அறிவியல் புனைகதைகள் பற்றி…ஜெயமோகன் பேட்டி
ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி
அன்புள்ள ஜெ,
அரூ இணைய இதழில் வெளியாகிய அறிவியல் புனைகதைகளைப் பற்றிய உங்களுடைய விரிவான நேர்காணலை வாசித்தேன். அறிவியல் புனைகதைகள் பற்றிய மிகப்பெரிய தெளிவான சித்திரத்தைக் கொடுத்தது. ஏற்கனவே விசும்பு தொகுப்பின் முன்னுரையில் மிகக்கூர்மையாக அதன் எல்லைகளை விவாதித்து எழுதி இருந்ததே பெரிய திறப்பைக் கொடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இங்கு எத்தனை விவாதங்கள் உரையாடல்கள் நிகழ்ந்தன என்று தெரியவில்லை. ஆனால், தமிழில் நிகழ்ந்த அறிவியல் புனைகதைகள் பற்றிய மிகச்சிறந்த விவாதம் இதுவென்பேன். நேர்காணல் செய்திருந்த சரவணனின் கேள்விகளும் ஆழமான விவாதத்தைத் தூண்டும் வகையிலிருந்து, அவருக்கும் நன்றி. இதிலிருந்து மேலும் உரையாடல்கள் கிளைவிரித்துப் படர்ந்தால் நன்றுதான். நம்மால் ஊட்டி இலக்கிய முகாம்களில் கலந்துகொள்ள இயல்வதில்லை. இவ்வாறான இலக்கிய உரையாடல்களே ஏகலைவனாக பலதை கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கிறது.
சிலவருடங்களுக்கு முன்னர் ‘வி.அமலன் ஸ்டேன்லி’ எழுதிய ‘அத்துமீறல்’ நாவல் பற்றிய அறிமுகத்தை இந்துவில் வெளியாகிய ‘புத்தாயிரத்தின் படைப்பாளிகள்’ என்ற பரிந்துரைக் கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். “இருத்தலியம் ஓங்கி நின்றிருந்த காலகட்டத்தின் குறியீட்டு நாவல்களின் அழகிய கவித்துவத்தைச் சென்றடைகிறது” என்று அவ்நாவலைப் பற்றி அடிக்குறிப்பு கொடுத்திருந்தீர்கள். நானும் அந்த நாவலை தேடிப்பிடித்து வாங்கி வாசித்துவிட்டு முகநூலிலும் அதனைச் சிலாகித்து அறிவியல் புனைவு என்ற வகையில் குறுங்கட்டுரை எழுதியிருந்தேன். விசும்பு தொகுப்பிலுள்ள முன்னுரையிலிருந்து பெற்ற சிந்தனையின் அடிப்டையிலே நான் அவ்வாறு யோசித்தேன். அறிவியல் தரவுகளைக் கொண்டு வாழ்க்கையை ஆராயும் போக்கு அந்நாவலில் இருந்தது. ஆய்வகத்திலிருந்து தப்பிக்கும் வெண்ணிற பெண்சுண்டெலியை வைத்துப் பின்னப்பட்ட கதை. உயிர்வாழ்தல் எனும் மனித இச்சையால் நிகழும் அறப்பிறழ்வை இன்னுமொரு கோணத்தில் உணர்த்திச் சென்ற நாவல்.
உங்களுடைய இந்த நேர்காணலில் அந்தநாவல் பற்றி ஏதும் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். அத்துமீறல் நாவலை ஓர் அறிவியல் புனைகதை நாவலாகக் கருத முடியாதா?
அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்
அன்புள்ள அனோஜன்,
எனக்கே சிறிய குழப்பம் உள்ள பகுதி இது. அத்துமீறலை ஒரு குறியீட்டு நாவல் அல்லது உருவகப்படைப்பு என்றே சொல்லமுடியும். அறிவியல்சார்ந்த ஒன்றை உருவகமாக எடுத்துக்கொண்டால் அது அறிவியல் ஆக்கமாக ஆகாது. அறிவியல்கதையில் அறிவியல்சார்ந்த ஓர் ஊகமும் அதற்கு அறிவியலின் நெறிகளுக்குள் நின்றிருக்கும் ஒரு விளக்கமும் இருக்கும் என்பது என் எண்ணம்.
ஜெயமோகன்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
நீங்கள் உங்கள் தளத்தில் கொடுத்திருந்த லிங்க் மூலம் “அரூ” மின்னிதழில் வந்திருந்த ” அறிவியல் புனைகதைகள்” குறித்த உங்களின் நேர்காணலை படித்தேன். 2.o படம் ரிலீஸ் சமயத்தில் நீங்கள் சுருக்கமாக அறிவியல் புனைகதைகளுக்கும் தமிழ் தொழிற்நுட்ப கதைகளுக்குமான வேறுபாட்டையும் அந்த ஜேனரை நாம் பார்க்கும் பார்வையை பற்றியும் கூறியிருந்தீர்கள். இதில் விரிவாக எடுத்துக்காட்டுகளோடு கூறியது புரிந்துகொள்ள உதவியது. இனிவரும் தலைமுறையில் கொஞ்சம் அறிவியலையும் மரபின் தொன்மங்களையும் கொஞ்சம் கொண்டாட்டமாக கூறினால் மட்டும்தான் கதை கூற முடியும் என்று நான் “ASSASSIN CREED” பார்த்துவிட்டு குழம்பியபடி எண்ணிக்கொண்டே இருந்தேன்.ஏனென்றால் இன்று டிவீயில் சொல் வாயில் முளைக்கும் முன்னே காட்சிவடிவமாக் கிடைப்பது இந்த மூன்றும்தான். பிறகு வெறுப்பும் அறியாமையும், அதை கலப்பது அவரவர் மனதில் உள்ள அரசியலுக்கு தகுந்தபடி இல்லை பொது ஜனங்களின் மனநிலைக்கு தகுந்தபடி.ஆனால் “”ASSASSIN CREED” ல் டைட்டிலில் ஆப்பிள் ஆப் ஏதேன் பற்றி கூறப்படும் விஷயங்கள் படத்தில் இருக்காது. சுதந்திரமான சிந்தனை என்பது யாருக்கும் இல்லையே பிறகு ஏன் அந்த ஆதி ரகசியத்தை தெரிந்துகொள்ளவேண்டும் ,யாரை? எதை ? எதற்கு ? கட்டுபடுத்தவேண்டும் என குழம்பிகொண்டு இருந்தேன். இப்போதுதான் அந்த தொன்மத்தை கொண்டு அறிவியலினால் எதையும் கட்டமைத்து எந்த தரிசனத்தையும் காட்டவில்லை என்று புரிந்தது. கமர்சியலுக்காக ஓன்று தேவை அதற்கு ஆப்பிள்,டெம்ப்ளர், டி.என்.ஏ என்று காட்டியிருகிறார்கள் என்பதயும் சேர்த்து. அதை பார்த்துவிட்டு நான் கலங்கலாக கேள்வியும் புரியாமல் பதிலும் தெரியாமல் குழம்பிகொண்டு இருந்ததை உங்கள் சொற்கள் வழியாக தெளிவான கேள்வி-தெளிவான பதில் மூலம் அறிந்து கொண்டேன்
ஸ்டீபன்ராஜ்