அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
நெஞ்சத்து வணக்கங்கள்!
வாழ்வின் போக்கில் நாங்கள் ஒவ்வொரு இக்கட்டுச்சூழலிலும் ஒரு மானசீக ஆசானைக் கண்டடைகிறோம். இந்திய மரபளித்த ஒரு பெரும் மனிதனாக காந்தி இருந்தபோதும், பொதுத்தளங்களில் அவரை முன்னெடுத்துச் செல்லும் கருத்துகளை குறைவாகவே அறிந்திருந்தோம். அந்த தயக்கச்சூழலில்தான் காந்திகுறித்தும் அவர்தம் வரலாற்றுப்பிரக்ஞை, உள்ளுணர்வு, ஆன்மீக அகநோக்கு பற்றியெல்லாம் உங்களுடைய கட்டுரைகளின் வழி ஒரு தெளிவுறுதலை அடைந்தோம். நவீனமனம் இயங்கும் இச்சமகாலத்தின் காந்தியத்தின் உருமாற்றமும் தோற்றமும் எவ்வகையிலெல்லாம் வார்க்கப்படவேண்டுமென்ற நுண்மையை நீங்கள் சுட்டிக்காட்டிய நவீன காந்தியவாதிகளின் எழுத்துகளிலிருந்து இரவல் பெற்றோம்.
‘தன்னறம்-நூல்வெளி’ அப்படியான ஒரு கட்டுரையின் தாக்கத்தில் உருவான பெயர்தான். எதுவெல்லாம் எங்கள் அகத்தை அச்சத்திலிருந்து மீட்கிறதோ அதையெல்லாம் எழுத்துப்படுத்தி பதிப்பிக்கும் ஒரு எளியமுயற்சி. இந்த அச்சுப்பதிப்பு வெளிக்காக நீங்கள் வழங்கிய ‘உரையாடும் காந்தி’ மற்றும் ‘தன்மீட்சி’ புத்தகங்கள் இரண்டுமே இக்காலகட்டத்தின் இருத்தலை தைரியப்படுத்திய சாட்சியாகவே மனம்கொள்கிறோம்.
உரையாடும் காந்தி நூலை முதுஎழுத்தாளர் திரு அ.மார்க்ஸ் அவர்களுக்கு காணிக்கையளித்தது எழுத்துலகில் ஒரு சிற்றலையெழும்பலை உருவாக்கியது. அதன்நீட்சியாக வாசுதேவன் அண்ணன் அவர்கள் அ.மார்க்ஸ் அவர்களை சென்னைப் புத்தகக் கண்காட்சியின் தன்னறம்-தும்பி அரங்குக்கு அழைத்துவந்திருந்தார். நண்பர்கள் சிலருக்காக கொடுக்கவிருந்த அப்புத்தகத்தில் அ.மார்க்ஸ் அவர்களே தன் கையெழுத்துகளை எழுதிக்கொடுத்தார். பழுத்துக்கனிந்த ஒரு ஆசானை இத்தனை நெருக்கப்படுத்திய உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.
உங்களுடைய விஷ்ணுபுரம் நண்பர்களும், குடும்பத்தோழமைகளும் மற்றும் உங்களது இணைத்துணை அருண்மொழிநங்கை அவர்களும் தும்பி-தன்னறம் அரங்குக்கு வந்திருந்து அன்புச்சொற்கள் பகிர்ந்ததை, மிகுந்த மகிழ்வாகவும் நம்பிக்கையாகவும் நண்பர்கள் சொல்கிறார்கள். உங்களுடைய தொடர்வாசிப்பாளர்கள் புத்தகங்களை வாங்கிவிட்டு கண்வரை புன்னகைத்துச் சொல்கிறார்கள். ஒரு மேலான நகர்வுக்கும் மெனக்கெடலுக்கும் இச்சமகாலப்பாதை இட்டுச்செல்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, உரையாடும் காந்திக்காக குக்கூ ஓவியன் பிராகாஷ் வரைந்த காந்தியின் கோட்டோவியங்களையும், தன்மீட்சிக்காக நீங்கள் மொழிந்த கட்டுரையின் தனிச்சிறப்பு வாசகங்களையும் வைத்து 2019ம் ஆண்டுக்கான நாட்காட்டி ஒன்றினை வடிவமைத்து உள்ளோம். புத்தகக் கண்காட்சி அரங்கிலும் (804), தன்னறம் இணயதளத்திலும் (www.thannaram.in) விருப்பவாசகர்கள் வாங்குகிறார்கள். இவ்வருடத்தின் துவக்கம் காந்தியைத் தொட்டமைவது பாதைவெளிச்சத்தை பரவலாக்குகிறது.
நிறைய நல்லுள்ளங்களையும், குறைசுட்டி திருத்தும் பெருமனங்களையும் கண்டடைகிறோம். செயலின் சக்கரம் மெல்லச்சுழல்வதற்கான உயவாக உங்கள் சொல்லெழுத்துக்களை உள்ளத்தில் சுமக்கிறோம். காந்தியை, யதியை, கசன்ட் சாகீஸை, நீலியை, செவ்வல்லியை, ஓசாமு டெசுக்காவை, அன்புராஜை, இவான் இலியச்சை, சுராவின் எம்.எஸ்ஸை, ஆனந்தியின் அப்பாவை… என முடிவிலாது நீங்கள் அகப்படுத்தும் ஒவ்வொரு கருத்துருவையும் மானுடத்தரிசனங்களாகவே வணங்கித்தொழுகிறோம்.
நன்றியுடன்
தன்னறம் நூல்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி
ஜவ்வாதுமலை அடிவாரம்