சென்ற ஆண்டு பொங்கல் தினத்தன்று இலக்கிய வாசகரான ஒரு நண்பருடன் தஞ்சைப் பிராந்தியத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேச்சு பின் தொடரும் நிழலின் குரல் நாவலை நோக்கித் திரும்பியது. கட்சித் தேர்தலுக்கு முன் நிகழும் கொடியேற்ற நிகழ்வில் கே.கே.எம்-மை கொடியேற்றச் சொல்வார்கள். ஏற்றுவார். பேசக் கூறுவார்கள். அவர் புரியாமல் ‘’என்ன பேச’’ என்பார். ‘’கொடியேத்தியிருக்கீங்க தோழர். பேசுங்க’’ என்பார்கள். ‘’பன்னிமலை எஸ்டேட்-னு ஒரு இடம்’’ என்று தொடங்குவார் கே.கே.எம்.
அந்தப் பகுதியை கிட்டத்தட்ட வரிவரியாக மனப்பாடமாகச் சொன்னேன். வாகனத்தின் என்ஜின் ஓசை சீராகக் கேட்டுக் கொண்டிருக்க எதிர்க்காற்று முகத்தில் மோத அந்த உணர்வுகளை சொல்லிக் கொண்டே வந்தேன். மரண ஆபத்து இருக்கும் இடத்தில் கே.கே.எம் சென்று அங்கிருக்கும் உயரமான இளம் மூங்கில் கழியொன்றில் கட்சிக் கொடியை ஏற்றுவார். வேகமாக வீசும் காற்றில் கொடி படபடப்பதைப் பார்க்கும் போது பெரு மகிழ்ச்சி கொள்வார். சில தொழிலாளர்கள் தள்ளி நின்று பார்ப்பார்கள். அங்கிருக்கும் டீக்கடையில் தேனீர் கேட்பார். கடைக்காரர் மிகவும் இறைஞ்சி அங்கிருந்து போய் விடுமாறு கே.கே.எம்-மிடம் கூறுவார். சுனை நீரை அருந்தி விட்டு பேருவகையுடன் படுத்து உறங்குவார் கே.கே.எம். அப்போது ஒரு மலைஜாதிப் பெண் வந்து ‘’சகாவு! தப்பிச்சுப் போங்க. உங்களைக் கொல்ல முதலாளிமார் ஆளனுப்பி இருக்காங்க” என்று எழுப்புவாள். அப்போதிருந்த மனநிலையை கே.கே.எம் சொல்வார்: ‘’நான் அப்ப நினைச்சேன். அந்தப் பொண்ணு அந்த மலையோட மனசாட்சின்னு’’. கற்பாறைகளும் காட்டாறுகளும் பெருவிருட்சங்களும் வலிய மிருகங்களும் சுழலும் பெருங்காற்றும் கவியும் மேகங்களும் கொண்ட ஒரு மலையின் மனசாட்சியாக ஒரு சிறு பெண்ணை கே.கே.எம் சொல்லும் கணத்தை என்னால் நண்பரிடம் சரளமாகச் சொல்ல முடியவில்லை. நா குழறி குரல் திக்கி கண்ணீர் பெருகி ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் இடையே மௌனத்துடன் கூடிய பெரும் இடைவெளி எடுத்து சொல்லி முடித்தேன். வாசக நண்பர் முன்னரே அழுது கொண்டிருந்தார்.
அந்தப் பெண் தன் மீது காட்டும் அக்கறையால் அந்த எஸ்டேட்டிலிருந்து இந்த பெண் இன்று தன் மீது காட்டும் அக்கறையை நாளை இந்த மலை தனது சித்தாந்தம் மீது காட்டும் என்ற பெருநம்பிக்கையோடு மீள்வார். தங்கள் சுயநலனுக்கு எதிரானவர் என்பதால் அவரை அழிக்க முதலாளிகள் திட்டமிடுகின்றனர். தங்கள் விருப்பங்களுக்கு எதிராக இருப்பதால் கட்சி அவரை அழிக்க திட்டமிடுகிறது. முதலாளிகள் திட்டத்துக்குத் தப்பியவர் கட்சியின் சதி வலையில் சிக்குகிறார்.
நான் பல ஆண்டுகளாக பல்வேறு நண்பர்களிடம் பின் தொடரும் நிழலின் குரல் பற்றி பேசியிருக்கிறேன். விவாதித்திருக்கிறேன். அதன் பல வரிகளை பல தருணங்களை மனப்பாடமாகச் சொல்லியிருக்கிறேன். ஒரு நண்பர் என்னிடம் எப்படி யதார்த்தத்துக்கு இணையான ஓர் உலகில் கற்பனை மூலம் வாழ முடியும் என வியந்திருக்கிறார்.
எங்கள் பயணத்தில் காவிரி ஆற்றிலும் அதன் கிளைகளிலும் கால்வாய்களிலும் நிறைந்து ஓடிக் கொண்டிருந்தது. பின் தொடரும் நிழலின் குரல் முன்னுரையில் ஜெயமோகன் கூறியிருப்பார்: ஒரு படைப்பிலக்கியம் கண்ணுக்குத் தெரியாத நதியொன்றின் கண்ணுக்குத் தெரியும் சிறு பகுதி.
நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் போது ‘’பின் தொடரும் நிழலின் குரல்’’ வாசித்தேன். வரலாற்றின் இயங்குமுறையும் எல்லா கருத்தியலுக்கும் பின்னால் இருக்கும் வன்முறையும் என்னை அலைக்கழித்தன. லூயி ஃபிஷரின் ‘’லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி’’ நூல் மூலம் என் கேள்விகளுக்கான பதிலை அடைந்தேன். பின்னர் ஜெயமோகனின் ‘’இன்றைய காந்தி’’. அதில் உள்ள ‘’காந்தி என்ற பனியா’’ பகுதியில் ஜெயமோகன் சொற்களிலிருந்து எழுந்து வந்த காந்தி மூலமே நான் எனக்கான தெளிவுகளைப் பெற்றேன்.
ஓர் எழுத்தாளனாக ஜெயமோகன் கடந்து வந்திருக்கும் தூரம் என்பது அவரது மாணவர்களாகிய என்னைப் போன்றவர்கள் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. எழுத்துக்கும் வாசிப்புக்கும் அவர் அளித்திருக்கும் நேரம், தனது கருத்துக்களைத் திடமாக முன் வைக்கும் விதம், அவரது சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் ஆகியவை அவரைப் படைப்பாளியாக ஓர் உயர்ந்த இடத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. சமூகத்தின் கருத்தியலுடன் தனி ஒரு மனிதனாக மோதி இன்று தமிழின் மிக முக்கியமான ஒரு கருத்தியல் தரப்பாக உருவாகியுள்ளார். அச்சத்தாலும் தனிப்பட்ட காழ்ப்புகளாலும் அவருக்கு பலவிதமான இடர்களை பலவிதத்தில் அளித்தவர்கள் இன்று காணாமல் போயிருக்கிறார்கள்.
வெண்முரசு நாவல் வரிசை உலக இலக்கியத்தில் ஒரு பெரும் சாதனை. தமிழ் உலக இலக்கியத்துக்கு வழங்கியுள்ள கொடை. தனது அன்றாட அலுவல்கள், இணையதளத்தில் பதிவிடும் கட்டுரைகள், விவாதங்கள் , விழாக்கள் ஆகியவற்றைத் தாண்டி தினமும் வெண்முரசு எழுதுவதென்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்று. தனது அர்ப்பணிப்பாலும் கடும் உழைப்பாலும் அதனைச் சாத்தியமாக்கியிருக்கிறார் ஜெயமோகன்.
அவரது இணையதளம் ஒரு கலைக்களஞ்சியமே. தமிழ்நாட்டின் எந்த அரசு அமைப்பும் பல்கலைக்கழகமும் சாதிக்க முடியாததை ஜெயமோகன் சாதித்திருக்கிறார். ஜெயமோகன் நவீனத் தமிழிலக்கியத்தில் பங்களிப்பாற்றத் துவங்கிய காலத்திலிருந்து இன்று வரை நவீனத் தமிழ் இலக்கிய வாசகர் எண்ணிக்கையில் ஜெயமோகனின் பாதிப்பு என்பது அளவில் மிகப் பெரியது. நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்திய அகாதமி வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் மீது கவனத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு ஜெயமோகனையே சாரும்.
கடந்த சில ஆண்டுகளில் எழுதப்பட்டுள்ள அவரது பயண நூல்கள் உயிரோட்டத்துடன் இருக்கும் இந்திய சித்திரத்தை வாசகர்களுக்கு வழங்கக்கூடியவை. தத்துவமும் வரலாறும் ததும்பும் இந்தியாவின் தொன்மையான இடங்கள் குறித்து துடிப்பான மொழியில் வெளிப்பட்டுள்ள அவரது அவதானிப்புகள் வாசகர்களுக்கு திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகளை வெளிப்படுத்தக் கூடியவை.
அவரது மாணவன் என்னும் உவகையை தினமும் அடைபவர்களில் நானும் ஒருவன்.
பிரபு மயிலாடுதுறை