அண்மையில் வாசித்த ஜெயமோகனின் ‘ரயிலில்’ சிறுகதை நல்கிய வாசிப்பனுபவம் பதிவுசெய்யப்பட வேண்டியது. ஜெயமோகன் பெரும்பாலும் மையமான ஒரு புள்ளியில் இருந்து கதை சொல்பவர் அல்ல என்பது எனது அவதானிப்பு. தான் பேச எடுத்துக்கொண்ட கதையின் எல்லா சாத்தியமான சந்துபொந்துகளுக்கும் நுளைந்து பிரித்து மேய்ந்து விட வேண்டும் என்கிற ஜெயமோகனது வேட்கையை அவரது பலகதைகளிலும் அவதானித்திருக்கிறேன். மேலும், கதை முடிந்துவிட்டது என வாசகன் நினைக்கும் ஒரு புள்ளியில், இல்லை, கதை இன்னும் முடியவில்லை எனச் சொல்லி மிக நுணுக்கமான விடயங்களை கதையின் கடைசியிலும் வாசகனின் மண்டையில் உறைப்பது போல சொல்ல ஜெயமோகனுக்கு எப்போதும் ஏதாவது இருந்து கொண்டே இருக்கிறது.