திருவண்ணாமலையில் இருந்து ஜெயஸ்ரீ அக்கா அனுப்பியிருந்த புத்தக பார்சலுடன் , கடலூரில் அந்த முகவரியை தேடி கண்டடைந்தேன் . எண்பது கடந்த வயதில் தனித்து வாழும் பாட்டி .தள்ளாமை காரணமாக தற்போது எதோ உடற்பிணி அவர் யாரையும்,எந்த நேரமும் தொந்தரவு செய்யும் , சூழல் மறந்து தன்னை மட்டுமே கருத்தில் கொண்ட நபர் அல்ல ,ஆகவே அவர் யார் உதவியையும் பெரும்பாலும் நாடுவதில்லை . வாசகி .குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சுகாவின் வாசகி . தகவல் அறிந்து தேடிச்சென்று அவர்களை சந்தித்தேன் . இப்படித்தான் ராதா பாட்டி எனக்கு அறிமுகமானார் .
தின்னவேலிக்கார பாட்டி . வீட்டுக்குள் வைத்தே வளர்க்கப்பட்ட பெண் . வீட்டுக்குள் வரும் வாராந்திரிகள் வழியே கதைகளின் வாசகி . கணவருடன் பணி நிமித்தமாக பல ஊர் பயணம் செய்தவர் . குழந்தைகள் இல்லை . சுற்றத்தாரை இவர் நாடுவதும் இல்லை .கணவரின் பென்ஷன் துணையுடன் தனித்து வாழ்கிறார் . சூழச் சூழ தனிமை , அதை இடைவெளியே இன்றி நிரப்பி வைத்திருக்கும் சுகா வின் கதாபாத்திரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .
வயசானா ஆயிரம் நோய் நொடி ,இதுக்கு பின்னால உன் வேலைய விட்டுட்டு சுத்த முடியாதுடா தம்பி என சொல்லி விட்டு சிரித்தார் . வெகு சிலபேருக்கு மட்டுமே வயதான பிறகான பல்செட் சிரிப்பு , அத்தனை பாந்தமாக அமையும் .அப்படி அமைந்தவர் ராதா பாட்டி . பல் செட்டில் முதலும் முடிவுமான சிக்கல் ,அதை பொருத்திக் கொண்டு கீழ் தாடையை , இயல்பாக முன் பின்னாக ,இடம் வலமாக அசைக்க முடியாது என்பதே .அது வகுத்து வைத்த எல்லைக்கு உட்பட்டே தாடையை அசைக்க முடியும் . புன்னகைத்தால் பழிப்பு காட்டுவது போல இருக்கும் [சிறந்த உதாரணம் இறுதிக்கால நடிகர் திலகத்தின் சிரிப்பு ] .இந்த இடரில் சிக்காத குழந்தையின் சிரிப்பு பாட்டியுடயது .
அவர்களின் வயதொத்த என் பெரியம்மாவை அவர்களுக்கு ஒரு நாள் அறிமுகம் செய்து வைத்தேன் . அவ்வப்போது சென்று பார்ப்பேன் .அந்த மாதம் வாசித்த கதை மொத்ததையும் விமர்சனபூர்வமாக [பாட்டி கடுமையான பெண்ணியவாதியாக்கும்] அலசி பிழிந்து காயப் போடுவார் .
தங்கை கணவர் இறந்துவிட, தங்கையின் ”சிரமம் ” அறிந்து அக்காவே தனது கணவரை ,தங்கையை ஆற்றுப்படுத்த அனுப்பும் கதை ஒன்று .புரட்சிகரமான கதைதான் .பாட்டியின் விமர்சனம் வேறு விதமாக இருந்தது . கதை எழுத சொன்னா என்னத்துக்கு எழுத்தாளர் அவரோட அடி மன ஆசைய எழுதி கதைன்னு சொல்றார் ? ஜெயமோகனின் வெற்றி சிறுகதை அவருக்கு கடும் கோபத்தை அளித்தது . இந்த பொம்னாட்டி என்ன பண்ணா இவருக்கு என்னவாம் ? இதெல்லாமா கதைன்னு எழுதி புஸ்தகமா போடுவா ? ஆறம் எழுதின ஜெயமோகன் இப்புடி எழுதலாமா ? என குமுறினார் . பின்னர் ஆழமற்ற நதி வாசித்து விட்டு ஆங் இது ஜெயமோகன் .இப்புத்தானே எழுதணும் என சந்தோஷப்பட்டார் .
எதை எங்கே பேசினாலும் கொண்டு சென்று சுகாவில் நிறுத்தி விடுவார் . ஒவ்வொரு சந்திப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக அவரில் ஏதோ மாற ,எனக்குள் எங்கோ சுகாவைக் கண்டு அந்த சுகாவுடன் பேசத் துவங்கினார் . அந்த சுகாவுக்கே உபசாரங்கள் எல்லாம் . கூன் உடலுடன் , வலியில் முனகியபடி அவர் காபி போடுவார் . அது ஒரு வன்முறை .அதை செய்ய வேண்டாம் என்பது அதைக் காட்டிலும் உயர்ந்த வன்முறை . அவர் முதுகு நெட்டி முறியும் ஒலியை நெஞ்சாங்கூட்டில் கேட்டபடி அவர் அருகே நின்றிருப்பேன் .
ருசி பார்க்காமல் ஆச்சாரமாக காபி போடுவார் . ஓய்ந்து அமர்ந்து தனது கோப்பை காப்பியை ருசிக்கும் போது முகம் மாறி ,ரகசிய குரலில் ‘கச்சக்குது ‘ என்பார் .இந்த கச்சக் என்பதை கண்களை அழுந்த மூடித் திறந்து சொல்வார் .மீண்டும் எழுந்து , எனது கோப்பையை கவர்ந்து சென்று ,துன்புற்று , மதுரம் பெய்து மீள்வார் . நாக்கு சுளுக்கும் தித்திப்பு . சப்பு கொட்டியபடி கேட்பார் ”காது ஓஞ்சுபோன மாதிரி பாட்டிக்கு நாக்கும் ஓய்ஞ்சு போச்சு போல தம்பி ”.
மூன்று நான்கு வருடம் நானே மறந்து போகும் எனது பிறந்த நாளுக்கு தவறாமல் அழைத்து வாழ்த்து சொல்வார் . சுகாவின் பிறந்த நாளுக்கும் என்னையே அழைத்து வாழ்த்து சொல்வார் .கடந்த சுகாவின் பிறந்த நாள் அன்று ஒரு தயிர் சாத பொட்டலம் வாங்கி , யாருக்கேனும் தானம் செய்யச் சொன்னார் . வாங்கினேன் . அதிசயமாக ஆள் யாரும் கிடைக்கவில்லை . சரிதான் என நானே சாப்பிட்டு விட்டேன் . தானம் பெற்றவன் நானாகவே இருந்து விட்டு போகிறேனே .
பூசம் நட்சத்திரத்துக்கு ஆகாய நீலம் நல்லதாம் என்று சொல்லி ஒரு பிறந்த நாளுக்கு ஆகாய நீலத்தில் சட்டை எடுத்துக் கொடுத்தார் . சீனுவுக்கதான் கொடுத்தார் .ஆனால் சட்டை சைஸ் சுகாவுக்கு உரியது . அவ்வப்போது தொலைபேசியில் அழைப்பார் . நான் பேசுவது அவருக்கு கேட்காது , காது கருவி ஓய்ங் என விசில் அடிக்கும் . அவர் பேசி விட்டு வைத்து விடுவார் .பெரும்பாலும் நான் சொல்லாதவற்றை புரிந்து கொண்டு ,அதன் வழியே செயல்பட்டு ,நான் அப்படி சொல்லவில்லை என்பதை அறிந்து வருந்துவார் . காது மிஷன் மாத்துங்க என்று சொல்வேன் . உனக்கு புரியலடா தம்பி மாத்த வேண்டியது மிஷனை அல்ல காதை என்று விட்டு சிரிப்பார் .
ஓவியம் வரையக் கூடியவர் .அவரது இளமையில் அவர் வரைந்த சேரநன்நாட்டிளம் பெண் ஓவியம் ஒன்றை எனக்களித்த தினம் ஒன்றினில் வெறும் காசு பணம் கணக்கு வழக்கு இவற்றை முன்னிட்டு தன்னை விலகிய உறவுகள் குறித்து சொன்னார் . ஜெயஸ்ரீ அக்கா விரும்பியபடி அவர் ஏதேனும் முதியோர் இல்லத்தில் சேர விரும்புகிறாரா என ஒரு நாள் கேட்டேன் . ‘தின்னவேலிக்காரிடா திமிரு புடிச்சவ .என்னால ஒரு ஹோம்ல போய் இருக்க முடியாது .அதே போல என் வேலைய இன்னொருத்தர் செய்றதும் எனக்கு புடிக்காது .இதாண்டா இந்த பாட்டி புரிஞ்சிக்கோடா ‘என்றார் .
பாலு மகேந்திரா ரசிகை . நேத்து கனவுல நானும் சுகாவும் பாலு மகேந்திரா கிட்ட பேசிக்கிட்டு இருந்தோம் .நான் சிங்களத்துல பேசினேன் ,பாலு சந்தோசப்பட்டார் ,சுகா ஆச்சர்யப்பட்டார் என்று சொல்லி சிங்களத்தில் எதோ பேசிக்காட்டினார் . சுகா சுகா சுகா அவரில்தான் எல்லா உரையாடலும் துவங்கி அவரில்தான் எல்லா உரையாடலும் முடியும் . வீ ஆர் செய்லிங் இன் தி சேம் போட் உனக்கு புரியாது . என்பார் .
‘அன்னிக்கி பாரு வீட்டுக்குள்ள ஒரு பாம்பு வந்துடிச்சி ,கால் மணி நேரம் கூட இருக்காது ,தெரு ஜனம் மொத்தமும் வீட்டுக்குள்ள ,நான் வீட்டுக்கு வெளில , கால் மணி நேரத்துல என் வீடு என் வீடா இல்லாம போய்டுதுடா ‘ என்னைக்கு பாட்டி இது நடந்தது … இந்த வாரம் இந்த புக்குல சுகாவோட இந்த கதை வந்துச்சே அந்த வாரம் என பதில் சொல்வார் .
கடந்த வாரம் பாட்டியை தேடி சுகா வந்திருந்தார் . பாட்டி செவிக் கருவியை அணைத்து விட்டு உறக்கத்தில் இருந்ததால் .வீடு திறக்க வில்லை .சுகா திரும்பி விட்டார் மறுநாள் என்னை அழைத்து பாட்டி தவித்து விட்டார் . முதன் முறையாக பாட்டியின் பொருட்டு சுகாவை தொடர்பு கொண்டால் என்ன என்று தோன்றியது . மறு கணம் அதை வன்முறையாக முறித்தேன் .இவர்கள் இருவர் இடையே ,தரகனாக நான் யார் ? கல்லை நம்பி வணங்கினால் அதில் தெய்வமே எழும் போது, கதையை நம்பினால் அந்த எழுத்தாளன் வந்து விட மாட்டானா என்ன ?
நேற்று பாட்டி தொலைபேசினார் .வழக்கம்போல நான் பேசியது அவருக்கு கேட்கவில்லை .அவர் பேசியது கேட்டது .சுகா வந்து பாட்டியை பார்த்து விட்டார் .
முதல் கணம் அத்தனை ஆசுவாசம் எழுந்தது . இது ஒரு விதமான ஈடேற்றம் . கடந்த சந்திப்பில் உரையாடல் முடித்து கிளம்பும் போது பாட்டி கை கூப்பி சொன்னார் ‘ எல்லாம் சுகா கிட்ட சொல்ல வேண்டியது .உன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன் .இந்த அறுவையை எப்பவும் சகிசுகிட்டு .அப்பப்போ வந்து பாத்து ,இதே கதையை திரும்ப திரும்ப கேக்குறியே உனக்கு கோடி கோடி புண்ணியம் கிடைக்கும் என்றார்கள் .
கோடி கோடி புண்ணியம் .எல்லாம் சுகாவுக்கு போய் சேர வேண்டியது . ஒரு கணம் அபத்தமாக உணர்ந்தேன் . பொறாமையும் ,குற்ற உணர்வும் ,தனிமையும் ,கழிவிரக்கமும் வந்து கவிந்தது .பாட்டி சுகாவை பார்த்து விட்டார் . இனி பாட்டி முன்னிலையில் நான் சுகா இல்லை . இனி அவருக்கு நான் சுகா வாக ஒரு முகாந்திரமாக அவர் முன் அமர்ந்திருக்கும் ஒரு முன்னிலை இல்லை . இனி அவருக்கு நான் யார் ? தெரியவில்லை இனிமேல் சென்று பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் . சுகாவுக்கானதாக இல்லாத , கசப்போ இனிப்போ ஆன காப்பியை, எனக்கே எனக்கான காப்பியை,சுகா வந்து போன விழி விரியும் கதையை கேட்டபடி, அருந்த வேண்டும் .
கடலூர் சீனு