விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?

 

6

 

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

 

அன்புள்ள ஜெயமோகன்,

விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்துவிட்டு உணர்ச்சிக்கொந்தளிப்புடன் மீண்டு வந்தேன். அற்புதமான நிகழ்வு. மகத்தான நிகழ்வு. அத்தனை நண்பர்களும் இலக்கியம் மீதும், இலட்சியவாதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். சென்ற இடமெல்லாம் இலக்கியமே பேசப்பட்டது. ஆசிரியர்களின் பெயர்களும் நூல்களின் பெயர்களும் காதில்விழுந்துகொண்டே இருந்தன.

ஆனால் நான் திரும்பிவந்து பேசியபோது என் இடதுசாரி நண்பர்கள் பலர் நீங்கள் ஒரு வலதுசாரிக்குழு என்று சொன்னார்கள். ஐடியாலஜி இல்லாமல் ஒரு தரப்பு இருக்க முடியுமா என்று ஒரு மூத்த நண்பர் கேட்டார். அது ஒரு நல்ல கேள்வியாக எனக்குப் பட்டது. ஆகவே இதை எழுதுகிறேன். தப்பாக இருந்தால் மன்னிக்கவும்

கே.எம்.மணிகண்டன்

அன்புள்ள மணிகண்டன்,

விஷ்ணுபுரம் அமைப்பின் எதிர்த்தரப்பினருக்கு மட்டுமல்ல பலசமயம் உள்ளிருப்பவர்களுக்கே இதைச் சொல்லிப்புரியவைக்கவேண்டியிருக்கிறது. ஆகவே சொல்லிக்கொண்டே இருக்கிறேன். மீண்டும் சொல்வதில் சலிப்பில்லை

கருத்துநிலை என்பதற்கும் கருத்தியல்நிலைபாடு என்பதற்குமுள்ள பெரிய வேறுபாட்டை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். கருத்துநிலை என்பது வாழ்க்கை பற்றி, சிந்தனைபற்றி, கலை பற்றி சில கருத்துக்களைக் கொண்டிருத்தல், அதுசார்ந்து செயல்படுதல். கருத்தியல்நிலைபாடு என்பது வெளியே நிறுவனமாக ஆக்கப்பட்டிருக்கும் கருத்தியல்களை தன் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, அதன் ஒரு பகுதியாகத் தன் சிந்தனைகளை வகுத்துக்கொண்டு, அதன்பொருட்டுச் செயல்படுதல்.

விஷ்ணுபுரம் குழுமம் என் நண்பர்களால் ஆனது. பெரும்பாலும் என் எழுத்துக்கள் வழியாக அறிமுகமாகி என் தளத்தால் ஒருங்கிணைக்கப்படுபவர்கள். எனக்கு இலக்கியம், வாழ்க்கை குறித்து சில பொதுவான கருத்துக்கள் உண்டு. அவை எனக்கு என் ஆசிரியர்கள் வழியாக வந்தவை, என் வாழ்க்கையின்வழியாகவும் என் வாசிப்பினூடாகவும் நான் தெளிந்தவை.  விஷ்ணுபுரம் குழுமம் என் இலக்கியநோக்கை மட்டும் பங்கிடுபவர்களால் ஆனது.

இலக்கியத்தில் என் கருத்துநிலை என்பது இங்கே நவீன இலக்கியச்சூழலில் நான்கு தலைமுறைகளாக நிலைகொள்வது. பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு,சுந்தர ராமசாமி என நீள்வது. அதன் தொடர்ச்சியாகவே நான் எழுதிவருகிறேன். அதற்குள் நுட்பமான உள்விவாதங்கள் உண்டு என்றாலும் ஒட்டுமொத்தமாக அது ஒரு முழுமைநோக்கு. அதன் இயல்புகள் இவை.

அ.  இலக்கியம் என்பது முதன்மையாக ஓர் அழகியல்செயல்பாடு. அழகியல் அனுபவத்தை அளிப்பதே அதன் இலக்கு.

ஆ. இலக்கியத்தின் மெய்மை என்பது ஒட்டுமொத்தமான மானுடதரிசனங்களாகவே இருக்கமுடியும். அது அந்த ஆசிரியன் படைப்பியக்கம் வழியாகச் சென்றடைவது. அவன் ஆழுள்ளம் கண்டடைவது. அரசியல்,சமூகவியல் தளங்களில் உருவாகும் கருத்துக்களை இலக்கியம் தன் சாரமாகக் கொண்டிருக்கமுடியாது. அத்தரிசனம் இலக்கியத்தில் விளைந்து தொடர்ந்து தலைமுறைகளாகக் கைமாறப்பட்டு வளர்வது

இ.  இலக்கியம் தன்னளவில் ஓரு மெய்காண்முறை. அதன் வழிகளை அதுவே நூற்றாண்டுகளாக வளர்த்துவந்துள்ளது. தத்துவம், அரசியல், அறிவியல் என பிற அறிவுத்தளங்களின் கருவிகளையும் கருத்துக்களையும் அது எடுத்தாளலாம். ஆனால் அது சுதந்திரமானது. வேறெந்த அறிவமைப்பையும் சார்ந்து அது செயல்படவேண்டியதில்லை.

ஈ. இலக்கியம் தனக்குரிய மெய்யை கண்டடைந்துவிட்டதென்றால், அதை அழகியல்ரீதியாக நிறுவி விட்டதென்றால், அது நல்ல படைப்பே. அந்த மெய் எவ்வகையில் நடைமுறைப் பொருள்கொள்கிறதென்பது முக்கியமல்ல. ஆகவே ஃபாஸிசத்தை ஆதரித்த எஸ்ரா பவுண்டும் போர்ஹெஸும் இடதுசாரிகளான கார்க்கியும் மார்க்யூஸும் இலக்கியக் கலைஞர்களாகக் கருதப்படமுடியும்

ஊ.  இலக்கியத்தின் பங்களிப்பு பெரும்பாலும் பண்பாட்டுத்தளத்திலேயே. பண்பாட்டை வடிவமைக்கும் கூறுகளில் ஒன்றாகவே அது அரசியலை அணுகுகிறது. இலக்கியம் ஒரு சமூகத்தின் கனவுகளை இலட்சியங்களை பெரிதும் வடிவமைக்கிறது. இலக்கியம் ஒரு பண்பாட்டின் ஆழுள்ளம் மொழியில் வெளிப்பாடு கொள்வது.

இக்கருத்துக்களை மிகமிக விரிவாக பேசிவிவாதித்திருக்கிறார்கள். ஆகவே இங்கே விளக்க முற்படவில்லை. இவற்றை தங்கள் பொதுவான நம்பிக்கைகளாகக் கொண்டவர்களுடைய தரப்பையே இலக்கியத்தில் நானும் முன்வைக்கிறேன். பொதுவாக ’கலைமைய நோக்கு’ கொண்டவர்கள் ‘அழகியல்வாதிகள்’ என எங்களைச் சொல்கிறார்கள்.

ஆனால் இவை பொதுவான கருத்துக்கள். இவற்றை ஏற்றுக்கொண்டு விவாதித்து தங்கள் நோக்கி ஒவ்வொரு எழுத்தாளரும் விரிவாக்கம் செய்யலாம். இதற்கு அமைப்புச்செயல்பாடு இல்லை. அமைப்பாக அடையவேண்டிய இலக்குகளும் இல்லை. விஷ்ணுபுரம் என்பது ஓர் கூடுகை மட்டுமே.

மாறாக கருத்தியல் என்பது இலக்கியத்திற்கு வெளியே உள்ளது. மதம், தத்துவம், அரசியல் போன்றவற்றால் அது முன்வைக்கப்படுகிறது. அதை ஏற்றவர்கள் ஓர் அமைப்பெனத் திரள்கிறார்கள். ஒற்றைக்கருத்து கொண்டவர்களாக ஆகி செயல்படுகிறார்கள். அவர்களுடையது உறுதியான மாறாத நம்பிக்கை. இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர், இந்துத்துவர் என எல்லா தரப்பினரும் இவ்வகையானவர்களே.

என்றுமே கருத்தியல்வாதிகள் இலக்கியத்தை தாக்கி அடிமைப்படுத்தி தங்கள் கருவியாக ஆக்க முயன்றுகொண்டே இருப்பார்கள். வரலாறு முழுக்க மத அமைப்புக்கள் அதைச்செய்துள்ளன. மார்க்ஸியம் போன்ற அரசியலியக்கங்கள் அதைச் செய்துள்ளன. உலகவரலாற்றில் மிக அதிகமாக இலக்கியவாதிகளை கொன்றும் ஒடுக்கியும் அழித்தவர்கள் மதக்கருத்தாளர்களும் மார்க்ஸியர்கள் போன்ற அரசியல் கருத்தாளர்களும்தான். இன்றும் அந்த கெடுபிடி தொடர்கிறது. எப்போதும் அது இருக்கும். இலக்கியம் தன் நுண்வல்லமையால் அதை எதிர்த்தே நிலைகொள்ளும். இன்றும் விஷ்ணுபுரம் போன்ற செயல்பாடுகளுக்கு எதிரிகளாக இருப்பவர்கள் இவ்விரு தரப்பினருமே.

விஷ்ணுபுரம் போன்ற அமைப்பில் எவருக்கு அனுமதி? இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும்தான். இலக்கியத்தை ‘கொன்று தின்ன’ விரும்பாத அனைவருக்கும் அங்கே இடமுண்டு. இந்த அம்சம் இடதுசாரிகளுக்குப் புரிவதே இல்லை. அழகியல்விமர்சகரான க.நா.சு மார்க்சியரான சின்னப்பபாரதியின்  ‘தாகம்’ நாவலை போற்றியபோது அவரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் உள்ளடக்கம் க.நா.சுவிற்கு எதிரானதாயிற்றே என்றார் அவர். ‘அதைப்பற்றி எனக்கென்ன? அது அழகியலோட வந்திருக்கு’ என்றார் க.நா.சு. இதுவே இலக்கியத்தின் தரப்பு.

இந்தத் தரப்பை ஏற்காத ஒருவர் இங்கே வரமுடியுமா? வந்திருக்கிறார்கள். எதிரில் இருப்பவர்கள் தங்கள் எதிர்த்தரப்பு, எதிரிகள் அல்ல என்ற புரிதல் இருந்தால் அவர்கள் தங்கள் மிகச்சிறந்த வாதங்களை எடுத்து முன்வைக்கமுடியும். ஜோ டி குரூஸ் தனக்கு அழகியலில் நம்பிக்கை இல்லை என்று எங்கள் அரங்கில் விரிவாகப் பேசியிருக்கிறார். உறுதியான மார்க்ஸியராக அழகியல்சார்ந்த அணுகுமுறையை மறுத்து முருகவேள் [மிளிர்கல், முகிலினி] பேசியிருக்கிறார். அது இருதரப்பிலும் அறிதல்களை உருவாக்கும் விவாதமாக அமைந்தது.

இலக்கியத்திற்கு அப்பால் எனக்கு ஆன்மீகம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் சில நிலைபாடுகளுண்டு. நான் அத்வைத வேதாந்தத்தில் நம்பிக்கை கொண்டவன். அறிதலினூடாக விடுதலை என நம்புபவன். இந்து மதம் என்னும் மாபெரும் ஞானத்தொகுப்புமேல், வேதங்களில் தொடங்கும் அதன் மெய்த்தேடலின் மேல், அதன் தத்துவ உரையாடல்மேல் நம்பிக்கை கொண்டவன். அதன் ஒருங்கிணைவு போக்கும் பிரிந்துவளரும் பண்பும் உலகுக்கு வழிகாட்டும் என எண்ணுபவன். நான் நித்யசைதன்ய யதியின் மாணவன்.

இந்தியா என்னும் ஒற்றைப்பண்பாட்டு தேசத்தில் உறுதியான ஏற்பு கொண்டவன், அது நானே பயணம்செய்து நூற்றுக்கணக்கான சிற்றூர்களில் மண்ணில்படுத்து ஆறுகளில் நீராடி கண்டடைந்த மெய்மை. இந்நாடு ஒன்றாகவே வாழமுடியும் என நினைப்பவன் நான். இதன் நீண்டபண்பாடே இதை இணைக்கும் சரடு என்றும் அது எந்நிலையிலும் ஆற்றலிழக்கலாகாது என்றும் எண்ணுபவன். இதுவே என் அரசியலின் அடிப்படை. இதற்கு அப்பால் கட்சிச் சார்பென ஏதுமில்லை. பொதுவாகவே நான் அன்றாட அரசியலை பேசுவதில்லை.

ஆனால் என் ஆன்மிகத்தையோ அரசியலையோ என் நண்பர்கள் ஏற்கவேண்டும் என்பதில்லை. விஷ்ணுபுரம் அமைப்பின் நேர்பாதிப்பங்கினர் இவ்விரண்டையும் ஏற்காதவர்களே. ஏனென்றால் இது இலக்கிய அமைப்பு மட்டுமே. இதில் எப்போதுமே கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இடதுசாரிகளும் தமிழ்த்தேசியர்களும் திராவிட இயக்க ஆதரவாளர்களும் இந்துத்துவர்களும் பங்கெடுத்து வருகின்றனர். பிராமணர்களும் தலித்துக்களும் பங்கெடுத்துவருகின்றனர். அவர்களுக்குள் ஓயாத பூசலும் ஓடிக்கொண்டிருக்கும்.

ஆனால் இலக்கியத்திற்கு மேலாக தங்கள் அரசியலை அல்லது மதநம்பிக்கையை கொண்டவர்கள் இங்கே உள்ளே வந்ததுமே விலகிச்செல்வதையும் காண்கிறேன். கருத்தியலால் ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட நட்புகள் கூட பொருட்டாக இருப்பதில்லை. அதேபோல தங்கள் ரகசியச் சாதிப்பற்றுக்களை இங்கே கொண்டுவருபவர்களும் விலக்கப்படுவார்கள். அவர்களுக்கான இடம் இது அல்ல.

ஜெ

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-14
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-8