வினவும் கலை

siinu

 

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

இனிய ஜெயம்

 

பொதுவாக விழாக்களில் நான் கேள்வி எழுப்பும் முறைமை சார்ந்து ,பாராட்டுக்களும் கண்டனங்களும் சரி விகிதத்தில்  எப்போதும் என்னை வந்து சேரும் .இம்முறையும் அவ்வாறே .

 

எனது கேள்விகளில் அதை முன்வைக்கும் முறையில் எழும் அடிப்படை சிக்கல்  .அந்த கேள்வி பிறருக்காகவோ ,சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களை ‘குஷிப்படுத்த ‘ வோ எழுப்படும் கேள்விஅல்ல என்பதில் இருந்தே துவங்குகிறது . புனைவின் வழி எழும் எனது கேள்வி எதுவோ, அது எழுந்து வரும் பின்புலத்துடன் சேர்த்தே எனது கேள்வியை முன்வைப்பதே எப்போதும் எனது பாணி . உதாரணமாக எனது இந்த கேள்வி .

 

https://www.jeyamohan.in/94667#.XCMYDtIza1s

 

இந்தக் கேள்வி அடிப்படையில் மூன்று அலகுகள் கொண்டது.  ஒரு பிரதி , அதில் என் எல்லை என்ன ? அந்த எல்லைக்குள் நான் புரிந்து கொண்டவை என்ன ? அந்த புரிதலில் ஒரு இடைவெட்டு நிகழ்கிறது .அதிலிருந்தே எனது வினா எழுகிறது .   பொதுவாக இலக்கிய விவாதம் சார்ந்து ஒரு வாசகனுக்கு எழும் வினாக்கள் எல்லாம் ,இப்படித்தான் எழுந்து ,இப்படித்தான் முன்வைக்கப்படும் என நம்புகிறேன் .  இதே முறைமைதான் எந்த எழுத்தாளர் வசமும் கைக்கொல்கிறேன் .பலசமயம் சரியானான செயல்பாடும் , மிகச் சில சமயம் பிழையான செயல்பாடுமாக இது நிகழ்ந்து முடிகிறது .

உதாரணமாக நரன் அவர்களின் கேசம் கதையை முன்வைத்து நான் எழுப்பிய கேள்வி . முதலில் எங்கள் ஊர் பக்கம் குடும்பதெய்வம் என்பது சார்ந்து உலவும் உணர்சிகரமான சித்திரம் கொண்ட , கதை ஒன்றை குறிப்பிட்டேன் . நரனின் கதையை இப்படி ஒரு குடும்ப தெய்வம் ஒன்றின் உணர்ச்சி மிகு கதை எனும் வரிசையில் ,அந்த மரபு அளிக்கும் அழகியல் பின்புலத்தில் வைத்து விட முடியும் . அதன் அடிப்படை என்னவென்றால் கேசம் கதைக்குள் வரும் அந்த நாயகி ஆவுடை ,தனது கேசம் கொண்டு ,அழுகி சீழ்பிடித்து நாறும் ஆத்தியப்பா கால்களை தூய்மை செய்யும் சித்திரம் . இதை நீக்கி விட்டால் அது எந்த ஆழமும் அற்ற ஒரு அதை .மாறாக இந்த சித்திரம் , இந்து புராண கதைகளில் ,ராமகிருஷ்ணர் சொல்லும் குட்டிக் கதைகளில் வரும் மரபார்ந்த ஒரு சித்திரம் . இந்த ஆழம் எந்த கதைக்குள்ளும் ‘செய்து நிறுத்தி ‘விட முடியாது .எழுதுபவர் ஆழத்திலிருந்து எழுவது அது .இந்தக் கதையில் எழுந்து வரும் ஆழத்தை உங்களில் கட்டமைக்கும் மரபு எது ?

 

நான் குறிப்பிட்ட பின்புலம் வழியே அனைத்தயும் ஆமோதித்த  நரன் , கேசம் கதையின் மரபார்ந்த ஆழம் ,ஏசுவுக்கு பணிவிடை செய்யும் வெரோனிகா வில் இருந்து வந்தது என்றார் . அது எனக்கு மிகப்பெரிய திறப்பாக இருந்தது . அரசியல்வாதிகள் கூப்பாடு போடும் ‘கலாச்சார ஊடுருவல் ‘ அல்ல இது . இலக்கியவாதி மட்டுமே கண்டு சொல்ல இயன்ற , இங்கிருக்கும் சாரத்தில்  ‘இங்கே வந்து கலக்கும் ‘ அதே சாரம் என்பதின் சாட்சியம் அது .   இது பிறருக்கும் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன் .

 

இதுபோன்றதே நான்  எழுத்தாளர் ,இயக்குனர் மதுபால் அவர்கள் வசம் கேட்ட கேள்வியும் .

 

ஜெயமோகன் தளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கிடைத்த உங்களது கதைகள் வாசித்திருக்கிறேன் , உங்களது ஒழிமுறி திரைப்படம் பார்த்திருக்கிறேன் இந்த எல்லைக்குள் வைத்து மட்டுமே எனது வினாவை கேட்கிறேன் .ஒரு எழுத்தாளராக உங்களது சிறுகதைகளில் வந்து விழும் கவித்துவப் படிமங்கள் .ஜெயமோகன் கதைகளில் வந்து விழும் படிமங்கள் அளவே வலிமையானது .உதாரணம் உங்களது இலைகள் பச்சை நிறம் பூக்கள் வெள்ளை நிறம் கதையை எடுத்துக் கொண்டால், காதல் புன்னகையை ,நிலவொளி மிதக்கும் புன்னகை என்று சொல்கிறீர்கள் .இந்த அடிப்படையில் ஒரு இயக்குனராக ,இதே போல படிமங்கள் வழியே கதையை முன்வைக்கும் ஜெயமோகன்  திரைக்கதையில் , அந்த படிமங்களை காட்சியாக்கும் சவாலை ஒரு இயக்குனாராக சந்தித்தீர்களா ?

 

இந்த வினாவுக்கு மதுபால் அவர்களின் விடை மிக முக்கியமானது . ஒழிமுறி படம் பேசும் உணர்ச்சி .தருணங்கள் மீது நிற்பவை அல்ல ,காலம் மீது நிர்ப்பது .தருணத்துக்கு அதை அடிக்கோடிடும் படிமங்கள் வேறு .காலத்துக்கு அதை அடிக்கோடிடும் படிமங்கள் வேறு . அந்த அடிப்படையில் தாத்தா,அப்பா ,பிள்ளை மூவர் வழியே ,அவர்கள் கடந்து செல்லும் நதிப்பாலத்தைக் கொண்டு ,அதன் கீழோடும் நதியைக் கொண்டு ,கால ஓட்டம் கோரும் நிலசித்தரிப்பை உருவாக்க இயலும் . மாறாக ஒரு காட்சியில் , காயம்பட்டு கிடக்கும் அப்பாவின் குருதி ஒழுகி ,அருகில் இருக்கும் நதியில் கலக்கும் சித்திரத்தை ஜெயமோகன் எழுதும்போது , உப்பு வீச்சம் கொண்ட குருதி நதியாகி …என எழுதுகிறார் .  குருதி நதியை கூட காட்டி விடலாம் , ஆனால் அதன் வீச்சம் ? அது இன்றி அந்த எழுத்து சென்று தைக்கும் ஆழத்தை தொடவே முடியாது .இது எழுத்தில் மட்டுமே சாத்தியம் ,எந்த இயக்குனருக்கும் கையை மீறிய ஒன்று இது .

 

உடன் பதிலாக நீங்கள் சொன்ன பதிலும் மிக முக்கியமானது .  இந்த அடிப்படையான ஆழமான பதில்கள் , விரிவான பின்புலத்தில் வைத்து என் வினாவை முன்வைத்தால் மட்டுமே நிகழ்ந்தது .  இது எல்லா கேள்விகளிலும் நிகழாமல் போக இரண்டு காரணம் .முதல் காரணம் கேள்வியை அசட்டையாக எதிர்கொண்டு ,கேள்வியின் இறுதி பகுதிக்கு மட்டும் [அது மட்டுமே கவனத்தில் விழுந்த காரணத்தால்]  பதிலளிக்கும் போது, இரண்டாவது காரணம் கேள்வி முற்றிலும் பிழையாக ‘அங்கே சென்று ‘சேரும்போது .

முதலாவதற்கு உதாரணம் லீனா மணிமேகலை . அவர்கள் வசம் நான் கேட்ட கேள்வி

 

ஆண் மைய பிரதி ,பெண் மைய பிரதி என்றெல்லாம் சொல்கிறீர்களே ,இவை எல்லாம் தரை தளத்தில் நிகழ்பவை .ஒரு வாசகனாக இவை எல்லாம் பத்து வருடம் பழையவை என என்னால் திட்டவட்டமாக சொல்ல முடியும் . வாசகன் இந்த எல்லைகளை எளிதாக கடந்து சென்று விடுவான் . இலக்கிய பிரதி தரும் இன்பம் என்பதில் இன்றைய நிலை .பால் என்பது துவக்க எல்லை மட்டுமே . .பாலியல் என்பது நமது தேர்வு என்பதே. மாஸ்டர்ஸ் முன்பே அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்கள் .சிறு வயதில் நாம் கேட்ட கதைகளில் வரும் அர்ஜுனன் பால் எனும் வகையில் ஆண் .ஆனால் அவனது பாலியலை அவன் தொடர்ந்து தேர்வு செய்து மாற்றிக்கொண்டே இருக்கிறான் , ஆணாக ,பெண்ணாக ,ஆணிலியாக,யோகியாக ,சாகச வீரனாக , இப்படி மாறிக்கொண்டே இருக்கிறான் . முக்கியமான கோவில்களில் ,சேலை அணிந்து தங்களை பெண்ணாக வரித்து பூஜை செய்யும் அர்ச்சகர்களை பார்க்கலாம் , ஒரு கலையாக  இந்தியா முழுதையும் ஆட்டிப்படைத்த  ராதா பாவம் ,இவை எல்லாம் காட்டுவது இதைத்தான் . ஆண்டாள் அழலை தீர்வதற்காக கொள்ளும் தவிப்பு ,அவளுடதயாக மட்டுமன்றி ,என்னுடையதாகவும் மாற அதுவே காரணம் . குறைந்த பட்சம் இது குறித்த  கருத்தியல் ரீதியான கவனம் மட்டுமே உங்களது பசி எனும் ஒரே ஒரு கவிதையில் மட்டும் தட்டுப்படுகிறது .  பால் எனும் அடையாளங்களை அழிக்கும் அந்தக் கலை கோரும் சவாலை நோக்கித்தான் உங்களது கவிதைப்பயணம் நிகழ்கிறதா ?

 

லீனா பொதுவான ஒரு பதிலை சொன்னார் . அமர்வின் இறுதியில் அவரது ஒரே ஒரு கவிதை குறித்து கூட அங்கே பேசப்படவில்லை என்னும் குற்றச்சாட்டை வைத்து விட்டு ,நான் குறிப்பிட்ட அதே பசி கவிதையைத்தான் வாசித்துக் காட்டினார் :)

இரண்டாவது பிழைக்கு உதாரணம் .அனிதா அக்னிஹோத்ரி அமர்வில் நிகழ்ந்தது . அவரிடம் நான் கேட்ட வினா

 

மொழிபெயர்க்கப்பட்டு நான் வாசித்த உங்களது கதைகளின் அடிப்படையில் மட்டுமே எனது கேள்வி இது . நிழல் யுத்தம் கதையில் ஒரு லௌகீக நிகழ்வு .  அந்த தரைத்தள நிகழ்வுகள் ,உறவுகள் ,உணர்வுகள் இவற்றால் மட்டுமே கட்டப்பட்டு ,அந்த எல்லைகளுக்குள் வைத்து மட்டுமே இயங்க விதிக்கப்பட்ட பெண் .கிட்டத்தட்ட கையறு நிலையில் ,பதட்டமாக அடுத்தவரை சார்ந்து வாழும் ஒருவளாக பெண் இருக்கிறாள். எரிகல் ஏரி கதையை எடுத்துக்கொண்டால் , வந்து விழும் எரிகல்லை தாய்மைக்கு உருவகமாக கொண்டால் , தாய்மை என்பது இந்த பூமிக்கே தொடர்பு அற்றது ,அது மானுடம் அறியாத எங்கிருந்தோ கிளம்பி ,எங்கோ சென்று கொண்டிருப்பது .விதி அது இங்கு விழ வைத்து விட்டது .  அவளது வியர்வை ,கனிவு இவை மட்டுமே மானுடம் தாய்மை எனும் எல்லையில் அனுபவிக்கும் ஒரு துளி . இதையும் கதைக்குள் வைத்து ஆழ பிரதியாக வாசிக்க முடியும் . இந்த இரண்டு கதைகளையும் வங்க நிலத்தின் பண்பாட்டுப் பின்புலத்தில் நான் எங்கே வைக்க வேண்டும் .சாக்த பூமி எனும் மரபின் பின்புலத்திலா ? நீங்கள் மரபின் நீட்சியா ? அல்லது மரபை உதறி முன்செல்பவரா ?

 

நான் விலாவாரியாக விவரித்து கேட்ட கேள்வி சுருக்கமாகவே மொழியாக்கம் செய்யப்பட்டது. ஆகவே அனிதா அதை சரியாக புரிந்துகொள்ளவில்லை.

 

இதில் நிகழும் சரி ,தவறு எதுவும் கடலூர் சீனு எனும் வாசக கொம்பனுக்கு கிளுகிளுப்பு ஊட்டிக்கொள்ள,அவனுக்காக  அவன் கேட்பது அல்ல . ஒரு சூழலில் இருந்து அதன் பிரதிநிதியாக நின்று அவன் கேட்கும் கேள்வி அது . அனிதா அக்னிஹோத்ரி அங்கிருந்து இங்கு வந்து பார்க்க வேண்டியது ,வாசக சூழலின் பிரதிநிதியைத்தானே அன்றி ,கடலூர் சீனு எனும் தனித்த வாசகனை அல்ல .  அந்த கவனம்  அளிக்கும் தன்னுணர்வே எனது கேள்வியின் விரிவின் பின்புலம் .  கடலூர் சீனு எனும் தனித்த வாசகனை மட்டுமே பாராட்டும் ,விமர்சனமும் ,கேலியும் சமன் குலைக்கும் .  ஒரு வாசிப்பு சூழலின் பிரதிநியாக அவன் நிற்கும் போது,இது எதுவும் அவனை வந்து தீண்டுவது இல்லை . காரணம் அங்கே  அவன் அடைவது எதுவும்  சக வாசகர்களுக்கும்தான் :) .

 

கடலூர் சீனு

அன்புள்ள சீனு

 

பொதுவாக கேள்விகளை வகுத்துக்கொள்ள முடியாது. எந்த அரங்கில் கேள்வி என்பது முக்கியமானது. கேள்விக்கான நேர அளவு என்ன என்பதே கேள்வியை முதன்மையாகத் தீர்மானிக்கிறது.

 

பெரிய விவாத அரங்குகளில் விரிவான கேள்விகளைக் கேட்கலாம். ஒரு படைப்பைச் சுட்டிக்காட்டி, அதை ஆராய்ந்துகூட கேட்கலாம். சிறிய அரங்குகளில் நீண்ட கேள்விகள் சிலசமயம் அதிகநேரம் எடுத்துக்கொள்ளும். அது ஆசிரியரின் நேரத்தை எடுத்துக்கொள்வதாகத் தோன்றி பொறுமையின்மையை உருவாக்கலாம்.

 

அந்த அரங்கு ஆசிரியரை நோக்கி அமர்ந்திருக்கிறது. கேள்விகேட்பவரின் முகம்கூட தெரிவதில்லை. அந்நிலையில் பலபடிகளாக அமைந்த கேள்விகளை அரங்கினரால் தொகுத்துப்புரிந்துகொள்ள முடிவதில்லை.

 

அதேபோல ஒரு கேள்வி மொழியாக்கம் செய்யப்பட்டே சென்று சேரும் என்றால் ஓரிரு சொற்றொடர்களுக்குள் அமையவேண்டும். அதை உடனுக்குடன் மிகச்சரியாக மொழியாக்கம் செய்யமுடியாது. நிகழ்வது இரண்டு மொழியாக்கம். முதலில் மொழியாக்கம் செய்யப்பட்டதை ஆசிரியர் மீண்டும் தன் நோக்கில் தனக்கான மொழியாக்கமாக ஆக்கிக்கொண்டே பதில் சொல்கிறார்.  ‘மிகச்சரியான பதினைந்து சொற்கள்’ என்பதே இத்தகைய அரங்கிலான கேள்விகளுக்கு உலக அளவில் வைக்கப்படும் அளவுகோல்.

கருத்தரங்குகளின் கேள்விகளுக்கான சில விதிகளைச் சொல்கிறேன். இது உலகமெங்கும் கல்வித்துறையில் கடைப்பிடிக்கப்படுவது

 

  1. கேள்வியில் ‘விளக்கம்’ இருக்கக் கூடாது.
  2. கேள்வியில் ‘அனுபவப் பகிர்வு’ இருக்கக் கூடாது
  3. கேள்வி இரண்டு படிகளுக்குமேல் கொண்டதாக இருக்கக் கூடாது
  4. கேள்வி பொத்தாம்பொதுவான ஒன்றைக் கேட்டு மேற்கொண்டு விளக்கம் அளிப்பதாக இருக்கக் கூடாது

 

ஆனால் விவாத அரங்கு [symposium ] க்கான கேள்விகளுக்கு இதெல்லாம் பொருட்டு அல்ல. எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். கேட்பவருக்கும் போதிய நேரமும் கவனமும் உண்டு.எழுத்துவடிவக் கேள்வி கட்டுரையாகவே இருக்கலாம். அதை பலமுறை வாசித்துப் பதில்சொல்ல வாய்ப்பிருக்கிறது.

 

ஒரு பொது அரங்கில் நாம் கேள்விகேட்பதற்கு பொதுவான விதிகளை கடைப்பிடிக்கவேண்டும். நம் சொந்த இயல்பை கொஞ்சம் மாற்றிக்கொள்ளவேண்டும். ஏன்? பொது அரங்கில் நாம் கேள்விகேட்பவருக்கு நம்மை தெரியாது. நம்முடன் அவர் தொடர் உரையாடலில் இல்லை. ஆகவே நமது பாணியை அவர் உடனே புரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை. அவர் நம்மை தவறாக- நாம் சீண்டுகிறோம் என்றுகூட – புரிந்துகொள்ளக்கூடும். ஆனால் விவாத அரங்குகளில் இந்த பிரச்சினை இல்லை. நாம் மேலும் மேலும் பேசி நம்மை புரியவைத்துவிடலாம்.

கருத்தரங்கக் கேள்விகளில் பல சிக்கல்கள் உண்டு. மேடையிலிருப்பவர் கொஞ்சம் படபடப்பாக இருப்பார். நாம் சொல்வதை அவர் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்வதில்லை. பகுதி பகுதியாகவே அவர் எடுத்துக்கொள்வார். நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் விடையை உருவாக்க ஆரம்பிப்பார். நாம் நம் கேள்வியின் ஒரு பகுதியைச் சொல்லியதுமே மேடையிலிருப்பவர் அதை மட்டும் கொண்டு பதிலைச் சொல்லிவிடுவார். ‘நான் சொன்னது அதில்லை’ என்று சொல்லி நாம் மீண்டும் விளக்கவேண்டும். அது விவாதம்போல ஆகிவிடும். ஒருமணிநேரம் ஓர் ஆசிரியருடன் உரையாடும்போது ஒருவர் பல கேள்விகளை கேட்கமுடியாது. ஆகவே நாம் நம் தரப்பைச் சொல்ல முடியாமலாகும்

 

ஆகவே உலகமெங்கும் உள்ள நடைமுறை எழுவதற்கு முன்னரே கேள்வியை மனதில் உருவாக்கிக்கொள்வது. அதை சொற்றொடராக எழுதிக்கொள்பவர்கள்கூட உண்டு. நான் முன்பெல்லாம் எழுதிக்கொள்ளாமல் எழ மாட்டேன். குறைந்த சொற்றொடர்களில் ‘பஞ்ச் டயலாக்’ போல கேள்விகள் இருப்பதே மிகச்சிறந்தது

 

சிறந்த பதிலைப் பெறுவதே நல்ல கேள்வி. உங்கள் கேள்விகள் பெரும்பாலும் மிகச்சிறப்பாகவே இருந்தன. அவற்றைப்பற்றிய வாசகர்களின் கருத்துக்களும் அப்படித்தான் இருந்தன. ஆனால் சிலரால் அவற்றை பின்தொடரமுடியாமல் போயிருக்கலாம். அதை நீங்கள் இன்னும் கூர்மையாக ஆக்கிக்கொள்ளலாம். தொடர்ந்து பயின்றுகொண்டேதானே இருக்கிறோம்?

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா 2018, உரைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7