பத்மவியூகம் – கடிதங்கள்

பத்மவியூகம் – சிறுகதை

அன்பு ஜெயமோகன்

சமீபத்தில் தங்களின் “பத்ம வியூகம் “ குறுநாவல் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. நீண்ட நாட்களுக்கு முன்பு வாங்கிய “ஜெயமோகன் குறுநாவல்கள் “ புத்தகம் பாதி படிக்கப்பட்டு மீதத்தை என்றாவது படிப்பதற்காக காரில் வைக்கப்பட்டிருந்தது. ஒரு குளிர்கால நள்ளிரவு மருத்துவ மனையின் பார்க்கிங் லாட்டில் காருக்குள் இருந்து வாசித்த அனுபவம்.குழந்தைக்கு திடீரென வந்த காய்ச்சலைப் பார்த்த தாய் பயந்து அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு விரைந்த நள்ளிரவு அது. மனைவியும் குழந்தையும் திரும்பும் வரையில், வெளியே மூத்தக் குழந்தை காரில் உறங்க அவனின் அருகமர்ந்து காரின் இளஞ்சூட்டில் ஒரே மூச்சாக வாசித்த குறுநாவல். “நன்றாக இருந்தது” என்ற ஒரே வாக்கியத்தில் அனுபவத்தை பின்னூட்ட அனுமதிக்காத உணர்ச்சி. கதைநாயகி போல் எனக்கும் ஏற்பட்ட உணர்ச்சிமிகுதியே அறிவை விடாமல் பின்தொடர்ந்து வற்புறுத்தி எழுதத் துண்டிய படைப்பாளியை நோக்கிய முதல் கடிதம்.

மகனைப் போரில் இழந்த தாயின் பரிதவிப்பு. இந்தக் காவியத்தாயின் கதையை பள்ளி வயது முதல் இன்று வரை பலர் சொல்லிக்கேட்டிருக்கிறேன். எழுதப்பட்ட இந்த எண்ண ஓட்டங்களை வாசிக்கும் போது ஏற்பட்ட வியப்பு பலமுறை கடந்து சென்ற சாலையில் இதுவரை நான் காணாத காட்சியை என் குழந்தை கண்டு எடுத்துரைக்கும் போது உணர்ந்த உணர்வு. பாண்டவர்களைத் தூயவர்களாகக் காண்பித்து, கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமேயான சண்டையை பிரதானமாக பேசிய மகாபாரதமே இதுவரை நானறிந்தது. பாண்டவரணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதைப் பேசித் தீர்த்து இணக்கமாக இருந்ததாகவே சொல்லப்பட்டது. அந்த அணிக்குள் ஏற்படும் மனக்குமுறல்களை அரற்றிய எழுத்தை வாசித்த முதல் அனுபவம் அது. எழுத்தாளர் பயணித்த எண்ண ஆழங்களில் அவர் எழுத்துகளில் தொங்கி ஊஞ்சலாடி அவர் சென்ற ஆழத்தை அடைய முயன்ற இரவு.

இறந்த மகனைப் பார்த்து மார்பிலும் வயிற்றிலும் அறைந்தபடி, தலைவிரிகோலமாக ஓட அனுமதிக்காத உயர்ந்த இடம் . சிதையிலும் நகை அணிய வற்புறுத்தும் குல வழக்கம், வம்ச வரலாற்றை தண்டேந்தி சொல்லும்போது ஏற்படும் அருவருப்பு, தன் மகனின் சாவுக்கு ஆதிக்காரணமாக இருந்தவளின் மகன் சாவைக் கேட்டவுடன் ஏற்பட்ட திருப்தி. இவையெல்லாம் நான் வியந்த இடங்கள்.

காவியப்புனைவு என்று ஒற்றைச் சொல்லில் சொல்லி இதைக்கடந்து செல்ல முயலவில்லை. மெருகேற்றப்பட்ட உறவுகளின் புனிதங்களை உடைத்தெறிய முயன்ற முயற்சி. சக்களத்தியை நோக்கிய கூரான கேள்விகள், மாவீரனாக எண்ணியிருந்த கணவனை நோக்கிய சீண்டல்கள், அண்ணனின் மீதான கோபம் என புத்திரனை இழந்த தாய் பரிதவிப்பில் சென்ற தூரங்கள்.

“புதல்வனையோ கணவனையோ இழக்காத பெண் யாராவது கிடைத்திருக்கக்கூடும்” “அவள் தன் புதல்வர்களை இழந்த செய்தியைக்கேட்டபோதுகூட முதன் முதலில் மனதில் எழுந்தது திருப்திதான். அழட்டும். அடிவயிறு பற்றியெரியட்டும்”. “சொந்த ரத்தத்தில் பிறந்தவர்களைக் கொல்லும்படி தான் சொன்ன உபதேசத்தைத் தனக்கும் பொருத்திக்கொண்ட மகான்” இவையெல்லாம் நான் பிரமித்த எண்ண ஆழங்கள்.

சாவித்திரி சத்தியவானை மீட்டெடுத்த கதையிலிருந்து கண்ட பொய்மைத்தனத்தை உமி நீக்கி நிதர்சனத்தை நிர்வாணமாக்கிய தருணத்தையும் ரசித்தேன். உணர்ச்சி மிகு இதயம் சாதிக்க முடியாத கையறு நிலை.

பிருகத்பாலன் என்பது எனக்கு ஏற்பட்ட புதுத்திறப்பு. மேலும் நுட்பமான கற்பனையுடனும் இக்கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. நியதியின் பேரியக்கம் மனிதர்களையும் அண்ட வெளியையும் இயற்கையிலுள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைத்திருக்கிறது . அதில் ஒரு சிறு துளியைக்கூட மனித மனம் அறிய முடியாது. அதை மாற்றிவிடலாம் என்று நம் அகங்காரம் சில சமயம் கூறும். அதன்படி நாம் இயங்குவோம். பிறகு தெரியும் நமது அந்த இயக்கம்கூட நியதியின் விளையாட்டுதான் என்று.

இலக்கிய வாசிப்பு நடைமுறையில் இல்லாத எனது சுற்றுவட்டாரத்தில் நான் உணர்ந்த இந்தப் பரவச உணர்வை சிலாகித்துப் பேச ஆட்களைத் தேடி அலையவேண்டியிருப்பதே ஏக்கம் நிறைந்த உண்மை. எழுத்திலிருந்து வெறுப்பாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ தொலை தூரத்தில் வாழும் என் மனைவியுடன் என்றாவது ஒரு நாள் இந்தக்கதையைப் படிப்பது எனது ஆசைகளில் ஒன்று.

நன்றியுடன்

சிவசக்திவேல் நயினார்

 

அன்புள்ள ஜெ

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா ஒருநாள் கண்கள் கலங்கியபடி காலச்சுவடு இதழில் வெளிவந்த பத்மவியூகம் என்னும் உங்கள் கதையைப்பற்றிச் சொன்னார். அந்தக்கதையை அவர் சொன்னபோது என் அப்பாவின் அம்மாவும் இருந்தார். அனைவருமே அழுதார்கள். நாங்கள் போரில் அனைத்தையும் இழந்து இருந்த காலம் அது. அன்றைக்கு எங்களிடம் இருந்தது கடுமையான நினைவுகள் மட்டும்தான். எனக்கு அப்போது பத்து வயது. நான் அந்தக்கதையை முழுசாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால் பிறகு அந்தக்கதையை பலமுறை நினைத்துக்கொண்டிருக்கிறேன்

சமீபத்தில் அந்தக்கதையை உங்கள் தொகுப்பிலே வாசித்தேன். மனிதர்கள் எவரானாலும் பத்மவியூகத்திற்குள் நுழையத்தான் முடியும், எவருக்குமே வெளியேறும் வழி தெரியாது என்ற அந்தக்கதையின் மையம் எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. சுபத்ரை, அர்ஜுனன், யுதிஷ்டிரன், குந்தி என்று அத்தனைபேருமே அவரவருக்கான பத்மவியூகங்களில் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் இருப்பவர்கள்தான். அனைவருமே விரும்பி உள்ளே நுழைந்தவர்கள்தான். அந்தப்போரேகூட பெரிய ஒரு பத்மவியூகம்தான்

அந்தக்கதை கடைசியில் முடியும் இடம் ஒரு உச்சம். அதை நினைத்துக்கொண்டே இருந்தேன். அத்தனை மானுட உறவுகளும் பத்மவியூகங்கள்தான் என்று இன்றைக்கு நினைக்கிறேன். இப்போது நிறைய விஷயங்கள் வாழ்க்கை வழியாகக் கடந்துசென்றுவிட்டன. சொல்வதற்கு நிறையவே இருக்கிறது. எல்லா வியூகங்களிலும் எவ்வளவு நம்பிக்கையுடன் அல்லது வீராப்புடன் நுழைகிறோம் என்று நினைத்துக்கொண்டேன். நிறைய விஷயங்களை தனிப்பட்ட முறையில் எழுதவேண்டும். இன்றைக்கு மனம் இல்லை. இன்னொருநாள் எழுதுகிறேன்

காசிநாதன்

பத்மவியூகம்: கடிதம்

முந்தைய கட்டுரைஅவ்வாறே வந்தவர்
அடுத்த கட்டுரைடெசுக்காவின் புத்தர்