விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு
அன்புள்ள ஜெ
பாட்டும்தொகையும் ஆவணப்படம் பார்த்தேன். அற்புதமான ஒரு ஆவணப்படம். இயற்கையாக எடுக்கப்பட்டிருந்தது. பின்னணிக்குரல் இல்லாமலிருந்தது ஒரு சிறப்பு. பின்னணிக்குரல், தொகுப்புரையாளன் குரல் ஒருவகையில் ஆவணப்படம் எடுப்பவரின் இடர்பாட்டையே காட்டுகிறது. அது வெளியே இருந்து ஒலிக்கிறது. உள்ளிருந்து போதிய குரல்கள் கிடைக்கவில்லை என்பதற்கான சான்று அது. ஒரு இடத்தைப்பற்றிச் சொல்லும்போதோ தத்துவம்பற்றிச் சொல்லும்போதோதான் பின்னணிக்குரல் ஒலிக்கவேண்டும்.
பேராசிரியரின் கவனமில்லாத உடல்மொழி, அலைபாயும் நடை, அவருடைய முகத்தில் மாறிமாறி வரும் உனர்ச்சிகள் இதெல்லாம்தான் ஆவணப்படம் ஏன் ஒரு உயர்கலை என்பதைக் காட்டுகின்றன. வாழ்த்துக்கள் கே பி வினோத்.
ஜெயராமன்
அன்புள்ள ஜெயமோகன்
பேராசிரியர் ராஜ் கௌதமன் ஆவணப்படம் சிறப்பாக அமைந்திருந்தது. அதில் மிகச்சிறந்த குரலாக ஒலித்தது பேரா முத்துமோகன் அவர்களின் குரல். அவர் மார்க்ஸியத்திலிருந்துகொண்டு ராஜ்கௌதமனை ஆராய்ந்து குறைகளையும் நிறைகளையும் தெளிவாகச் சொல்கிறார். மிக முக்கியமான கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார்
அத்துடன் முத்துமோகன் அவர்களை மதுரை செட்டியாப்பத்து சமணக்குகைகளுக்குள் வைத்து பேட்டி எடுத்திருப்பதும் சிறப்பு. பேராசிரியர் தத்துவ ஆராய்ச்சியாளர் என்பதை கண்கூடாக அது காட்டியபடியே இருந்தது. சிறப்பான ஆவணப்படம். ஒளிப்பதிவில் சில ஜெர்க் இருந்தது மட்டுமே குறை
எம்.ஆர்.செல்வராஜன்
அன்புள்ள ஜெயமோகன்
பாட்டும்தொகையும் அரிய ஓர் ஆவணம். பேராசிரியரவர்களின் கொள்கைப்பின்னணி வாழ்க்கைப்பின்னணி இரண்டும் இரண்டு சரடுகளாக வந்துகொண்டே இருந்தன. இரண்டும் அருமையாக ஒரு புள்ளியில் முடிந்தன. பேராசிரியர் எழுதுவதில் தொடங்கி எழுதியதில் முடிந்தது. அருமையான ஆவணப்படம். வாழ்த்துக்கள்
இதெல்லாம் அவுட்டேட் ஆகும் என அவர் சொல்லுமிடத்தில் ஃப்ரீஸ் செய்து இதுதான் அவர் என்று காட்டுகிறார் ஆவணப்பட இயக்குநர். கிளாஸ்
முத்துக்குமார்
விஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்
குமரகுருபரன்-விஷ்ணுபுரம் கவிதைவிருது- காணொளிகள்
விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு
விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்