சிரிப்புடன் புத்தாண்டு

ERA1

ஈரட்டிச் சிரிப்பு…

ஈரட்டி சந்திப்பு

இம்முறை புத்தாண்டை ஈரட்டியில் எங்கள் மலைவிடுதியில் நண்பர்களுடன் கொண்டாடலாம் என்று திட்டமிட்டேன். நண்பர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து ஈரோடுக்கு  வந்தனர். சிலர் இறுதிநேரச் சிக்கல்களால் வரமுடியாமலாகிவிட்டது. விஷ்ணுபுரம் நிகழ்ச்சி முடிந்து ஐந்தாறுநாட்களே ஆகிவிட்டிருந்தமையால் பலருக்கு விடுப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது.

ஈரட்டிக்குச் செல்லலாம் என முடிவுசெய்தமைக்குக் காரணம் சென்றமுறை நண்பர்களுடன் அருவிப்பயணம் சென்றபோது அங்கே ஒருநாள் இரவு மட்டுமே தங்கி கிளம்பியதனால் உணர்ந்த நிறைவின்மைதான். நவம்பர் முதல் ஜனவரி முடியத்தான் ஈரட்டி மிதமான தட்பவெப்பத்துடன் அழகாக இருக்கும்.

je

நான் 30-ஆம் தேதி மாலை கோவை எக்ஸ்பிரஸில் கிளம்பி விடியற்காலை ஈரோடு சென்றேன். ரயில் நிலையத்திற்கு அந்தியூர் மணி, சந்திரசேகர், யோகேஸ்வரன் ஆகியோர் வந்திருந்தார்கள். குளிரில் சென்றிறங்கியதுமே நட்புக்கூடல் உண்மையில் தொடங்கிவிட்டது. வழக்கமான கடையில் காபி. அங்கிருந்து விடுதியறைக்குச் சென்றேன்.

சென்னை நண்பர்கள் ராஜகோபாலன், ராகவ், ரகு, சண்முகம் ஆகியோர் முந்தையநாளே வந்து விஜயராகவன் வீட்டில் தங்கியிருந்தார்கள். யோகேஸ்வரன் காலையில் ரயில் நிலையம் வந்து என்னை வரவேற்றார். ஈரோடு விடுதியில் ஏற்கனவே கடலூர் சீனு வந்திருந்தார். சென்னை செந்தில் முந்தையநாளே வந்திருந்தார்.

ER3

நான்கு கார்களில் ஈரட்டி சென்றோம். செல்லும் வழியில் அந்தியூரிலிருந்து இரு சமையற்காரர்களை கூட்டிக்கொண்டோம். சமையற்பொருட்களையும் வண்டியில் ஏற்றிக்கொண்டோம். வெவ்வேறு ஊர்களிலிருந்து நண்பர்கள் ஈரட்டி நோக்கி வந்துகொண்டிருந்தனர். அந்தியூரில் காலையுணவு.

காலை பத்துமணிக்குள் அனைவருமே வந்துவிட்டிருந்தார்கள். ஈரோட்டிலிருந்து பாரி, மணவாளன், கிருஷ்ணன், அந்தியூர் மணி, ஈஸ்வரமூர்த்தி. சிவா, சந்திரசேகர், கோவையிலிருந்து நரேன், செந்தில்குமார், அரங்கசாமி, கதிர்முருகன், கார்த்திக் [சிட்னி], விஜய்சூரியன். திருப்பூரிலிருந்து ராஜமாணிக்கம். நாமக்கல்லில் இருந்து வரதராஜன். பெங்களூரிலிருந்து ஜி.எஸ்.வி.நவீன். நெல்லையிலிருந்து சக்தி கிருஷ்ணன்.

er1

நாள் முழுக்க வேடிக்கைப்பேச்சு மட்டும்தான். இலக்கியவிவாதம், வம்புகள் கிடையாது என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே இது பெரும்பாலும் சக்திகிருஷ்ணனின் அரங்கு. மனிதர் புகுந்து விளையாடிவிட்டார். சிரிப்பு மட்டுமே நீண்டது. சிரிக்க ஆரம்பித்தால் ஒரு கணத்தில் மொத்த வாழ்க்கையே சிரிப்புக்குரியதாக ஆகிவிடுகிறது. அதன்பின் எல்லாமே சிரிப்புதான். சிரிப்பை நிறுத்துவதுதான் கடினம்.

ஈரட்டி விடுதிக்கு முன் ஒரு மரத்தின் அடியில் கருங்கல்லை போட்டு வட்டமாக பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருந்தன. ராஜமாணிக்கம்தான் ஈரட்டி விடுதியின் பொறியாளர். அவருடைய திட்டம் அது. அந்தக்கருங்கல் பெஞ்சு என் மனதுக்கு மிகப்பிரியமானது. அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

ER3

ஈரட்டியில் இது நாய்கள் குட்டிபோடும் காலம். பக்கத்து தோட்டத்தில் நாய்க்குட்டிகள் இரண்டு இருந்தன. இந்தக் காட்டில் வளரும் நாய்கள் தெருநாய்களைப் போன்றவை அல்ல. மனிதர்களை விரும்புபவை. சுதந்திரமாக வேட்டையாடி உண்பவை என்பதனால் ஆரோக்கியமானவை. ஆகவே உற்சாகமானவை.

ஈரட்டியை காக்கும் கறுப்புநாய்கள் இரண்டு உண்டு. மணி, கறுப்பன். அவர்களுக்குள் அபிப்பிராயமோதல்கள் இருந்தாலும் வருபவர்கள் அனைவரிடமும் நட்புடனும் மதிப்புடனும் பழகுவது மட்டுமல்லாமல் எல்லா நட்புக்கூடல்களிலும் நடுவே வந்து படுத்துக்கொண்டு ஆர்வமாக பங்கேற்பதும் உண்டு.

er5

மாலை காட்டுக்குள் கூட்டமாக நடை சென்றோம். செறிந்த காடுதான். யானைகளும் காட்டுப்பன்றிகளும் உண்டு. அவ்வப்போது சிறுத்தைகள். விஜயராகவன் ஒரு கருஞ்சிறுத்தையை முற்றத்தில் பார்த்திருக்கிறார். ஆனால் பொதுவாக அபாயம் அற்றது. அதிலும் இத்தனைபேர் கும்பலாக சிரித்துக்கொண்டு போவதைக்கண்டு அவை அஞ்சி ஒண்டிக்கொண்டுவிடும்.

ஈரட்டியில் இம்முறை மழை கொஞ்சம் குறைவுதான். பெய்தமழையில் காடு பச்சைப்பசேலென்று ஆகிவிட்டிருக்கிறது. ஜூன் மழைவரை தாங்கவேண்டும். அதன் நடுவே ஓரிரு சிறிய மழைகள் பெய்யும் என்றால் பசுமை தப்பித்துக்கொள்ளும். ஈரட்டி ஒரு சிறு குன்று. அங்கிருந்து நோக்கினால் சுற்றிலும் பசுமையின் வெவ்வேறு அழுத்தமாறுபாடுகளாக அடுக்கப்பட்ட குன்றுகள். ஒளிதேங்கிய வானம். மிகமிக மெல்ல நிகழும் வாழ்க்கை.

er4

ஈரட்டி விடுதி இரண்டு கூடங்களும் ஓர் அறையும் உள்ளது. ஒருவர் படுக்கத்தக்க பதினைந்து படுக்கைகள். கூட கொஞ்சம் மெத்தைகள், தரையில் போட்டுக்கொண்டு படுக்க. ஆடம்பரமானது அல்ல. ஆனால் மலைப்பங்களாக்களுக்குரிய எளிமை கொண்டது. விஜயராகவன் பொறுப்பேற்று கட்டி முடித்தது. நாங்கள் பத்துபேர் இதன் கூட்டு உரிமையாளர்கள்.

ஈரட்டி அருகே எனக்கு ஒரு நிலம் இருக்கிறது. அங்கே ஏதாவது செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னமும் என் மனமும் பொழுதும் அமையவில்லை. ஈரட்டி பகுதியே பொதுவாக மிக அமைதியானது. அங்கிருக்கும் சுத்தமும் ஒரு பெரிய ஈர்ப்பு. இன்னும் மக்கள்நெரிசல் இல்லை. பயணிகள் இல்லை. ஆகவே குப்பைகள் குவியவில்லை.

er2

ஈரட்டி விடுதியில் முன்னரும் தங்கியிருக்கிறேன். நண்பர்களுடன் அங்கே தங்குவது ஒரு கொண்டாட்டம். எல்லாருமே வீட்டை விட்டுவிட்டு வந்திருப்பார்கள். விட்டுவிட்டு வந்திருக்கிறோம் என்னும் உணர்வே ஒரு பெரிய களிப்பை அளிப்பது. அது எதில் இருக்கிறோமோ அதன்மேல் கொள்ளும் வெறுப்பு அல்ல. மெல்லிய இளைப்பாறல் மட்டுமே. உலகியலுக்கு அந்த இளைப்பாறல் மிக இன்றியமையாதது

மனைவியர் கணவர்கள் மீது சற்றேனும் பிரியம் கொண்டவர்கள் என்றால் அந்த நாட்களில் கணவர்களை எதன்பொருட்டும் அழைக்கக் கூடாது. ஆனால் அந்த உணர்வுகொண்ட பெண்கள் மிக அரிது. சொல்லப்போனால் அப்போதுதான் கூடுதலாக அழைப்பார்கள் [ஏங்க சீப்ப எங்க வச்சு தொலைச்சீங்க?] ஏதோ ஒருவகையில் கணவன் தன் நினைப்பாக இருக்கவேண்டும் என்னும் எண்ணம். திரும்பி வந்து ‘அங்க ஒண்ணுமே ஓடல. உன் ஞாபகமா இருந்தேன்’ என்று சொன்னால் மகிழ்ச்சி.

அரிதாக கணவர்கள் கிளம்பிய சில மணிநேரத்திலேயே செயற்கையாக ஒரு சின்ன இக்கட்டை உருவாக்கி அவர்களுக்கு தெரிவித்துவிடும் பெண்கள் உண்டு [கொழந்தைக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல… பரவாயில்ல .நீங்க உங்க வேலைய பாருங்க]. அத்தகைய அழைப்புக்கள், சிக்கல்கள் இருந்தால் எந்த விடுமுறையும் பெரும்பாலும் பொழுதுகழிப்பே. அதற்காகச் செலவிடும் பணம் வீண். உடன் வருபவர்களின் நேரமும் சமயங்களில் வீணாகும்.

ஏனென்றால் அவ்வாறு விட்டுச்செல்வது தனக்கு எதிரான ஒரு செயல்பாடு என அவர்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே கணம்கூட கணவர்கள் விடுதலையுணர்வை அடைய விடமாட்டார்கள். அவர்களுக்கு சொல்லிப்புரியவைக்கலாம். ஆனால் எல்லா பெண்களும் புரிந்துகொள்ள மாட்டார்கள்

era

 

மனைவியரின் இந்த பிக்கல்பிடுங்கலுக்கு இடம்கொடுக்கும் ஆண்கள் பெரும்பாலும் திடமான உள்ளம் அற்றவர்கள். அல்லது வேறு எவ்வகையிலோ மனைவியிடம் மாட்டிக்கொண்டிருப்பவர்கள்.  பல நண்பர்கள் இந்த துரதிருஷ்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரவர் ஊழ்.

நல்லவேளை, அருண்மொழி வேறுவகை. இந்தப்பயணம் என்றல்ல எந்தப்பயணம் என்றாலும் நான் கிளம்பிவிட்டால் அதன்பின் குறுஞ்செய்தி மட்டுமே. அதுவும் தேவையென்றால் மட்டும். பெரும்பாலும் ஓரிரு நாட்களுக்கு ஒன்றுவீதம். அதனால் நான் அருண்மொழிமேலும் அவள் என் மேலும் அன்பில்லாதவர்கள் ஆகிவிடுவதில்லை. சொல்லப்போனால் அன்பை வளர்ப்பது இது. ஒருவரை இன்னொருவர் மகிழ்வுறுத்திப்பார்ப்பதே அன்பைப் பெருக்கும் ஒரே வழி.குறைந்தபட்சம் இன்னொருவர் மகிழ்ச்சியை பறிக்காமலாவது இருக்கலாம்.

 walk

எங்கள் சந்திப்புகளை ஒருவகை  ‘நண்பர்த்தேர்வு’க்குப்பின் ஏன் அறிவிக்கிறோம், ஏன் எல்லாரையும் அனுமதிப்பதில்லை என்றால் இதனால்தான்.  புதியவர்கள் சிலசமயம் பெரிய இழப்புகளை உருவாக்கிவிடுவார்கள். குடிக்காமலிருப்பது எங்கள் சந்திப்புகளின் நிபந்தனைகளில் ஒன்று. கூடவே இப்படிச் சில ‘ குடும்பச் சிக்கல்களும்’ இல்லாமலிருக்கவேண்டும். இந்த நண்பர்கள் எல்லாருமே பல சந்திப்புகள் வழியாக தங்கள் ‘தகுதியை நிரூபித்தவர்கள். ஆகவேதான் இத்தகைய சந்திப்புகள் சாத்தியமாகின்றன. நண்பர்கள் பலர் தங்கள் தோழர்கள் ‘எப்டீங்க உங்கள இதுக்கெல்லாம் வீட்டுலே விடுறாங்க?’ என்று கேட்பதாகச் சொல்வதுண்டு.

 

இது ஒன்றும் ஆணாதிக்கக் கூற்று அல்ல. இதையே பெண்களுக்கும் சொல்லிவருகிறேன். அவர்கள் குடும்பத்திலிருந்து விடுபட்டு தங்களுக்கான சிறிய பயணங்களை, கூடுகைகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதில் கணவர்கள் தலையிட்டு அவர்களின் விடுதலையைக் குலைக்காமலிருக்கவேண்டும். ஈரட்டியையேகூட பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

walk

ஈரட்டியின் காடு பசுமையாக இருந்தாலும் மூங்கில்கள் மட்டும் காய்ந்து நின்றிருக்கின்றன. வரட்சி காரணம் அல்ல. முதுமைதான். இந்தவகை மென்மூங்கில்கள் காட்டில் உடனடியாக யானைகளால் உண்ணப்படவேண்டும். எஞ்சியவை முறிந்து விழுந்து மட்கும். காட்டினூடாக நடப்பது என்பது எத்தனைமுறை பழகியும்கூட புலன்களை கூர்கொள்ளச்செய்து ஒரு கொப்பளிப்பாக உள்ளத்தை ஆக்கிவிடுகிறது

பொதுவாக இத்தகைய நட்புக்கூடல்களில் இன்று மது இல்லாமல் இருப்பதில்லை. மதுக்களியாட்டங்களை ஏதேனும் குறைசொன்னால் பாய்ந்துகடிக்க வரும் பெருங்கூட்டம் உருவாகியுள்ளது. அவர்களுக்கு மதுவுக்கு அப்பால் களியாட்டுகள் உள்ளன என்றே தெரியவில்லை. மதுக்களியாட்டில் மது மட்டுமே இருக்கும். மது இல்லாத இடத்தில் உண்மையான சிரிப்பும் கொண்டாட்டமும் உண்டு. முக்கியமாக மறுநாள் காலைகள் மேலும் அழகியவை.

இரவில் தீமூட்டி கூடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சிரிப்பும் நையாண்டியும்தான். தீயில்லாமல் வெளியே நிற்கமுடியாத அளவுக்கு குளிர். ஆனால் அத்தகைய குளிரில்தான் தீ அழகும் அணுக்கமும் கொண்டதாக ஆகிறது.

நள்ளிரவில் கூச்சலும் சிரிப்புமாக புத்தாண்டை எதிர்கொண்டோம். மறுநாள் கொஞ்சம் இலக்கியம் பேசினோம். காந்தி, நாவலின் வடிவம் என. அதை தவிர்க்க முடியாது. ஆனால் அதையும் அந்த மனநிலை காரணமாக கிண்டலும் சிரிப்புமாகவே பேசினோம்.

புத்தாண்டு கேக்கை நான் வெட்டினேன். மேஜை அலங்காரம் எல்லாம் இல்லை. சும்மா பிளாஸ்டிக் நாற்காலியில் வைத்து. கிரீம் இல்லாத பிளம் கேக். [ப்ளம் ப்ளம் என்று போனிஎம்  இசைக்குழுவின் பாடல் செவியில் ஓடினால் நீங்களும் என் வயது என்று அர்த்தம்]. அதை எங்களுக்கு நாங்களே ஊட்டிக்கொண்டோம். இரு கருப்பர்களுக்கும் கேக் அவ்வளவாக பிடிக்கவில்லை என மறுநாள் ஆங்காங்கே துண்டுகள் கிடப்பதிலிருந்து தெரிந்தது.

ஈரட்டி நீர்வீழ்ச்சி எங்கள் விடுதிக்கு மட்டுமே உரிய ஒன்று. கொஞ்சம் நீர் இருந்தது. அந்த நீர்க்குளத்தில் கூட்டமாக நீராடினோம். கிட்டத்தட்ட பனிக்கட்டி உருகிய குளிர் கொண்ட நீர். மதியம் அசைவ உணவு. பேச்சும் பெரும்பாலும் அசைவம்தான். [ஏனுங்க லாரிக்காரங்க மாதிரி பேசறீங்க என்று நாமக்கல் வரதராஜன் வருத்தப்பட்டதாகச் சொன்னார்கள்]

ஒன்றாம்தேதி பெரும்பாலானவர்கள் கிளம்பிச்சென்றார்கள். நான், பாரி, மணவாளன், கார்த்திக், நவீன், அந்தியூர் மணி, கடலூர் சீனு ஆகியோர் மட்டும் மேலும் ஒருநாள் தங்கினோம்.  நான் ஒருநாள் கூடுதலாகத் தங்க விரும்பினேன். முக்கியமான காரணம் ஈரட்டியில் தான் தனியாக இருந்ததில்லை என்பது. ஆனால் நண்பர்கள் கிளம்பியபோது சிலர் உடனிருந்தால் நல்லது என்று தோன்றியது

tea

[சுலைமானி தயாரிப்பு]

இரண்டாம் தேதி முற்றிலும் இலக்கியம், அரசியல், குடும்பம் ஏதும் இல்லாமல் கடந்தது. ஈரட்டியில் பி.எஸ்.என்.எல் தவிர எந்த செல்பேசிக்கும் தொடர்பு கிடைக்காது. பி.எஸ்.என்.எல் கூட ஓரிரு இடங்களில்தான். ஆகவே உலகத்தொடர்பே இல்லை. காலையில் ஒருமுறை எலுமிச்சை சேர்த்த கருப்புத் தேநீர் போட்டு நண்பர்களுக்கு அளித்தேன்.

சுலைமானி என்று எலுமிச்சை டீயை சொல்கிறார்கள். ஈரானிய கடைகளில் நன்றாகப்போடுவார்கள். மலபார் மாப்பிள்ளைகள் இதில் நிபுணர்கள். பஷீருக்கு மிகவும் பிடித்தமானது. பலநூறாண்டுகளுக்கு முன்னரே சீனாவிலிருந்து அரேபியாவுக்கு சென்றுவிட்டது.  எலுமிச்சை பாலைவனத்தின் செடி. ஈரான் பலவகையான சிட்ரஸ் வகை பழங்கள் விளையும் நிலம். ஏற்கெனவே அவர்கள் எலுமிச்சை, வெல்லம் கலந்த பானங்களை குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆகவே சுலைமானி உருவாகிவிட்டது.

cake

சுலைமானிக்கு மிகக்குறைவாக நல்ல டீத்தூள் போடவேண்டும். டீ கொதிக்கக்கூடாது. எலுமிச்சை அளவோடு பிழியவேண்டும். சுலைமானி சிறப்பாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். பஷீரை நினைக்காமல் சுலைமானி குடிப்பது கடினம்,

அதன்பின்னர் பாத்திரங்களை கழுவி முடித்து இன்னொரு டீ. முன்பெல்லாம் ஊட்டி குருகுலத்தில் வேலைக்கு ஆட்கள் வைக்கும் வழக்கம் இல்லை. வருபவர்களே சமைப்பார்கள், பாத்திரம் கழுவுவார்கள். வெள்ளைக்காரர்கள் மிக விரும்பி கூட்டாக அதை செய்வார்கள். நான் ஊட்டியில் நிறைய வேலைசெய்திருக்கிறேன்.  சுவாமி தன்மயாவிடம் [டாக்டர் தம்பான்] நரம்பியல் கொள்கைகள் தத்துவத்தில் ஊடுருவுவதை பாடம்கேட்டதெல்லாம் அப்போதுதான்.

ஈரட்டி உள்ளத்திற்கு மிக அணுக்கமான இடம். ஊட்டி போல குளிர் இல்லை. ஆனால் சுற்றிலும் காடு. அமைதியும் வெளிச்சமும் தேங்கி நிற்கும் இடம். முற்றிலும் சுற்றுலா கிடையாது. ஆகவே இன்னொரு பயணி கண்ணில்பட வாய்ப்பே இல்லை. இரண்டுநாட்கள் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு தங்குவதற்குரிய இடம்.

இம்முறை இரவில் நல்ல குளிர் இருந்தது. பொதுவாக இங்கே ஆண்டில் நான்கு மாதங்கள்தான் கொஞ்சம் குளிர் இருக்கும். மழைக்காலமும் குளிர்காலமும் உகந்தவை. கோடைகாலத்தில்கூட மாலைகள் இனிமையானவை.

er11

ஈரட்டியில் இந்தப் புத்தாண்டு புலர்ந்தது ஒரு நல்ல தொடக்கம். வஞ்சினங்கள் இல்லை. சூளுரைகள் இல்லை. திட்டங்களும் கணக்கெடுப்புகளும் இல்லை. சிரிப்பு மட்டுமே. புத்தாண்டுகள் அவ்வாறுதான் தொடங்கப்படவேண்டும் என்பது நித்யாவின் எண்ணம். ஏனென்றால் சூளுரைகளும் வஞ்சினங்களும் நாம் அதுவரை சரியாக இருக்கவில்லை என நமக்கே சொல்லிக்கொள்பவை.

மகிழ்ச்சியாக இருப்பதற்கு முயற்சி தேவை என்பார் நித்யா. மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து, போதிய பயிற்சிகள் எடுத்துக்கொள்ளாதவர்கள் உண்மையான மகிழ்ச்சியை அறிவதே இல்லை. மகிழ்ச்சி உங்கள் காலடிவரை வரும். ஆடை தொட்டு அழைக்கும். நீங்கள்தான் எடுத்து ஒக்கலின் வைத்துக்கொள்ளவேண்டும்.

மெய்யான மகிழ்ச்சி என்பது மூளையும் மனமும் முழுவிழிப்பில் இருக்கும்போது மட்டுமே அடையப்படுவது. எந்தவகையான மயக்கமும் மகிழ்ச்சிக்கு எதிரானதே. விலங்குகள், இயற்கை, நல்ல உணவு, நட்புகளின் சுற்றம் ஆகியவற்றாலானது மெய்யான மகிழ்ச்சி. அறிவார்ந்த மகிழ்ச்சி என்பது எப்போதும் தர்க்கத்தை கடந்துசெல்லுதலே. நித்யாவின் சொற்களை இத்தனை ஆண்டுகளுக்குப்பின் மிக அருகே என கேட்கிறேன்.

முன்பெல்லாம் குருகுலத்தில் புத்தாண்டு என்பது வெடிச்சிரிப்புகளின் ஓசை மட்டுமே நிறைந்ததாக இருக்கும். பழைய ஊட்டி குருகுலம் ஈரட்டியில் மீண்டு வந்ததுபோலிருந்தது. ரயிலில் திரும்பி வரும்போது படுக்கையில் கால்களை நீட்டிக்கொண்டு கண்களை மூடினேன். அப்போதும் முகம் புன்னகையில் மலர்ந்திருப்பது தெரிந்தது.

ஈரட்டி புகைப்படத்தொகுப்பு

=========================================

ஈரட்டி பொதுக்குழு

ஈரட்டி புகைப்படங்கள்- கடிதங்கள்

ஈரட்டிச் சிரிப்பு – கடிதங்கள்

ஈரட்டிச் சந்திப்பு -கடிதங்கள்

ஈரட்டிச் சிரிப்பு -கடிதங்கள்

முந்தைய கட்டுரைபிரதமன் – கடிதங்கள் – 8
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12