யுதிஷ்டிரர் அர்ஜுனனின் குடிலுக்குள் நுழைந்தபோது அங்கே இருந்த நகுலனும் சகதேவனும் எழுந்து வணங்கினர். “எப்படி இருக்கிறான்?” என்று அவர் கேட்டார். சகதேவன் ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரர் அவன் மஞ்சத்தின் அருகே அமர்ந்தார். காட்டுக்கொடிகளை இழுத்துக்கட்டி பின்னப்பட்டிருந்த அந்த மஞ்சம் அவருடைய உடல்பட்டு சற்று அசைந்தது. யுதிஷ்டிரர் “இளையோனே” என அழைத்தார். அர்ஜுனன் எதிர்வினை ஆற்றவில்லை. யுதிஷ்டிரர் “இளையோனே” என மீண்டும் அழைத்தார். பின்னர் சகதேவனிடம் “அகிபீனா கொடுக்கப்பட்டுள்ளதா?” என்றார். சகதேவன் “அவர் விழித்துத்தான் இருக்கிறார்” என்றான்.
யுதிஷ்டிரர் திரும்பி அர்ஜுனனிடம் “இளையோனே” என்றார். சகதேவன் “அவர் முற்றாகவே பேச்சு ஒடுங்கிவிட்டிருக்கிறார். நாங்கள் பலமுறை அவரை பேசவைக்க முயன்றோம். மேலும் மேலும் உள்ளொடுங்கிக்கொண்டே செல்கிறார்” என்றான். யுதிஷ்டிரர் “இளையோனே, என்ன இது? நீ அறியாததா? இறப்பும் பிறப்புமாகவே இப்புவியில் மானுட வாழ்க்கை நிகழ்கிறது. போர்க்களத்தில் வீழ்வது வீரனுக்கு விண்ணுலகுக்கான பாதை எனக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். நாளையே நம்மில் எவர் வீழ்வார்கள் என்றும் நமக்குத் தெரியாது” என்றார். அர்ஜுனன் அங்கிருப்பதாகவே தோன்றவில்லை.
யுதிஷ்டிரர் சகதேவனிடம் “இளைய யாதவன் வந்தானா?” என்றார். “இல்லை” என்றான் சகதேவன். “அவனை அழைத்து வருக! இவனை இறப்பில் இருந்து அவன்தான் மீட்டான். இந்த இருளிலிருந்தும் அவனால் மட்டுமே மீட்க முடியும்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “மூத்தவரே” என்றான் சகதேவன். “செல்க, நான் அவனை அழைத்தேன் என்று சொல்” என்றார் யுதிஷ்டிரர். சகதேவன் வணங்கி வெளியே செல்ல நகுலனிடம் “மந்தனையும் அழைத்துவரச் சொல்” என்றார். “அவர் நேராக உணவுச்சாலைக்கு சென்றார். இப்பொழுதில் முழுமையான மதுமயக்கில் இருப்பார்.”
யுதிஷ்டிரர் எரிச்சலடைந்து “அனைவரும் இங்கு வரவேண்டும். அத்தனை மைந்தரும் வரட்டும். இது நம் குடியின் அவை. இவன் இப்படி இருக்கையில் நாம் என்ன செய்யமுடியும்? சென்று துயில்வோமா என்ன?” என்றார். பின்னர் தணிந்து “இங்கேயே இருப்போம். இவனைச் சூழ்ந்து அமர்ந்திருப்போம். நம்மால் வேறென்ன செய்யமுடியும்? நானும் எத்தனை வெற்றுச்சொற்களைத்தான் எடுப்பது?” என்றார். நகுலன் “நீங்களும் அகிபீனா உண்டு துயிலலாம், மூத்தவரே. மிகமிக உளம் தளர்ந்திருக்கிறீர்கள்” என்றான்.
“ஆம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “என்னால் எதையுமே தாளமுடியவில்லை. நான் விழைந்ததல்ல இந்த நிலமும் முடியும். இதோ அனைத்துக்கும் அடிகோலியவனாக அமர்ந்திருக்கிறேன். நூறு பிறவிகளில் ஈடுசெய்ய இயலாத பெரும்பழியை சூடியிருக்கிறேன். சென்று தந்தையின் முகத்தை நோக்கக்கூட தகுதியற்றவனானேன்.” குரல் உடைய அவர் விம்மி அழத் தொடங்கினார். கைகளால் முகத்தை பொத்திக்கொண்டு உடலை நன்கு ஒடுக்கி குனிந்து தோள்கள் குலுங்க அழுதார். நகுலன் என்ன சொல்வதென்று தெரியாமல் நோக்கி நின்றான். அவர் அழுதுகொண்டிருக்கையில் அங்கிருந்து செல்வதற்கும் தோன்றவில்லை. அவர் ஓய்வதற்காக அவன் காத்திருந்தான்.
மெல்ல விசும்பி ஓய்ந்து மீண்டும் துயர் எழ அவர் அழுதார். பின்னர் வெறுமனே உடல் மெய்ப்புகொண்டு அசைய வளைந்து அமர்ந்திருந்தார். எப்போதோ அங்கே நகுலன் இருப்பதை உணர்ந்து எரிச்சலுடன் “என்ன செய்கிறாய் இங்கே? செல்க! என் ஆணை நிறைவேறவேண்டும். அனைவரும் இங்கே வரவேண்டும்” என்றார். நகுலன் தலைவணங்கி வெளியே சென்றான். யுதிஷ்டிரர் “நில்!” என்று கூவினார். “நான் உன்னிடம் செல்லும்படி ஆணையிட்டேன். ஏன் இங்கே நின்றாய்? நான் அழுவதை பார்த்துநின்றாயா? அது உன்னை நிறைவுறச் செய்கிறது அல்லவா?” என்று கூச்சலிட்டார். அவர் கழுத்தில் நீள்நரம்பு புடைத்து அசைந்தது. “ஆம், நான் கோழை. வீணன். பொய்நடிப்பு நிகழ்த்துபவன். வீண்சொல் எடுக்கும் முதியவன்… ஆனால் இந்த நடிப்பால்தான் உயிர்வாழ்கிறேன்.” மூச்சிரைக்க அவனை நோக்கி வந்தபோது அவருடைய விழிகள் பித்துகொண்டு சிவந்திருந்தன.
அவர் அகிபீனா உண்டிருப்பாரோ என நகுலன் ஐயம்கொண்டான். அவன் அங்கே நிற்காமல் வெளியே செல்ல அவர் திரும்பி அந்த அறையை திகைப்படைந்தவர்போல நோக்கினார். அங்கு நிகழ்ந்த எதையுமே அறியாதவனாக அர்ஜுனன் கிடந்தான். ஆனால் விழிகள் வெறித்துத் திறந்திருந்தன. “இளையவனே, இளையவனே” என மெல்ல யுதிஷ்டிரர் அழைத்தார். அவன் விழிகளில் அசைவு தெரியவில்லை. “போதும்… இப்படியே இவையனைத்தையும் விட்டுவிட்டு கிளம்பிவிடுவோம். எங்கேனும் அடர்காட்டில் சென்று வாழ்வோம்… நம் வாணாள் முடியும் வரை இங்கே விலங்கென்றும் சிற்றுயிர் என்றும் இருப்போம். நாம் இருப்பதை நாமன்றி எவரும் அறியவேண்டியதில்லை.”
அதை சொல்லச் சொல்ல அவ்வெண்ணத்தால் உந்தப்பட்டு முகம் மலர்ந்தார். விழிகளில் பித்தின் வெறிப்புடன் அர்ஜுனன் தோளைப் பற்றி உலுக்கி “நாம் மகிழ்ந்திருந்த நாட்கள் காட்டின் மடியில்தான். முனிவர்களின் குடில்கள், தூநீர்வாவிகள், நதிக்கரைகள். நாம் வாழ்க்கையை அங்கேதான் அறிந்தோம். சென்றுவிடுவோம். ஐவரும் இப்படியே கிளம்புவோம். இங்கே என்ன நிகழவேண்டும் என இளைய யாதவனே முடிவெடுக்கட்டும். இது அவனுடைய போர். நம்முடையது அல்ல” என்றார்.
அவர் அர்ஜுனனின் தோளை வெறியுடன் உலுக்கினார். “நாம் சதசிருங்கத்திற்கே செல்வோம். அந்த ஏரி அங்குதான் இருக்கும். நினைவிருக்கிறதா? அதில் இரு நிலவுகளை நாம் கண்ட இரவை? நம் தந்தை அங்கே இருக்கக்கூடும். நாம் அங்கே மீண்டும் சிறுவர்களாகக்கூட மாறமுடியும்.” அவர் அவன் முகத்தை சிலகணங்கள் உற்று நோக்கினார். மெல்ல பித்து அகல உளம் சோர்ந்து பெருமூச்சுவிட்டார். “எதுவும் எஞ்சப்போவதில்லை. ஆம், எதுவுமே நமக்கு எஞ்சப்போவதில்லை. நாம் இந்தப் போரில் அனைத்தையுமே இழப்போம். இது இப்போர் தொடங்குவதற்கு முன்னரே எனக்குத் தெரியும். பலமுறை என் கனவில் வந்திருக்கிறது இது.”
“இந்தப் போருக்கு நாம் எழுவதற்கு முன்னர் கனவில் நான் இரு பெண்களை பார்த்தேன். அம்பாலிகையும் அம்பிகையும். நம் மூதன்னையர். இளையோனே, இது அவர்களின் வஞ்சம். அவர்கள் கிளம்பிச்செல்லும்போது அந்த வஞ்சத்தை மட்டும் நம் அரண்மனையிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அது அங்கே நூறுமேனி பெருகியது…” அவர் மீண்டும் விம்மியழுதார். அழுகையை நிறுத்த முயலுந்தோறும் முடியாமல் மேலும் அழுதார். அழுகை கலந்த குரலில் அவனை உரக்கக் கூவி அழைத்தார். “எழுந்திரு, மூடா… கீழ்மகனே, எழுந்திரு. நீ இல்லாமல் நான் இங்கே என்ன செய்யப்போகிறேன்? கீழ்மகனே! கீழ்மகனே!”
அவனை ஓங்கி ஓங்கி அறைந்தார். பின்னர் எழுந்து நின்று கைவீசி பெருஞ்சினத்துடன் “இதெல்லாம் என்ன என்று தெரியாதா உனக்கு? இது பெண்பழி. அம்பையின் தீச்சொல். அவளுக்கும் முன்னால் மைந்தரை ஈன்று குருதிவார்ந்து வெளிறி இறந்த சுனந்தை இட்ட தீச்சொல். தபதியும் அதற்கு முன் சர்மிஷ்டையும் விடுத்த விழிநீர். இது நம் குடியை வாழவே விடாது… நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. நாம் வெறும் பலிகள்…” என்றார்.
வெளியே காலடியோசை கேட்டதும் அவர் திடுக்கிட்டார். அதுவரை பேசிக்கொண்டிருந்தோமா எண்ணிக்கொண்டிருந்தோமா என குழம்பி அர்ஜுனனை நோக்கினார். எடைமிக்க காலடிகளுடன் பீமன் உள்ளே வந்தான். வெறுமனே தலைவணங்கி அப்பால் சென்று பெட்டி ஒன்றை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தான். நகுலன் உள்ளே வந்தான். “மைந்தர் எங்கே?” என்றார் யுதிஷ்டிரர். “அவர்களை எழுப்பவேண்டாம், துயிலட்டும் என நான் ஆணையிட்டேன்” என்றான் பீமன்.
இளைய யாதவரும் சகதேவனும் வந்தார்கள். இளைய யாதவர் அமர சகதேவன் ஒரு பெட்டியை எடுத்துப்போட்டான். அவர் அமர்ந்து கைகளைக் கோத்து மடியில் வைத்தபடி ஒன்றும் சொல்லாமல் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தார். பீமன் “இளைய யாதவரே, அவன் உள்ளம் எந்நிலையில் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவன் இருக்கும் நிலை அஞ்ச வைக்கிறது. அவனை மீட்டாக வேண்டும்” என்றான். இளைய யாதவர் “நாம் என்ன செய்ய முடியும்? அவன் செல்லும் தொலைவுவரை சென்றுவிட்டு மீளட்டும்” என்றார்.
சகதேவன் “துரோணரும் கர்ணனும் இவ்வாறு செய்வார்கள் என்று எண்ணியிருக்கவேயில்லை” என்றான். பீமன் “அவர்களால் இயன்றாலும் துரியோதனன் இதை செய்ததை என்னால் எத்தனை எண்ணியும் உளம்கொள்ள இயலவில்லை” என்றான். யுதிஷ்டிரர் “நாம் பிதாமகர் பீஷ்மரைக் கொன்றபோது அவர்களும் இதையே சொல்லியிருக்கக் கூடும்” என்றார். சீற்றம்கொண்டு எழுந்து “இதோ சோர்ந்து கிடக்கும் இவனிடம்தான் இதை சொல்கிறேன். சிகண்டியை முன்னிறுத்தி பிதாமகரை வீழ்த்தியவன் இவன். அதற்கு ஒப்புதல் அளித்தவன் நான். நாங்கள் இருவரும் இத்துயருக்கு முற்றிலும் தகுதி கொண்டவர்கள்தான்” என்றார்.
“எதற்கு வீண்பேச்சு?” என்று சகதேவன் சொன்னான். “வீண்பேச்சுதான். நாம் பேசும் அனைத்துமே வீண்பேச்சுதான். இந்தப் பேச்சுகளுக்கு அப்பால் நாம் மிகமிக எளியவர்களாகவே இருக்கிறோம். அரக்கரையும் அசுரரையும்போல கண்மூடித்தனமான விசைகொண்டவர்களாக. கிராதர்களையும் நிஷாதர்களையும்போல தங்களை மட்டுமே நோக்கக்கூடியவர்களாக” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அருந்தவம் இயற்றி அறியவேன்டும் ஞானத்தை. அதன் பின் மேலும் தவம் இயற்றி அந்த ஞானத்தில் அமையவேன்டும். நாம் அறிந்தவற்றை வெற்று ஆணவமாக ஆக்கிக்கொண்டவர்கள். நாம் அடைந்தவை அனைத்தும் பொய்யே. இப்போது அதை அறிகிறேன்.”
“எண்ணி நோக்குக, நாம் எத்தனை கௌரவ மைந்தர்களை கொன்றோம்! எத்தனை கௌரவர்களை தலையறைந்து சிதைத்து வீசினோம்! துரியோதனன் அதை எப்படி உணர்ந்திருப்பான்? அவர்களும் நம் மைந்தர்கள், நம் உடன்பிறந்தார். நாம் அதை ஒருகணமேனும் எண்ணினோமா? இத்துயரால் நாம் தெய்வங்களிடம் உரைப்பது என்ன? நாம் வெறும் விலங்குகள். குருதியால் மட்டுமே ஆளப்படுபவர்கள். குருதியின் பிடியிலிருந்து எழுவதற்கே ஞானம் தேவை. நாம் அதை அடையவே இல்லை.” யுதிஷ்டிரர் சலிப்புடன் தலையசைத்து அமர்ந்துகொண்டு “நம் குருதியில் ஓடுவது சர்மிஷ்டையின் அசுரக்குருதி. சத்யவதியின் நிஷாதக்குருதி” என்றார்.
“என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள்?” என்று சீற்றத்துடன் பீமன் கேட்டான். “பேசவேண்டும் என நீங்கள் அழைத்தமையால்தான் வந்தேன். உங்கள் வீண்பசப்புகளைக் கேட்டு பொழுது கழிக்க என்னால் இயலாது.” யுதிஷ்டிரர் “நான் என் அறுதிமுடிவை சொல்லவே அழைத்தேன். அதற்காகவே இளைய யாதவனை வரச்சொன்னேன். நான் போரை நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறேன். போதும். இனி இப்போர் தொடர்வதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. எனக்கு அரசும் முடியும் தேவை இல்லை. என் குலக்கொடி சிறுமைசெய்யப்பட்டதைப்பற்றி எந்த உளக்குறையும் எனக்கில்லை. எனக்கு இந்தப் புவியில் எந்த வருகணக்கும் செல்கணக்கும் இல்லை. நான் கிளம்பவிருக்கிறேன். எனக்கான இடம் முனிவர் வாழும் காடுதான். போரை விழைவோர் நிகழ்த்தட்டும்” என்றார்.
சகதேவன் “நாம் இதை நாளை பேசுவோம்” என்றான். யுதிஷ்டிரர் சொன்னார் “இது வெறும் உணர்ச்சிவெறி என நினைக்கிறாய் போலும். அல்ல, நான் எண்ணி எண்ணி எடுத்த முடிவுதான் இது. இனி அதிலிருந்து விலக நான் சித்தமாக இல்லை. நாளை என்றல்ல என்றும் இதுவே என் சொல். இனி நான் போரிட விரும்பவில்லை. இளைய யாதவன் அவனுடைய போரை நிகழ்த்துக… நான் இனி அதில் இல்லை.”
இளைய யாதவர் “எனது போர் அல்ல இது” என்றார். “என் போர் எந்த மானுடருடனும் இல்லை” என்றபடி எழுந்துகொண்டு “அரசருக்கு ஆர்வமில்லை என்றால் இந்தப் போரை நிறுத்திவிடுவோம்” என்றார். யுதிஷ்டிரர் “ஆம், இன்றே தூதர் செல்லட்டும். கௌரவரிடம் சென்று நாம் போரை நிறுத்திவிட்டு விலகிக்கொள்கிறோம் என அறிவிக்கட்டும். அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் துரியோதனனுக்கே உரிமையாகட்டும். அவனும் அவன் கொடிவழியினரும் இந்நிலவிரிவை முழுதாளட்டும். என் குடியினர் இங்கிருந்து கிளம்பி தெற்குக்கோ கிழக்குக்கோ செல்வார்கள். அங்கே இன்னமும் மேழிபடாத, கன்றுக்குளம்பு தொடாத மண் உண்டு. அவர்களின் குருதியில் யாதவ மரபு உறைகிறது. தங்கள் வாழ்நிலத்தை அவர்கள் கண்டுகொள்வார்கள்” என்றார்.
“பிறகென்ன, தூதன் கிளம்பட்டும்” என்றார் யுதிஷ்டிரர். இளைய யாதவர் “இம்முறை நான் தூதுசெல்ல முடியாது, அரசே. நான் என் கால்பொடியை தட்டிவிட்டுவிட்டு அஸ்தினபுரியிலிருந்து கிளம்பியவன்” என்றார். “சகதேவன் செல்லட்டும். வேண்டுமென்றால் நானே செல்கிறேன்” என்றார் யுதிஷ்டிரர். பீமன் உறுதியான குரலில் “மூத்தவரே, ஒன்று கேட்டுக்கொள்க! நான் இளைய யாதவருக்கு சொல்லளித்து இக்களத்திற்கு வந்தவன். அனைத்தையும் இழந்தாலும் சரி இந்தக் களத்தில் இருந்து வெற்றியுடன் அன்றி மீளமாட்டேன். நீங்கள் விழைந்தால் இப்போதே கிளம்பிச்செல்லலாம்” என்றான். யுதிஷ்டிரர் “என்ன சொல்கிறாய்? நான் உன் தமையன். என் ஆணையை மீறுகிறாயா?” என்று உடைந்த குரலில் கூச்சலிட்டார். அவருடைய உடல் நடுங்கியது. “மூத்தவரே, உங்கள் ஒப்புதலுடன் நான் என் வாழ்வு, மீட்பு இரண்டையுமே இளைய யாதவருக்கு அளித்துவிட்டவன்” என்றான் பீமன்.
“நீ நடத்து இப்படையை. நான் கிளம்புகிறேன். என் தம்பியர் பிறர் உடன்வருவார்கள். என் மைந்தர் வருவார்கள்” என்று யுதிஷ்டிரர் கூவினார். “சகதேவா, நாம் கிளம்புவோம். நகுலா, நீ வருகிறாய் அல்லவா?” சகதேவன் “நாங்கள் உங்களுக்கு எங்களை அளித்துக்கொண்டவர்கள், மூத்தவரே” என்றான். “அது போதும். நான் கிளம்புகிறேன். நீயே இப்போரை நிகழ்த்துக! வென்றால் இந்திரப்பிரஸ்தத்திற்கும் அஸ்தினபுரிக்கும் நீயே அரசனாகுக! ஆம், ஒருவகையில் அது சரியே. உன் கைகளால் நீ அவர்களை கொல்கிறாய். விலங்குநெறிப்படி நீயே அரசனாகவேண்டும். விலங்குகளின் உலகு இது. இங்கே எனக்கு இடமில்லை” என்றார் யுதிஷ்டிரர். “முடிவு எடுத்துவிட்டபின் நாம் ஏன் பிந்தவேண்டும்… கிளம்புவோம். அதற்குமுன் இவனிடம் நான் கேட்கவேண்டும். என்னுடன் வருகிறானா அல்லது இங்கே இருந்து உங்கள் போரை நிகழ்த்தவிருக்கிறானா என்று. யாதவனே, இவனை எழுப்புக! நீயே அதை கேட்டுச் சொல்க!”
இளைய யாதவர் “பீமசேனரே, நான் உங்களை உங்கள் தமையனிடமே திரும்ப அளிக்கிறேன். நீங்கள் எனக்களித்த சொல் இனி உங்களை கட்டுப்படுத்தாது” என்றார். “என் பாதை தெளிவாகவே உள்ளது. நீங்கள் நூறுமுறை என் சொல்லை திரும்ப அளித்தாலும் மீள மீள உங்கள் காலடியில் அதை வைப்பேன்” என்று பீமன் சொன்னான். “ஒவ்வொருமுறை இறைமுன் மலர் இடுகையிலும் உள்ளத்தை ஒருமுறை வைக்கிறோம் என்பார்கள். பல்லாயிரம் முறை உள்ளத்தை வைப்பதே முழுதளிப்பு.”
இளைய யாதவர் “நீங்களும் இழக்க நேரலாம். பெருந்துயர்கள் வழியாக செல்ல நேரலாம்” என்றார். “ஆம், அறிவேன். முழுதளிப்பு என்பது அதையும் சேர்த்துத்தான்” என்றான் பீமன். “அத்துடன் இது என் குலமகளுக்காக நான் கொண்டுள்ள வஞ்சமும் கூட. எந்தத் தெய்வம் சொன்னாலும், எந்தப் பெருந்துயர் எதிர்பட்டாலும் அதிலிருந்து நான் விலகப்போவதில்லை. இங்கே ஒரு பெண்ணின் விழிநீரும் வஞ்சினமும் எந்நிலையிலும் கைவிடப்படவில்லை என்பதை உலகம் அறிக!” இளைய யாதவர் புன்னகைத்து “அச்சொல் நிலைகொள்ளவேண்டும், இளைய பாண்டவரே. எந்நிலையிலும் அது நிலைகொண்டாகவேண்டும்” என்றார்.
யுதிஷ்டிரர் சோர்ந்தவராக திரும்பச் சென்று தன் பீடத்தில் அமர்ந்தார். “என்னை கீழ்மகனாக உணரச் செய்கிறீர்கள். இங்கிருந்து நான் சென்றால் அவள் என்னை நம்பிச் சொன்ன வஞ்சினத்தை துறந்தவன் ஆவேன். மானுடன் என வாழும் தகுதியை இழந்துவிடுவேன்” என்றார். பீமன் “அச்சொல் வென்று இக்களத்தில் குருதியாடி நின்றிருக்கும். ஐயமே தேவையில்லை, மூத்தவரே. நீங்கள் அப்பொறுப்பை என்னிடம் அளித்துவிட்டுச் செல்லலாம்” என்றான். யுதிஷ்டிரர் கைகளால் முகத்தைப் பொத்தி குனிந்து அமர்ந்திருந்தார்.
இளைய யாதவர் அர்ஜுனனைத் தொட்டு “பாண்டவனே, எழுக…” என்றார். அவன் உடல் விதிர்த்தது. “பாண்டவனே, எழுக…” என்று மீண்டும் இளைய யாதவர் சொன்னார். மூன்றாம் முறை “எழுக, பார்த்தா!” என்றதும் அர்ஜுனன் விதிர்த்து இமைகள் சுருங்கி அதிர விழிப்படைந்தான். “எழுக…” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் எழுந்தமர்ந்து அவர்களை மாறிமாறி நோக்கினான். “எங்கிருந்தாய்?” என்று பீமன் கேட்டான். “பிறிதொரு இடம்… வேறெங்கோ” என அவன் சொன்னான். பின்னர் திடுக்கிட்டவன்போல சகதேவனிடம் “அபிமன்யு எங்கே?” என்றான். சகதேவன் முகத்தில் திகைப்புடன் இளைய யாதவரை நோக்கினான். அவர் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே அர்ஜுனனை நோக்கி அமர்ந்திருந்தார்.
அர்ஜுனன் ஒரே கணத்தில் அனைத்தையும் இழுத்து எடுத்துக்கொண்டு எழுந்து நின்றான். அவன் உடல் நடுங்கியது. அவன் விழப்போகிறான் என பீமன் பிடிக்க எழுவதுபோல அசைந்தான். அர்ஜுனன் தளர்ந்த கால்களுடன் அமர்ந்துகொண்டு “ஆம்” என்றான். அவன் இருமுறை தொண்டையைக் கமறிய ஓசை ஒரு பெருங்கதறலின் துணுக்கு எனத் தோன்றி அவர்கள் அனைவரின் உடல்களையும் துணுக்குறச் செய்தது. ஆனால் அர்ஜுனனின் உடல் மேலும் ஒடுங்கியது. அவன் விழிகளில் இருந்து நீர் ஓசையின்றி சொட்டத் தொடங்கியது. அதை அவர்கள் நோக்கி நின்றனர். விழிநீர் பெருகி தாடியை நனைத்து மார்பில் சொட்டிக்கொண்டே இருந்தது.
பின்னர் மெல்லிய குரலில் “யாதவரே” என அவன் அழைத்தான். “சொல்லுங்கள், இதற்கு என்ன பொருள்?” இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்லுங்கள், என்ன பொருள் இதற்கு?” என அவன் கைநீட்டி இளைய யாதவரின் கையை பிடித்தான். “சொல்லுங்கள்… இழப்பல்ல என்னை வதைப்பது. இதிலுள்ள மாபெரும் பொருளின்மைதான். என் உள்ளத்தை விரித்து விரித்து இப்புடவியளவுக்கே அகற்றி அள்ள முயன்றேன். ஒன்றும் சிக்கவில்லை. இப்பொருளின்மை… பெரும்பூதமென எழுந்து என்னை கொல்ல நின்றிருக்கிறது இது.” இளைய யாதவர் “ஒவ்வொரு இறப்பின்போதும் அனைத்து மானுடரும் அதையே உணர்கிறார்கள். அதற்கு மாற்றுவழி என ஏதுமில்லை” என்றார்.
“பொருள் இருந்தாகவேண்டும். யாதவரே, உம்மை நான் அறிவேன். உம் பேருருவை என் கனவுகளில் கண்டிருக்கிறேன். பொருள் உண்டு, அதை நீர் அறிவீர். சொல்லுங்கள்” என்று அர்ஜுனன் உரக்கக் கூவினான். “பொருளென இங்கே சொல்லப்படும் அத்தனை சொற்களும் வீண் என அறிவேன். நீர் சொல்லமுடியும்… சொல்க! என்ன பொருள் இதற்கு? என் மைந்தன் இவ்வண்ணம் இங்கே ஏன் சாகவேண்டும்?” இளைய யாதவர் “அதை நீ உணரமுடியாது. நான் சொன்னாலும் நீ அறிந்த ஒன்றாகவே அதை விளங்கிக் கொள்வாய். பாண்டவனே, நீ காண்பது முடிவிலாப் பெருக்கென வானத் திசைகளைத் தொட்டு ஓடிக்கொண்டிருக்கும் சரடு ஒன்றின் ஒரு மணியை. அத்தனை மணியையும் உணராமல் ஒன்றை நீ அறியமுடியாது. அந்த ஒரு மணியோ புடவியின் ஓர் அணுத்துளி. அண்டமே அணுவென்பதால் அதுவும் முடிவிலியே” என்றார்.
அர்ஜுனன் எழுந்து நின்று கைநீட்டி கூச்சலிட்டான். “சொல்க… சொல்க… நீங்கள் எனக்கு அதன் பொருளை சொல்லியாகவேண்டும். இல்லையேல் இனி என்னால் வில்லேந்த இயலாது. ஒன்றின் பொருளின்மை அனைத்தையும் பொருளற்றதாக ஆக்கிவிடுகிறது. சொல்க! என் மைந்தனின் இறப்புக்கு என்ன பொருள்?” இளைய யாதவர் “சொல்கிறேன்” என்றபடி கைநீட்டி அவன் கையை பற்றினார். அவன் உடல் நடுக்குகொள்ள கால்மடிந்து மஞ்சத்திலேயே மீண்டும் அமர்ந்தான். அவன் விழிகள் அதிர்ந்துகொண்டே இருந்தன. அவர்கள் எங்கோ ஓர் அரண்மனையின் கூடத்தில் அமர்ந்திருந்தனர். இளைய யாதவர் சூதன்வடிவில் இருந்தார். கையிலிருந்த சிறுயாழை மீட்டியபடி பாடலும் உரையுமாக அவர் கதை சொல்லிக்கொண்டிருந்தார்.
“பின்னர் எப்போதோ நான் சொல்லவேண்டிய கதை இது, பாண்டவனே” என்றார் இளைய யாதவர். “முன்பொரு காலத்தில் கனகை என்னும் பொன்னிற நாகம் ஒரு தாழைப் புதருக்குள் நூறு முட்டைகளை இட்டது. முட்டைகளை இட்டுவிட்டு மும்முறை மண்ணைக் கொத்தி பூமாதேவியை காவலுக்கு நிறுத்திவிட்டு திரும்பிப்பாராமல் செல்லும் வழக்கம் கொண்டவை நாகங்கள். சூரிய ஒளியில் அந்த முட்டைகள் விரிந்து சின்னஞ்சிறு புழுக்களைப் போன்ற நாகக் குழந்தைகள் வெளிவந்தன. நாகங்களின் வழக்கப்படி அவை வாசனையை உணர்ந்து, நெளிந்து அருகே இருந்த தாழைமலர்களில் ஏறி அதன் சிறகுகளின் நறுமணம் மிக்க வெம்மைக்குள் அமர்ந்துகொண்டன. அதன்பின் அந்த மலரையே அவை அன்னை என உணர்ந்தன.”
“அன்னை தன் நறுமணத்தால் வண்டுகளை அருகே அழைத்து அக்குழந்தைகளுக்கு உணவூட்டினாள். இரவில் தன் இறகுகளைக்கொண்டு மூடி அவற்றை பாதுகாத்தாள். அவை தங்கள் வழிகளையும் நெறிகளையும் கண்டுகொள்ளும்வரை அவற்றை அவளே பேணினாள்” என அவர் தொடர்ந்தார். “அந்த நூறு பாம்புக் குழந்தைகளில் ஒருவன் பெயர் உசகன். சந்திரகுலத்தைச் சேர்ந்த அரசநாகமாகிய உக்ரோதனின் மகன் அவன். தன் உடன்பிறந்தார் அனைவரும் செம்பொன் நிறத்தில் ஒளிவிட்ட தாழை மடல்களில் புகுந்துகொண்டதைக் கண்ட உசகன் மேலும் ஒளிகொண்ட ஒரு தாழை மடலை நோக்கி சென்று அதன் இதழ்களுக்குள் புகுந்தான். அது அங்கே எரிந்த காட்டுநெருப்பு.”
“தன்னில் புகுந்த உசகனை அக்னிதேவன் உண்டான். அக்னிதேவனின் வயிற்றுக்குள் சென்ற உசகன் அனலோனே, உன்னை என் அன்னை என்று எண்ணி இங்கே வந்தேன். என்னை உணவாக்கியது அறமல்ல என்றான். அக்னிதேவன் என்னை அடைந்த எதையும் உண்ணுவதே என் அறமாகும். ஆனால் நீ அன்னையைத் தேடிவந்த குழந்தை என்பதனால் உனக்கு ஒரு சொற்கொடை அளிக்கிறேன். நீ மானுடனாக மேலும் மும்முறை பிறப்பாய். மும்முறையும் இப்பிழையை நீ ஆற்றுவாய். மூன்று மெய்மைகளை அடைந்து விடுபடுவாய் என்றான்.”
அர்ஜுனன் உரத்த குரலில் “ஆம்!” என்றான். இளைய யாதவர் அவனிடம் “நீ விழைந்தால் அச்சரடின் அடுத்த மணிகளை காட்டுகிறேன்” என்றார். “வேண்டாம்” என்றபடி அவன் தன் கைகளால் முகத்தை பொத்திக்கொண்டான். “போதும்… பொருளின்மை எங்கிருந்து எழுகிறது என்று புரிந்துகொண்டேன்.” தலையை அசைத்தபடி “போதும்” என்றான். இளைய யாதவர் புன்னகையுடன் யுதிஷ்டிரரை நோக்கி “நீங்கள் உங்கள் வினாவை எழுப்பலாம், அரசே. அவன் வருவான் என்றால் அழைத்துச்செல்லலாம்” என்றார். யுதிஷ்டிரர் “நான் செல்லவில்லை. அவன் உணர்ந்த அப்பொருளின்மையையே நானும் உணர்ந்தேன். அதை இன்னொரு பொருளின்மையால் நிகர் செய்யலாமென விழைந்தேன்” என்றார்.
அர்ஜுனன் நிமிர்ந்து “அவனை கொன்றவன் எவன்?” என்றான். அவன் முகமும் குரலும் மாறிவிட்டிருந்தன. “அவர்கள் அனைவருமே பழிகொண்டவர்கள்தான்” என்றான் பீமன். “அவன் யார் கையால் இறுதியாக உயிர்துறந்தான்?” என்று அர்ஜுனன் உரக்கக் கூவினான்.
“இளையோனே, அவ்வண்ணம் ஒரு தனி வஞ்சம் தேவையில்லை. இது போர்” என்றார் யுதிஷ்டிரர். “அவன் அதனூடாக இங்கு மீண்டுவருகிறான் போலும்” என்றான் பீமன். “இளையோனே, கர்ணனும் துரோணரும் சேர்ந்து அவனை வீழ்த்தினர். அவன் தலையை உடைத்தவன் துச்சாதனனின் மைந்தனாகிய துருமசேனன். அவனை நாளையே நான் கொன்று களத்தில் இடுவேன்.”
அர்ஜுனன் வலிகொண்டவன்போல தலையை அசைத்துக்கொண்டே இருந்தான். “அரை நாழிகை… அரை நாழிகைப் பொழுது” என்று தன்னுணர்வற்றவனாக புலம்பினான். “அரை நாழிகைப் பொழுதை ஈட்டியிருந்தால் என் மைந்தனை மீட்டிருப்பேன், யாதவரே.”
பீமன் “அதை இனிமேல் சொல்லி பயனில்லை…” என்றான். “அவனிடம் இறுதியாக நான் கைகூப்பி இரந்தேன்… வீரத்தையும் தன்மானத்தையும் கைவிட்டு மன்றாடினேன்…” அவன் நிமிர்ந்தபோது மீண்டும் விழிகள் நிறைந்திருந்தன. “யாதவரே, ஒருவன் ஒரு களத்தில் எத்தனை முறைதான் சாவது?” இளைய யாதவர் “அவன் அங்கே போர்வீரனாக மட்டுமே இருந்தான்” என்றார். “ஆனால் நாங்கள் அப்படி இருக்கவில்லை. கோதவனத்தில் அவனை மூத்தவர் சிதைத்துச் சிறுமைசெய்தபோது நான் வீரனென்று நின்று பேசினேன். மூத்தவர் அரசன் என்றும் அவனுடைய குடிமூத்தவர் என்றும் நின்றிருந்தார். அன்று எங்கள் அளிக்கொடையாக தன் உயிரை மீட்டுச்சென்றவன் அவன்” என்றான் அர்ஜுனன்.
சொல்லச் சொல்ல சீற்றம் வளர அர்ஜுனன் எழுந்து நின்றான். “பின்னரும் எனக்கு செய்தியனுப்பினான். என் நட்பை தெய்வக்கொடை என கருதுவேன் என்று. என்றும் என்னிடம் நன்றியுடன் இருப்பேன் என்று. கீழ்மகன்…” அவன் அதுவரை கொண்டிருந்த அத்தனை சோர்விலும் துயரிலுமிருந்து கிழித்தெழுந்து பெருகி நின்று “அக்கீழ்மகனை நாளை கொல்வேன். அந்திக்குள் அவனை கொல்லாவிடில் களத்திலேயே என் சங்கறுத்து செத்துவிழுவேன். இது என் வஞ்சம். அறிக முன்னோர், அறிக தெய்வங்கள். இது என் வஞ்சினம். நாளை அந்திக்குள் அவனை கொன்று வீழ்த்துவேன். ஆணை! ஆணை !ஆணை!” என்றான்.
யுதிஷ்டிரர் திகைப்புடன் அவனை தடுக்கும்பொருட்டு கைநீட்டி “இளையோனே” என்றார். பீமன் அவரை தடுத்தான். அர்ஜுனன் “இனி ஒரு சொல்லும் எச்சமில்லை, யாதவரே” என்றான். இளைய யாதவர் “இனி உன்னால் துயிலமுடியும், பாண்டவனே. நாளை களத்தில் நிற்போம்” என்றபடி எழுந்தார். சகதேவனிடம் “அவனுக்கு அகிபீனா அளியுங்கள். துயிலட்டும்” என்றார். சகதேவன் தலையசைத்தான். இளைய யாதவர் வெளியே செல்ல பீமனும் நகுலனும் உடன்சென்றனர். அர்ஜுனனை மீண்டுமொருமுறை நோக்கியபின் யுதிஷ்டிரரும் வெளியே சென்றார்.