வீரப்பன், அன்புராஜ் – கடிதங்கள்

ana

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி

செய்தி தாளில் வரும் ஒரு செய்தியில் உள்ள ஒரு வார்த்தையாகவே என் போன்றோர்களால் பார்க்கபடும் நபரின் வாழ்க்கை கலையின் வழியே மீண்டுள்ளது என்பது மிக மிக ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.  இதை படிக்கும் பொழுது தான் சிறைச்சாலை  நடைமுறைகளில் நடைபெறும் சீரமைப்பின் மீது ஒரு நம்பிக்கையும்,  இது தொடர வேண்டும் என்ற எண்ணமும் பலமாக எழுகிறது. தண்டனைக்காலத்திற்கு முன்பே விடுதலை சரி தான் என்ற கருத்தின் மீது ஆதரவு  இயல்பாகவே எழுகிறது. இந்த பேட்டி அவரின் தெளிவை வெளிகாட்டியதை விட நான் தெளிவடைய உதவியதாகவே கருதுகிறேன்.

நன்றி.

 

அன்புடன்

ம.உமாசங்கர்.

an6

அன்புள்ள ஜெ

அன்புராஜிடம் எடுக்கப்பட்ட பேட்டி ஒரு அற்புதமான மனத்திறப்பை அளித்தது. பலமுறை வாசித்த பேட்டி. நம்மிடையே மாமனிதர்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் சின்னச்சின்ன வாழ்க்கைகலில் மாட்டிக்கொண்டு ஒண்ணுமே இல்லை சார், இப்பல்லாம் பெரிய மனுசங்கன்னு யாரு இருக்காங்க என்று பேசிக்கொண்டிருக்கிறோம். நம் அனுபவங்கள் கம்மியாகிவிட்டன. நமக்கு உறவுகள் இல்லை. பெரிய சிக்கல்களும் இல்லை. மிடில்கிளாஸ் பெருகப்பெருக கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையின் சுவாரசியங்களும் மேன்மைகளும் குறைந்துகொண்டே இருக்கின்றன என்று தோன்றியது.

சுந்தரராஜன் மகாலிங்கம்

anb11

அன்புள்ள ஜெ,

அன்புராஜின் பேட்டி சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. கேள்விகள் எல்லாமே அவரை கூர்ந்து அறிந்த ஒருவர் கேட்டவையாக இருந்தன. சம்பிரதாயமாக இதழாளர்கள் கேட்கும் கேள்விகள் அல்ல. இப்படிப்பட்ட எக்ஸ்க்ளூஸிவ் பேட்டிகளால்தான் ஒருவரை நம்மால் முழுமையாக அறியமுடியும். அன்புராஜை மீட்டது கலை. இலக்கியமும் கலையும் நம் ஆணவத்தை வளர்க்கலாம். நம் சிந்தனையையும் நல்லியல்பையும் வளர்க்கலாம். நாம் அவற்றை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது அது

எஸ். மணிமாறன்

 

அன்புள்ள ஜெ

ஒரு பெரிய நாவலுக்கான கதைக்களம் அன்புராஜின் வாழ்க்கை. ஒரு வீரப்பன் ஒரு அன்புராஜ். இரண்டு வேறுவேறு திசைகளில் மனிதர்கள் எப்படிச் செல்கிறார்கள் என்பதைக் காட்டும் கதையாக அது அமையும்

செல்வா

சந்தன வீரப்பன், அன்புராஜ் – கடிதம்

அன்புராஜ் பேட்டி – கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-33
அடுத்த கட்டுரைஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்