பேருருப் பார்த்தல்
அன்புநிறை ஜெ,
இன்றைய தமிழ் இந்துவில் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் எஸ்.ரா, சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் பெரும்பாலும் தினமும் வந்து வாசகர்களை சந்தித்து கலந்துரையாடி, புத்தகங்களில் கையெழுத்திட்டு தந்தார்கள், நான்கு மூர்த்திகளில் ஜெயமோகன் மட்டும் மிஸ்ஸிங் என்று குறிப்பிட்டிருந்தார்கள். கூடவே தாங்களும் ஒரு பதிப்பகம் தொடங்க இருப்பதாக செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள். (மேலதிக விவரங்கள் தெரியவில்லை போலும்). தாங்கள் புத்தகக் காட்சியை கடந்த சில ஆண்டுகளாக தவிர்ப்பதற்கான காரணம் முன்பே சொல்லியிருந்தீர்கள். இதைப் படித்தவுடன் ஏனோ வருத்தமாக இருந்ததது. ஜெயமோகன் வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமே என்று எண்ணிக்கொண்டு, தாங்கள் வந்திருந்தால் எங்கே நின்று வாசகர்களுடன் கலந்துரையாடியிருப்பீர்கள் என்றெல்லாம் சற்று அதிகமாகவே எண்ணிக்கொண்டேன்….
தற்பொழுது, எம்.வி.யின் காதுகள் படித்து, சு.ரா. வின் ஒரு புளியமரத்தின் கதை வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசித்துக்கொண்டிருக்கும் பொழுது, எழுத்தாளர்கள் எப்படி, ஒரு கதாபாத்திரத்தை வடிக்கிறார்கள், ஒரு இடத்தை எப்படி நம் முன் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். நாம் ஒருவரை எப்படி எழுத்தில் எடுத்து வருவோம் அல்லது ஒரு இடத்தை எப்படி நாம் வர்ணிப்போம்? எழுத்தாளர்களுக்கு யாரைப் பார்த்தாலும், எந்த இடத்தை பார்த்தாலும் கதாப்பாத்திரமாகத் தான் நோக்குவார்களா? போன்ற சந்தேகங்கள் வருகின்றன… திடீரென்று ஏன் எனக்கு இப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை. இதைத் தங்களைத் தவிர வேறு மிகச் சரியாக விளக்க முடியாது. பல கதாபாத்திரங்களைப் படைத்து மிக வெற்றிகரமாக உலாவவிட்டிருக்கும் தங்களிடம் தான் கேட்க வேண்டும் என்று எண்ணி கேட்கிறேன். இப்படிக் கேட்பது சரியா? தவறா? என்று தெரியவில்லை… கேட்டுவிட்டேன், தவறாக இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள். நேரமிருப்பின் தாங்கள் தெளியப்படுத்தினால் மகிழ்வுறுவேன்.
அன்புடன்
ரா. பாலசுந்தர்
அன்புள்ள பாலசுந்தர்
தமிழ் ஹிந்து பெரும்பாலும் கிசுகிசுக்களை வெளியிடுகிறது. இலக்கியச் சூழலில் இருந்து உள்ளே செல்பவர்களால் கிசுகிசுக்கள், பாரபட்சங்களைக் கடந்து செயல்படமுடிவதில்லை.
நான் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லாமைக்கு பலகாரணங்கள் உண்டு. அங்கே அதிகமான வாசகர்களைச் சந்திக்கலாம். ஆனால் உரையாட முடியாது. நான் என் வாசகர்களுடன் வேறு வேறு அரங்குகள் வழியாக இடைவெளி இல்லாமல் உரையாடிக்கொண்டே இருப்பவன். அதற்காக அமர்வுகள் நடத்துபவன். வெறும் ஹலோ ஹலோக்கள் வேண்டாமே என நினைக்கிறேன்.
எழுத்தாளர்கள் எவரும் பிரக்ஞைபூர்வமாக கதைமாந்தரை கவனிப்பதில்லை. இதில் ஒரு கதை இருக்கிறதே என சிலரைப்பற்றி தோன்றும். ஆனால் உடனடியாக எழுத முடியாது. எப்போதோ ஒரு கதை எழுதும்போது தன்னிச்சையாக சிலர் அக்கதாபாத்திரங்களில் எழுந்து தோற்றம் அளிப்பார்கள். பலசமயம் இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே, எங்கே என நானே எண்ணி மண்டையை குடைந்துகொண்டிருப்பேன்.
அதாவது எவர் புனைவுக்குள் வரவேண்டும் என தீர்மானிப்பது நாம் அல்ல, நம்முடைய ஆழத்தில் உறையும் வேறு ஒன்று.
ஜெ