இரண்டு – சத்யஜித் ரே

.

இனிய ஜெயம்

சத்யஜித் ரே  இயக்கிய ஆவணப்படம் ஒன்றினை தேடியபோது [அவர் தாகூர் குறித்து எடுத்த ஆவணப்படத்தில் தாகூரே சொந்தக் குரலில் தேசிய கீதம் பாடும் காட்சி ஒன்று உண்டு என்றொரு வதந்தி] ரே இயக்கிய  இந்தக் குறும்படம் கிட்டியது .

பத்தே நிமிட குறும்படத்தில் எத்தனை வலிமையானதொரு உணர்வு நிலையை பொதிந்து, கலையாக்கி, காலத்தில் நிறுத்திவிட்டார் மனிதர் .  காமிரா நோக்கு முழுதுமே ,பெரும்பாலும் மேலிருந்து கீழே பார்க்கும் கோணம் . காலுக்குக் கீழ் உழலும் அற்ப மானுடனே எனும் கோணம் .

புட்டு [அவனது மிக்கி மௌஸ் தொப்பியில் உள்ள பெயர் ]  கீழே இருக்கும் சிறுவன் கையில் இருக்கும் குழலை விட மேம்பட்ட குழல் தன்வசம் இருப்பதை ஜன்னல் வழியே வாசித்து அவனுக்கு  காட்டுகிறான்.  சிறுவன் தட்டிக்காட்டும் மத்தளத்தை விட , புட்டு வசமிருக்கும் இயந்திர மனிதன் பொம்மையோ , உணவு உண்ணும் கரடி பொம்மையோ , கிடார் வாசிக்கும் மனிதன் பொம்மையோ மேம்பட்டது தானே ? அவற்றை காட்டாமல் ஏன் மத்தளம் கொட்டும் குரங்கு பொம்மையை காட்டுகிறான் ? அங்கிருந்துதான் புட்டுவின் ஆளுமை முழுமையாக வெளிப்படத் துவங்குகிறது .

ஏற்கனவே புட்டு சதா உண்டுகொண்டு இருப்பவனாக இருக்கிறான் , மென்று முடித்த பப்புள் கம்மை ,விலைமிகுந்த பொம்மையின் தலையில் ஒட்டும் திமிர் கொண்டவனாக ,  பலூனை நெருப்பு வைத்து உடைக்கும் [உள்ளார்ந்த குரூரம்] உள்ளம் கொண்டவனாக , செய்து அடுக்கிய பிரமிட்டின் கடைசி கண்ணியில் [மனதளவில்] நிற்பவனாக இருக்கிறான் .  இந்த தருணம் துவங்கி ,போட்டி மனப்பான்மை தாண்டி சிறுவனை ,கேலி செய்து மட்டம் தட்டும் இடத்துக்கு , அவன் கட்டும் பிரமிட்டின் அடுத்த படிக்கு , உயர்கிறான் .

அந்த கேலியால் சீண்டப்பட்டே சிறுவன் ,முகமூடியும் வில்லும் அம்பும் கொண்டு வந்து புட்டுவை பயமுறுத்தப் பார்க்கிறான் . புட்டு வித விதமான வேடங்களில் வந்து [  வரைந்த மீசை அதுவும் முறுக்கப்பட்ட மீசை ] சிறுவனை எதிர்கொள்கிறான் . வில்லும் அம்பும் கத்திக்கு ஓரளவு தாக்குப் பிடிக்கும் .எந்திரத்துப்பாக்கி முன்னால் முற்றிலும் தோற்றுப்போகும் என்பதுதானே வரலாறு ? சிறுவன் தோற்றுப் போகிறான் .

இறுதி சுற்றில் சிறுவன் பட்டம் விடுகிறான் .புட்டுவுக்கு பொறுக்க வில்லை .ஆம் அது உயரத்தில் பறக்கிறது .அவன் வீட்டை விட உயரமாக .  அது வரை வெல்லும் விளையாட்டை விளையாடிய புட்டு ,கொல்லும் விளையாட்டை தேர்வு செய்கிறான் . கவணால் முயன்று ,தோற்று ,துப்பாக்கி கொண்டு பட்டத்தை கிழித்து எறிகிறான் .பட்டம் சிதையும் கணம் அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம் .அதன் பிறகே குனிந்து சிறுவனை பார்க்கிறான் . வானம் அளைந்து கிடந்த பட்டம் ,கிழிந்து புழுதியில் உழன்று சிறுவன் கையை சேர்க்கிறது .

வெற்றி மிதப்பில் அறைக்கு திரும்பும் புட்டு ,அந்த மிதப்பின் உச்சியில் தன்னிடம் இருக்கும் அத்தனை பொம்மைகளையும் இயக்கி தன்னை சுற்றி உலவ விடுகிறான் .  அந்த மிதப்பில் விழுகிறது அடி . கீழிருந்து மீண்டும்  எழுந்து வருகிறது குழலோசை .  அடைபட்ட அறைக்குள் நின்று , சட்டமிட்ட ஜன்னல் வழியே , இசை எழுந்து பரவும் வானை ,அவன் நிரந்தரமாக தவற விட்டு விட்ட வானைக்கண்டு உறைந்து நிற்கிறான் புட்டு .  அவன் இயக்கிய விட்ட பொம்மைகள் ஒன்றை ஒன்று மோதி ,அவன் கட்டி வைத்த பிரமிட் சரிவதில் படம் முடிகிறது .

பரியேறும் பெருமாள் போன்ற, காண விரும்பாத ‘யதார்த்தங்களை’ அதிலிருக்கும் நீலக்கலர் குறியீட்டு உள்குத்துக்களை வைத்து கட்டுடைக்கிரார்கள்  , 96 போன்ற காண விரும்பும் ‘பகல்கனவு’ களை  , புத்தகம் போடும் அளவு குறியீடுகளை, நுட்பங்களை ,உள்ளடுக்குகளை கண்டு  சொல்லி  அது ஏதோ உன்னத கலைப்படைப்பு போலவும் ,கைதவறி தமிழ் வணிக சூழலில் வந்து விழுந்து விட்டது போலவும்,அது தமிழ் அறிவு ஜீவி சமூகத்தால் சரியாக ‘உள்வாங்கப் ‘படாது போவிட்டத்து போலவும்  மறுகிக் கொண்டு இருக்கும் எவரும் இந்தகைதொரு படத்தை பார்த்தால் மாஸ்டர் டச் என்றால் என்ன என்று விளங்கும் . நாம எல்லாம் ரொம்ப ரொம்ப கீழ இருக்கோம் என்பதும் புரியும் .  வெல் டன். மாஸ்டர் ரே : )

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைநூல்கள் பற்றி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைரயிலில் கடிதம் – 11