யானை – புதிய சிறுகதை
அன்புள்ள ஜெ,
யானை உங்கள் கதைகளில் முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கும் கதை. இதில் யானை தொன்மமாகவோ குறியீடாகவோ இல்லை. நேரடியான ஒரு பயமாகவே வருகிறது. அனந்தன் பள்ளிக்கூடத்தில் காணும் யானை எது என அந்தக்கதைக்குள்ளேயே க்ளூ உள்ளது. அதன் விலாவில் அவன் எழுத்துக்களை எழுதி வைத்திருக்கிறான். அப்படியென்றால் அது கரும்பலகைதான். கரும்பலகைதான்
கரும்பலகைதான் யானையாக மாறி அவனை தும்பிக்கை நீட்டி பிடிக்கிறது. அவன் கடைசி பெஞ்சு மாணவன். அப்படி இருந்தாலும் நீட்டிப்பிடிக்கிறது. வகுப்புக்குள் இழுக்கிறது. பிடித்து வெளியே தள்ளுகிறது. ஏற்கனவே ஏராளமானவர்களை குப்பையாக நசுக்கி தூக்கி வீசிய யானை அது. கற்றல்குறைபாடு கொண்ட அனந்தனுக்கு அந்த கரும்பலகை கொலையானையாகவே ஆகிவிடுகிறது. அவனையும் அது கொல்லக்கூடும். அது அப்படிக் கொன்றவர்கள் பலர். பதறச்செய்யும் ஒரு யதார்த்தம் அது.
ஆனால் இன்னொரு பக்கம் அவன் அம்மா. அவளைக் கொல்லவரும் யானை வெள்ளை நிறமானது. அது அந்த தனிமையான அப்பார்ட்மெண்டில் உள்ள சுவர்கள்தான். அனந்தன் உடனே அதை அடையாளம் கண்டுகொள்கிறான். அவள் சொன்னதுமே உள்ளே பார்த்து அவன்தான் வெள்ளையானை என்கிறான். அந்த இரு இமேஜ்களுமே வலுவானவை. மூன்றுநாட்கள் என்னால் அவற்றின் பாதிப்பில் இருந்து வெளியே வரவே முடியவில்லை
ஜெயக்குமார் மாதவன்
அன்பிற்கினிய ஜெயமோகனுக்கு
வணக்கம் நலம்தானே? யானை கதை படித்தேன். அற்புதமான கதை. அனந்தனை யாருமே புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளைச் சரியாகப் புரிந்து கொள்ள குழந்தையாக மாறவேண்டும். அவன் உணர்வுகளை அவன் தாயும் தந்தையும் சரிவரக் கையாளவில்லை. அவன் பள்ளிக்கூடத்திற்குப் போய் அவர்கள் அவன் சொல்வது என்ன என்பதைக் கூடப் பார்க்க அக்கறை காட்டவில்லை. அவன் தாய் தனிமைஇருப்பத்கைக் கொடுமையாக உணர்கிறாள். அதுபோல்தானே அனந்தனும் உணர்வாம் பல்ளிக்கூடத்தில் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதுபோலச்செய்வது நாளடைவில் குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிக்கிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வந்து விடுகிறது. வாசகனின் ஊகங்களுக்கு வாசல்கள் பல காட்டும் அருமையான கதை
நன்றி.
வளவதுரையன்
அன்புள்ள ஜெ
யானை நான் சமீபத்தில் வாசித்த கதைகளில் மிக உணர்ச்சிகரமானது. அதில் உணர்ச்சிகரமான தருணங்கள் ஏதும் இல்லை. ஆனால் மகனுடன் உணர்வுபூர்வமாக தன்னை இணைத்துக்கொள்ளும் ஒரு அன்னையின் கதை அதில் உள்ளது. அவன் ஒரு ஆழத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறான். அவளும் தன்னை அதில் மூழ்கடித்துக்கொள்கிறாள். மகனுடன் தானும் கூடவே செல்கிறாள். அனந்தனைப்பற்றி நினைத்து நினைத்து அவன் அம்மா சாதனாவும் அந்த உலகத்திற்குள் செல்லும் காட்சி பதறச்செய்தது. அவள் விரும்பியே அவனுடன் செல்கிறாள். அவனுக்குத் துணையாக ஆகிறாள்.
அனந்தன் அவள் சென்ற அந்த உலகில் ஏற்கனவே இருப்பதனால்தான் அவள் யானை என்று சொன்னதுமே தன்னைப்போல இன்னொரு யானையால் அவள் துரத்தப்படுகிறாள் என்று புரிந்துகொள்கிறான். அவன் பயப்படுவது கருப்பு யானையை. அவள் பயப்படுவது வெள்ளையானையை. இருவரும் ஒரே உலகத்தில்தான் சென்றுசேர்கிறர்கள். நெகிழச்செய்யும் கதை இது
என் சொந்தத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு பையனுக்கு ஸ்கிஸோஃப்ரினியா. அவன் அம்மா மட்டும்தான் அவனைப் பார்த்துக்கொள்வார்கள். அவர்களும் பதினெட்டு ஆண்டுகளாக அவனுடனே இருந்து இருந்து மனநோயாளிபோலத்தான் இருப்பார்கள். அம்மா பையன் இருவருக்குமே வெளியுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மா பேசுவது மட்டும்தான் பையனுக்குப்புரியும். தான் பேசுவது அவனுக்குப்புரியவேண்டும் என்பதற்காகவே அந்த அம்மா அவன் உலகத்துக்குள் போயிருக்கிறாள் என நினைப்பேன்.
அந்த யதார்த்தம் மிக அழகாக நுட்பமாக இந்தக்கதையில் வந்திருந்தது. அதுதான் என்னை இப்போதுகூட நினைக்கும்தோறும் பதற்றம் அடையவைக்கிறது
ரஞ்சனி சிவக்குமார்