எஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம் – கடிதங்கள்

esra

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்  

எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது

எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்

இசைக் கலைஞர்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் நான் இதற்குமுன் வாசித்தது தி.ஜானகிராமனின் “மோகமுள்”மற்றும் யுவனின் “கானல் நதி”.அவையிரண்டும்     பாடகர்களின் அக அலைக்கழிப்புகளைப் பற்றியே பிரதானமாகப் பேசுகிறது.ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனின் “சஞ்சாரம்” நாவல்  பெரும்பாலும்  நாதஸ்வரக் கலைஞர்களின் புற வாழ்வைப் பற்றிய படைப்பாகவுள்ளது.

பாடகர்களைப் பொருத்தவரை அவர்கள்  அநேகமாக சமூகத்தின் உயர்நிலையில் இருப்பார்கள்.மாறாக நாதஸ்வரக் கலைஞர்கள் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கிறார்கள்.அதனால்,இந்நாதஸ்வரக் கலைஞர்கள் படும் அவமானங்கள் ஏதும் அவர்களுக்கில்லை.இதனையே எஸ்.ரா. முக்கிய பொருளாகக் கொண்டுள்ளார்.

எத்தனை சிறப்பான கலைஞராக இருப்பினும் அவர்கள் கலைக்காக மதிக்கப்படாமல் அவர்களின் சமூகநிலையைக் கொண்டே இழிவுபடுத்தப்படுகிறார்கள்.

இதனை வெவ்வேறு மனிதர்களின் வாழ்வினைக் கூறுவதன் மூலம் நிறுவிக்கொண்டே செல்கிறார்.பார்வையில்லாதிருந்தும் இசையில் மேன்மையுடன் இருப்பதும் நேர்த்தியான உடையுடன் வாசனை திரவியங்களுடன் கலைத் திமிருடன் இருக்கும் ஒருவரும்,ஊனமுற்ற முகமதியராய் இருந்தாலும் நாதஸ்வர இசையின்பால் உண்டான காதலால் அதனைக் கற்றுத்தேர்ந்து வெளிநாட்டிற்குச் சென்று இசைக்கும் அளவிற்கு புகழ் பெறுபவரும் அவற்றுள் அடங்கும்.

இதுவரை வெளிப்படுத்தப்படாத இக்கலைஞர்களின் வாழ்வை சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார் ௭ஸ்.ரா.ஆனால் ஆசிரியரின் பார்வையிலேயே சொல்லப்படும் வாழ்வில் வாசகனாகவே தொடர முடிகிறதே தவிர அவ்வாழ்வுடன் ஒன்ற முடிவதில்லை.அவர் கூறும் ஒவ்வொரு கலைஞரின் வாழ்வும் தனித்தனியாக ஒன்றிளொன்று இணையாமல் லட்டாக பிடிக்கமுடியாத பூந்தியாய் உதிர்ந்து கிடக்கிறது.நாதஸ்வரம் என்ற வாத்தியத்தைத் தவிர ஒற்றுமை வேறில்லை.

ரத்தினம் மற்றும் பக்கிரிக்கு நடக்கும் சம்பவங்கள்  அநேக தமிழ்த்திரைப்படங்களின் காட்சியமைப்புபோல  வலிந்து திணிக்கப்பட்டவை போலவே தோன்றுகிறது.இக்கலைஞர்களின் உணர்வுகள் நாவலின் எந்த இடத்திலும் வெளிப்படவில்லை.இழிவுபடுத்தப்படும்போதும் கலைஞர்களாக தொடரவைப்பது எதுவென்று எங்கும் உணர்த்தப்படவில்லை.

இசைக்கருவியை மையமாகக் கொண்ட நாவலில் அதன் மரபு பற்றி எதுவும் உரைக்கப்படவில்லையென்பதோடு இசைக்குள் வாசகனை அமிழ்த்வோ ஆழ்த்தவோ  அல்லது “சஞ்சாரி”க்கச் செய்யவோ எந்த எத்தனிப்புமின்றி மிக மேலோட்டமாகவே நாளிதழ்களில் வரும் வரலாற்று கட்டுரைகள் போலவே பெரும்பாலும் உள்ளது.மோகமுள் நாவலில் இசை பற்றி எதுவுமே தெரியாதவரையும் விழியில் நீர் கசியவைக்கும் வண்ணம் இசையில் நனையவைக்கும் தி.ஜா.வின் ஆலாபனைகள் நினைவுக்கு வந்து இந்நாவலின் போதாமையை உரைக்கின்றது..இதனை நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய ஆவணம் என தயங்காமல் கூறலாம்,நாவல் என்றல்ல..

ஆக மொத்தத்தில் எஸ்.ரா.விற்கு படைப்பாளிகளின் பாராட்டுவிழாவில் பவா.செல்லத்துரை கூறியதுபோல “சஞ்சாரம்”நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது கொடுக்கப்படவில்லை,அவரின் முந்தைய படைப்புகளுக்காக கொடுக்கப்பட்டது என்றே எண்ணம் தோன்றுகிறது,வாசித்து முடிக்கையில்.

கா.சிவா

saa

அன்புள்ள ஜெ

எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் அவருடைய நல்ல நாவல்களில் ஒன்று, ஆனால் மிகச்சிறந்த நாவல் என்பது இப்போதும் நெடுங்குருதிதான். அடுத்தபடியாக யாமம். அவர் சமீபகாலமாக ஓர் எளிமையான ஸீரோ நேரேஷன் நோக்கிச் செல்கிறார் என நினைக்கிறேன். என்ன நிகழ்ந்தது என்பதை மட்டும் சொல்லும் ஒரு வகையான எழுத்து. அது அவர் வரலாற்றைச் சொல்லும்போதும் சில தனிப்பட்ட வாழ்க்கையின் கொந்தளிப்பைச் சொல்லும்போதும் சரியாக அமைகிறது. சஞ்சாரம் இசையைப்பற்றியது. இசை அப்ஸ்டிராக்ட் ஆனது. அதைச்சொல்ல அந்த நடை போதுமானது அல்ல

ஆனால் அதை இசை சார்ந்த நாவல் என்று எடுத்துக்கொள்ளாவிட்டால் பிரச்சினையே இல்லை. அது இசைக்கலைஞர்களின் வாழ்க்கை பற்றிய நாவல். கல்கொத்தர்கள் சாணைபிடிக்கிறவர்கள் போல அவர்களும் ஒருவகை நாடோடிகள். சாணை பிடிப்பதன் நுட்பங்கள் கதையில் வரவேண்டியதில்லை அல்லவா? அவர்கல் என்னவாக இருக்கிறார்கள் என்று மட்டும் வந்தால்போதுமே. அப்படிப்பார்த்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சிறு சமூகக்குழுவின் கதையாக சஞ்சாரம் சிறப்பான ஆக்கம்தான் பொட்டலில் வாழ்ந்த ஒரு பன்பாடு அப்படியே அழியும்போது இவர்கள் ஆவிபோல அதன்மேல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். செத்துப்போன ஒரு பண்பாட்டின் ஆவிகள் இவர்கள்

ராஜசேகர்.எம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41
அடுத்த கட்டுரைதெய்வங்கள் தேவர்கள் பேய்கள் – கடிதம்