வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களில் நாம் எதிலாவது மீண்டு மீண்டு அடுத்ததை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். மீட்சியின் தொடரே வாழ்க்கை.
ஒவ்வொருநாளும் காலையில் போர்வையை காலால் விலக்கி தூங்கி எழுவது ஒருவகை பிறப்பு என நான் நினைப்பதுண்டு. காலால் உதைத்து எம்பி எழுந்து முகம் வெளிக்காட்டி கருவறைநீங்குதல். இருண்ட சிறையிலிருந்து கருப்பாதை வழியாக ஒரு பயணம். ஓர் அதிர்ச்சி, கண்கூச்சம், மூச்சுத்திணறல். சூழ்ந்துகொள்ளும் புதிய உலகம். வாழ்க்கையின் ஒவ்வொரு கண்டடைதலும் ஒரு வகை மீட்சி.
அரிதாக நாம் ஆழமாக சிக்கிக்கொள்கிறோம். நுழைவு வாயிலில் தவறாக அடைத்துக்கொள்கிறோம். உயிரளிக்கும் தொப்புள்கொடியே கழுத்தை சுற்றிக்கொள்கிறது. ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொருவகை மீட்சி. ஆகவே மீளுதலைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். மானுடக்கதையாகவே அது மாறக்கூடும்.
இந்தக் கட்டுரைகள் நேரடியாகவே வாசகர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் விளைவுகள். வாசகர்களுடன் உரையாடிக்கொண்டே இருப்பது எழுத்தாளர்களின் இயல்பு. சுந்தர ராமசாமி, வண்ணதாசன் அனைவருமே உரையாடியவர்கள். ஆனால் இத்தனை பெரிய உரையாடல்களை இணையமே இயல்வதாக்கியது. இந்த உரையாடல்கள் அனைத்தும் மீட்சியின் கதைகள். மீளவிழைவோருக்கு உதவக்கூடியவை.
நண்பர் அருணாச்சலம் மகாராஜன் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.
ஜெ
குக்கூ குழந்தைகள் வெளி ( Cuckoo Movement for Children)
சமகாலத்தில் ஒரு மனிதன், தனக்குமட்டும் நிகழ்வதாக எண்ணிக்கொள்ளும் பிரச்சனைகளில் பல தனிப்பிரச்சினை அன்று, அனைவருக்குமான பொதுப்பிரச்சனை. இதற்கு தனிப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் உண்மையில் உதவாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரசனை, தேடல், அறிவுத்திறன், வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடையவேண்டியது இது. ஆகவே இப்பிரச்சினையின் பொதுவான தளங்கள் என்னென்ன என்று மட்டுமே சொல்லமுடியும். நதிப்பெருக்கென சுழித்தோடும் இவ்வாழ்வில் ஒருவனது தன்னறத்தை அடைவதற்கான பயணத்தையோ அல்லது அதற்கான தாகத்தையோ துவங்கிவைக்கும் வல்லமை இப்புத்தகத்தின் எழுத்துகளுக்கிருக்கிறது.
வெளியீடு:
தன்னறம் நூல்வெளி
புத்தகங்கள் பெற:
9843870059