எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்
எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
இன்று எழுத்தாளர் ராஜ் கவுதமன் அவர்களை பற்றிய ஆவணப்படத்தை பார்த்தபொழுது அதில் அவர் தனது ஊரை பார்த்துவிட்டு”எல்லாம் மண்ணுக்குள்ள போய்டிச்சு, அந்த ஊரே இல்ல”என கூறுகிறார்.ஆனால் மழை பெய்து ஊர் நன்றாக இருப்பதுபோல் தான் தோன்றுகிறது.நானும் அந்த ஊர்களில் இருபது வருடத்திற்கு முன் அலைந்திருக்கிறேன். ஆனால் குளம் அழிந்து கிடப்பதை பார்த்து “நாசமாபோச்சு” என கூறும்போதுதான் உண்மை என புரிந்தது. ஒரு எழுத்தாளனாக அவருக்கு கோபம் வந்திருக்கும். ஆனால் அது அவரின் ஊரும் அல்லவா?
ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புலகம் பற்றிய கட்டுரையிலும் அதே கரிசல் மண்தான். கட்டுரையில் நீங்கள் கூறிய ” அழிந்துகொண்டே இருத்தல்” “தாக்குபிடித்தல்” “ஊரைவிட்டு ஓடுதல் அல்லது விட்டு செல்லுதல்” என்பதின்படி ராஜ் கவுதமன் விட்டு சென்றவர். குளம் அழிந்து கொண்டிருக்கிறது. தாக்குபிடித்தவர்களின் ஊர் அது.
ராஜ் கவுதமன் அவர்கள் மனகண்ணில் இருந்த ஊர் மறைந்து விட்டது.ஆனால் ராமகிருஷ்ணன் அதே ஊரை விட்டுசென்றுவிட்டு அந்த ஊரை தனது மனக்கண்ணில் இருந்து அழிக்காமல் வேறு வேறு நிலங்களில் வைத்து எழுதுகிறார்.
ராமகிருஷ்ணனின் படைப்புலகுக்குள் வரும் முக்கியமான ஓன்று பால்யம். கரிசல்மண்கார்கள் எழுத்தில் தங்களின் பால்யகாலத்தை பற்றி ஒருவரியாவது இருக்கும். பால்யத்தை ஒரு மண்ணில் தொலைத்துவிட்டு அல்லது விட்டு சென்றுவிட்டு வேறு நிலங்களில் குடியேறியபின் பின்னோக்கி பார்த்து ஆதங்கப்படும், அல்லது இழக்க கூடாதை இழந்துவிட்டதின் வலி இருக்கும்.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்
அன்புள்ள ஜெ
எஸ்.ராமகிருஷ்ணன் பற்றிய கட்டுரையை கொஞ்சம் தாமதமாக எடுத்துவைத்து வாசித்தேன். ஓரிருமுறை முழுமையாக வாசித்தபிற்பாடுதான் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ராமகிருஷ்ணனின் உலகிலுள்ள தனித்தன்மைகளான மழைபெய்துகொண்டிருக்கும் காடு போன்றவை எப்படி வருகின்றன என்று ஆராய்கிறீர்கள். அவை அவருடைய அந்த வரண்ட நிலத்திலிருந்து உருவாகும் கனவுகள் என்று உங்கள் பார்வை செல்கிறது. அது அவரைப்புரிந்துகொள்ள உதவும் மிகச்சிறந்த திறப்பாக இருந்தது
ராமகிருஷ்ணனின் மாயம் யதார்த்தம் இரண்டையும் இரவும் பகலுமாக அமைத்து அவை இரண்டும் கலந்து அவருடைய உலகம் எப்படி உருவாகி வந்திருக்கிறது என்று காட்டும் உங்களுடைய ஆய்வுமுறை மிக ஆழமானது. அவரைப்போன்ற பெரிய எழுத்தாளரை ஒட்டுமொத்தமாகப்புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். நிறையவே எழுதியிருக்கிறார். அவரை இப்படி தொகுத்து அளிப்பது மிகவும் உதவியான ஒன்று
ராஜேந்திரப்பிரசாத்
அன்புள்ள ஜெ
எஸ்.ராமகிருஷ்ணன் பற்றிய கட்டுரை மிக உதவியாக இருந்தது.ந் நான் அவருடைய எல்லா கதைகளையும் வாசித்ததில்லை. வாசிக்கவேண்டும் என்ற ஊக்கத்தை அளிப்பவையாக இருந்தன உங்கள் கருத்துக்கள். அப்போதுதான் அவரை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். உறுபசியும் நெடுங்குருதியும் ஒன்றை ஒன்று நிரப்பித்தான் ஒரு நாவலுக்கு இன்னொன்று பொருள் அளிக்கிறது என நினைக்கிறேன். அதை நீங்கள் எழுதியிருந்தீர்கள்
சாம் செல்வராஜ்
எஸ்.ரா. – கடிதங்கள்