பிரபஞ்சன் : கடிதங்கள்

pra

அன்புள்ள ஜெயமோகன் சார்,

ஒரு மனிதனுக்காக எனது வாழ்நாளில் ஒருவரை நினைவுகூர்ந்து எழுதும் முதல் அஞ்சலி.

எனது துறையில் ஒரு பெரிய ஆளுமையிடம் எனது அகங்காரத்தினாலும், அறியாமையினாலும், சல்லிதனத்தினாலும் அவரின் ஏசி அறையில் திட்டுவாங்கி துரத்தபட்டு வெளியேறுகிறேன். மனது முழுதும் வீராப்பும் கடுப்புமாக வியர்க்க வியர்க்க முதல் மாடியில் இருந்து படிகளில் இறங்கி வரும்போது திடீர் என வெள்ளை வேட்டியும் ஜிப்பாவுமாக ஒரு தேவதூதனை போல் ஒருவர் என்னை பார்த்து சிரிக்கிறார். இடது கையில் வேட்டியின் ஓரத்தை தூக்கிக்கொண்டு வலதுகையில் ஒரு கருப்பு கலர் பேக்கை வைத்து கொண்டு நான் கடந்து செல்வதற்காக நிற்கிறார். நான் என்ன ரீஆக்ஷன் கொடுத்தேன் என நினைவில் இல்லை, அவர் யார்? என்று என் மனம் தேடியபடி நின்றுகொண்டு இருக்கும் பொழுது என்னை கடந்து மாடிகளில் ஏற ஆரம்பிக்கிறார். நான் அவரையே பார்த்தபடி இருக்க அவர் மேலே ஏறி தான் என்னில் இருந்து மறையும் தருணத்தை உணர்ந்தவராக நான் நிற்பதை அறிந்தவராக திரும்பி என்னை பார்த்து மீண்டும் சிரித்துவிட்டு என் கண்ணில் இருந்து மறைந்து விடுகிறார். பிரபஞ்சன் எனும்போது பின்னோக்கி என்னை பார்த்து சிரிக்கும் முகம் மட்டுமே ஒரு படிமம் போல் என்னுள் இருக்கிறது.

அவரின் “மானுடம் வெல்லும்” எனும் நாவலையும் சில சிறுகதைகளையும் மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனால் அப்போதைய எனது மன அமைப்பின்படி அதில் கூறிய எதையும் என் மனம் கிரகித்துகொள்ளவில்லை. இனியாவது அவரை, அவரின் சிரிப்பை அவரது படைப்பு உலகத்தினுள் தேடி கண்டெடுக்கவேண்டும்.அதுவே அந்த சிரிப்பிற்கான மறுசிரிப்பாக இருக்கும் என தோன்றுகிறது.

தேவதூதர்கள் மரிப்பதில்லை. அவர்கள் தங்களின் வாக்குதத்தங்களினால், அன்பினால் எதோ ஒரு மனதில் உடைப்பையோ, கட்டுமானத்தையோ நடத்திகொண்டிருப்பார்கள். பிரபஞ்சன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

ஸ்டீஃபன் ராஜ் குலசேகரன்

***

அன்புள்ள ஜெ

நான் ஆரம்பத்திலேயே வாசித்த எழுத்தாளர்களில் ஒருவர் பிரபஞ்சன். அவருடைய மரி என்னும் ஆட்டுக்குட்டி என் பாடமாக இருந்தது. அதை விரும்பி வாசித்தேன். கண்கலங்க வைத்த கதை. அதன்பின்னர் ஏராளமான கதைகளை வாசித்தேன். இருபது கடிதங்கள் போட்டிருக்கிறேன். அவரை இரண்டுமுறை நேரிலும் சந்தித்தேன்.

அதன்பின் ஏராளமான எழுத்தாளர்களை வாசித்தேன். மெல்லமெல்ல எனக்கு பிரபஞ்சன் மனதிலிருந்து அகன்றார். அவர் ஒரு தனித்தன்மை இல்லாத எழுத்தாளர் என்ற எண்ணம் வந்தது. உண்மையில் அவர் அசோகமித்திரன் ஜானகிராமன் ஜெயகாந்தன் மூவரையும் பார்த்து எழுதினார். ஒரு கதை ஒருவர் போல் இருக்கும் இன்னொரு கதை இன்னொருவர் போலிருக்கும். உதாரணமாக அவருடைய ஓரளவு நல்ல கதை என்று இன்றைக்குத் தோன்றும்கதை பிரம்மம். அது ஒரு ஜானகிராமன் கதை. மோகமுள் மாதிரியான கதை

பிரபஞ்சன் எனக்கு ஒரு நல்ல தொடக்கம். ஆனால் அவரால் என்னுடன் இதுவரை வரமுடியவில்லை. அவருடைய அரசியலும் அப்படித்தன். கருணாநிதி பெரியார் ஆகியோரை கடுமையாக நிராகரித்து எழுதினார். இடதுசாரியாக தோற்றம் அளித்தார். கொஞ்சநாள் தமிழர்தலைவர் இராமதாஸ்தான் என்று கட்டுரை எழுதினார். கடைசியாக மீண்டும் பெரியாரியம் பேசினார். அவருடைய அந்த நிலையில்லாத தன்மை அவருடைய எழுத்திலும் இருந்தது

இருந்தாலும் என் ஆரம்பகால ஆசிரியர் என்றவகையில் அவருக்கு அஞ்சலி

ராமச்சந்திரன்

***
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-15
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சிப் பரிந்துரை