இந்துமதத்தைக் காப்பது…

a (2)

ஒருதெய்வ வழிபாடு

அன்பு ஜெ,

சில நாட்களுக்கு முன்பு எனது அரேபிய நண்பர்களுடன் பேசும்போது பேச்சுவாக்கில் ஜப்பான், ஜெர்மன் போன்ற  தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினை மக்கள் தொகைதான். ஒன்று நிறைய இருப்பதினால் மற்றொன்று இல்லாததினால் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.  அப்போது ஒரு அரேபிய நண்பன் உடன் சொன்னான் “இப்போது இஸ்லாமியர்” ஆப்ரிக்கா மற்றும் சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு இடம்பெயர்கிறார்கள். கூடிய விரைவில் அங்கும் மக்கள் தொகை பெருகி இஸ்லாமியர்களால் நிரம்பும் என்றான். இத்தகைய “இஸ்லாமிய உலக” கனவு அன்று மட்டும் அல்ல மேலும் பல சந்தர்ப்பங்களில் வேறு வேறு நண்பர்களால் அவ்வப்போது வெளிப்படையாக பேசப்பட்டு வருவதுதான்.

இப்போது மத்திய கிழக்கில் நடந்துவரும் சில அரசியல் நகர்த்தல்கள் அதை நோக்கி இருப்பதை யாரும் அவதானிக்க முடியும்.

முன்பு உங்களுடைய தளத்தில் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் “உலகளாவிய ஆளும் கனவு” பற்றி கட்டுரை வந்தபோது திரு அபிலாஷ் அதனை மறுத்து கட்டுரை எழுதினார். அன்றே அந்த கட்டுரைக்கு இணையத்தில் இதனை குறித்து கருத்தைப் பதிவிட்டிருந்தேன்.

…..

இந்தியாவில் இன்று இருக்கும் திரு மார்க்ஸ் அவர்களால் நிறுவப்பட்ட இடதுசாரி மதங்களும், தமிழகத்தில் “இந்து மதத்தை அழித்துவிட்டால் சாதி அழிந்துவிடும்” என்று தீவிர பிரசாரத்தோடு பெரியாரை முன்னிறுத்தி அங்கங்கே முளைத்திருக்கும் அரசியல் கட்சிகளும், பேய்களும் பிசாசுகளும் குடியிருக்கும் கோவில்கள் என்று பிரச்சாரம் செய்துவரும் ஆபிரகாமிய மதங்களும் நன்றாக அரசியல் செய்துவருகின்றன.

இந்த நிலையில் இன்று “ஒரு தெய்வ வழிபாடு” படித்ததிலிருந்து மனதில் ஒரு கேள்வி நிலைகொண்டு சுற்றிச்சுற்றி வருகின்றது.

“”இந்து மதம் – இந்துப் பண்பாடு ஆகிய இரண்டிலிருந்தும் இந்துத்துவ அரசியலை முற்றாகப் பிரித்துக்கொள்வதே இத்தருணத்தில் இந்துவென தன்னை உணரும் ஒவ்வொருவரும் செய்தாகவேண்டியது.””””
“””இந்துமதம் அதன் ஞானிகளால் வழிகாட்டப்படட்டும். அதன் மெய்நூல்களால் ஆளப்படட்டும். இன்றுவரை பிரிந்து பிரிந்து வளர்வதன் வழியாக, அனைத்துத் தேடல்களையும் அனுமதிக்கும் உள்விரிவின் வழியாக, தனித்தன்மைகளை தக்கவைத்துக்கொள்ளும் உறுதியின் வழியாகவே இது வளர்ந்துள்ளது”””

ஒரு இந்துவாக, ஆன்மிக நிலையில் இது உண்மையிலேயே சரியான பதில்தான்.   என்றாலும்…..

…….

ஐரோப்பாவில் பாகன் மதம் என்ற ஒன்று இருந்ததும், பெருமை மிக்க மெசபடோமியா பாரசீக, அபிசீனிய, காந்தார, பண்பாடுகள் இருந்து அழிந்ததும் உங்களின் வழியாகவே (“இந்திய ஞானம்”) தெரிந்து கொண்டேன்.

தற்போது இந்தோனேசிய நண்பர்களுடன் பழகும் பொது (தேவி, சத்யவதி, இந்திரா, சக்தி போன்ற பெயர்களில் இன்றும் நண்பர்கள் இருக்கிறார்கள்). என்றோ அவர்களின் உள்ளே அழிந்துகொண்டிருக்கும் பழைய பண்பாடுகளின் கூறுகளை கண்டுகொண்டே இருக்கிறேன்.

தென்கொரியா பிலிபைன்ஸ் போன்ற நாடுகளையும் இதன் பொருட்டு கணக்கில் கொள்ளலாம். ஏன் இந்தியாவிலேயே கடந்த ஐநூறு வருடங்களாக இந்து மதத்திற்கும் இந்து பண்பாட்டிற்கும் உள்ள நெருக்கடியை இன்றும் முழுதாக கடக்க முடியாத நிலையிலேயே இந்து மதம் உள்ளது என்று நினைக்கிறேன்.

மிகையில்லாமல் உண்மையிலேயே சொல்கிறேன் உங்கள் தளம் இல்லை என்றால் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த நானும் இந்து மதத்தை கண்டிப்பாக புரிந்துகொண்டிருக்க மாட்டேன் (“நான் இந்துவா” என் மனதை திறந்த முதல் கட்டுரை).

இந்த நிலையில்

அரசியலில் சக்தியாக இல்லாத நிலையில் இந்துமதத்தை இந்தியாவால் காப்பாற்ற முடியுமா?.

நீண்ட கால நோக்கில் இந்துமதத்தை ஒன்றும் செய்யமுடியாது என்பதை எந்த நம்பிக்கையின் வழியாக நம்பிக்கை கொள்வது.

அவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியாது என்பதை வடகிழக்கு மாநிலங்களும் காஷ்மீரும் கண்முன்பே நிற்பதை காண்கிறோமே.

ஒரு சாதாரண இந்துவாக

  • இந்துமதத்தின் பண்மை தன்மை இவர்களால் வளராது என்று உணர்ந்தாலும் மேலே சொன்ன “அழிவுகளால்” ஆபத்தில்லை என்ற முறையில்,
  • இந்துமதத்தின் பன்மைத்தன்மையை ஆபிரகாமிய, கம்முனிச மதங்களிலிருந்து கண்டெடுப்பதை விட இவர்களின் “ஒற்றை இந்து” மதத்திலிருந்து கண்டெடுப்பதுஎளிது என்ற முறையிலும்.
  • லட்சுமி மணிவண்ணன் “பெரியாரியர்களின் தேவை” என்ற கட்டுரையில்சொன்னதுபோல் “எந்த ஒரு குழுவும் சமூகத்தில் இல்லாத தேவைகளின் மீது நின்று கொண்டிருக்கவே இயலாது” என்ற முறையிலும் இந்த இந்துத்துவத்தின் அரசியலை ஏற்றுக் கொள்ளலாமா.

அன்புடன்,

பழனிவேல் ராஜா.

bakti

அன்புள்ள பழனிவேல்,

மேற்கண்ட வினா எனக்கு மிக அணுக்கமானது. ஏனென்றால் இருபதாண்டுகளுக்கு முன்பு என்றால் நானே இந்நிலையில் நின்று இதை கேட்டிருப்பேன். மேலும் நீண்டகாலம் அந்தக் குழப்பமும் ஐயமும் என்னுடன் இருந்துகொண்டேதான் இருந்தது. இன்றிருக்கும் புரிதல் படிப்படியாக வந்தடைந்தது.

உங்கள் கேள்வியின் முதல்புரிதல் மதம் என்பது அரசியல் வழியாக, அதிகாரம் வழியாக நிலைநிறுத்தப்படுவது என்பது. இந்த நம்பிக்கையை இங்கே அரசியல் வழியாக அதிகாரத்தை விழையும் சக்திகள் உச்சகட்ட பிரச்சாரம் வழியாக ஐம்பதாண்டுகளாக நிலைநிறுத்தியிருக்கிறார்கள். அந்த மாபெரும் அமைப்புடன் விவாதிப்பது பெரும்பணி. ஆனால் நீங்களே உங்களை, சூழ்ந்திருப்பவர்களை கூர்ந்து பார்த்தீர்கள் என்றால் சரியான பதிலை எளிதில் சென்றடைய முடியும்.

நான் ஓர் அனுபவத்தை சொல்கிறேன். அக்டோபர் 2016-இல் நான் கேதார்நாத்துக்கு நண்பர்களுடன் சென்றேன். 13 கிமீ மலையேறி மேலே சென்றோம். அங்கே ஆலயத்தில் பூசை நிகழ்ந்தது. தாந்த்ரீகமுறைப்படி நிகழ்ந்த பூசை ஒரு கண்நிறைக்கும் உளம்நிறைக்கும் அனுபவம். காலாதீதமான ஒன்றை கண்முன் காண்பது. ஆனால் கூடிநின்றவர்களில் எங்கள் சிலரைத்தவிர அனைவருமே கருவறையையும் பூசையையும் செல்பேசியில் படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தீப்பந்தங்களுடன் பூசகர்கள் வெளியே ஓடி ஒரு சடங்கை செய்தனர். செல்பேசிகளுடன் கூட்டம் பின்னால் ஓடியது.

இதேபோன்ற காட்சிகளை தமிழகத்தின் ஆலயங்களில் ஏராளமாகக் காணலாம். பூசைமுறைமை மீறல்கள். ஆலயச்சூறையாடல்கள். அவையனைத்தையும் செய்பவர்கள் இந்துக்கள் எனப்படும் இந்தப் பெருந்திரள்தான். அவர்களுக்கு தங்கள் மதம் பற்றி தத்துவார்த்தமாக பத்துவரி சொல்லத் தெரியாது. தங்கள் மதத்தின் வழக்கங்களில் அறிமுகமே இல்லை. தன்னலவெறிக்கு அப்பால் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை.

இந்துமதம் எவரில் நிலைகொள்கிறது? இவர்களிலா? பிறப்பால் பழக்கத்தால் இந்துவாக இருக்கும் இவர்கள், ஏதாவது சிக்கல் என்றால் சோதிடனிடம் கேட்டுக்கொண்டு கோயிலுக்குச் செல்லும் இவர்களால்தான் இந்துமதம் நிலைகொள்கிறதா? இந்தக் கும்பலை அரசியலால் அதிகாரத்தால் ‘தக்கவைத்து’க் கொண்டால்தான் இந்துமதம் வாழுமா?

இந்து மதம் என்பதை ஒருவகையான ஆதிக்கம், அதிகாரம் என்று மட்டுமே புரிந்துகொள்பவர்கள்தான் இதை சொல்கிறார்கள். மதம் என்னும் வடிவில் தங்களிடமிருக்கும் ஆதிக்கமும் அதிகாரமும் கைவிட்டுப்போகக்கூடும் என்னும் பதற்றமே அவர்களை ஆள்கிறது. ஆதிக்கத்தாலோ அதிகாரத்தாலோ மதத்தை நிலைநிறுத்த முடியாது. அப்படி நிலைநிறுத்தப்படும் மதம் ஆதிக்கமும் அதிகாரமும்தானே ஒழிய மெய்நாடும்வழி அல்ல.

மதம் என்பது மெய்மைக்கான வழிகாட்டல், தொன்மையான பண்பாட்டுக்கூறுகளின் திரட்டு, வாழ்க்கைமுறைகளின் தொகுப்பு என்னும் மூன்று அடுக்குகளால் ஆனது. அம்மூன்றிலும் பெருவாரியான மக்கள் நம்பிக்கை கொண்டு அன்றாடவாழ்க்கையென ஆக்கிக்கொண்டிருக்கையிலேயே அது வாழ்கிறது. அந்த மூன்று தளங்களும் வலுவிழக்கும்போது அந்த மதம் அழியும். அவ்வாறு வலுவிழக்கும் மதத்தை அதிகாரம் காப்பாற்றாது. அத்தகைய அதிகாரத்தால் அந்த மதம் மேலும் கீழ்மைகொண்டு அழியவே வாய்ப்பு.

‘மதத்தை காப்பாற்றுதல்’ என்ற உளநிலையே பிழையானது. அது மதத்திற்கு வெளியே நின்றுகொண்டு அதை வெறுமொரு அடையாளமாகப் பார்க்கும் கோணம். மதம் ‘காப்பாற்றி வைக்கவேண்டிய ஒன்று’ அல்ல. மெய்நாட்டத்தின், அன்றாடத்தின் ஒவ்வொரு நிலையிலும் கடைபிடிக்கப்படவேண்டியது. மதத்திற்காக எவரும் போராடவேண்டியதில்லை. மதத்தில் இருந்து தன் மெய்த்தேடலை தொடங்கினால் போதும். அதற்கான வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் போதும். மதத்தின் நோக்கமே அதுதான்.

இங்கேதான் மதம்சார் அரசியல் மிகப்பெரிய திரிபுநிலையை செய்கிறது. இதை மேலும் மேலும் தெளிவாக இப்போது பார்க்கிறேன். மதம்சார் அரசியல் அனைவரிடமும் சொல்கிறது: மதநம்பிக்கை முக்கியமல்ல, மதத்தின் மெய்யறிதல் முக்கியமல்ல, மதம்சார் ஒழுகுதலும் முக்கியமல்ல, மத அடையாளம் மட்டுமே முக்கியம் என்று. அந்த அடையாளத்தை சூடிக்கொண்டு பெருந்திரளாவது மட்டுமே தேவை, அதனூடாக அதிகாரத்தை அடைவது மட்டுமே இலக்கு என்கிறது.

ஏனென்றால் இந்த மதம்சார் அரசியலின் ஆழத்திலிருப்பதும் நவீன ஐரோப்பா உருவாக்கிய தாராளவாதநோக்குதான். அதன் அடிப்படை என்பது அறிவியல்சார்ந்த ஒரு தர்க்கநோக்கு. புறவயத்தன்மைகொண்ட ஒரு பகுப்பு-தொகுப்பு முறை அது. தாராளவாதநோக்கு மதத்தை ஒரு படி மேலே நின்று குனிந்து பார்க்கிறது. ஒட்டுமொத்த மரபையே அப்படித்தான் பார்க்கிறது. மரபை போற்றுவதுபோல அது பேசுவதெல்லாம் அதன் தர்க்கத்திற்கு உட்பட்டு மரபிலிருந்து எதையாவது எடுத்துக்கொள்ள முடியுமா என்பதற்காகத்தான். அப்படி எடுத்துக்கொள்வனவற்றையே அது கொண்டாடும். அவற்றைக்கொண்டு தன் அரசியலை கட்டமைக்க மட்டுமே அது முயலும்.

இந்து அரசியல் என்ற பேரில் இங்கே நிகழ்வது ஒரு மாபெரும் சமநிலையாக்கம் [Standardization]. அது மதத்தின் பல்லாயிரம் நுண்ணிய உள்விரிவுகளை, உள்விவாதங்களை அழிக்கும். ஒன்றிலிருந்து ஒன்றெனக் கிளைக்கும் அதன் படைப்பூக்கத்தை அழிக்கும். ஓர் இந்து இந்துமதம் அளிக்கும் ஒரு கூறின்மேல் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு மேலும் மேலும் மூழ்கிச்சென்றே தன் மெய்மையை அடையமுடியும். அரசியலுக்காக அந்த ஆழத்தை அவன் இழப்பான். அந்த ஆழம் மிகமிக அந்தரங்கமானது. மைதானத்திற்காக பூசையறையை தியானஅறையை அவன் கைவிடுகிறான்.

சுருக்கமாகச் சொன்னால் தன் அதிகார அரசியலுக்குத் தேவையான கருவிகளுக்காக மட்டுமே இந்துத்துவம் மரபையும், மதத்தையும் அணுகுகிறது. தங்கள் மத அரசியலுக்கு ஒவ்வாத கருத்தை மதத்தின் பிரதிநிதியாக நின்று எந்த அறிஞன் சொன்னாலும் எந்த ஞானி தங்களுடன் உடன்படவில்லை என்றாலும் இவர்களில் தெருச்சண்டியனான ஒருவன்கூட அவர்களை இழிவுபடுத்தத் தயங்குவதில்லை என்பதை காண்கிறோம்.

இந்த அரசியலின் மைய உணர்வென்ன என்று பாருங்கள். அதுவே தெளிவை அளிக்கும். எதிர்மறைத்தன்மை, வசை. வசைபாடப்படுபவர்கள் நிரந்தர எதிரிகளும் அன்றாடம் உருவாகிவரும் ‘துரோகிகளும்’. இதையா இந்துமதம் என்கிறீர்கள்? இத்தனை காழ்ப்புகளையும் கசப்புகளையும் உள்ளே நிறைத்துக்கொண்டு, இத்தனை வசைகளை நாளும் உமிழ்ந்தபடியா ஞானிகளும் யோகிகளும் உருவாக்கியளித்த மதத்தை காக்கப்போகிறார்கள்? உங்களுக்கு நாளும் எவரையாவது கசந்துகொட்டினால்தான் இருப்பு நிறைகிறது என்றால் ஏதேனும் ஓர் அரசியலை எடுத்துக்கொண்டு கம்புசுற்றுங்கள். அதை இந்துமதம் என்று மட்டும் சொல்லவேண்டாம். அதன் உளநெகிழ்வும் அகவிரிவும் முற்றிலும் வேறு.

இந்த மதக்காப்பாளர்களை பாருங்கள். ஓர் அறிஞனை, ஞானியை அடையாளம்காணத் திராணியற்ற தெருக்கும்பல். குச்சிகளுடன் இறங்கி ‘எதிரிகளை’ வேட்டையாடும் குண்டர்கள். தன் மதம்பற்றியேகூட எதையும் அறியாத வெற்றுத்திரள். உங்கள் மதத்தை இவர்கள்தான் காப்பாற்றிக்கொடுக்கவேண்டும் என்றால் நீங்கள் உண்மையில் உங்கள் மதம் என எதைத்தான் நினைத்திருக்கிறீர்கள்? இன்னொரு மதநம்பிக்கையாளனை அன்புடன் பார்க்கமுடியாது உங்களால், அவன் உங்களுக்கு இயற்கை எதிரி என்றால் நீங்கள் என்னவகையான இந்து? அப்படி ஒரு மதமாக இந்துமதத்தை உருவாக்கி இங்கே தக்கவைப்பதில் என்ன நன்மை?

இவர்கள் நுட்பமாக நம் மதத்தை உருமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மதத்தின் சாராம்சமான பகுதிகளை அழித்து வெறும் அரசியலடையாளங்களின் தொகுதியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நம்மை அறியாமலேயே நாம் அதற்கு ஆளாகி நம் மதத்தின் தொன்மையான ஆழங்களை அறியும் திறனை இழந்துவிடுகிறோம். நாம் இழப்பது மிகமிகப் பெரியது. இன்றைய சூழலில் இதைத்தான் இந்து மதத்தின் அறிஞர்கள், ஞானிகள் இந்துக்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.

இந்துமதம் அழிகிறதா? அதை என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் உலகின் பல நாடுகளில் பௌத்தம் மிகப்பெரிய அழிவை சந்தித்துவருகிறது. அதன் மெய்யியல் அமைப்புக்கு அணுக்கமானதும் அதன் நம்பிக்கைமுறையையே தானும் கொண்டதுமான இந்துமதமும் அவ்வாறான ஆபத்தை எதிர்கொள்ளலாம். ஆனால் பௌத்தம் அழிவதற்குக் காரணம் அயல்படையெடுப்புகள் அல்ல. முழுக்கமுழுக்க பௌத்தத்தின் பிரச்சினைகளால்தான் அது மறைந்துகொண்டிருக்கிறது. மக்கள் பௌத்தத்தில் இருந்து ‘திருடப்படவில்லை’ பௌத்தத்தை அறியாமலேயே உதறிச்சென்றார்கள்.

அங்கே பௌத்தம் தேங்கி ஊழல்நிறைந்த அமைப்புகளாக மாறி மக்களிடமிருந்து விலகியது. வெற்றுச்சடங்குகளும் நம்பிக்கைகளுமாக மாறி தன் மெய்யியலையும் தத்துவத்தையும் இழந்தது. நவீனவாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆற்றலை தன் மக்களுக்கு அளிக்காமலாயிற்று. மனிதசமத்துவம் சார்ந்த தரிசனங்களை அது கைவிட்டு மேலாதிக்கத்தையே பேசிக்கொண்டிருந்தது. சொல்லப்போனால் பௌத்தம் என்பது ஒரு வாழ்க்கைமுறையாக அல்லாமல் வெறும் அடையாளமாக மட்டும் மாறியது. அந்த அடையாளத்திலிருந்தே மக்கள் விலகிச்சென்றனர், பௌத்தம் என்னும் முழுமையான மதத்தில் இருந்து அல்ல. அந்த அடையாளத்தை மேலோட்டமாக தக்கவைத்தபடியே நாத்திகர்களும் கிறித்தவர்களுமாக நீடிக்கின்றனர் பலர்.

பௌத்தம் இந்துமதம் போன்ற தொல்மதங்களின் அடிப்படைகள் மீது உலகளாவிய தாராளவாதம் [லிபரலிசம்] தொடுக்கும் சற்றும் அறவுணர்ச்சி அற்ற தாக்குதல் அறிவுலகில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஐரோப்பிய தாராளவாதத்தின் உள்ளுறையாக இருப்பது கிறித்தவச் சீர்திருத்தவாதிகளின் நோக்கும் இன்னொருபக்கம் உலகியல்வாதமும். அவை இரண்டுமே இந்துமதம், பௌத்தம், சமணம், தாவோ, ஷிண்டோ போன்ற தொன்மையான மெய்யியல்களை, வாழ்வுமுறைகளை அருவருப்புடனேயே அணுகுகின்றன. அந்த அருவருப்பை மிகமிக நாசூக்கான ஆய்வுகளாக’ ‘சீர்திருத்தப்பார்வைகளாக’ அவை நம் மீது கொட்டுகின்றன. அந்தக் கருத்துக்களே நம்மைச்சூழ்ந்து கல்வித்துறையில், ஊடகங்களில் நிறைந்துகிடக்கின்றன.

நாம் நவீனக்கல்வி பெறுந்தோறும் அதற்கு ஆட்படுகிறோம். மிகப்பெரிய அளவில் நம் மரபிலிருந்தும் மெய்யியலில் இருந்தும் அயன்மைப்படுகிறோம். நம்மை நவீனமானவர்கள் என்றும் மனிதாபிமானிகள் என்றும் அறிவியல்நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் கருதிக்கொள்ளும்பொருட்டு நம் மரபையும் மெய்யியலையும் பழிக்கிறோம். அதனூடாக நம் மதம் மெலிந்து வெறும்சடங்காக, வெறும் அடையாளமாக ஆகிக்கொண்டிருக்கிறது.

இங்கே இருவகை இந்துக்களே இன்று உள்ளனர். ஒன்று, நவீன தாராளவாதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டு ஏதென்றும் என்னவென்றும் அறியாமலேயே இந்துமதத்தை ஒட்டுமொத்தமாக பழித்துக்கொண்டு இந்துக்களாக குடும்பச்சூழலில் வாழ்பவர்கள். இன்னொருசாரார், வாழ்க்கையின் இக்கட்டுகளினூடாக இந்துமதம் சார்ந்த சில நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பின்பற்றுபவர்கள். இருசாராருக்கும் இந்துமதம் பற்றி ஏதும் தெரியாது. இருசாராரும் வெறும் அடையாளமாகவே இந்துமதத்தை கொண்டிருக்கின்றனர்.

வீழ்ச்சி இருப்பது அங்கேதான். அந்த வீழ்ச்சி சரிசெய்யப்படாவிட்டால்தான் இந்துமதம் அழியும். அதை செய்யவேண்டியது அரசியல்தளத்தில் அல்ல. இந்துத்துவ அரசியல்வாதிகள் தாராளவாதிகள் சொல்வதையே வேறுகோணத்தில் சொல்கிறார்கள். மதத்தை வெறும் அரசியலடையாளமாக சூடிக்கொண்டு எங்கள் ஊர்வலங்களில் வந்து கொடிபிடி என்று. எங்கள் அதிகார அரசியலின் தொண்டராக நிலைகொள் என்று.

இங்கே நாம் நம் மதத்தைப் பற்றி பேசும் அரசியல்வாதிகள் அனைவருமே அதை ஐரோப்பியமயமாக்குவதைப்பற்றி, அதை ஆபிரகாமிய மதங்களைப்போல ஒற்றைமைய அமைப்பாக, ஒற்றைத்திரளாக ஆக்குவதை பற்றித்தான் பேசுகிறார்கள். அவர்களிடம் அவர்களின் செய்கைகளை கேள்விகேளுங்கள், ஏன் இஸ்லாமில் இல்லையா, கிறிஸ்தவம் செய்யாததா என்று வாதிடத் தொடங்குவார்கள். அதாவது, எது இந்து நம்பிக்கையோ, எது அதன் மேன்மையான உணர்ச்சிகளோ அதை கைவிட்டுவிட்டால்தான் அதை காப்பாற்றமுடியும் என்கிறார்கள்.

இந்துமெய்யியல்மேல், தத்துவம் மீது, வாழ்க்கைமுறைமேல் வைக்கப்படும் தாராளவாதத்தின் தாக்குதலை எதிர்கொள்வதே இன்றைய அறைகூவல். அது அம்மெய்யியலை கற்றுக்கொள்வதன் வழியாக, அதன் பண்பாட்டை வாழ்க்கைமுறையாகக் கொள்வதன்மூலம், அதன் நம்பிக்கைகளை தலைக்கொள்வதனூடாக அடையப்படவேண்டியது. அதற்கு ஞானிகளும் அறிஞர்களுமே வழிகாட்ட முடியும். நூல்களே உதவியாக அமையமுடியும். நீங்கள் மெய்யான இந்துவாக, உங்கள் வாழ்க்கைநிறைவுக்கும் மீட்புக்கும் இந்துமதத்தை கடைபிடியுங்கள். அங்கே தொடங்குங்கள். இந்துமதத்தை காப்பதல்ல இந்துவாக வாழ்வதே உங்கள் அறைகூவலாக அமையட்டும்.

இறுதியாக ஒன்று, இந்து மதத்திற்கு ‘வெளியே’ இருந்து ஆபத்துக்கள் வருகின்றன என்றே வைத்துக்கொள்வோம். மதமாற்றம், பிறமதத்தோர் பெருக்கம் போன்ற படையெடுப்புகள் நிகழ்கிறதென்றே கொள்வோம். அதற்கு இந்த அரசியல் ஒரு சிறுதுரும்பளவுகூட பாதுகாப்பை அளிக்காது, அளிக்கமுடியாது. அப்பிரச்சினைகளை மேலும் வளர்த்து உணர்வுகளைப் பெருக்கி அதனால் அச்சமும் குழப்பமும் அடைபவர்களை தங்கள் வாக்குவங்கியாக மாற்ற மட்டுமே அதனால் முடியும். நவீன அரசியலின் வழிமுறையே அதுதான். ஐயமிருந்தால் வரலாற்றை கூர்ந்து நோக்குக!

ஏனென்றால் எந்த அரசியலின் நோக்கமும் அரசை கைப்பற்றுவதுதான். அரசு என்பது நிதித்தொகை மட்டுமே. அதை கையாள்வதற்கான அதிகாரத்தையே மதத்தின்பேரால் நம்மை ஒருங்கிணைக்க முயல்பவர்கள் நம்மிடம் கோருகிறார்கள். நாம் கட்டும் வரிப்பணத்தை வாங்குபவர்களிடம் நமக்கு நல்ல வாழ்க்கையை உருவாக்கித் தரும்படி கோருவோம். நம் மதத்தை நாம் பார்த்துக்கொள்வோம்.

ஜெ

நான் இந்துவா?

தீட்டு,சபரிமலை, மதம்

சவரக்கத்திமுனையில் நடப்பது

கலாச்சார இந்து

இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?

எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்

இந்துத்துவ முத்திரை

இந்துமதமும் தரப்படுத்தலும்

இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்

இந்துத்துவன்

இந்துத்துவம் ,காந்தி

முந்தைய கட்டுரைஈரட்டிப் புத்தாண்டு – கடிதங்கள் – 2
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22