பிரபஞ்சன் – மதிப்பீடுகள்

pra

பிரபஞ்சனும் ஷாஜியும்

ஜெ, பிரபஞ்சன் சிறுகதைகள் பற்றி நானும் உங்கள் மனப்பதிவையே கொண்டிருந்தேன். ஆனால் ஒரு அஞ்சலி கட்டுரையில் அது அவசியம் இல்லை எனும் ரகத்தில் சில மறுப்புகள் வந்தன. உங்கள் வாசிப்புக்கு.
நன்றி.
ம.நவீன்
***

பிரபஞ்சன்: சாதாரணங்களின் அசாதாரண கலைஞன்

அன்பிற்குரிய நவீன்

நல்ல கட்டுரை

ஆனால் அசாதாரணக் கலைஞன் என்பது ஒரு பெரிய வார்த்தை அல்லவா?

ஜெ

அன்புள்ள ஜெ

பிரபஞ்சன் பற்றிய குறிப்பும் ஷாஜியின் கட்டுரையும் ஆத்மார்த்தமாக அமைந்திருந்தன. நான் பிரபஞ்சன் மறைந்தபோதே இதை நினைத்தேன். நல்லவர், வல்லவர் ,அரிய கருத்துக்களைச் சொன்னவர் ,பெரியாரின் பேரன் என்றவகையிலேயே கருத்துக்கள் இருக்கின்றனவே எவருமே அவரை படைப்பாளியாகப் பேசவில்லையே என்று. அதற்குக்காரணம் அவர் பெரிய அளவில் தீவிரமான படைப்புக்கள் எதையும் எழுதவில்லை என்பதுதான். அவர் ஒரு குமுதம்விகடன் பாணி எழுத்தாளராகவே செயல்பட்டார். சிற்றிதழ்களின் இலக்கிய அலைகளுடன் அவருக்குத் தொடர்பு இருக்கவே இல்லை. அவருடைய எழுத்துக்களில் ‘அனைவருக்கும் புரிந்தாகவேண்டும்’ என்ற கட்டாயம் இருந்தது. அதுவே இப்படி பிரசங்கமாக ஆகிவிட்டது. அவரை மிகச்சரியாக மதிப்பிட்டு ஆனால் அன்புடன் எழுதப்பட்ட அஞ்சலிகள்

சந்திரசேகர்

அன்புள்ள சந்திரசேகர்

பிரபஞ்சனை விரிவாகவே ஆராயலாம். அவருக்கிருந்த பல தடைகளை கருத்தில்கொள்ளவேண்டியிருக்கும். ஒன்று, அவர் முறையாக தமிழ்படித்து வந்தவர். மு.வரதராசனார், நா.பார்த்தசாரதியை ஆதர்சமாகக் கொண்டு தொடங்கியவர். அந்த பாதிப்புகளிலிருந்து மீள மிகப்பெரிய ஒரு தன்மாற்றம் தேவை. ஆடைகளை மட்டும் அல்ல, தோலையும் உடலையும் உரித்துபோட்டுவிட்டு மீளவேண்டும்.

அந்த பாதிப்பு கதாபாத்திரங்களை கருத்துமாதிரிகளாகவும்ம்  உரையாடல்களை கட்டுரையின் பகுதிகளாகவும் ஆக்கும் வழக்கத்தை அவருக்கு அளித்தது. இறுதிவரை அவரிடம் அந்த அம்சம் இருந்தது. அதேசமயம் அவரிடமிருந்த தனிமனித ஒழுக்கம், நேர்த்தியான தோற்றம், பண்பான அணுகுமுறை போன்ற பல நற்பண்புகளும் அந்த முன்னோடிகளிடமிருந்து கிடைத்தவையே. பிரபஞ்சனில் நா.பாவின் செல்வாக்கு மிக அதிகம். அவர் தன்னை நா.பாவின் ஒரு கதைநாயகனாகவே பாவித்துக்கொண்டார். குறிஞ்சித்தேன் நாவலில் வரும் அரவிந்தனாக.

இரண்டாவது செல்வாக்கு அவர் எழுதவந்தபின் உருவானது. அவர் ஜெயகாந்தனால் கவரப்பட்டார். ஜெயகாந்தனாக ஆக முனைந்தார். எழுத்திலும் தோற்றத்திலும். அதன்பொருட்டு இடதுசாரி கருத்துக்களுக்குள் சென்றார். அக்கருத்துக்கள் அவரை இரும்புச்சட்டை போல இறுதிவரை கட்டிவைத்திருந்தன. படைப்பாளியாக செயல்படவிடாது கவ்வியிருந்தன [ஜெயகந்தனால் தனிப்பட்ட முறையில் புண்படுத்தப்பட்டதாக சொல்லியிருக்கிறார். அதன்பின் ஜெயகாந்தன் மீதான ஈடுபாட்டை இழந்தார்]

அவருள் இருந்த ஆழ்ந்த இன்னொரு செல்வாக்கு தி.ஜானகிராமன். தஞ்சையில் படித்தகாலத்தில் அவர் சங்கீதம், சீவல், காபி என ஒரு ஜானகிராம அழகியலை அடைந்தார். ஆனால் அதற்குள் ஆழ்ந்துசெல்ல அவரால் இயலவில்லை. அதற்கு அன்று வெகுஜன மதிப்பு இருக்கவில்லை. அது நிலப்பிரபுத்துவப் பண்பாடாகவே கருதப்பட்டது. ஆகவே அதை அவர் மறைத்துக்கொண்டார். சில கதைகளில் மட்டுமே அது வெளிப்பட்டது.

தன் எல்லைகளைக் கடந்து தன் கனவுகளை அடையும் எழுத்தை உருவாக்க அவருக்கு சாத்தியப்படவில்லை. அதற்குக் காரணம் அவர் எழுத்தையே வாழ்வாக தெரிவுசெய்துகொண்டது.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-31
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சி – ஒரு குமுறல்