காலையில் நடைசெல்வதை சிலநாட்களாக எனக்கே கட்டாயமாக்கிக்கொண்டிருக்கிறேன். சில மேலதிகக் கட்டாயங்களும். காலையில் நடைசென்று திரும்பிவருவதுவரை மின்னஞ்சல்கள் பார்ப்பதில்லை. செய்தித்தாள்கள் படிப்பதோ செய்திகளை அறிந்துகொள்வதோ இல்லை. எழுந்ததுமே நேராக டீக்கடைக்கு செல்வேன். அங்கே ஒரு ‘சாயா’. கடி கடி என ஆசைகாட்டும் பருப்புவடைகள் பழம்பொரிகளை திரும்பிப்பார்ப்பதில்லை – ஓரக்கண்ணால் பார்ப்பதுடன் சரி. ஆனால் பொன்னிறமான பழம்பொரிகளின் துடிக்கும் இளமை.
ஆன்மாவின் கட்டுகள் அறுந்து சிலசமயம் கையில் எடுத்துவிடுவதும் உண்டு. ஏசுராஜ் வாத்தியார் சொன்னார். “அப்டித்தான் தோணும் சார். நாம மனுசங்கதானே? கை நீளும் பாருங்க அப்ப சொல்லிப்போடணும், எனக்க பொறத்தாலே போ சாத்தானேன்னுட்டு”. ஆனால் அவரே சுவர்பக்கமாக சற்றே திரும்பிநின்று வடை தின்பதை பார்த்தேன். சாத்தான் அவருக்கு பின்னால் நின்று என்னைப்பார்த்து ‘இருக்கட்டும் இப்பம் என்ன?” என்று புன்னகை செய்தார்.
சாத்தானை நான் எளிதில் அடையாளம் கண்டுகொள்வேன். அவர் ஒரு நாஞ்சில்நாட்டு சைவவேளாளர். என்னிடம் “உளுந்துவடை நல்லதாக்கும்.. உளுந்துண்ணா ஆண்மையில்லா?” என்றார். அவரே இன்னொருநாள் “பருப்புவடை புரோட்டினாக்கும் பாத்துக்கிடுங்க” என்றார். உளுந்துவடையில் வைட்டமின் பி, பருப்புவடையில் புரதம், சுகியனில் வைட்டமின் ஏ, பழம்பொரியில் பழச்சத்து, வெங்காயவடையில் நார்ச்சத்து என சரிவிகித உணவில் நம்பிக்கை கொண்டவர்.
செய்தித்துறப்பு நன்று. ஆனால் நாளிதழ்களில் செய்திகள் கூவிக்கொண்டிருக்க தவிர்ப்பது எளிதல்ல. ஓரக்கண்ணால் பார்த்தால் சந்தேகப்படுகிறார்கள். “உங்களப்பத்தி இண்ணைக்கு தப்பாட்டு ஒண்ணும் வரேல்ல கேட்டேளா?” என்றார் சாமிதாஸ். “சர்க்கார் படம் வந்தப்பம் வேணும்போல எளுத்திட்டான்லா?” என்றார் சந்திரன். அனுதாபத்துடன் சொல்கிறாரா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்து ராஜப்பன் கண்டக்டர் ஆவலாக “சாரைப்பத்தி கிசுகிசு உண்டுமா?” என்றார். “உண்டு” என்று சொல்லி மனதுக்குள் ஆரம்பித்தேன். ‘நாயில் தொடங்கி ராவில் முடியும் நடிகை…’ நாயில் தொடங்குவதா? அதுவும் ராவில் முடிப்பது வேறு. சகுனமே சரியில்லை.
உண்மையில் காலைநடை இந்த டீக்கடையில் இருந்து ஆரம்பமாகிறது. ஆனால் பலபேருக்கு இங்கேயே அது முடிந்தும் விடுகிறது. டிராக்சூட், டிஷர்ட், கேன்வாஸ் ஷூ போட்டு தொப்பையுடன் கம்பீரமாகக் கிளம்பும் முன்னாள் வனத்துறை அதிகாரியான மாணிக்கம் நான் திரும்பி வந்து எழுதி வாசித்து டிபன் சாப்பிட்டுவிட்டு ஓய்வாக கடைச்சாமான் வாங்குவதற்காக செல்லும்போதும் டீக்கடையிலேயே அமர்ந்து அஹ் அஹ் அஹ் என சிரித்துக்கொண்டிருப்பார். “ஒரு முக்கியமான காரியமாக்கும் சார் சொல்லுகது… அந்தால உக்காந்தாச்சு.”
பெரும்பாலும் அவர் முக்கியமான காரியங்களைத்தான் சொல்கிறார். ஏனென்றால் அவர் சாத்தான். மனிதர்களின் விருப்புறுதிக்கு எதிரானவர். சபலங்களின் அதிபன். காலைநடைக்கு எதிராக அவர் எல்லாதரப்பிலிருந்தும் வாதிடுகிறார். ’இன்னைக்கு முன்னாடியே விடிஞ்சுபோட்டு, எளவு, இருட்டால்ல இருக்கு.’ மறுநாளே ‘நல்லா வெயிலாயாச்சு. இனிமே என்னத்த போயி என்னத்த திரும்பி வர.’ கைகால் குடைச்சல் என்றாலும் போவதை தவிர்க்கலாம். ‘நல்ல உற்சாகமான நாளு… இதை சும்மா வாக்கிங் போயி வீணடிக்கப்பிடாது. என்னமாம் செய்வோம்’ என்றும் தவிர்க்கலாம்.
நடைசெல்லும்போது செல்பேசியில் பேசுவதில்லை என்பதும் ஒரு விருப்புறுதி. ஆனால் உற்சாகமான எண்ணங்களை என்ன செய்வது? அற்புதமான விடியலில் வேளிமலை அடிவாரத்தில் பச்சைவயல்களின் நடுவே நின்றிருக்கையில் ஈரோடு கிருஷ்ணனை வெறுப்பேற்றாவிட்டால் அந்த அனுபவத்திற்கு என்ன மதிப்பு? “கிருஷ்ணன், இப்ப இங்க இருந்தீங்கன்னு வைங்க… செத்திருவீங்க.’ கிருஷ்ணன் போர்வையை சேர்த்துச் சுருட்டிக்கொண்டு திரும்பிப்படுத்து “நீங்க செத்தா நியூஸ் வரும்சார், பாத்துக்கிடுறேன்.” வேறு எவரை வெறுப்பேற்றுவது? திரும்பிப்போய் அருண்மொழியிடம் எதையாவது சொல்லவேண்டியதுதான். “வாக்கிங் போயி தொப்பை வளருற பத்துபேரு சாரதா நகரிலே மட்டும்தான் இருக்காங்க” என்று அவள் திருப்பி வெறுப்பேற்றக்கூடும். அவர்கள் தமிழகம் முழுக்க இருக்கிறார்கள் என்று தெரியாத இற்செறிப்புள்ள குலமகள்.
காலைநடையில் நடுவே ‘போலாம் ரைட், ஏய் வலத்தாலே போ’ என்பதுபோல கைகால்களை வீசுவது, ’என்னது நூறுரூபாயா தரையிலே கெடக்கு?” என்பதுபோல அவ்வப்போது நின்று குனிந்து உடற்பயிற்சி செய்வது கூடாது. அது கத்துகுட்டித்தனம். நாய்களுக்கும் நம் செயல்கள் புரியாமல் போய் அவை தலையிட நேரலாம். பராக்குபார்க்கலாம், ஆனால் இடப்பக்கமாக திரும்பிச் செல்லவேண்டும். வலப்பக்கம் பேச்சிப்பாறை சானலில் காலையில் குளித்துக்கொண்டிருக்கும் பொதுங்கன் ஆச்சிகள் தங்கள் கற்பு பங்கப்பட்டுவிட்டதாக நினைக்கலாம். நேர்கொண்ட பார்வை நன்று, அது கிழக்காக இருந்தால் சூரியன் கண்ணுக்குள் அடிக்கும்.
மலைகளைப் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம். காலையொளியில் இளநீல நிறமாக அலையலையாக. நின்று பார்த்துக்கொண்டிருந்தபோது பக்கத்தில் நின்றிருந்த போர்வை போர்த்தி காலைநடை வந்த ஒருவர் “நல்ல மலை இல்ல? அளகாட்டு இருக்கு” என்று வியந்தார். பின்னர் “இந்தால ஒரு கயிறு இருக்குன்னு வச்சுக்கிடுங்க. அதைப்பிடிச்சு இளுத்தா அப்டியே சுருங்கி சுருங்கி ஸ்கிரீனாட்டு ஒருபக்கமா இளுத்து வச்சிடலாம்…” என்றார். பழைய நாடகங்கள் பார்ப்பாரோ? ஆனால் என்ன ஒரு கற்பனை! மலைகள் அப்படி விலகினால் 1923-க்குப்பின் மழையே பெய்யாத பணகுடிப் பொட்டல் அல்லவா தெரியும்?
உண்மையில் பார்வதிபுரத்திற்கு இரண்டே ஸ்க்ரீன்சேவர்கள்தான். ஒன்று வேளிமலை அடுக்குகள். இன்னொன்று கணியாகுளம் வயல்கள். வேறு ‘ஆப்ஷன்களே’ இல்லை. பனிமலைமுகடுகளை கேட்கவில்லை. குளிரும். வேறேதாவது இருக்கலாம். தொலைதூரக் கடல். மலைச்சரிவில் தன்னந்தனியான மண்குடிசை. ஆடுமேய்க்கும் இடையன் அமர்ந்திருக்கும் சமவெளி. ‘தீம்’ கூட அதிகம் மாறுவதில்லை. ஒரே பச்சை நிறம்.
பெரும்பாலும் உடன்நடையர்கள் ஓய்வுபெற்றவர்கள். “ஏடூ எஃப் த்ரீ பார் த்ரீ னைன்டீன் எய்ட்டி எய்ட். அதை நான் படிச்சிருக்கேன். இப்ப அப்டி ஒரு ஃபைலே இல்லேங்கான்… சுப்பாராவ கூப்பிட்டு கேட்டா முளிக்காரு” என்று பேசிக்கொண்டு செல்லும் குண்டரை சூழ்ந்து நான்குபேர் மூச்சிரைக்க. எதிரே வரும் ஆளைப்பார்த்து “என்ன ஜிஎஸ் முடிச்சாச்சு போல?” ஜிஎஸ் தலையாட்டி “ஆமா, எட்டு ரவுண்டு. நான்லாம் பிரம்ம முகூர்த்ததிலே எந்திரிச்சிடுறது… பிரம்ம முகூர்த்தம்னா சரஸ்வதிக்குள்ளதாக்கும். மூளைக்கு நல்லது..” ஈனஸ்வரத்தில் ஒருவர் “பிரம்மான்னுல்லா சொல்லுகது?” என்றார். “பிரம்மா சரஸ்வதிக்க ஹஸ்பெண்டுல்லா?”
என்னிடம் ஜிஎஸ் ஒருமுறை “சாருக்கு சுகரா?” என்றார். “இல்ல” என்றேன். “பிரஷருக்கு நீங்க வேகமா நடக்கப்பிடாது.” “பிரஷர் இல்ல” என்றேன். “ஹார்ட்டுக்கு அப்பப்ப இருந்து நடக்கணும் பாத்துக்கிடுங்க.” நான் பவ்யமாக “ஹார்ட்டும் நல்லாத்தான் இருக்கு” என்றேன். அவர் குழப்பமாக என்னை ஓரக்கண்ணால் பார்த்தார். எந்த நோயும் இல்லாதவர்களுக்கான நடையாலோசனை கைவசம் இல்லை. சென்றதுமே எவரிடமாவது கேட்பார் போல. நாளையே என்னிடம் “சார், இப்ப நாம நமக்கு ஒண்ணுமே இல்லாம இருக்கிறப்ப நடக்கப்போறம்னு வைங்க” என்று ஆரம்பிப்பார்.
ஆனால் அனைவரும் அப்படி நம்மை நோயற்றவர் என நினைப்பதில்லை. சமீபமாக பார்வதிபுரம் கணியாகுளம் சாலையில் ஏராளமான புற்கள் எழுந்து மென்பூக்குலை சூடி நின்றிருக்கின்றன. காலை இளவெயிலில் பொன்னென்றும் வெள்ளியென்றும் செம்பென்றும் அவை சுடர்விடும் அற்புதம். நான் அவற்றை உருவி பறக்கவிட்டுக்கொண்டே செல்லும்போது வெண்முரசின் கொடூரமான கொலைக்களக் காட்சிகளை கற்பனை வளத்துடன் விரிவாக்கிக் கொள்ளமுடிகிறது. வழியில் ஒருவர் என்னைப்பார்த்து சினேகமாக சிரித்து “சார் நல்லாருக்கேளா?”
வெண்முரசு வாசகரோ? “இருக்கேன்” என்றேன். “சாருக்கு எங்க?” என்றார். “சாரதா நகர், தொண்ணூத்துமூணு வீடு.” அவர் மேலும் அன்பை காட்டி “தனியா வாறீய?” என்றார். “நான் எப்பமும் தனியாத்தான்….” வாசகர் போலத் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் தத்துவார்த்தமாக ஏதாவது சொல்லலாமோ? “நான் தனியா வர்ரதுனாலே…” ஆனால் சரியாக வரவில்லை. அவர் “அதாக்கும் நான் கேக்கேன். சார தனியா விட்டிருக்காங்க?” என்றார். இவர் வேறு. நான் 2.0 வின் எழுத்தாளர் என தெரிந்தவர். “தனியா போறதிலே ஒரு இது இருக்குல்ல…” என்றேன். இன்னும் கொஞ்சம் கெத்தா இருக்கலாமோ? ஆனால் எப்படி?
“ஆமா…” என்றார். “ஆனா இங்க புள்ளக்குட்டிக உள்ள எடமாக்கும். சார் வேற தனியாட்டு வாறீக” என்றார். நான் புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மேலும் நயமாக “இல்ல, இப்பம், சார் எங்கியாம் வளியளிஞ்சு போய்ட்டீகன்னா எங்க கிட்டல்லா வந்து கேப்பாக? அதான் தனியாட்டு விட்டிருக்காகன்னுட்டு கேட்டேன்.” நான் “ஓ” என்றேன். பின்னர் “நான் சும்மாதான் வந்தேன்” என்றேன். “ஆமா, சும்மாதான் வாறீக. இப்டி புல்லுபறிச்சு பறத்தி விட்டுட்டு தானா பேசிட்டு போறீய இல்லா? அதாக்கும் கேட்டது… வாறேன், சோலி கெடக்கு.”
அவர் செல்வதை கொஞ்சநேரம் நோக்கி நின்றேன். உண்மையில் தனியாக காலைநடை வரக்கூடாதோ?