ஏய்டனின் மனசாட்சி!

vellai

வெள்ளையானை அனைத்து விவாதங்களும்

அயர்லாந்தில் வசதியில்லாத அப்பாவின் பிள்ளையாக வளர்ந்த அப்பாவி ஏய்டன் பிரிட்டிஷ் அரசில் முக்கிய பொறுப்பாளராக உயர்கிறான். இதற்கிடையில் அவன் பயிற்சி முடிந்து வீட்டிற்கு திரும்புகையில் மீசை முளைத்த அவன் முகத்தை சட்டென அடையாளம் காண முடியாத அம்மா…

மூன்றாம் மனிதரைப் போல பார்க்கும் சகோதரிகள் என்று… நாவல் எடுத்ததுமே டாப் கியரில் செல்கிறது.

மதராசின் ஏய்டனின் தலைமைக்கு உட்பட்ட அலுவலகப் பகுதியில் நீலமேகம் என்ற ஆதிக்க சாதியைச் சார்ந்த ஒருவன் சவுரிராயன் என்ற பறையர் சாதியை சார்ந்தவனையும் அவனது மனைவியையும் சவுக்கால் வெளுக்கிறான். இதை குதிரையில் வலம் வந்த ஏய்டன் கண் கூட பார்த்து கொதித்து, சுருண்டு கிடக்கும் அந்த மனிதர்களை தொட்டுத் தூக்கு என்கிறான். சாதி தான் முக்கியம் என்று ஏய்டனின் பேச்சையும் மீறுகிறான் நீலமேகம்.

கோபமடைந்த ஏய்டன், உன்னை எப்படி கவனிக்க வேண்டுமோ அப்படி கவனிக்குறேன் என்று கடந்து செல்கிறான். ஐஸ் ஹவுஸில் உள்ள பார்மரை வெளியே வரச் சொல்லி நீலமேகத்தைப் பற்றி விசாரிக்கிறான். அமெரிக்க நிறுவனத்துக்குள் விதியை மீறி… பார்மர் தடுத்த போதும் உள்ளே நுழைகிறான் ஏய்டன்…

இந்த இருட்டு அறைக்குள் நடந்த விஷியங்களைப் பற்றி படிக்க படிக்க திக் திக்… அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் தான் குடிக்கும் மதுவில் ஐஸ் கட்டியைப் போட மறுக்கிறான்…

நீலமேகத்தை கண்டுபிடிக்க முடியாத நேரத்தில் காத்தவராயன் என்ற கறுப்பர் நகரத்தைச் சார்ந்த ஒருவன் அறிமுகமாகிறான். அவன் இந்தியாவில் நிலவும் சாதியைப் பற்றி பாதி விளக்க… மிச்ச பாதியை பாதர் ப்ரெண்ணன் விளக்க… பாவம் அந்த ஏய்டன்!

தாசிகள் பற்றி மரிஸா விளக்க… அவளுடன் அந்தக் கவிதை இரவு முடிவுறுகிறது. ஏனோ அவள் மீது ஏய்டனுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு… தாழ்ந்த சாதிக்காரன் ஒருவன் குனிய அவன் முதுகில் ஏறி வாகனத்திற்குள் அமர மறுக்கும் மரிஸா மீது யாருக்குத் தான் காதல் வராது! ஏதேதோ அரசிகள் சென்ற வாகனத்தில் மரிஸா முதல்முறையாகப் பயணிக்கும்போது அவளது மனநிலையை விவரிக்கும் இடம் லவ்லி!

கருப்பர் நகர பகுதிக்குள் பாதர் ப்ரெண்ணன் அனுப்பிய ஆள் மற்றும் முதிரா இளைஞன் ஒருவனுடன் சென்று பார்க்கிறான் ஏய்டன்… தரையில் கால் வைக்க முடியா வண்ணம் சகதிகள், பெருச்சாளிகள் வாழும் குகைகள் போல கறுப்படர்ந்த குடிசைகள், வெறும் எலும்பும் தோலுமாக பஞ்சத்தால் பாதிக்கப் பட்டு நடைபிணங்களாக வாழும் அப்பாவி மக்கள்…

வாகனத்திற்குள் இருக்கும் உணவை அந்த உயிருள்ள எலும்புக் கூடுகள் பறிக்க முயல… வாகனம் ஓட்டுபவன் தப்பித்தவறி கூட அந்த உணவை அவர்களுக்கு கொடுக்காதீர்கள் என்று கத்த… முதிரா இளைஞன் இவர்களுக்கு தராமல் நாம் உண்ணும் உணவு நம் பரம்பரையையே  பாதிக்கும் என்று மனசு கேட்காமல் சில உணவுகளை அவர்களுக்கு வீச அடுத்த சில நிமிடங்களில் வாகனம் குலுங்க குலுங்க…
அந்த உயிருள்ள எலும்புக் கூடுகள் மீது பயணிக்கிறது… பிணங்களுடன் வாழும் அவர்களின் குடல் வெளியே தொங்க… கண்கள் பிதுங்க… என்று அந்த மனிதர்களைப் பற்றிப் படிக்கும் இடங்களில் மனதை திடப் படுத்திக் கொள்ள வேண்டி உள்ளது… நரகத்திற்குச் சென்று வந்ததுபோல இருந்தது!

அவர்களுக்கு உணவை தராமல் அவ்வழியே உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை வேல் கம்புடன் பாதுகாக்கும் மறவர்கள், பசியால் அந்த உணவுப் பொருட்களின் அருகே நெருங்கும் அந்த உயிருள்ள எலும்புக் கூடுகளை வேல் கம்பால் குத்தி தூக்கி வீசுகிறார்கள். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகர் பார்த்திபன் எண்ட்ரி ஆகும் காட்சியை நினைவூட்டியது இந்த இடங்கள்!

இந்த சம்பவங்களை எல்லாம் பார்த்த (படித்த) பிறகு, என்ன எலவு நாடுடா இந்த இந்தியா! என்று ஏய்டனைப் போல நாமும் இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பை திட்டித் தீர்க்கிறோம். தன் மேலதிகாரியிடம் இந்தப் பதிவுகளை கொண்டு சேர்க்க முற்படும்போது காத்திருப்பு அறையில் பெரும் செல்வந்தர்களுக்கு முன்பு ஏய்டன் யாராலும் கண்டுகொள்ளப் படாமல் இருப்பது…

மக்கின்ஸி பறையர்கள் தானே செத்தால் சாகட்டும்… பஞ்சத்தைப் பற்றியும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றியும் கவலைப் படுவது உன் வேலை அல்ல… என கூறி ஏய்டனின் மனசாட்சியை அலட்சியப் படுத்துவது…

தன் பதவியை இழந்ததும் சில பணியாட்கள் ஏய்டனை மதிக்க மறுப்பது… என்று ஏகப்பட்ட அவமானங்கள் ஏய்டனுக்கு. இருந்தாலும் சளைக்காத ஏய்டன் தொடர்ந்து முயல்கிறான்.

காத்தவராயனும் கருப்பனும் சேர்ந்து அந்த வலிமையிழந்த… அடிமைத் தனம் பழகிப் போன… புண் கண்ட மேனியுடைய மக்களை போராட்டத்தில் இறங்க வைக்கிறார்கள்…! அப்போது அங்கே வரும் அய்யங்கார் பேசும் பேச்சு எரிச்சல்! சில சூழ்ச்சியால் அய்யங்காரின் மனிதாபிமானமற்ற அதிகாரம் வெல்ல… ஏய்டன் துரோகியாக்கப் பட்டு தோற்கிறான்… நினைவிழந்து சரிகிறான்…

சில நாட்கள் கழித்து எழுகிறான்… மரிஸா அவனை ஏற்க மறுத்து வீடு தேடி வந்தவனை விரட்டி அடிக்கிறாள்… தனக்குப் பிடித்த கடற்கரைக்குச் செல்கிறான்… கடலின் ஆறுதலான காற்றும் காத்தவராயனின் ஆறுதல் வார்த்தைகளும் கிடைக்கிறது!

நேர்மையான அதிகாரிகளுக்கு வழக்கமாக மேலதிகாரிகள் என்ன மாதிரியான பரிசு தருவார்களோ அதே மாதிரியான பரிசு ஏய்டனுக்கு கிடைக்கிறது!

செத்துப் போன மனதுடன் தன் பணியைத் தொடர்கிறான் ஏய்டன்!

அடிமை நிலையிலிருந்து வந்த நான் இன்று அடிமைப் படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்… பஞ்சத்தை உருவாக்கிய  வெள்ளையர்களில் ஒருவன் தானே நான்… இவர்களின் இந்த துன்பகரமான சூழலுக்கு நானும் தானே காரணம்… என்று குற்ற உணர்வுடன் வாழும் ஏய்டன் மீதும்…

தன் மக்களுக்கு எப்படியாவது நீதி கிடைத்திட வேண்டுமென்று போராடும் சுயநலமில்லாத காத்தவராயன் மீதும்…

கருப்பர் நகர மக்களின் உருவங்களை காண முடியாமல் கண் கலங்கி வாகனத்தில் இருந்து பாதியில் இறங்கிய முதிரா இளைஞன் மீதும்…

தாழ்ந்த சாதிக்காரன் முதுகில் காலை வைத்து வாகனத்தில் ஏறத் தயங்கும் மரிஸா மீதும்…

தொழில் நடத்த மனசாட்சிக்கு விரோதமாக நடக்க வேண்டிய சூழல் என்று வருந்தி அதிகாரத்தை மீறி தொழிலாளிகளின் ஊதிய உயர்வுக்கு முனையும் பார்மர் மீதும்…

நமக்கு இயல்பாக காதல் வருகிறது…

உதவி கேட்டுப் போன சவுரிராயனை கொன்று கடலில் வீசிய நீலமேகத்தின் மீதும்…

ஏய்டனின் மனசாட்சியை அசிங்கப் படுத்தி அனுப்பும் வெள்ளைக் கார மேல் அதிகாரிகள் மீதும்…

மக்கள் போராட்டத்தை திசை திருப்ப காரணமாக இருந்த அய்யங்கார் மீதும் கொல கோவம் வருகிறது…

வெள்ளைக் காரனா இருந்தாலும் சரி தமிழனா இருந்தாலும் சரி நேர்மையான அதிகாரியா இருந்தா அவமானம் தான் மிஞ்சும் போல!

லவ் யூ ஏய்டன்!

பரமத்தி வேலூரைச் சார்ந்த செந்தில் என்றவரிடம் இருந்து கடன் வாங்கி இந்தப் புத்தகத்தைப் படித்தேன். நம்முடனே இருந்த குழந்தையை திடீரென சொந்தப் பெற்றோர் வந்து அழைத்துச் செல்லும்போது நமக்கு எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது…
இந்தப் புத்தகத்தை உரியவரிடம் திருப்பி தருவதை நினைக்கும் போது…! முடிந்த வரை இந்தப் புத்தக திருவிழாவில் சொந்தக் காசு போட்டு வாங்கி விடுவேன்…

– யுவராஜ் மாரிமுத்து

வெள்ளையானையும் மீட்கப்பட்ட கப்பலும்

வெள்ளையானை- பிரதீப் சுரேஷ்

வெள்ளையானையும் கொற்றவையும்

வெள்ளையானை -சிவமணியன்

வெள்ளையானையும் உலோகமும்

வெள்ளையானை -கடிதங்கள்

வெள்ளையானையும் வே.அலெக்ஸும்

வெள்ளையானை -கடிதங்கள்

வெள்ளையானையும் வரலாறும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் வெள்ளையானை விழா ஏற்புரை

வெள்ளையானை விமர்சனக்கூட்டம்

வெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்

வெள்ளையானை – ஒரு விமர்சனம்

வெள்ளையானை – அதிகாரமும் அடிமைகளும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-18
அடுத்த கட்டுரைஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு பற்றி