சிலவாரங்கள் முன்பு ,அதாவது திசைதேர் வெள்ளம் முடிந்த மறுநாள் , ஒரு சிறுபயணம் என திருச்சி சென்றிருந்தேன் . சாரல் மழையில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் வாசல் ,எதிரே சின்னக்கடை வீதி இறுதி வரை நடந்தேன் .தைலா சில்க் கடந்தால் ,தேவதி புக் ஸ்டால் . லெண்டிங் லைப்ரரி . புதிய நூல்கள் பத்து சதமான தள்ளுபடி விலையிலும் ,வாடகைக்கு சுற்றிவரும் நூல் ,விலைக்கு எனில் நாற்பது சதமான தள்ளுபடி விலையிலும் கிடைக்கும் . அங்குதான் விஷ்ணுபுரம் நாவலை பதினேழு வருடம் முன்பு ஒரு பொங்கல் விடுமுறை நாளொன்றில் கண்டெடுத்தேன் .
முதல் பார்வையிலேயே அதை கையில் எடுத்த காரணம் இரண்டு ,ஒன்று அது என் போல இல்லாமல் தடியாக இருந்தது .இரண்டு அதில் கிழிந்து போய் ,செல்லோ டேப் போட்டு ஒட்டுப்போட்டு, அட்டையுடன் ஒட்டப்பட்டிருந்த , அட்டைப்படம் .ஏகப்பட்ட கைகள் கொண்ட ,நான் இதுவரை பார்த்தறியா எதோ ஒரு சிலை . பின்னர் சில வருடங்கள் கழிந்து ,சுந்தர ராமசாமி அவர்கள் மறைந்து சில மாதத்துக்குப் பிறகு , மனுஷ்யபுத்திரன் அளித்த உங்கள் தொலைபேசி எண் வழியே உங்களை தொடர்பு கொண்டபோது ,முதலில் விஷ்ணுபுரம் குறித்து கேட்ட கேள்விகளில் ஒன்று ,அந்த அட்டைப்படம் சார்ந்ததுதான் . அது திபத்திய பௌத்தத்தில் முக்கிய படிமையாகிய ஆயிரம்கை புத்தர் என்பதையே அன்றுதான் முதன் முதலாக அறிந்தேன் .
இன்றும் என் நண்பன் அஜி.அப்புனைவின் பிரதான கதாபாத்திரம் ஒன்றின் தூல வடிவம் என்றே ,அஜி எனக்கு தத்துவ வகுப்பு எடுக்கும்போதெல்லாம் தோன்றும் .அஜிதான் பயணத்தில் காணும் சிற்பங்களை சரியாக உச்சரிப்பது எப்படி என்பதை சொல்லித்தருவான் . ஓடிஸா பயணம் முழுக்க நாங்கள் ஆங்காங்கே கண்ட ,புத்தர் அவலோகிதேஸ்வரர் என அவன் பலமுறை சொல்லித்தந்தும் ,எனக்கு அவலோகிதர் என்று மட்டுமே நாக்கில் புரண்டது .
வந்து அவலோகிதர் சார்ந்து தேடி வாசிக்க , சுவாரஸ்யமான பல பல விஷயங்கள் கிடைத்துக்கொண்டே இருந்தது . இந்திய பௌத்த மரபில் , வஜ்ரபாணி போதிசத்வர் உறுதியான செயலுக்கும் [அனேகமாக தவம்] பத்மபாணி போதிசத்வர் ,ஞானத்துக்கும் அடையாளமாக கருதப்பட்டு , அதில் இந்த பத்மபாணி போதிசத்வர் ,பத்மபாணி அவலோகிதேஸ்வரர் எனும் பெயரில் ,ஏழு எட்டு ,ஒன்பது நூற்றாண்டுகளில் பாரதம் தழுவிய ஒரு பெரும்பான்மை வழிபாடாக இருந்திருக்கிறது . இந்த அவலோகிதர் ஆயிரம் கைகளை கொண்டவராக , இவருடன் துணையாக பிரக்ஞதாரா தேவியும் சேர்ந்து திபெத்திய பௌத்தம் வளர்த்து எடுக்க , இந்த அவலோகிதர் பட்டுப்பாதை வழியே சீனா சென்று ,அங்கு குவான் இன் எனும் பெயரில் பெரிய வழிபாட்டு தெய்வமாக மாறுகிறார் . தாவோ மதத்திலும் இவரது அழுத்தமான செல்வாக்கு விழுகிறது .
இவற்றைக் கடந்து சில தினங்கள் முன்பு ,நா .கணேசன் . எழுதிய கட்டுரை ஒன்று விக்கி பீடியா வழியே கிடைத்தது .அது வடக்கில் துவங்கி தெற்கில் நிலைகொண்ட அவலோகிதர் வழிபாட்டில் , அந்த அவலோகிதர் படிமையே இன்று சிவன் கோவில்களில் நாம் காணும் தட்சிணா மூர்த்தி படிமை என சொல்கிறது .சிற்ப சாஸ்திரம் ,இலக்கிய அடிப்படைகள் , பதுமக்கொத்தன் ,உலகநாதன் போன்ற பெயர்கள் , என பல அடிப்படைகள் கொண்டு இது நிறுவப்படுகிறது . பொதிகை மலையை அடிப்படையாக கொண்டு எழும் அவலோகிதர் ,அவரே தமிழ் முதல்வர் எனும் குறிப்புகளையும் இலக்கியத்தில் இருந்து சுட்டிக்காட்டுகிறது அந்த கட்டுரை .
இந்த அவலோகிதர் சார்ந்த சுட்டியில் ,ஆதார நூல்கள் பகுப்பில் முதல் ஆதாரமாக இந்த கட்டுரை இருக்கிறது .தரவிறக்கிப் படிக்க அதில் pdf கோப்பாகவும் அந்த கட்டுரை கிடைக்கிறது . அயோத்திதாசர் சொல்லும் கான்செப்ட் ஒன்றுண்டு .பௌத்தம் தமிழ் நாட்டில் ஒழிந்துபோக வில்லை .இங்கே வேறு பல கலாச்சார கண்ணிகளுடன் இணைந்து ,உள்மெய் என இயங்கிக்கொண்டு இருக்கிறது .இந்த உள்மெய் அதையும் கணக்கில் கொண்டே ,தமிழ் சமூக பண்பாட்டு வரலாறு பார்க்கப்படவேண்டும் என்கிறார் .அதற்க்கு சரியான உதாரணமாக அமைந்தது , நா கணேசன் அவர்களின் தமிழகத்தில்தட்சிணாமூர்த்தியும்பத்மபாணிஅவலோகிதரும் எனும் இந்த கட்டுரை .