புத்தகக் கண்காட்சி – ஒரு குமுறல்

crowd in kizhakku stall

ஜெ

சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். நான் சொல்ல விரும்புவனவற்றை அப்படியே இரா முருகன் எழுதியிருந்தார்.

சென்னை புத்தகக் கண்காட்சி 2019 நிறைவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் புத்தகப் பதிப்பாளர்களுக்கு ஓர் எழுத்தாளன் என்ற முறையிலும், வாசகனாகவும் விடுக்கும் சில அன்பான வேண்டுகோள்கள்.

1) புத்தகக் கண்காட்சி பாடப் புத்தகம், நோட்ஸ் விற்கும் கடைகளின் சங்கமம் இல்லை. செலபோன் பேப்பரில் பொதிந்து புத்தகங்களை காட்சிக்கு வைப்பதைத் தயைகூர்ந்து தவிருங்கள். உங்கள் அரங்குக்கு (ஸ்டால்) வரும் வாசகர் புத்தகத்தைப் புரட்டி அங்கே இங்கே கொஞ்சம் படித்து (browse), வாங்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தால் விலைக்கு வாங்குவார். டாய்லெட் சோப்பு மாதிரி அவற்றைக் கட்டி வைத்துக் கொடுப்பது சரியில்லை.

2) புத்தக அலமாரிகளில் பார்வை மட்டத்தில் (eye level) இருக்கும் தட்டுகளில் வைத்த புத்தகங்கள் வாசகரின் கண்ணில் படுமளவு கீழே காலடிக்கு நேரே, முழங்காலை ஒட்டி இருக்கும் அடுக்குகளில் வைத்த நூல்கள் பார்வைக்கு வருவதில்லை. மேல் அடுக்குகளில் ஒரே – ஒரு சில எழுத்தாளர்களின் புத்தகங்களின் பல பிரதிகளை அடுக்கி வைக்காமல், அதிக நூல்களை அங்கே ஒவ்வொரு பிரதி மட்டும் இருப்பதாக வைக்கலாம். கூடுதல் பிரதிகள் கீழடுக்குகளில் இருந்து, விற்க விற்க மேலே வரட்டும்.

3) சாக்லெட் வாங்குவது போல், புத்தகம் வாங்குவதும் சில நேரம் திடீரென்று மனசு சொல்ல வாங்கும் செயல் (impulsive purchase). கேஷ் கவுண்டர் ஒட்டி உள்ள பரந்த மேஜைகளில் வைத்திருக்கும் புத்தகங்கள் இப்படியான விற்பனைக்குச் சிறந்தவை. அங்கே ஒரே புத்தகத்தின் பல பிரதிகளை வைக்காமல், (முடிந்தவரைக்கும்) பல புத்தகங்களின் ஒன்று அல்லது இரண்டு பிரதிகளை வைக்கலாம்.

4) புத்தகக் கண்காட்சி வீட்டு விசேஷம் மாதிரி பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும், வாசகர்களும் நண்பர்களைச் சந்திக்கவும், உரையாடவும், சேர்ந்து டீ குடிக்கவும், செல்ஃபி எடுத்துக் கொள்ளவும், அதற்கு அப்புறம் நேரம் இருந்தால் புத்தகம் வாங்கவுமான இனிய சூழலுள்ள இடம். கூடியிருந்து குளிர நாற்காலிகளை கேஷ் கவுண்டரைச் சுற்றிப் போட்டுக் கொள்ள வேண்டாம்.

இரா முருகன் சொன்னதில் இரண்டு விஷயங்கள் எனக்கு அழுத்தமாகச் சொல்லத் தோன்றியவை. அத்தனை புத்தகங்களையும் பிளாஸ்டிக் உறைபோட்டு வைத்திருக்கிறார்கள். புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து முன்னுரையையாவது வாசித்துப்பார்ப்பதென்பது வாசிப்பில் ஒரு பெரிய அனுபவம். எடுத்துப்பார்த்து வாங்க புத்தகம் ஒன்றும் பொருள் கிடையாது. இது பதிப்பகங்களுக்குத் தெரிவதில்லை. நீங்கள் எழுதியதுபோல இன்றைக்கு புத்தகச்சந்தைக்குச் சென்று அறிவனுபவம் எதையும் அடைய முடியாது.வெறும் பிளாஸ்டிக் அட்டைகளை பார்த்து வரவேண்டியதுதான்

புத்தகங்கள் அழுக்காகிவிடும் என்று பதிப்பகத்தார் சொல்லலாம். அப்படியென்றால் ஒவ்வொன்றிலும் ஒரு பிரதியை அவர்கள் புரட்டிப்பார்ப்பதற்கென்று வைக்கலாம். அது பில்போட்டு போனால் அடுத்த பிரதியை எடுத்துவைக்கலாம்

ராம்

முந்தைய கட்டுரைபிரபஞ்சன் – மதிப்பீடுகள்
அடுத்த கட்டுரைபார்வதிபுரம் பாலம்