட்டுமேயான கதைகள் உள்ளன. இன்னும் சிலநாட்கள் போன்ற கொடூரமான கதைகள் உள்ளன. இந்தக்கதைகள் வழியாக அவர்கள் தேடுவது ஒரே வினாவின் வெவ்வேறு இயல்கைகளை. வெவ்வேறு வினாக்களின் விடைகளை. அழகியல்சார்ந்து இந்த வேறுபாட்டை அவர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்டிருப்பார்கள்.

சுந்தர ராமசாமியின் குரங்குகள் என்னும் கதை எழுபதுகளில் வெளிவந்தது. அதில் குரங்குகள் ஒரு ஊருக்குள் தாக்கி சூறையாடுகின்றன. அவற்றைப் பிடிக்க நீர்ப்பாம்புகளை கொண்டுவந்து விடுகிறார்கள். பாம்புகளைப் பிடித்த குரங்குகள் அவற்றை விட அஞ்சி பிடியை தக்கவைத்தபடியே பட்டினி கிடந்து உயிர்விடுகின்றன. கதை முடிவில் ஒரு பெரியவர் ‘அப்பா உனக்கு எத்தனை அறிவு, எத்தனை ஆற்றல், இந்தச் சின்னவிஷயம் தெரியவில்லையே’ என்று சொல்வார்.

அக்கதை வெளிவந்தபோது அப்படி உண்மையில் குரங்குகளை பிடிக்கமுடியாது என ஒரு விமர்சனம் எழுதப்பட்டது. சுந்தர ராமசாமி ‘அந்தக்கதை தன்னை ஒரு பேரபிள் – நீதிக்கதை – என உருவகித்துக்கொள்கிறது. நீதிக்கதைக்குள் அது சாத்தியம்தான்” என்று பதில் சொன்னார். மர்க்கடமுஷ்டி என்னும் சொல்லாட்சியிலிருந்து எழுந்த கதை அது. சுந்தர ராமசாமியின் இயல்பான எழுத்துலகு அவர் வலுவாக நேரடியாக வெளிப்படும் யதார்த்தக் கதைக்களம். ஆனால் அந்த இன்னொரு களத்தில் தான் தேடும் ஒன்று என்ன பொருள்கொள்கிறது என்பதே அக்கதையில் அவர் முயன்றது.

வெவ்வேறு வகை வெளிப்பாடுகளினூடாக நாம் மீளமீள நம்மை கண்டடைகிறோம். நாம் எழுதும் எல்லா கதைகளிலும் உள்ளோட்டமாக ஒரு தர்க்கம் இருக்கும், நம்முடைய ஒருகதையை  முழுமைப்படுத்தவே அடுத்த கதை எழுதப்படுகிறது. தராசின் தட்டுகளில் மாறிமாறி வைத்துக்கொண்டே இருப்பதுபோல நாம் எழுதிக்கொண்டே இருக்கிறோம்.

*

அன்றாடத்தை இலக்கியம் தவறவிடவே முடியாது. ஏனென்றால் நமக்கு பெரும்பாலான கேள்விகள் அன்றாடத்தின் தருணங்களில் இருந்தே கிடைக்கின்றன. அன்றாடமே கைக்குச்சிக்கும் நம்பகமான களம். சொல்லி விவரித்து நிறுவத்தேவையில்லாமல் கதையை நிகழ்த்தமுடியும் வெளி. நாம் சந்திக்கும் அகச்சிக்கல்கள், தத்துவச்சிடுக்குகள், தரிசனங்கள் எவையாயினும் அன்றாடத்தில் அவை எவ்வகையிலேனும் வெளிப்பட்டே ஆகவேண்டும். ஆகவே உலக இலக்கியத்தில் அன்றாடம் மையமான பேசுபொருள்.

ஆனால் இலக்கிய மரபை எடுத்துக்கொண்டால் அதில் அன்றாடம் மிகமிகக்குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. இலக்கியத்தின் முதன்மைநோக்கமே இறந்தகாலத்தை இன்றுடன் பொருத்தி ஒரு நீட்சியை உருவாக்குவதாகவே உள்ளது. எனவே நேற்றுநடந்தது என்னும் தளத்திலேயே உலகின் பெரும்பாலான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. தொல்கதைகளும் தொன்மங்களுமே இலக்கியத்தின் பேசுபொருட்கள். முந்தைய கலைவடிவொன்றின் நீட்சியும் வளர்ச்சியுமாகவே புதிய வடிவங்கள் பிறந்தன. வாழ்க்கையை கோத்து பண்பாட்டை, விழுமியங்களை உருவாக்கியது இலக்கியம்.

இலக்கியத்தில் அன்றாடம் முதன்மை இடம்பிடிக்கத் தொடங்கியது உரைநடை உருவான பின்னர்தான்.  உரைநடை இலக்கியத்தை மக்கள்மயமாக்கியது. இலக்கியம் ஒரு வகை உயர்தரக் கேளிக்கையாகவும் அப்போதுதான் மாறியது. அப்போது பயிற்சியற்ற பெருவாரியான வாசகர்கள் உருவாகி வந்தனர். அவர்களைக் கவர்வது, அவர்கள் எளிதில் உட்புகுவது அவர்கள் அறிந்த அன்றாடம்தான். அன்றாடம் முதலில் வணிகக்கேளிக்கை எழுத்திலேயே பெரும்பங்கு வகித்தது. இன்றும் அன்றாடமே வணிக இலக்கியத்தின் முதன்மைக் களம்.

பின்னர்தான் அது இலக்கிய முக்கியத்துவத்தை அடைந்தது. அன்றாடத்தை, எளியமக்களின் எளிய வாழ்க்கையைச் சொல்லும் பேரிலக்கியங்கள் உருவாயின. அவை அன்றுவரை மானுடம் எழுதிவந்த மாமனிதர்களின் மகத்தான வாழ்க்கையின் கதைகள் என்னும் பெரும்போக்குக்கு எதிரானவை என்பதனால் பெரிய மாற்றமாக கருதப்பட்டன. அரசியல் சார்ந்தும் சமூகவியல்சார்ந்தும் பெரும் முக்கியத்துவத்தை பெற்றன. கொள்கைகள் விழுமியங்கள் எளியமக்களிடையே எப்படி செயல்படுகின்றன என்பதை, எளியமக்களாலான வரலாறு செயல்படும் முறை எப்படி என்பதை இவ்வகை எழுத்துக்களே ஆராய்ந்தன. ஆகவே குடியாட்சி யுகத்தில் அவை பெருகின.

ஆயினும் இலக்கியத்தில் என்றும் சென்றகாலமே பெரும்பேசுபொருள். ஏனென்றால் நிகழ்காலம்  என்பது வெறும் நிகழ்வுத்தொகை. அதில் ஒழுங்கோ இலக்கோ இல்லை. அது இறந்தகாலமாக ஆகும்போது நினைவுகள் மேலே சென்றுபடிந்து குறியீடுகளாக ஆகிவிடுகிறது. ஒரு சென்றகால நிகழ்வு அதில் திரண்டுள்ள விழுமியங்களை அறிவுறுத்தும் அடையாளமாக ஆகியிருக்கிறது. நிகழ்காலம் செய்தி என்னும் வெளிப்பாடால் மறைக்கப்படுகிறது. நிகழ்காலம் பற்றி என்ன எழுதினாலும் அது செய்தியுடன் போரிடவேண்டியிருக்கிறது. தன்னையறியாமலேயே அது செய்தியாகவும் ஆகிவிடுகிறது.

இறந்தகாலம் என்பது வரலாறு. வரலாறு என்பது வெறும் தரவுகள் அல்ல. அது நினைவுகூரப்படுவது, தொகுக்கப்படுவது, மீட்டுரைக்கப்படுவது. ஆகவே அது சமகால நிகழ்வுகளைவிட மேலும் செறிவானது. ஆகவே எழுத்தாளர்கள் எப்போதுமே வரலாற்றை நாடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் இன்றுள ஒன்றை அல்ல, என்றுமுள ஒன்றைச் சொல்ல முயல்பவர்கள். வரலாற்றிலிருந்து எழுந்து வந்து இன்றும் நிலைகொள்ளும் ஒன்றை கருவியாக்கிப் பேசுகையில் அவர்கள் அந்த விழுமியத்தையோ தரிசனத்தையோ அழுத்தமாக முன்வைக்க முடிகிறது.

அன்றாடத்தை எழுதுவதன் சிக்கல் அது பெரும்பாலும் மேலோட்டமான அலைகளால் ஆனது என்பதே. செய்திகளையே நோக்குக, எல்லா செய்திகளும் ஒரேவெளியில் நிலைகொள்கின்றன! ஆனால் ஒரு மாதம் கடந்தால் சில செய்திகளே எஞ்சுகின்றன, பிறசெய்திகள் நினைவிலிருந்தே அகன்றுவிடுகின்றன. அந்த அழியாச் செய்திகளே உண்மையில் முக்கியமானவை, அவற்றில்தான் நாம் நம்மை கண்டுகொள்ளும் தருணங்கள் உறைகின்றன. அன்றாடத்தில் இருந்து ஆழமான நிலையான சிலவற்றை தொட்டு எடுப்பது எளிதல்ல. அதற்கே இலக்கியக்கலை தேவையாகிறது.

அன்றாடத்தில் இருந்து என்றுமுள ஒன்றுக்குச் செல்வதே கலையின் பணி. அவ்வாறு சென்றாலொழிய ஒரு கலைப்படைப்பு தன் பணியை ஆற்றவில்லை என்றே பொருள். உதாரணமாக வரும் தேர்தலில் நிகழும் போட்டியை முன்வைத்து ஒரு நாவல் எழுதப்படலாம். ஆனால் தேர்தல் என்னும் அமைப்பைப் பற்றி, மக்களாட்சியைப் பற்றி, அதிகாரத்திற்கான போட்டியைப்பற்றி அது பேசுமென்றால்தான் அது கலைப்படைப்பு. இல்லையேல் ஏப்ரலுக்குப் பின் அது பழைய செய்தித்தாள் மட்டுமே.

அதை எல்லா தளத்திலும் விரித்துக்கொள்ளலாம். இன்றைய டிக்டாக் செயலி பற்றி,   இன்றைய டேட்டிங் பற்றி ஓர் ஆசிரியர் எழுதலாம். ஆனால் இவை இவற்றுக்கு அடியிலுள்ள விழுமியங்களின் சிக்கலை, தத்துவக்கேள்வியை சென்று தொடுவதற்கான கருவிகளாக மட்டுமே கலையில் திகழமுடியும். இன்றுக்குரிய வினாக்களையும் விடைகளையும் மட்டுமே அந்தப்படைப்பு முன்வைக்கும் என்றால் அதை இலக்கியம் அல்ல என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தின் பணியை அது ஆற்றவில்லை.

ஒரு சூழலில் எளிய அன்றாடக் கதைகளே பெரும்பாலும் எழுதப்படும். ஏனென்றால் எழுதவருபவர்கள் தங்களைச் சூழ நிகழும் அன்றாடத்திலிருந்தே எழுதுவதற்கான கருப்பொருளை பெறுகிறார்கள். அதிலிருந்து நேற்றும் இன்றும் நாளையுமென செல்லும் அடிப்படைக் கேள்விகளை உருவாக்கிக் கொள்ள, விழுமியங்களை ஆராய, ஆழ்ந்த  மானுட உணர்வுகளை எழுப்பிக்கொள்ள, தத்துவச்சிக்கல்களை விரித்தெடுக்க தரிசனங்களைச் சென்றடைய பெரும்பாலானவர்களால் இயல்வதில்லை. அவர்கள் அன்றாடத்தில் தொடங்கி அன்றாடத்திலேயே முடிந்துவிடுவார்கள் – வணிக இலக்கியச் சூழலில் வெளிவரும் பல்லாயிரம் படைப்புகள் அத்தகையவை.

அந்த வணிகச்சூழலில் இருந்து வேறுபட்டு எழுதவிழைபவர்கள், இலக்கியம் நோக்கி வரவிரும்புபவர்கள் ஆழம் நோக்கி செல்லவேண்டும். ஆனால் அவர்களுக்கு அந்தத் திறனோ நுண்மையோ இல்லை என்றால் வேறுபாடு நோக்கி செல்கிறார்கள். ஒன்று வேறுபட்டிருப்பதன் வழியாக உருவாக்கும் உளப்பதிவை ஆழம் என எண்ணிக்கொள்கிறார்கள். வாசகனின் உணர்விலும் எண்ணங்களி0லும் அழுத்தமான ஊடுருவலை நிகழ்த்துவதற்கு மாற்றாக அதிர்ச்சியை உருவாக்கி ஊடுருவ முயல்கிறார்கள். அன்றாடத்தை இவ்வகையில் அவர்கள் மீறிச்செல்கிறார்கள்.

பாலியல், வன்முறை, பொதுஒழுக்கம் சார்ந்து எல்லா சமூகங்களுக்கும் தடைகளும் ஒவ்வாமைகளும் இருக்கும். அவற்றில் பல உளத்தடைகளாகவே மாறிவிட்டிருக்கும். அந்தத் தடைகளை மீறுவதனூடாக மிக எளிதாக அன்றாடத்தை மீறும் அதிர்ச்சியை வாசகனுக்கு அளிக்கமுடியும். அதற்கு இலக்கிய மதிப்பு இல்லை. அன்றாடத்தை அன்றாடத்திற்குள் எழுதி முடித்துவிடும் எழுத்துக்கான ஒரு மாற்று அது, அவ்வளவுதான்.

இலக்கியம் அதன் தேடலினூடாக எல்லைகளை கடந்துசெல்லும். உளத்தடைகளை சமூகவிலக்குகளை பொருட்படுத்தாது. வெறுமனே அதிர்ச்சியை உருவாக்குபவர்கள் அவ்வாறு மீறிச்சென்ற இலக்கியப் படைப்புக்களை சுட்டிக்காட்டி அவையே தங்கள் முற்காட்டு என்று சொல்வார்கள். ஆனால் மீறல் அல்ல, மீறலினூடாக அடையப்படுவதே இலக்கியத்தை தீர்மானிக்கிறது.

அன்றாடத்தை ஒரு கணித்திரையில் வெளிப்படும் மீபிரதி [hypertext] எனலாம். அதன் எழுத்துக்கள் ஒரு பிரதியை நமக்கு அளிக்கின்றன. நாம் அனைவரும் அறிந்த, இயல்பாகப் புழங்கும் ஒரு பரப்பு. ஆனால் இலக்கியம் தொடும்போது ஒவ்வொரு எழுத்தும் மேலும் மேலும் பல பிரதிகளை நோக்கி திறந்துகொண்டே இருக்கவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைபால் – மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-61