[அன்புராஜ் பறவைகளின் குரலில் பறவைகளுடன் உரையாடுகிறார்]
கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி
அன்புள்ள ஜெயமோகன்
அன்புராஜ் அவர்களின் பேட்டியை வாசித்தேன். ஒரு பெரிய நாவலை வாசித்ததுபோன்ற நிறைவு ஏற்பட்டது. எப்பேர்ப்பட்ட வாழ்க்கை. சாகசங்கள், போராட்டங்கள், மீட்பு. ஒருவர் இதன் வழியாக எவ்வளவோ துன்பங்களை அனுபவிக்கலாம். ஆனால் அவர் மீண்டு வந்துவிடுகிறார். தன்னை கண்டடைகிறர். ஒரு தவம்தான்.
சொல்லப்போனால் இந்தவகையான துன்பங்களே இல்லாமல் ஒருவாழ்க்கை இருந்தால் அதில் சொகுசு இருக்கும். ஆனால் கண்டடைதல் இருக்காது. தான் யார் என்றே தெரியாமல் வாழ்ந்து மறைவார்கள்.
அன்புராஜ் அவர்கள் அந்த வாழ்க்கை வழியாகக் கனிந்து உருவாகி வந்திருப்பதைப்பார்க்க முடிகிறது. ஒரு மாமனிதனாக மாறியிருக்கிறார். அந்த மாற்றத்துக்கான பயிற்சிக்களங்களாகவே அவருடைய வாழ்க்கையின் முந்தைய சம்பவங்கள் இருந்துள்ளன.
மிக எழுச்சியூட்டும் ஒரு நேர்காணல். வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று இவ்வகையான மனிதர்களின் கதைகள்தான் நமக்குக் காட்டுகின்றன. சிறப்பாகப் பேட்டி எடுத்திருக்கிறார் கிருஷ்ணன் . அனைவருக்கும் என் பாராட்டுக்கள்
சி.கோபிநாத்
அன்புள்ள ஜெ
அன்புராஜ் அவர்களின் பேட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நூல் போல வாசிக்கத்தக்கதாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதை வாசித்தேன். [ஒரு நல்ல முன்னுரையுடன் சிறிய நூலாகவே வெளியிடலாம். உங்கள் நண்பர்களான குக்கூ போன்றவர்கள் [தன்னறம்] வெளியிட்டால் தேவையானவர்களிடம் சென்றுசேரும் என நினைக்கிறேன்
செல்வ கதிரேசன்
ஜெ
அன்புராஜ் அவர்களின் பேட்டி மிகச்சிறப்பாக இருந்தது. ஒரு முழு வாழ்க்கையையும் அந்தப்பேட்டி வழியாக வாசித்தேன். பெரும்போராட்டம் நிறைந்த வாழ்க்கை. பலவகையான துன்பங்கள். கடுமையான அவமானம். ஆனால் அவர் அதில் கடந்துவரும்போது கனிந்தவராக இருக்கிறார். எதையும் சரியாக மதிப்பிட்டுச் சொல்கிறார். எவர்மேலும் கசப்பு இல்லை. அதேபோல எதன்மீதும் கண்மூடித்தனமான பற்றும் இல்லை.
இந்தக்கனிவுக்கு அவரைக் கொண்டுவந்தது அவர் அடைந்த கஷ்டங்கள்தான். கடுமையான அனுபவங்கள் மனிதன் தன்னைத்தானே கண்டடையவைப்பவை. மனிதனின் உள்ளிருக்கும் ஆற்றலை வெளியே கொண்டுவருபவை. கலை அன்புராஜை மீட்டிருக்கிறது. அவருக்குள் கலை இருப்பதை அதுதான் காட்டிக்கொடுத்திருக்கிறது. கலைவழியாக அவர் தன்னை கண்டுபிடித்து தெளிவடைந்திருக்கிறார்
இன்றைய அன்புராஜின் வாழ்க்கை ஒரு பெரிய முன்னுதாரணம்
குமார் பொன்னம்பலம்