இரு அளவுகோல்கள்

ka.na.su

இலக்கியமுன்னோடிகள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நீங்கள் இலக்கிய முன்னோடிகள் என்ற புத்தகத்திற்கான கேள்வி- பதிலில் நீங்கள் கூறிய அனைத்து கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். கட்டுரைகள் குறிபிட்ட எழுத்தாளர்களின் எழுத்துகளையும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். பூமணியின் ” அஞ்ஞாடி, வெக்கை”, ராஜ்கவுதமனின் “சிலுவைராஜ் சரித்திரம், ஜோ.டி.குரூசின் “ஆழிசூழ் உலகு” , வேணுகோபாலின் “அஞ்சலை ” , ஹெப்சிபா ஜேசுதாசனின் ” புத்தம்புதிய வீடு” ,வெங்கடேசனின் ” காவல் கோட்டம்” ராமகிருஷ்ணனின் சில நாவல்கள் எல்லாம் நீங்கள் விமர்சனமும் விளக்கமும் கொடுத்த பிறகுதான் வாங்கி வாசித்தேன்.

உங்கள் வலைதளத்தில் பெயர் இருந்தால் மட்டும்தான் புஸ்தகம் வாங்குவேன்.நீங்கள் எழுதிய அனைத்து கட்டுரைகளையும் படித்தபின்தான் ” யதார்த்தவாத எழுத்து,ரொமாண்டிக் எழுத்து, நவீன எழுத்து, பின் நவீனத்துவ எழுத்து” என்று பல எழுத்து முறைகளையும் அவற்றிக்கான வழிகளையும் “அந்த அந்த எழுத்து முறைகளுக்கான அழகியல்” என்ன என்பதையும், அனைத்தையும் ஒரே தராசில் வைக்ககூடாது என்பதையும் அறிந்தேன். அதனால் தான் எனக்கு வெண்முரசை வாசிப்பதற்கு எந்த தடையும் இல்லை. புரிதலில்,அறிதலில் குறைகள் இருக்கலாம்,ஆனால் எனது இயல்புக்கும் அறிவுக்கும் மீறி வெண்முரசொடு மல்லுகட்டி புரிந்தும், மறந்தும், ஞாபகபடுத்தியும் வாசித்து கொண்டிருக்கிறேன்.

ஆனால் நீங்கள் இளம் படைப்பாளிகளை பற்றி விமர்சனம் எழுதும் எண்ணம் இல்லை  என்று கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது. கொஞ்ச நாட்களுக்கு முன் நீங்கள் உங்கள் தளத்தில் கொடுத்த சுமார் பனிரெண்டு இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் உங்களின் விமர்சனத்தையும் வாசித்துருக்கிறேன். ஆனால் அது ஒட்டு மொத்த இளம் தலைமுறை எழுத்துகளை பற்றியது அல்ல.

vesa

ஜெயமோகன் சார் டிஸ்கவரி பேலஸில் காசு கொடுத்து வாங்கி படிக்கும் ஒரு வாசகன் என்ற முறையிலும்  அழியாச்சுடர்கள், மற்றும் பல பிளாக்குகளில் இரவுவரை படிக்கும் வாசகன் என்ற முறையிலும் சமகால எழுத்துகளை பற்றி  என்னால் கூற முடிந்தது ” பத்திக்கு பத்தி ஒரு அழகியல், வாசக இடைவெளி விடவேண்டியதுதான், அதற்காய் கற்பனை வறட்சியினால் கதையை ஒரு ஒத்திசைவில்லாமல் குதறி வைத்திருத்தல், பழைய நாவல்களின் சம்பவங்கள்” இப்படிதான் இருக்கிறது.வாங்கிய சில புத்தகங்களால் மன உளைச்சலுக்கு ஆளானதுதான் மிச்சம். கரு,நடை,வடிவம்,கதையை விவரிக்கும் விதம் எல்லாம் ஓன்று வானத்தில் பறக்கிறது, இல்லை தரையில் தூங்குகிறது. கேரக்டர்கள்,சம்பவங்கள் எல்லாம் ஒரே டெம்ப்ளேட். அதற்குதான் சினிமா இருக்கிறதே. ஜல்லிகட்டு, இரு அரசியல் ஆளுமைகளின் மரணங்கள், வலதுசாரிகளின் வளர்ச்சி, தூத்துக்குடி நிகழ்ச்சி, அமேசான், பிளிப்கார்ட் போன்றவைகளின் தோற்றம், ஸ்விக்கி, ஊபர்ஸ் போன்றவற்றின் வளர்ச்சி, வெறுப்பில் திளைக்கும் தமிழ்நாட்டின் மனநிலை, நீட் ,டிக்டாக் மனநிலை[ டிக்-டாக் வீடியோ பார்க்கும்போதெல்லாம் பீஷ்மரும், துருபதனும் நினைவில் வருவார்கள்.கேமிராவில் யாரை பார்க்கிறார்கள்?] மீ டூ  போன்றவற்றை  எவ்வளவு நல்ல கருக்கள்.ஓ.எம் ஆர் ரோட்டில் செல்லும் ஒவ்வொரு தடவையும் எனக்கு மாதவனின் திருவனந்தபுரம் சாலைதெரு ஞாபகம் வரும். எவ்வளவு முகங்கள்.வாழ்க்கைகள்.ஆனால் இதை கொண்டு எழுதியிருக்கும் கதைகள் தினத்தந்தியின் செய்தி போலதான் இருந்தன.

நீங்கள் பயன்படுத்திய”சலிப்பு”என்ற வார்த்தையை  தினமும் சமகாலங்களை படிக்கும்போது அனுபவித்து வருகிறேன். விமர்சனம் பண்ணாவிட்டாலும் சம கால நல்ல தமிழ் நாவல்களையாவது  கொஞ்சம் அறிமுகபடுத்தலாமே சார்?  “நல்ல நாவல்கள்” என்று கேட்பதால் கடுப்பாகாதீர்கள். எனக்கே அதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.நான் கேட்பது கொஞ்சம் சுவராஸ்யமாகவும் கதை பழையதாக இருந்தாலும் இல்லை கதையே இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு விஷயம் இருப்பதை.

இப்போது வாமு-கோமு,ரா.முருகவேளின் “செம்புலம்”,அழகிய பெரியவனின் கொஞ்சம் பழைய “தகப்பன் கொடி” இருக்கிறது.அதை வாசிக்கணும்.

நன்றி சார்

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்

sundara ramasamy

அன்புள்ள ஸ்டீபன் ராஜ்,

முந்தைய தலைமுறை எழுத்தாளர் ஒருவரின் பணி கொஞ்சம் சிக்கலானது. அவர் ஒரு நடுப்பாதையையே தேர்ந்தெடுத்தாகவேண்டும்

ஜெயகாந்தன் பொதுவாக அடுத்த தலைமுறை எழுத்து பற்றி எதுவுமே சொல்வதில்லை. நான் அதைப்பற்றி கேட்டேன். “புதியதாக உருவாகி வரும் எழுத்து எவ்வகையானது என நமக்குத் தெரியாது. அதை நாம் பின்னால் நின்று நம்மைநோக்கி இழுக்கக்கூடாது. அது தன்னிச்சையாக வளர அனுமதிப்பதே நல்லது” என விளக்கினார். “நம் அளவுகோலை அதன் மேல் போட்டு பேச ஆரம்பித்தால் நாம் அதை அழுத்தம் கொடுப்போம்” என்றார்.

அது உண்மை. வரவிருக்கும் எழுத்து இப்படி இருக்கவேண்டும் என முந்தையவர் சொல்லக்கூடாது. இப்படி இருந்தால்தான் நான் ரசிப்பேன் என்றுகூட சொல்லக்கூடாது. வளரும் எழுத்தாளர்கள் கவரவேண்டியது வந்துகொண்டிருக்கும் வாசகர்களைத்தான், முந்தைய தலைமுறை எழுத்தாளர்களையோ விமர்சகர்களையோ அல்ல. அடுத்த தலைமுறை எழுத்தாளர்களைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து எழுதினால் அவர்களை வரையறுக்கும், வழிகாட்டும் வேலையைச் செய்யத் தொடங்குகிறோம்

அதை நான் செய்யக்கூடாது என நினைக்கிறேன். ஆகவே வளரும் எழுத்தாளர்கள் அனைவரையும் வாசித்தாலும் முழுமையான விமர்சனம் எழுதுவதில்லை. முந்தைய தலைமுறை எழுத்தாளர்களை விரிவாக வாசித்து ஒட்டுமொத்தமாக வரையறை செய்து விமர்சிப்பதுபோல அடுத்த தலைமுறையினரிடம் செய்வதில்லை. அது பிழை என்றே படுகிறது.

அதேசமயம் அடுத்த தலைமுறையினரின் எழுத்தை முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் அடையாளம் காட்டியும் ஆகவேண்டும். அது தன் வாசகர்களை அடுத்த தலைமுறை நோக்கி செலுத்துவதுதான். தான் ஈட்டியவற்றை கையளிப்பது. அது ஒரு கடமை. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோர் அதை செய்தார்கள். நானும் அதை செய்யவேண்டும் என எண்ணுகிறேன். அதுவே இலக்கியத்திற்கான தொடர்ச்சியை உருவாக்குகிறது.

jeya

ஆகவே எனக்கு உவப்பானதாகத் தோன்றும், நான் புதியவகை முயற்சி என எண்ணும் படைப்புக்களை அறிமுகம் செய்கிறேன். அதில் முந்தைய தலைமுறையினரிடம் நான் காட்டிய கறாரான அளவுகோலை கடைபிடிப்பதில்லை. கூடுமானவரை நெகிழ்வான அளவுகோலையே கொண்டிருக்கிறேன். வளர்ந்தெழக்கூடிய ஒரு அம்சம் இருந்தாலே போதும், அவரை அடையாளம் காட்டுகிறேன். நம்பிக்கையூட்டும்படி தொடக்கம் இருந்தாலே போதும் என எண்ணுகிறேன். இதுவே சரியான வழியாக இருக்கும் என நினைக்கிறேன். க.நா.சு, சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் ஆகிய அனைவருடைய வழியும் இதுவாகவே இருந்துள்ளது.

இந்த நடுப்பாதை கொஞ்சம் சிக்கலானது. நம் விருப்புவெறுப்புகளை முற்றாகத் துறப்பதும் நம் ரசனைக்கு வெளியே சென்றும்கூட புதிய ஆக்கங்களை அடையாளம் காண்பதும் பொதுவாக அவ்வளவு எளிதல்ல. அதற்குத்தான் நான் வகைமாதிரிகளை பிரித்துக்கொள்கிறேன். என் ரசனையின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஆக்கங்களைக்கூட அவை என்ன வகைமை என புரிந்துகொண்டு அந்த இடத்தில் வைத்து மதிப்பிடுகிறேன். எதிர்புனைவுத் தன்மை கொண்ட, செயற்கையான வடிவச்சோதனை கொண்ட, அருவருப்பை மையச்சுவையாகக் கொண்ட ஆக்கங்கள் என் இயல்புக்கு உகக்காதவை. ஆயினும் புதிய ஓரு முயற்சியாக அவை எழும் என்றால் அவற்றின் வாய்ப்புகளை சுட்டிக்காட்டுகிறேன்

எங்கிருந்து எது புதியதாக எழும் என்று சொல்லமுடியாது. எண்பதுகளில் எங்கள் முன்னோடிகள் எழுதிக்கொண்டிருந்தவை யதார்த்தத் தன்மைகொண்ட, நடுத்தரவர்க்க வாழ்க்கையின் குடும்பச்சித்தரிப்புகள். வரலாறோ தத்துவமோ அவற்றில் இல்லை. தொன்மங்களும் ஆழ்படிமங்களும் இல்லை. நாங்கள் எழுதவந்தபோது அந்த உலகை நோக்கிச் சென்று எங்கள் வாசல்களை திறந்துகொண்டோம். அப்படிப்பட்ட முன்னகர்வுகள் வழியாகவே இலக்கியம் வாழ்கிறது. தலைமுறைதோறும் அது அழகியல்ரீதியாகவும் அறம்சார்ந்தும் உருமாறுகிறது. மாறும் ஒன்றும் மாறா ஒன்றும் கலந்ததே இலக்கியம். மாறாததை எப்போதும் சுட்டிக்காட்டவேண்டும், மாற்றங்களை அடையாளம்காணவும் வேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைபிரதமன் – கடிதங்கள் 9
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39