விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-12

DSC_0307

லீனா மணிமேகலை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்.

என்றும் நினைவில் இருக்கும் இரு நாட்களாக எனக்கே எனக்கானதாக ஒரு புதிய அனுபவமாக இருந்தது – நான் படித்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களை நேரில் காணும் ஏற்பட்ட ஒரு மெல்லிய தயக்கம் கலந்த மகிழ்ச்சி சொல்லில் விவரிக்க முடியாதது – தேவதேவன் அத்தனை அமளியில் வாசித்து கொண்டிருந்தார் . சற்று தயங்கியபடி உங்களிடம் பேசத் தொடங்கிய போது நீங்கள் அடையாளம் கண்டு கொண்டது மகிழ்ச்சியை அளித்தது.

சரவணகார்த்திகேயன் – கலைச்செல்வி அரங்கு இரு எல்லைகளை கண்டது போல. சரவணகார்த்திகேயன் பெரும்பாலும் எழுதுவது சமூக ஊடங்கங்களில். உடனுக்கு உடன் விமர்சனம் செய்யப்படுவது அவர் எழுத்துக்கள். கேள்விகளின் தொனியை மடையை ஓரளவு அறிந்தே இருந்தார் – சமூக ஊடக எழுத்து Vs இலக்கிய எழுத்து என்ற இருமை வழி கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டன. தனிப் பேச்சில் நடப்பு கால எழுத்துகளை அதிகம் வாசித்தது இல்லை எனவும் – அலுவல் போக கிடைக்கும் நேரங்களில் எழுதுவதை மட்டுமே செய்ய இயல்கிறது என்றும் கூறினார்

DSC_0292 (1)

கலைச்செல்வி அவர்கள் நேர்எதிர் . ஓரளவுக்கே வாசிக்கப்பட்டு . அந்த ஒரு சில வாசகர்களின் கருத்துக்களை. விமர்சனங்களை முதன் முறையாக நேர் பேச்சில் எதிர் கொள்ளும் அந்த கன்னிப்பதட்டம் அழகு – பல முறை உடைந்து அழுது விடுவது போல் – முன்னொரு காலத்தின் ஒரு பெரிய இடரான மனநிலையை எழுத்தின் வழி கடந்த பெருமிதத்தை பதட்டத்துடன் பல முறை கூறினார் – நீங்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழி கலைச்செல்வி அவர்களை அறிமுக படுத்தியமைக்கு நன்றி

சரவணன் சந்திரன் – மிகுந்த பதட்டமான மனநிலையில் இருந்தார் – ரோலக்ஸ் வாட்ச் . சுபிட்ச முருகன் குறித்து சிறிது நேரம் உரையாட முடிந்தது – அவரது நாவலில் வரும் கதாப்பாத்திரங்கள். பாத்திரங்களின் இலக்குகள் பெரும்பாலும் என் வயதினிற்கு சம்பந்தப்பட்ட கனவுகளாய் அதே நேரத்தில் நிலப் பரப்பில் கண்டிராத இடங்கள் வந்தபடியே இருக்கும் நகரத்தில் இருக்கும் உயர் மதுக்குடி கிளப் களும் . எங்கோ தூர தேசத்திலிருக்கும் தைமூரும் . முன்பின் பார்த்திராத இடங்கள் நகரத்து நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாத ஒரு களத்தை கொண்டிருக்கும். இதன் காரணமாகவே பணம் குறித்த கேள்வியை ஆன்மீகத்துடன் சேர்த்து குளறி ஒரு கேள்வியை கேட்டேன். சரவணன் சந்திரன் ஊடகம் குறித்து அநேகமாக மறந்து விட்டதாக கூறி ஊடக ஞாபகங்களை கூறியபடியே வந்தார் . இந்த முரணும் ஒரு அழகு.

DSC_0347

அவர் பேசியதில் முக்கியமாக பட்டது இன்று நிறுவனங்களில் இருக்கும் தொடர் கண்காணிப்பு – வேலை செய்பவர்களை தொடர்ந்து (ஆரோக்கியமான ( யாருக்கு? ) ) பதட்டத்தில் வைத்திருப்பது பற்றி – இது என் அனுபவத்தில் கண்ட உண்மை – இது சம காலத்திற்கே உரிய சிக்கல் – தொழில் நுட்ப உதவியுடன் தொடர் தகவல் சேர்க்கை மற்றும் வேலை செய்பவர்களின் பயனுள்ள அலுவல் நேரம் தொடர்ந்து கணக்கிடப் படுகிறது . நம்மவர்கள் இந்த தொழில் நுட்ப ஜில்லாலங்கடியை அவர்களுக்கே உரிய முறையில் சமாளித்து வருகின்றனர் – சரவணன் சந்திரன் அவர்களின் இந்த கருத்தை ” ராஜ் கௌதமன் அவர்கள் பேச்சினூடே குறிப்பிட்ட ” owner is absent there is no firm ” என்ற கருத்துடன் இணைத்து புரிந்து கொள்ளலாம். CEO முதல் தொழிலாளி வரை சம்பளக்காரர்களை நிறுவி. தொடர் இலக்குகள் மூலம் ஒரு வித தானியங்கி லாப எந்திரமாக பெரிய நிறுவனங்கள் அனைத்தும் செயல் பட்டு வருகின்றன

நரன். சாம்ராஜ் அரங்கு ஒரு நகைச்சுவை அரங்கு போல் மாறிவிட்டது . நரன் எவ்வளவு தான் சீரியஸ்(?)ஆக பேச முயன்றாலும் சாம்ராஜ் மீண்டும் சிரிப்பிற்கே வந்தார் . நடுவில் அவர் கூறிய விஷயங்கள் இத்தனை சிரிப்பின் அடியில் உள்ள சிறு கசப்பினை காட்டியது. கவிஞர் இசை அரங்களிலுள்ள இன்னொரு நபருக்கு ” சாம்ராஜ் ” ஆடிப் போகும் அளவுக்கு கஷ்டமான கேள்விகளை கேட்க சொன்னார் . கவிஞர் இசை அவர்களை சந்தித்தில் பெரு மகிழ்ச்சி . ” பழைய யானைக் கடை” புத்தகத்தை பள்ளி அறிமுக நூலக வைக்கலாம் என்று கூறினேன் ” சிரித்து விட்டு அந்த புத்தகம் எப்படி உங்கள் கையில் வந்ததோ அது போல் போல் அவர்களையும் சென்றடையும் என்று கூறினார்.

DSC_0355

தேவிபாரதி அவர்களின் அரங்கு கச்சிதமாக இருந்தது . சமகாலத்தின் முக்கிய பிரச்சனையாக ” அவநம்பிக்கை”இருப்பது குறித்து கூறினார் – அனைத்தும் இருந்தும் ஒரு வித நம்பிக்கையின்மை நிலவுவதை பற்றிக் கூறினார் -சரவணன் சந்திரன் முந்தைய அரங்கில் ” குற்றவுணர்ச்சி” மற்றும் பயம் குறித்து கூறி இதுவே சமகாலத்தின் தலையாயபிரச்னை என்று கூறியதையும் இணைத்து புரிந்துக் கொள்ளலாம். நட்ராஜ் மகராஜ் தோன்றிய விதம் அருமை . நிழலின்தனிமை என்னுள் காட்சியாகவே பதிந்துள்ளது . நாயகன் தனது ஸ்கூட்டரில் அலைந்து கொண்டே தன் வாழ்வின்அர்த்தத்தை தேடி முடிவில் அடையும் இடம் எந்த ஒரு தீவிரமான விஷயமும் ஓரளவுக்கு மேல் அர்த்தமற்று நிற்கும்தருணம் . இவ்வாறு தீவிரங்களும் புனிதங்களும் அற்ற உலகில் பிடி ஏதுமற்று இருக்கும் நாயகர்கள் குறித்தே சரவணன்சந்திரன்களும் லட்சுமி சரவணகுமாரும் எழுதுகின்றனர் . அவர்கள் மரபு நோக்கி திரும்புவதும் எதேச்சை அல்ல (கொமோரா . சுபிட்ச முருகன்).

DSC_0419

லீனா அவர்களின் அரங்கு கலைச்செல்வி அரங்கின் எதிர் பதமாக அமைந்தது – லீனா அளித்த பதில்கள் அவர் ஏற்கனவேவைத்திருந்த ஸ்டாக் பதில்கள் .இதற்கு அவர் நீங்கள் ஸ்டாக் கேள்விகள் கேட்டால் ஸ்டாக் பதில்கள் கிடைக்கும்என்பது போல் கூறினார் – லட்சுமி மணிவண்ணன் உட்பட பலர் அவரிடம் இறைஞ்சியது எந்த தரப்பிலும் இல்லாதஒரு வாசகனிடம் நீங்கள் கூற வருவது என்ன என்பது தான். அத்தகைய அப்பழுக்கற்ற வாசகன் இல்லை என்றபோதிலும் . வாசகனும் ஒரு ( மனிதன்) புனைய தெரிந்த ஒரு விலங்கு ( ராஜ் கௌதமன் பேச்சினூடே கூறியது ) என்றபோதிலும் அவரது தீவிரம் மேலும் ஆண் வாசகர்களை “டென்ஷன்” பண்ணியது . கவிதைகள் என்று வருகையில் “தேவதேவன்” குறித்தோ “இசை” குறித்தோ சராசரி வாசகன் கொண்டிருக்கும் மனப் பதிவு ஒட்டுமொத்தமானது தானே?பெரும்பாலும். குறிப்பிட்ட வரிகள் வேண்டுமானால் நினைவிருக்கலாம் . குறிப்பிட்ட கவிதை குறித்து எதுவும்கேட்கவில்லை என்ற லீனாவின் வாதம் ஓரளவிற்கே சரி –அவர் அதிரடியாக தெரிவித்த கருத்துக்கள் சரிஅன்று. அவ்வாறு எந்த தமிழ் இலக்கிய ஆக்கங்களை ஆண் பிரதி என்று குறிப்பிடுகிறீர்கள் என்பதற்கு “அசோகமித்திரன் அவர்களின் சாதி குறித்த தன்னுணர்ச்சி ” என்றார்.

அனிதா அவர்கள் எளிமையாக ” அழகை பறிக்கஅபகரிக்க ஆட்கொள்ள ” நினைக்கும் ஆண்மனம் குறித்து மயில் உருவகத்தில் விளக்கி கூறினார் நான் எந்த ஒருஅழகான பெண்ணை காணும் போதும் ஏற்படும் ஒரு எச்சரிக்கை உணர்வுடன் இதை இணைத்துப் பார்க்கிறேன் – “மயில் கழுத்தில் பேஸ்தடிக்கும் அனைத்து ஆண்களையும். அனிதா அக்னிஹோத்ரி அவர்களின் அரங்கு நல்லதொரு அறிமுகத்தை கொடுத்தது – அரசாங்க வேலை Vs எழுத்தாளர்குறித்த சவால்கள் குறித்து நேரடியாக பேசினார் – கீழ்உள்ள அலுவலகங்களுக்கு கட்டளை இட்டே பழக்கப்பட்டஅரசாங்கம் என்று கூறியது ஸ்ரீ லால் சுக்லா வின் ” தர்பாரி ராகத்தை ” நினைவூட்டியது

DSC_0365

ஸ்டாலின் ராஜாங்கம் அரங்கு சீரியதாக இருந்தது குறிப்பாக அவர் ராஜ் கௌதமன் குறித்து ஆற்றிய விழா உரை. ௧) இலக்கியம் குறித்த ராஜ் கௌதமனின் பார்வைகள் ௨) இலக்கிய ஆளுமைகள் குறித்த பார்வை ௩) தன் வரலாறு ௪) மொழிபெயர்ப்புகள் என வகுத்துக் கூறியது சிறப்பு. ராஜ் கௌதமன் அரங்கில் அவர். சமீபத்திய தலித்து அரசியல் குறித்து கேட்டதற்கு “உனக்கு ஏதாவது பிரச்னை என்றால் கேள் சொல்கிறேன் ” என்று கூறியது நேரடியாக சிந்திக்கும் வகையினதான மட்டுப்படுத்துதலாக அமைந்தது. ராஜ் கௌதமன் அவர்கள் பேசிய விதம் மற்றும் சொற்கள் குறித்த அவரது அணுகுமுறை ஒரு புத்திஜீவியை ஒத்ததாக இருந்தது – தலித் என்ற சொல்லிற்கு அவர் கூறிய சுயசாதி எதிர்ப்பு என்னும் ஒரு அர்த்தம் மிகுந்த மாறுபட்ட கோணாமாக இருக்கிறது – வடலூர் ஜோதி குறித்து அவரது மாணவி சொன்ன கோணம் ” ஓஷோ அவர்கள் அன்னை தெரசா குறித்து சொன்ன ” Lubricants “என்ற கோணத்தை நினைவூட்டியது

கீரனுர் ஜாகிர் ராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.” மீன் கார தெரு ” எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பு – ஜாகிர் ராஜா கேட்ட ” புனைவா ஆய்வா கேள்வி ராஜ் கௌதமனை மிகவும் உற்சாகப் படுத்தியது. நீங்கள் உங்கள் உரையின் போது குறிப்பிட்ட ” அகநானூறு ” குறித்த கருத்துக்களும் அவரை மிகவும் அருகில் உணரச் செய்தது புதுமைப்பித்தன் குறித்து குறிப்பிடுகையில் ராஜ் கௌதமன் ” பிய்த்து கொண்டு போகும் படைப்பு செயல்” என்கிறார் – புனைவின் கட்டற்ற தன்மை யை ஆய்வுகள் தளையிடும். ஆய்வின் அகழிகளை தாண்ட புனைவை மீண்டும் நாடும்படி நேர்கிறது – சுயபகடியும் புத்திக்கூர்மையும் கொண்ட கலைஞன் ராஜ் கௌதமன். அவர் தரவுகளை வைத்து யார் ஒருவருக்கும் கோட்டையை எழுப்பி கோட்டையின் அடியில் சின்னதாக ஒரு வெடியை போட்டு விட்டு கோட்டை சரிவதை எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறார். தங்களின் பின் தொடரும் நிழலின் குரலில் இந்த அம்சம் கூடி வந்திருக்கிறது

நாஞ்சில் நாடன் அவர்களிடமும் சு வேணுகோபால் அவர்களிடமும் உரையாடியதில் மகிழ்ச்சி . சுரேஷ் பிரதீப் அவர்களிடம் முழுமையாக பேச இயலவில்லை. கால சுப்ரமணியம் அவர்களிடம் ஒரு சிலவார்த்தைகள் பேசினேன். நிறைவான உரையாடல்கள் நிறைவான உணவு என இரு தினம் இனிதே நிறைவுற்றது. கல்யாண வீட்டின் விடைபெறுதல் போல. விடைபெறுகையில் நீங்கள் அணைத்துக்கொண்டது மறக்கவியலாதது.

 

மிக அன்புடன்.

மணிகண்டன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

கடந்த இரண்டு வருடங்களாக விஷ்ணுபுரம் விழாவிற்கு வர எண்ணி தயக்கம் காரணம் வரவில்லை. உங்களுக்கு கடிதம் எழுதியும் நெல்லை உரை நிகழ்வில் பங்கெடுத்ததும் தயக்கம் சற்றே விலகி இம்முறை வந்தேன்.

விழா என்னை உள்ளிழுத்து கொண்டது. காலை 5 மணிக்கு முன்பே வந்தேன். மீனா அவர்கள் தங்குமிடத்திற்கு வழி சொல்லி நான் அங்கு சென்று சேரும் முன்பே இருசக்கர வாகனத்தில் வந்து தங்க வைத்தார். அவருக்கு நன்றி சொல்லவில்லை. நன்றிகள். இரண்டு நாட்கள் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் முழுக்க இலக்கியமே சிந்தனையாக இருத்தது.

லீனா மணிமேகலை அரங்கு மட்டுமே ஏமாற்றமளித்தது. நான் முகநூலில் உலவிய காலத்தில் அணுக்கமான கவி என்பதால் மேலதிக ஏமாற்றம். அவர் அரங்கு முடியும் பொது. பொதுவான கேள்விகளே முன்வைக்கப்பட்டது என்றார். ஆனால் கவிதை குறித்தே கேள்விகள் முதலில் எழுப்பப்பட்டன அவர்தான் பொதுவான தளத்திற்கு கொண்டுவந்தார். அரங்க வாசகர்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்பதும் என் எண்ணம். குறிப்பாக லட்சுமி மணிவண்ணன் ஒரு தரப்பின்குரலாக  உங்கள் குரல் முன்வைக்கப்படுகிறது என்று சொன்னார். அதுவே அவர் படைப்புக்களை அணுக தடையாக அமைந்துவிடும் என்பது அதன் உள்ளர்த்தம். அதை குறித்து அவர் சிந்திப்பார் என்று நம்புகிறேன். அந்த அரங்கு ஒரு விவாத களமாக மாறும் அனைத்து அனைத்து சாத்தியங்களும் இருந்தது. ஆனால் அரங்கு கடைசிவரை லீனாவின் தரப்பை வெளிக்கொணரவே முயற்சித்தது. இது தான் விஷ்ணுபுரம் விழா கூறும் ஒழுக்கம் என கொள்கிறேன்.

 

 

நான் சரவணன் சந்திரனின் பாவத்தின் சம்பளம் மட்டுமே வாசித்திருந்தேன். அது என்னை பெரிதாக கவர்ந்திருக்கவில்லை. ஆனால் அரங்கில் என் மனதிற்கு அதிக நெருக்கமாக அவரை உணர்ந்தேன். அஜ்வா மற்றும் சுபிட்ச முருகன் வாங்கி கொண்டேன்.

கலைச்செல்வி உணர்ச்சிகரமாக தன்னை முழுவதுமாக முன்வைத்தார். அவரது சில கதைகளை ஏற்கனவே அவரது தளத்தில் படித்திருந்தேன். இனி படிக்கும் போது இன்னும் நெருக்கமாக அவரது கதைகள் அமையும் என்று நம்புகிறேன். சரவணன் கார்த்திகேயன் சொன்ன engineering on writing குறித்த கேள்வி பதில் அவர் படைப்புக்களை அணுக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்க்கும் engineering on writing குறித்த மேலதிக சிந்தனைக்கு கொண்டு செல்லும் என்றே தோன்றுகிறது. விழா நாயகன் தன்னை இயல்பாக முன்வைத்தார். அது அவரை கேள்விக்கான பதிலில் இருந்து deviate செய்தது எனினும் கொண்டாட்டமாகவே இருந்தது. அதனூடாகவே அவர் தரப்பையும் முன்வைத்தார்.

ராஜ் கவுதமன் குறித்த கட்டுரைகளையே படித்திருந்தேன். விழா வருமுன் சிலுவைராஜ் சரித்திரம் படிக்க திட்டமிட்டு தோற்று போனேன். டிசம்பர் முதல் மார்ச் வரை பணிச்சுமை அதிகம் என்பதே காரணம். சாம்ராஜ் அரங்கும் கலகலப்பாகவும் கவிதை வகுப்பாகவும் அமைந்தது. அனைத்து எழுத்தாளர்களையும் மனதிற்கு நெருக்கமாக ஆகிக்கொண்டேன். என்னால் சுமக்க முடியும் அளவுக்கு புத்தகங்கள் வாங்கினேன். இலவசமாக உண்டு உறங்குகிறோம் என்ற எண்ணம் ஏற்படாமல் விழா அமைப்பாளர்கள் இயங்கினார்கள். சிரிக்கிறாரா முறைக்கிறாரா என்று புரியாத கண்களால் கிருஷ்ணன் மட்டும் பயமுறுத்தினார்.

மொத்த விழாவிலும் என்னை சிறியனாக நினைக்க வைத்தது வாசகர் வட்ட நண்பர்களின் பரந்த ஆழமான தீவிர வாசிப்பு. வியப்பிலேயே பெரும்பாலும் அமர்ந்திருந்தேன்(என் வாசிப்பு குறைபாட்டை எண்ணி). வெளியில் வந்து சாலையில் செல்லும் வழிப்போக்கர்கள் அரசியல். சினிமா. ஊடக பிரபலங்களின் புகைப்படம் இல்லாத விழா தட்டி பார்த்து புரியாமல் விழிக்கும் போது தான் நீ பரவா இல்லடா என்று எண்ணி என்னை நானே தேற்றி கொண்டேன். அனைத்து கேள்விகளும் மிக முக்கிய கேள்விகளாகவும். எழுத்தாளர் தன்னை முன்வைக்க உதவும் கேள்விகளாகவும் இருந்தது.

இரண்டு நாட்கள் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் விழா என்னை ஆக்ரமித்து கொண்டது புதிய அனுபவம். ஒருவேளை தியான அனுபவம் இவ்வாறு தான் இருக்குமோ என்று தோன்றுகிறது. விழா எனக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளதை மிக தெளிவாக உணர்கிறேன். அடுத்த விழா வருமுன் குறைத்து 50 புத்தகங்கள் படிக்க திட்டமிட்டுள்ளேன். வெண்முரசு 1ம் தேதி முதல் வாசிக்க திட்டம். அடுத்த விழாவில் நிச்சயமாக மேம்பட்ட வாசகனாக வந்தமர்வேன். ஒரு விழாவில் தங்களை எழுத்து அசுரன் என்று அழைத்தார்கள். முற்றிலும் பொருத்தமான சொல் அது என்பது உங்களை வாசித்த அனைவருக்கும் புரியும். அவ்வகையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு “அசுர வித்து” என்று சொல்வேன். இலக்கியவட்ட நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் அன்பும்.

நன்றி.
அருள்.

கொச்சி.

 

 

 

 

முந்தைய கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-13