நெடுங்காலம் கழித்து கர்ணன் அந்த வில்லைப்பற்றி நினைவுகூர்ந்தான். அப்போது அவன் தன்னிலையில் இருக்கவில்லை. அஸ்தினபுரியில் வேள்விச்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்டு தன் மாளிகைக்குத் திரும்பிய கணம் முதல் வெறிகொண்டு மது அருந்திக்கொண்டிருந்தான். வயிறு மதுவை தாளாமல் அதிர்ந்து உடல் எழுந்து வாயுமிழ்ந்தான். உடனே “கொண்டு வருக! எரியும் பீதர்நாட்டு மது வருக!” என்று கூவினான். ஏவலர் தயங்கியபோது “கொண்டு வா மூடா! உன் சங்கை அரிந்திடுவேன். கொண்டு வா!” என உடைவாளை உருவியபடி எழுந்தான். எழமுடியாமல் பீடத்திலேயே விழுந்தான்.
ஏவலர் மீண்டும் மீண்டும் மது கொண்டுவந்தனர். அவன் வாயுமிழ்ந்தபோது புளித்த மதுவுடன் குருதியின் படலமும் இருந்தது. “போதும், அரசே!” என்று ஏவலன் சொன்னபோது அவன் முகத்தை நோக்கி துப்பி “மது அருந்தி செத்துவிடுவேன் என நினைத்தாயா? நான் கர்ணன்! சூரியன் மைந்தன். பரசுராமனின் மாணவன். அவ்வாறு சாகமாட்டேன். சாவதென்றால் போர்க்களத்தில் சாவேன். இளைய யாதவன் கையால். ஆம், அவனை அன்றி எவரும் என்னை கொல்லமுடியாது” என்று கூவினான். சினம்கொண்டு தன் பீடத்தின் கையை ஓங்கி அறைந்து “நான் நாகபாசன். என்னை அந்தப் பாண்டவ அறிவிலி கொல்ல முடியாது. அவன் வில் என் நோக்கிலேயே உருகும்… பார்க்கிறாயா? அடேய், எவரேனும் பார்க்க விழைகிறீர்களா?” என்று குரலெழுப்பினான்.
அவன் அறை முழுக்க சூதர்கள் நிறைந்திருந்தார்கள். “ஆடுக! மதுநடனம்! ஆம் மதுநடனம்!” என்றான். “பாற்கடலைக் கடைந்து நஞ்சை எடுத்து அசுரர்களுக்கு அளிக்கிறான் விண்ணவன். மோகினியாக வந்து உளம் மயக்குகிறான். ஆடுக நடனம்! எங்கே என் மோகினி? எங்கே அவள்? மோகினி வருக! எனக்கு நஞ்சு அவர்களுக்கு அமுது… ஆ! இனிய நஞ்சு. தித்திக்கும் நஞ்சு. பித்தேற்றி இங்குள்ள அனைத்தையும் இனிதாக்குவது. நெஞ்சை கசப்பாக்கினால் என்ன? நாவை இனிதாக்கும் அது… வருக!” விறலி அருகிருந்த சூதனிடமிருந்து மதுக்குவளையை எடுத்துக்கொண்டு மோகினியாக நடமிட்டு அவர்கள் நடுவே நடந்தாள். கர்ணன் உரக்க நகைத்து “அது நஞ்சேதான்… ஏனென்றால் அவள் அசைவுகளும் சிரிப்பும் அதை அமுதெனக் காட்டுகின்றன! நன்று!” என்றான்.
கர்ணன் தாழ்வான மஞ்சத்தில் தலையணைமேல் ஒருக்களித்துச் சாய்ந்து தலைதொங்க அமர்ந்திருந்தான். அவன் முன் அறைமுழுக்க உணவுப்பொருட்களும் மதுக்குடுவைகளும் சிதறிக்கிடந்தன. காலடியில் ஒரு சூதன் குப்புற விழுந்து துயின்றுகொண்டிருந்தான். அப்பால் ஒருவன் பீடத்தில் நன்றாகக் கால்நீட்டி சாய்ந்திருந்தான். ஒருவன் மகரயாழை மடியில் வைத்து தடுமாறும் விரல்களுடன் அதை மீட்டினான். அதிலிருந்து துளித்துளியாக பொருளற்ற ஓசை எழுந்தது. விறலியால் நடனமாட இயலவில்லை. அவளுடைய கால்கள் தடுமாறின. அவளும் முழுக் களி கொண்டிருந்தாள். “டேய், என்ன செய்கிறாய்? மூடா, முழவெழுப்புக!” என்று கர்ணன் சொன்னான். சூதன் விழித்தெழுந்து முழவை விரல்களால் தட்டினான்.
விறலி இரு கோப்பைகளை எடுத்துக்கொண்டாள். அவற்றை இயல்பாக இரு கைகளுக்கும் மாற்றிக்கொண்டு அமுதநடனத்தை ஆடினாள். “அதோ அது! அந்தக் கோப்பை. அதுதான் நஞ்சு!” என்று கர்ணன் கூவினான். “நீ அமுதை அளிப்பதாக இருந்தாலும் எனக்குத் தேவையில்லை. நான் நாடுவது நஞ்சை! ஆஹாஹாஹாஹா!” என்று கைகளை அறைந்து கூவிநகைத்தான். விறலி இரு கோப்பைகளையும் அவன் முன் மாறிமாறி நீட்டினாள். அவன் அவற்றை பற்றுவதற்காக எழுந்து விழுந்தான். அவளுடைய கைகள் இரு நாகங்களாக நெளிந்து நெளிந்து அவனிடம் விளையாடின. “நாகங்கள்! ஆனால் நாகங்களை நான் நன்கறிவேன்!” என்று கர்ணன் சிரித்தான்.
கதவு மெல்ல திறந்து வாயிற்காவலன் உள்ளே வந்தான். “இவன் மண்ணுலகிலிருந்து வரும் மானுடன்… தேவி மோகினி, அவனுக்கு சற்று மது அளியுங்கள்!” என்றான் கர்ணன். ஏவலன் மெல்ல பின்னடைந்து கதவை மூடினான். மீண்டும் கதவு திறந்து சுப்ரியை உள்ளே வந்தாள். அவள் சீற்றம்கொண்டவள் போலிருந்தாள். கர்ணன் அவளை அடையாளம் காணவில்லை. “இதோ இவள்! இவள் அமுதுடன் எழுந்த திருமகள். ஆனால் அமுதை இவள் நமக்கு தரப்போவதில்லை. திருமகளே, வருக!” என்றான். கோப்பைகளுடன் நின்றிருந்த விறலி அவளைக் கண்டதும் பின்னால் விலகிச்சென்று சுவரோடு ஒட்டிக்கொண்டாள். இரு சூதர்கள் விழித்துக்கொண்டு ஏளனத்துடன் அவளை நோக்கினர். ஒருவன் அவளுடைய நடைக்கேற்ப முழவை மீட்டினான்.
“அரசரிடம் பேசவந்திருக்கிறேன்” என்றாள் சுப்ரியை. கர்ணன் “ஆடுக நடனம்!” என்றான். ஓரு எடைமிக்க திரைபோல அவன் மேல் துயில் வந்து விழுந்து மூடிக்கொண்டது. இசைச்சூதனாகிய கோகர்ணன் கர்ணனின் காலைப்பற்றி உலுக்கி “அரசே, அரசே” என்றான். வாய் வழிய தலைசரித்துக்கொண்டிருந்த கர்ணன் “என்ன?” என்று திடுக்கிட்டு விழித்தான். “ஏன் பாட்டு நின்றுவிட்டது? பாடுக… எங்கே என் நாகம்? என் நச்சுக் குவளை எங்கே?” கோகர்ணன் “அரசே, அரசி வந்துள்ளார்” என்றான். “எந்த அரசி?” என்று கர்ணன் கையூன்றி எழுந்து திரும்பி நோக்கினான். “ஆ! இவள்…” என்று சுட்டிக்காட்டினான்.
சுட்டுவிரல் அப்படியே நிற்க அவன் முகத்தில் ஏளனப் புன்னகை பரவியது. இதழ்கள் இளிப்பில் இழுபட “இவள்…” என்றான். மீண்டும் ஒருமுறை சிரித்து திரும்பி கோகர்ணனை நோக்கி “இவள் யார் தெரியுமா?” என்றான். “சம்பாபுரியின் அரசி!” என்றான் கோகர்ணன். “அல்ல, அல்ல மூடா” என கர்ணன் நகைத்தான். “சொல்” என்று கோப்பை ஒன்றை எடுத்து இன்னொரு சூதனாகிய சுபர்ணன் மேல் எறிந்தான். சுபர்ணன் “கலிங்க அரசி” என்றான். “இல்லை” என்று கர்ணன் உரக்க நகைத்தான். எழுந்து அமர முயன்றபோது உடல் ஒரு பக்கமாக சரிந்தது. கையூன்றி அமர்ந்து “இவள் சிந்துநாட்டின் அரசி. சைந்தவராகிய ஜயத்ரதரை உளம்கொண்டவள்…” என்றான்.
சூதர்கள் திகைப்புடன் அவளை நோக்க சுப்ரியை சீற்றத்துடன் “அரசே” என்றாள். “இன்று வேள்விநிலையில் சைந்தவ அரசியாக காமிகை அவையமர்ந்தபோது நிலையழிந்து துயர்கொண்டவள்… இவள்… ஆனால்…” கர்ணன் இளித்தபடி சொல்லக்கூடாது என்பதுபோல விரலை அசைத்தான். அவ்விரலை வாய்மேல் வைத்து மூடிக்கொண்டு தலையை ஆட்டினான். ஊன்றியிருந்த இன்னொரு கையை இயல்பாக தூக்க மீண்டும் நிலையழிந்து மஞ்சத்தில் விழுந்தான். சுப்ரியை திரும்பி கதவைத் திறந்து வெளியே சென்றாள்.
கர்ணன் சிரித்துக்கொண்டு “அவள் சினம்கொண்டு செல்கிறாள். ஒற்றைக்காலில் தவம் செய்து அவனை அவள் அடைவாள்!” என்றான். “எங்கே? விறலியர் எங்கே? ஒற்றைக்காலில் தாட்சாயணி தவம் செய்ததை ஆடுக!” என்றான். “நான் நஞ்சுண்டன்… ஆலகாலம் உண்டு நின்று ஆடுவேன்” என்றபடி எழுந்தான். கால்கள் நிலையழிய தன்னை நிலைநிறுத்திக்கொண்டு “நான் ஆலவாயன். எங்கே என் நாகம்? என் கழுத்தில் அதை நான் சூடவேண்டும்! எங்கே வாசுகி?” என்றான்.
கோகர்ணன் “அரசே, வாசுகிக்கு நிகரான நஞ்சு உங்கள் நாவில் உள்ளது” என்றான். கர்ணன் கண்களைச் சுருக்கி “என்ன சொல்கிறாய்?” என்றான். “இப்போது நீங்கள் அரசிமேல் உமிழ்ந்தது மானுட உள்ளம் உருவாக்கிக்கொள்வதிலேயே ஆற்றல் மிக்க நஞ்சு” என்றான் கோகர்ணன். “என்ன?” என்று கர்ணன் மீண்டும் கேட்டான். “களிமயக்கில்லையேல் உங்கள் அறம் அதைச் சொல்ல ஒப்புக்கொண்டிருக்காது. களிமயக்கு என்பது ஒரு நுட்பமான நடிப்பு மட்டுமே. எந்தக் களிமகனும் அவனுக்குள் இல்லாத ஒன்றை சொல்லிவிடுவதில்லை” என்றான் கோகர்ணன். கர்ணன் ஆடியபடி அவனை நோக்கி நின்றான். அவன் கை கோகர்ணனைச் சுட்டுவதுபோல நீண்டது. பின்னர் மெல்ல பின்னடைந்து பீடத்தில் அமர்ந்துகொண்டான்.
கோகர்ணன் “அவர் இங்கே வந்தது ஏன் என்று நீங்கள் அறிவீர்கள், அரசே” என்றான். “அவர் உங்கள் காலடியில் விழுவதற்காக வந்தார். இதுகாறும் கொண்டிருந்த அனைத்துக் கவசங்களையும் களைந்துவிட்டு வந்திருந்தார். அதை நன்கறிந்தமையால்தான் நீங்கள் அந்த நச்சு அம்பை உங்கள் நாணில் பூட்டினீர்கள்.” கர்ணன் போதும் என்பதுபோல கையை காட்டினான். “இத்தனை நாட்கள் நீங்கள் அவரை பொறுத்தருளினீர்கள். அத்தகைய பெரும்பொறை மானுடர்களுக்கு இயல்வதல்ல. பாறைக்குள் நீர்த்துளி என ஒரு சொட்டு நஞ்சு உள்ளே எங்கோ சென்று சேர்ந்துகொண்டே இருந்திருக்கிறது.” கர்ணன் “நிறுத்து!” என்று கூவினான். “செல்க… அனைவரும் செல்க!”
கோகர்ணன் எழுந்தான். “மது!” என்று கர்ணன் ஏவலனை நோக்கி கூச்சலிட்டான். “மேலும் மது!” என்று இருக்கையின் கைப்பிடியை அறைந்தான். ஏவலர் இருவர் மதுவுடன் வர சூதர்கள் வெளியேறினர். அவன் குடித்துக்கொண்டே இருந்தான். பின்னர் நினைவழிந்து அவன் எப்போதுமே வெறுக்கும் அந்தப் புதைசேற்றில் ஆழ்ந்தான். அவன் சென்றுகொண்டிருந்த தேரின் சகடம் அதில் புதைந்தது. நிலையழிந்த தேரிலிருந்து அவன் இறங்கி கால்கள் புதைய நடந்துசென்று அந்தத் தேரின் சகடத்தை தூக்க முயன்றான். அது மேலும் மேலுமெனப் புதைந்தது. உடன் அவனும் புதைந்துகொண்டிருந்தான். இனிய மென்மைகொண்ட சேறு. ஊன்கதுப்புபோல் உயிர்கொண்டது. இளவெம்மையாகச் சூழ்ந்துகொள்வது.
அவன் விழித்துக்கொண்டபோது சிவதர் உடனிருந்தார். மஞ்சத்தில் தலை இரும்புக்குண்டு என அழுந்தியிருந்தது. மஞ்சம் முழுக்க அவன் வாயுமிழ்ந்த மது உலர்ந்து படிந்திருந்தது. கர்ணன் சொல்லில்லாமல் அவரை பார்த்தான். “அரசே, அரசி இன்று தன் அரண்மனை அறையிலிருந்து மறைந்துவிட்டார்” என்றார். கர்ணன் “ம்?” என்றான். அவர் அதை மீண்டும் சொன்னார். கர்ணன் எழுந்தமர்ந்து “எங்கே சென்றாள்? அரசருக்கு அறிவித்தீர்களா? தேடிப்பார்க்க எவர் சென்றனர்?” என்றான். சிவதர் “அரசே, அரசியை இனி நாம் பார்க்க முடியாதென எண்ணுகிறேன்” என்றார். கர்ணன் பெருமூச்சுவிட்டான். “ம்” என்றான்.
“காலையில் அரசியின் முதன்மைச்சேடி சபரி வந்து என்னிடம் அரசி மறைந்துவிட்டதை சொன்னாள். நான் அவளிடம் முழுமையாக உசாவினேன். சூக்ஷ்மை என்னும் நாகினி அரசியை வந்து சந்தித்ததை சொன்னாள். அரசி நேற்று உங்கள் அறையிலிருந்து சென்றபோது அரசியின் அறையில் அவருக்காக சூக்ஷ்மை காத்திருந்திருக்கிறாள்” என்றார் சிவதர். கர்ணன் “ம்” என்றான். “அவ்வாறென்றால் அது நாகமாயை. அதற்குள் சென்றவர் மீள்வதில்லை. மண்ணுக்கு அடியிலுள்ளது அவர்களின் உலகம். அது நம் நனவின் அடியிருள். எப்போதேனும் அவர்களே அங்கிருந்து இங்கு வந்து நஞ்சுமிழ்ந்தோ மணியை கொடையளித்தோ மீள்வார்கள். நாம் அவர்களை தொடரவியலாது.” கர்ணன் எழுந்து நின்று கைகளை விரித்து உடலை நிமிர்த்திக்கொண்டான்.
“நாம் இனிமேல் இங்கிருப்பதில் பொருளில்லை, அரசே” என்றார் சிவதர். “இங்கிருக்கும்தோறும் கேலிப்பொருளாகிறோம். நாம் கிளம்புவதே முறை.” கர்ணன் வெறுஞ்சுவரை வெறித்தபடி சற்றுநேரம் நின்றான். பின்னர் “அவள் என்ன எண்ணியிருப்பாள்?” என்றான். “அதற்கென்ன?” என்று சிவதர் கேட்டார். “ஒன்றுமில்லை” என்றான். “அதை நம்மால் உணரவே முடியாது” என்றார் சிவதர். “சிவதரே, நான் பிழைசெய்துவிட்டேனா?” என்றான். சிவதர் மறுமொழி சொல்லவில்லை. “சொல்லுங்கள்” என்றான். “நமக்கிழைக்கப்பட்ட பிழைகளை நாம் பிறருக்கு இழைத்து ஆறுதல் கொள்கிறோம்” என்றார் சிவதர். கர்ணன் திரும்பி நோக்கிவிட்டு அறையிலிருந்து வெளியே சென்றான்.
மறுநாள் புலரியிலேயே அவர்கள் அஸ்தினபுரியிலிருந்து சம்பாபுரிக்கு கிளம்பினர். செல்லும் வழி முழுக்க கர்ணன் மதுவருந்திக்கொண்டே இருந்தான். தேரில் அவனுடன் இருந்த சிவதர் அவனை எவ்வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. படகில் கங்கையைக் கடந்து அங்கநாட்டின் எல்லைக்குள் நுழைந்தபோது கர்ணன் நிலையழிந்து பொருள்கூடா ஒலிகளென பேசிக்கொண்டிருந்தான். அவர் மெல்ல துயில்கொண்டுவிட்டிருந்தார். அவன் அவரை உலுக்கி “எழுக! எழுக!” என்றான். அவர் எழுந்துகொண்டு “என்ன?” என்றார். “சிவதரே, நான் அந்தப் பெருநாகத்தை கண்டேன்” என்றான். “எதை?” என்றார். “மணிகர்ணனை… இளமைமுதலே என்னைத் தொடர்வதை” என்றான் கர்ணன்.
அவன் கண்கள் சிவந்திருந்தன. சிவதர் அவனை வெறுமனே நோக்கினார். “நம் தேர் ஒரு படகாக மாறி ஆற்றுப்பெருக்கில் சென்றுகொண்டிருப்பதாக உணர்ந்தேன். கன்னங்கரிய ஆறு. பின்னர் அந்த ஆறு ஒரு மாபெரும் பாம்பு என்று கண்டேன். விழித்துக்கொண்டேன்” என்றான் கர்ணன். “அந்த நாகம் எப்போதும் என்னுடன் உள்ளது. என்னை ஆற்றுப்படுத்துகிறது. சிவதரே, நான் எப்போதும் அதன் வழியில்தான் ஒழுகிக்கொண்டிருக்கிறேன்.” சிவதர் சற்றுநேரம் அவனை நோக்கிக்கொண்டிருந்துவிட்டு “நீங்கள் என்னை அழைக்கும்போது நானும் நாகத்தையே கனவு கண்டுகொண்டிருந்தேன்” என்றார். “நாம் போருக்குச் செல்வதாக. தேரில் நான் பின்னால் அமர்ந்திருக்கிறேன். நீங்கள் வில்லுடன் என் முன் நின்றிருக்கிறீர்கள். அந்த வில் ஒரு நாகம்!”
கர்ணன் “ஆம், அதுதான்… நம் ஆலயத்தில் அமர்ந்துள்ளது. அதை மறந்துவிட்டிருக்கிறேன்” என்றான். “தேர் விரைந்து செல்லட்டும்… உடனடியாக நான் அதை பார்த்தாகவேண்டும்… இப்போதே” என்று தேர்ப்பாகனை நோக்கி கூவினான். தேர் செல்லச் செல்ல அவன் களிமயக்கு அழிந்து நிலைமீண்டான். பாகனை நோக்கி “விரைக! விரைக!” என்று கூச்சலிட்டான். தேர் சம்பாபுரிக்குள் நுழைந்ததும் வழக்கம்போல குடிகளின் வாழ்த்துக்களைப் பெற தேர்த்தட்டின்மேல் எழாமல் “நேராக விஜயத்தின் ஆலயத்திற்குச் செல்க!” என்றான். சிவதர் அவனிடம் எழுந்த அந்த விசையை நோக்கிக்கொண்டிருந்தார். அவன் மீண்டுவந்தது அவருக்கு உளநிறைவை அளித்தது.
ஆலயம் காலைப்பூசனைக்குப் பின் பூட்டப்பட்டிருந்தது. அவனுடைய தேர் நுழைந்தபோது முன்னரே புரவியில் வந்த வீரன் பூசகனை அழைத்து வந்துவிட்டிருந்தான். கர்ணன் தேரிலிருந்து இறங்கி ஆலயத்திற்குள் சென்று அரைமண்டபத்தில் நின்று கருவறைக்குள் நோக்கினான். முதற்கணம் அது பெருநாகம்போல் தோன்ற திகைத்தான். “விளக்கை ஏற்றுக!” என்றான். கருவறையின் இருளுக்குள் நெய்விளக்குகள் சுடர் ஏந்தின. வில்லின் வடிவம் துலங்கியெழுந்தது. கர்ணன் மூச்சுத்திணறலுடன் திரும்பி “நாகம்! மணிகர்ணன்!” என்றான். “இதை என்னால் கையில் எடுக்க முடியும் என்று தோன்றவில்லை, சிவதரே. இத்தனை பருமனுடன் இரும்பாலான வடிவம் கைக்கு உகந்தது அல்ல” என்றான். “நாகமென அது உடனிருக்கட்டும்” என்றார் சிவதர்.
அன்றிரவு அவன் ஒரு கனவு கண்டான். கோதையின் கரையில் அவன் ஆசிரியருக்கு காலிளைப்பாற்றிக்கொண்டிருந்தான். அவர் துயில்கொண்டதும் மெல்ல எழுந்து அவர் விழித்ததும் அருந்துவதற்காக நீர் அள்ளும்பொருட்டு ஆற்றை நோக்கி சென்றான். கொப்பரையில் நீருடன் திரும்பிநோக்கியபோது ஆசிரியர் துயின்றுகொண்டிருந்த இலைப்படுக்கையில் கரிய நாகம் ஒன்று கிடப்பதை கண்டான். காளிகர் அதை அங்கு கொண்டு வைத்துவிட்டார் போலும் என எண்ணி அதை ஆசிரியர் பார்ப்பதற்குள் எடுத்து அகற்றிவிடவேண்டுமென்று உளவிசை கொண்டு விரைந்து அணுகி வந்தான். கலத்தை அருகே வைத்துவிட்டு அதை குனிந்து எடுத்தான்.
அது நிழல்போல, முற்றிலும் இன்மை என்றாகும் அளவுக்கு எடையற்றிருந்தது. கையில் எடுத்து அதை அசைத்து மெய்யாகவே கையில் அது இருக்கிறதா என்று நோக்கினான். அதை நாணேற்ற வேண்டுமென்று எண்ணி நாணுக்காக சூழ நோக்கியபோது கையில் ஓர் அசைவை உணர்ந்து குனிந்து பார்த்தான். அது ஒரு கருநாகமாக மாறிவிட்டிருந்தது. நாகத்தின் செதில்தோலின் வழவழப்பை உணர்ந்தான். நாகத்தலை மேலே வளைந்தெழுந்திருந்தது. கீழ் நுனியில் வால் நெளிந்தது. அவன் திகைத்து கையை விட முயன்றபோது விரல்கள் அகலவில்லை. அதன் இமையா மணிகள் அவனை நோக்கியிருந்தன. சீறல் என குரல் எழுந்தது.
“என் பெயர் மணிகர்ணன். அறிக, எனது மண் வடிவம் இந்த வில்!” என்று அது கூறியது. “நீ பிறந்தபோது நான் உடனிருந்தேன். உன்னை தொடர்ந்து வந்தேன். நீ சென்ற இடமெங்கும் உன்னுடனிருந்தேன். உன் கனவுகளில் மெய்நிகர் நோக்குகளில் பலமுறை என்னை நீ அறிந்திருக்கிறாய்” என்றது. கர்ணன் “ஆம், அறிகிறேன்” என்றான். “என்னை நாணேற்றுக! நான் உன்னுடன் இருப்பேன்.” கர்ணன் நாணுக்காக சுற்றும் பார்க்க கையிலிருந்த வில்லின் நிழல் தரையில் விழுந்துகிடந்தது. அது நெளிந்து தலை தூக்கியது. “அவள் என் துணைவி. மணிகர்ணிகை என்று அவளுக்குப் பெயர். அவளை என் நாணாக்குக! போர்நிகழ்கையில் உன் கையில் இருந்து நாங்கள் தழுவி கலவிகொள்வோம். எங்கள் சீறல்கள் அனைத்தும் அம்புகளென்று எழும்” என்று மணிகர்ணன் சொன்னான்.
கர்ணன் குனிந்து அந்த நிழல் நாகத்தை எடுக்கப்போனான். அது நெளிந்தோடியது. அவன் துரத்திச்சென்றபோது வெளியே ஒழுகிச்சென்று அங்கு நின்ற ஒருவனின் கூடைக்குள் புகுந்துகொண்டது. அதனருகே நின்றிருந்த முதிய பீதவணிகன் சுருக்கங்கள் நிறைந்த கண்கள் மேலும் இடுங்க சிரித்து இடைவளைத்து வணங்கினான். “இதற்குள் உள்ளது என் வில்லின் நாண்” என்று கர்ணன் சொன்னான். பீதன் தலைவணங்கி அதை திறந்து காட்டினான். உள்ளே மென்மையான வெண்ணிற முடியாலான கயிறு இருந்தது. கர்ணன் திகைப்புடன் அதை கையால் வருடினான்.
கனவு கலைந்து எழுந்து அவன் உடல் நடுங்கினான். மஞ்சத்தறையின் கதவைத் திறந்து வெளியே வந்து “சிவதரே!” என்று கூவினான். சிவதர் அருகிருந்த அறையிலிருந்து எழுந்து வந்தார். “அந்த வில் எடையற்றது… என் கையில் அது மலர்மாலைபோல் இருக்கும். அதை நாணேற்றுவதெப்படி என நான் அறிவேன்… வருக!” சிவதர் “பொழுது விடியட்டும்” என்றார். “இல்லை, இதுவே பொழுது. இது அவன் எழுவதற்கான அறிவிப்பு. கிளம்புக, இப்போதே!” என்றான் கர்ணன். சிவதரின் தோளைப்பற்றி உலுக்கியபடி “சிவதரே, பல ஆண்டுகளுக்கு முன் பீதர்நாட்டு வணிகன் ஒருவன் இங்கே வந்தான். அவர்கள் நாட்டிலுள்ள பனிமுயல் ஒன்றின் முடியைப் பின்னிச் சமைத்த சரடு ஒன்றை காட்டினான். அதைக் கொண்டு யானைகளை கட்டி நிறுத்தமுடியும் என்று சொன்னான். நினைவிருக்கிறதா?” என்றான்.
“ஆம், விந்தையானவன். பட்டுவணிகன். ஆனால் பட்டுச்சரடுகளைவிட இருமடங்கு உறுதியானது அந்த முயல்முடிச் சரடு என்றான். அவனை உங்கள் அவைக்கு கொண்டுவந்தேன். பாண்டவர்களின் கானேகலின்போது நீங்கள் மதுவிலாடி வாழ்ந்த நாட்கள் அவை. அந்தச் சரடை நீங்கள் பார்க்கக்கூட இல்லை… அவனுக்குப் பரிசில் அளித்து அனுப்பும்படி சொல்லிவிட்டீர்கள்.” கர்ணன் “இல்லை, நான் பார்த்தேன். நான் தொட்டுப் பார்த்திருக்கிறேன். அவனை என் கனவில் மிகத் தெளிவாகவே கண்டேன். கனவில் அந்தச் சரடை தொட்டு அறிந்தேன்” என்றான். சிவதர் “விந்தைதான்” என்றார். “அந்தச் சரடுதான் விஜயத்தின் நாண்” என்றான். “அவனை எங்கிருந்தாவது கூட்டிவாருங்கள்… பீதர்களிடம் உசாவுங்கள். அந்த முயல்முடிச் சரடு உடனடியாகத் தேவை.”
“அரசே, அன்று நான் அளித்த கொடையை அவன் ஏற்கவில்லை. ஆகவே நான் நூறுபொன்னுக்கு அச்சரடை வாங்கினேன். அதை அப்போதே நம் அரும்பொருள் கருவூலத்திற்கு அனுப்பினேன். அங்கே பீதர்நாட்டுப் பொருள்நிரையில் அது இருக்கும்” என்றார் சிவதர். “அதுதான்… சென்று பாருங்கள். அது ஒரு நாகம். அது அங்கே சுருண்டிருக்கும்” என்றான் கர்ணன். “இல்லை, நானே வருகிறேன். வருக!” என முன்னால் சென்றான். கருவூலநாயகத்தை அவர் மாளிகையிலிருந்து வரவழைத்து பூட்டுக்களைத் திறந்து உள்ளே சென்றனர். கர்ணன் “நான் இங்கே பலமுறை வந்துள்ளேன் என்று தோன்றுகிறது. அந்தப் பெட்டி இருக்குமிடம்கூட எனக்குத் தெரியும்” என்றான்.
கருவூலநாயகம் சொல்வதற்கு முன்னரே அந்த பீதர்நாட்டுப் பெட்டியை அவன் கண்டடைந்தான். “இதுதான்… ” என்று கூவியபடி அதை எடுத்தான். அதை திறப்பதற்கு சற்று தயங்கினான். உள்ளே நாகம் இருக்கும் என அவன் அஞ்சுவதுபோலத் தோன்றியது. கைகள் சற்று நடுங்க அவன் அதை திறந்தான். உள்ளே வெண்ணிற நாகம்போல அந்தச் சரடு சுருண்டு அமைந்திருந்தது. மென்மயிரை சிறிய நூல்களாகத் திரித்து அந்நூல்களைத் திரித்து திரிகளாக்கி அத்திரிகளைத் திரித்து சரடுகளாக்கி அச்சரடுகளைத் திரித்து முறுக்கி கயிறாக்கியிருந்தனர். திரிகளின் பின்னல் நாகத்தின் உடலின் செதில்பரப்பு போலவே தோன்றியது.
கர்ணன் அதை கையில் எடுத்து நீட்டினான். இரண்டு மாறு நீளமிருந்தது அது. யானைக்கொம்பில் நுணுக்கமாகச் செதுக்கியது போலிருப்பதாக சிவதர் எண்ணிக்கொண்டார். அதை வாங்கி மெல்ல கைகளால் உருட்டிப் பார்த்தார். கருவூலநாயகம் அதை கையில் வாங்கி “வெறும் மென்மயிரால் ஆனது அல்ல. இளஞ்சூட்டில் மயிரை குழையச்செய்து ஏதோ பசைசேர்த்து உருக்கியதுபோலாக்கி இதை முறுக்கியிருக்கிறார்கள். உலோகம்போல் மாறிவிட்டிருக்கிறது” என்றார். “ஆனால் மென்மயிரானதனால் எடையற்றதாகவும் உள்ளது.” கர்ணன் “இதுதான்… எக்கணமும் இது உயிர்கொண்டுவிடும்” என்றான். பின்னர் சிரித்தபடி “கரியவனின் வெண்ணிறத் தோழி!” என்றான். “வருக!” என்றபடி வெளியே விரைந்தான்.
பின்னிரவில் விஜயம் இருந்த ஆலயத்திற்கு சென்றான். அவன் செல்லும் செய்தி அறிவிக்கப்பட்டு பூசகர் ஓடிவந்து கதவைத் திறந்து விளக்குகளை ஏற்றினார். கர்ணன் அருகிருந்த சிறுசுனையில் நீராடி ஈர ஆடையுடன் கருவறைக்குள் நுழைந்தான். பூசகர் அருகே வந்து “குருதியிட்டு தொட்டெடுப்பதே முறை” என்றார். கர்ணன் “எக்குருதி?” என்றான். “குருதிகளில் தூயது தற்குருதி” என்றார் பூசகர். கர்ணன் தன் கட்டைவிரலைக் கிழித்து மூன்றுசொட்டுக் குருதியை அதன்மேல் வீழ்த்திவிட்டு அதை கையில் எடுத்தான். மூங்கில் போலவே எடையற்றிருந்தது. அவன் அதை வெளியே கொண்டுவந்தான்.
“எடையற்றிருக்கிறது” என்று அவன் சொன்னான். “விந்தைதான். உலோகம் எப்படி இத்தனை எடையற்றதாக இருக்கவியலும்?” சிவதர் “எதுவும் நுரையாகும்போது எடையிழக்கும்” என்றார். அப்போதுதான் அதன் நுட்பம் அவனுக்கு புரிந்தது. வியப்புடன் அந்த வில்லை புரட்டிப் புரட்டி பார்த்தான். அதை தன்முன் நிறுத்தி நுனிபற்றி வளைத்தான். எதிர்விசை களிற்றுக்கு நிகரெனத் தோன்றியது. அத்தனை எடையற்ற ஒன்றில் அவ்வளவு விசை எப்படி கூடுகிறது என அவன் உள்ளம் வியந்தது. “மலையிறங்கும் காட்டாற்றின் ஆற்றல்கொண்டுள்ளது, சிவதரே” என்றான். “பெருங்களிறை கட்டிநிறுத்துவது அந்தச் சரடு என்றான் பீதன்” என்றார் சிவதர்.
அதை தன்னருகே தோழன் என நிறுத்தினான். கைநீட்டி அதன் மேல்நுனி பற்றி இழுத்தான். இளம்புரவி என அது துள்ளித்திமிற ஒரே வீச்சில் வளைத்து மென்மயிர்ச் சரடை எடுத்து அதில் பூட்டினான். முகம்மலர அதன் நாணைச் சுண்டி இழுமோசை எழுப்பினான். சிவதர் மெய்ப்புகொண்டு கைகூப்பினார். கர்ணன் புது யாழ் பெற்ற பாணன்போல அந்த நாணை மீட்டிக்கொண்டே இருந்தான். உளம்விம்மச் செய்யும் அந்த இசை அவனை பிறிதொருவனாக்குவதை சிவதர் பார்த்துக்கொண்டே நின்றார்.