வணக்கம்
2018 விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவிலிருந்து இன்றுதான் வீடு திரும்பினேன். சனிக்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரையிலும் பெரும் இலக்கியக்கொண்டாட்டமாக இருந்தது. முந்தைய வருடத்தை விட ஒவ்வொரு வருடமும் பங்கேற்பாளர்களும் வாசகர்களும், அதில் நிறைய பெண்களும் புதியவர்களும் சிறப்பு விருந்தினர்களும் அதிகரித்தவாறே இருக்கின்றார்கள். இந்த இரண்டு நாட்களும் பல முக்கிய இலக்கிய மற்றும் திரை ஆளுமைகளுடனேயே இருந்து அவர்களின் உரைகளைக்கேட்டு விளக்கங்களைப்பெற்று ஆரோக்கியமாக விவாதித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வாசகர்கள் அனைவருக்கும் நல்ல வாய்ப்பு அமைந்து இருந்தது.
இரண்டு நாட்களில் பல்வேறுபட்ட துறைகளில், மொழிகளில் புகழ்பெற்றிருக்கும் முக்கிய இலக்கியவாதிகளை, கவிஞர்களை , திரை ஆளுமைகளையெல்லாம் ஒருசேரக்காண்பது அரிதென்றால் அவர்களுடன் மிக இயல்பாக வீட்டுக்கு வந்திருக்கும் உறவினர்களைப்போல உடனமர்ந்தும், உணவு உண்டும், புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் இயல்பாக கலாந்துரையாடுவதென்பது அரிதினும் அரிது. இதைப்போன்ற ஒரு ஆரோக்யச்சூழல் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல வேறெந்த மொழியிலும் வேறெந்த நாட்டிலும் இல்லவே இல்லை, சாத்தியமுமில்லை
வங்காள மொழியில் படைப்புக்கள் பலவற்றை செய்திருக்கும்,பல மொழிகளில் படைப்புக்களை மொழியாக்கம் செய்திருக்கும், ஆட்சிப்பணியிலிருந்திருக்கும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காக மட்டுமல்லாது குற்றம்புரிந்தவர்களின் பக்கமும் நின்று அவர்கள் தரப்பையும் பேசும் கதைகளை எழுதியிருக்கும் வங்கமொழி எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி, தமிழ் புனைவுலகப்படைப்பாளிகளில் மிக முக்கியமான ஒருவரான தேவி பாரதி. நல்லிதயங்களுடனான சிறுமிகளையும் ரப்பர் மரங்களுக்குள் ஊடுருவும் சூரியஒளியையும், வார்த்தைகளின் மீது சரியும் மண்ணையும் கவிதையில் காட்சிப்படுத்தும் நவீனக்கவிதைகளை எழுதிய, வார்த்தைக்கு வார்த்தை பகடியாக பேசும், வாழ்வை மிக இலகுவாக எடுத்துக்கொள்ளும் நவீனக்கவிதைக்காரர் சாம்ராஜ், மலையாளத்திரை ஆளுமையும் படைப்பாளியுமான , மிக அழகிய மறக்கவியலா தலைப்புக்களுடனான கதைகளை படைத்தவருமான, கைவிடப்படுதலின் சாத்தியங்கள் அற்ற வாழ்வே மனிதருக்கு இல்லையாதலால் அத்தருணங்களைப்பேசும் கதைகளை படைத்திருக்கும் மதுபால், வழக்கமான பெண்ணியச்சூழலிருந்து விலகி கதை எழுதும் கலைச்செல்வி, இணைய வழி எழுத்தில் மிக முக்கிய ஆளுமையான சரவண கார்த்திகேயன், சுபிட்சமுருகனுக்கு சொந்ததக்காரரும், இதழியளாரரும் காட்சிஊடகத்திலும் முக்கிய ஆளுமையாக இருக்கும் சரவணன் சந்திரன், மானுட இயல்புகளையும் அவை வெளிப்படும் தருணங்களையும் தன் படைப்புக்களில் கொண்டு வந்திருக்கும் நரன், தலித் பண்பாட்டு ஆய்வார்களில் முதன்மையானவரான ஸ்டாலின் ராஜாங்கம், யுவபுரஷ்கார் விருதுக்கு சொந்தக்காரரும் மருத்துவருமான் சுனில் க்ருஷ்ணன் , லீனா மணிமேகலை என்று எத்தனை வேறுபட்ட ஆளுமைகளை நெருங்கிய நண்பர்களைப்போல அருகிலிருந்து கவனிக்கவும் கலந்துரையாடவும் அவர்களிடமிருந்து, அவர்களின் படைப்புக்களிலிருந்து அவர்களின், வாழ்வனுபவங்களிலிருந்தும் வாசகர்கள் பலவற்றை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வேறெந்த இலக்கிய குழுமத்திலும் இல்லவே இல்லை
எல்லா அமர்வுகளும் மிகச்சரியாக துவங்கி முடிந்தது வழக்கம்போலவே. அரங்கிலிருந்து விருந்தினர்களை நோக்கி கேட்கப்பட்ட சிக்கலான , நீண்ட கேள்விகளை நீங்கள் பிழைநீக்கி சரியாகவும் மிகச்சிறந்த பதிலைப்பெறும் வகையிலும் கேட்டீர்கள். திரு நாஞ்சில் நாடன் கவிஞர் தேவதேவன், சுரேஷ் பிரதீப், லஷ்மி மணிவண்ண்ன, விஷால் ராஜா என்று பல படைப்பாளிகளும் இரண்டு நாட்களுமே வந்திருந்து எல்லாருடனும் கலந்துரையாடினார்கள். ஏற்புரையில் திரு ராஜ்கெளதமன் சொன்னதுபோலவே மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கும் கீழே அரங்கில் அமர்ந்திருப்பவர்களுக்கும் வேறுபாடே இல்லாமல் ஏராளமான படைபாளிகள் இம்முறை
விழா எற்பாட்டாளர்கள் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு மேல் இதற்கான வேலைகளை செய்திருந்தார்கள் என்றும் தெரிந்துகொண்டேன். விழா நல்லபடியாக முடியவேண்டுமென்னும் அக்கறையுடன் அவரவர் வீட்டு விழாவைபோல அனைவரும் கலந்து இதை ஒரு கொண்டாட்டமாக நிகழ்த்தினார்கள்
அமர்வுகள் நடைபெற்றபோதும் இரவு தங்கலிலும் விருது வழங்குகையிலும் எங்கேனும் ஒரு ஓரத்தில் கூட சிறு சலனமோ பிழையோ மீறலோ ஏதும் இல்லை. எல்லாமே ஒழுங்கு மற்றும் கச்சிதம். விருது வழங்கப்பட்ட மாலை திரு ஞானி உள்ளிட்ட மூத்த படைப்பாளிகளும் கோவை தொழிலதிபர்களும் வந்திருந்ததை பார்க்கமுடிந்தது. நிறைய பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்களும், சென்றமாதம் திருமணமான புதுத்தம்பதிகளும் கூட வந்திருந்தனர் சுவிஸ், ஆஸ்திரேலியா, ஆஸ்டின், ஜெர்மனி எனப்பல நாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் வாசகர்கள் வந்திருந்ததை விட உடலுபாதைகளை கருத்தில் கொள்ளாமல் சேலத்திலிருந்து இயலிசை வல்லபி வந்திருந்து விருது விழா முடியும் வரை இருந்துவிட்டு இரவு புறப்பட்டுபோனது அத்தனை சந்தோஷமாக இருந்தது.
எத்தனை மனிதர்களை எங்கெங்கிருந்தெல்லாமிருந்து இவ்விழா ஒன்றாக சேர்த்திருக்கிறது என்று நினைக்கையில் மலைப்பாக இருந்தது. ஒரு படைப்பாளியாக உங்களின் படைப்புக்களை விவாதிக்க உங்கள் வாசகர்களை நீங்கள் அழைத்து இப்படி ஒரு விழா நடத்தியிருந்தாலே அதுவும் ஆச்சர்யம்தான் இது ஒரு தேர்ந்த படைப்பாளிக்கு விருதளிக்கவும், அச்சமயம் பல முக்கிய ஆளுமைகளும் அதில் கலந்துகொள்ளவும் அவர்களுடன் நூற்றுக்கணக்கான உங்கள் வாசகர்கள் உடனிருந்து கலந்துரையாடி மகிழவும் நடத்தப்பட்ட ஒரு விழாவென்பதால் பிரமிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. விருந்தினர்களாக வந்திருந்த படைப்பாளிகளும் இதைச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள் வேறு எங்கும் இப்படி எழுத்தாளர்களுடன் வாசகர்கள் இப்படி கொண்டாட்டமாய் விருந்து சாப்பிட்டுக்கொண்டு இயல்பாக பேசிக்கொண்டெல்லாம் இருப்பதன் சாத்தியமே இல்லை
இவ்விருது ராஜ் கெளதமன் என்னும் ஒரு படைப்பாளிக்கு கெளரவமென்றால், இவ்விழாவில் கலந்துகொண்டு அத்தனை பெரிய ஆளுமைகளுடன் விவாதிக்கவும், நண்பர்களிடம் பேசுவதுபோல இயல்பாக இரண்டு நாட்களும் அவர்களுடனேயே இருக்கவும் வாய்ப்புக்கிடைத்தது எங்களுக்கும் பெரும் கெளரவம். பொள்ளாச்சிக்கருகிலிருக்கும் ஒரு குக்கிராமத்திலிருக்கும் வாசகியான நான் திரு மதுபாலிடம் அவரது வசீகர கதைத்தலைப்புக்களைக் குறித்தும், கவிஞர் சாம்ராஜிடம் அவரது கவிதை வரிகளையும் அனிதா அவர்களிடம் அவரது கதையில் வரும் மயில் என்னை எப்படி கவர்ந்தது என்று மட்டுமல்லாமல் ஒரு கல்கத்தா இனிப்பு நீலவண்ணப்புடவையில் வந்திருந்ததைப் போலவே அவரிருப்பதைக்கூட சொல்லி, பால்நிறத்திலிருக்கும் அவர் முகம் அப்போது குங்குமப்பூ கலந்ததைப்போல சிவந்ததையும் கூட கவனிக்க முடிந்ததெல்லாம் இவ்விழாவில் மட்டுமே சாத்தியம்
ராஜ் கெளதமன் அவர்களைக்குறித்தான வினோத்தின் ஆவணப்படம் மிகச்சிறப்பாக் எடுக்கபட்டிருந்தது
வந்திருந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச்சென்றிருக்கிறொம். விருது ஒருவருக்கும் பெரிய பெரிய கெளரவங்கள் எங்களுக்கும் கிடைத்திருக்கின்றன. நன்றி
அன்புடன்
லோகமாதேவி
அன்பு ஜெ அவர்களுக்கு,
விஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் நான் கலந்து கொண்டதைப் பற்றிய என் சிறு அனுபவத்தை இக்கடிதத்தின் மூலம் தங்களுடன் பகிர்ந்துகாெள்ள விழைகிறேன்.
அக்டோபர் மாதத்திலேயே நான் எங்கள் போஸ்ட்மாஸ்டர் மேடத்திடம் கேட்டுக்கொண்டேன் டிசம்பர் இறுதியில் எனக்கு அவசியமாக இரண்டு நாட்கள் விடுப்பு அளிக்கவேண்டும் என. அவரும் சரியென்று சொல்லிவிட்டார். நானும் அப்போதிலிருந்து ராஜ் கௌதமன் சாரின் படைப்புகளை அலுவலகத்திற்கு போகும்போதும் அலுவலகத்திலிருந்து வீ்ட்டுக்குத் திரும்பும்போதும் பேருந்தில் வாசிக்க ஆரம்பித்தேன்.
என்னால் சரியாக காலையில் ஏழு ஐந்துக்கு எங்கள் ஊர் பள்ளங்கோயிலில் பேருந்தைப் பிடிக்கமுடியும் ஏழு நாற்பதுக்கு திருத்துறைப்பூண்டியில் பிடிக்கமுடியும் அதேபோல மாலை ஆறு முப்பதுக்கு பட்டுக்கோட்டையில் பிடிக்கமுடியும் எட்டு முப்பதுக்கு திருத்துறைப்பூண்டியில் பிடிக்கமுடியும் என்ற நம்பிக்கை எழ. அப்படியே சரியான நேரத்தில் காலையில் பிடித்துவிட்டால் திருத்துறைப்பூண்டிக்கு சமீபமான எடையூரிலோ பட்டுக்கோட்டையை நெருங்குமிடத்திலுள்ள அணைக்காட்டிலோ மறியல் நடக்கும். கிராம மக்கள் வண்ண வண்ண தண்ணீர் குடங்களோடு சாலையின் குறுக்கே அமர்ந்துவிடுவார்கள். இருசக்கர வாகனங்களுக்குக் கூட அனுமதி கிடையாது. மாலையில் என்னவாகும் என்றால் பட்டுக்கோட்டையை விட்டு வெளிவந்தபிறகு அமைந்திருக்கும் முதல் பெரிய நிறுத்தம் நான்கு வழிச்சாலை துவரங்குறிச்சியிலோ இன்னும் தாண்டி திருத்துறைப்பூண்டிக்கும் பட்டுக்கோட்டைக்கும் மையத்திலிருக்கும் நாச்சிகுளத்திலோ சிறிய பெரிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் நாங்கள்தான் சரியான நேரத்தில் நிவாரணம் தர வல்லவர்கள் என்று கையடக்க அல்லது ஆளுயர மைக்குடன் மல்யுத்தம் நடத்திக் கொண்டிருப்பார்கள். அந்த அரைமணி நேர மல்யுத்தப் போரினை ஒன்று இரண்டு மூன்று நான்கு என தன் காலே தனக்குதவி என சென்று கொண்டிருப்பவர் முதல் அனைத்து சக்கர வாகனங்களும் நின்று ரசித்துவிட்டுதான் செல்ல வேண்டும். தலைகளின் எண்ணிக்கையை எப்போதாவது வரும் விருந்தாளியிடம் அதிகமாகக் காண்பித்து பெருமை கொள்வதற்காக மூன்று நான்கு டிராக்டர்கள் நிறைய கையில் கிடைக்கும் தலைகளை அந்தந்த கைகளுக்குக் கொஞ்சம் கொடுத்து கொண்டுவந்து காண்பிப்பதும் உண்டு. அனைத்துத் தலைகளும் காணாமல் போய் என் தலையும் புறவெளியில் காணாமல் போய் வீடடங்க பத்தும் ஆகும் பதினொன்றும் ஆகும்.
இவ்வாறான பெருந்துயரங்களை எங்கள் தலைமை மேடத்திடம் மிக்க வருத்தத்துடன் நான் பகிர்ந்துகொண்டாலும் இந்தக் கஜா புயல் எனக்கு பெரிய நன்மையொன்றைச் செய்துள்ளதாக அதற்கு தினமும் மனதிற்குள் நன்றி கூறி வருகிறேன். அது எதற்கு என்றால் நான் செல்லும் பேருந்து எவ்வளவுக்கெவ்வளவு கூடுதலாக நேரத்தை எடுத்துக்கொண்டு நான் வீடடையும் நேரத்தைத் தாமதமாக்குகிறதோ அவ்வளவுக்கவ்வளவு என்னால் கூடுதலாக ராஜ் கௌதமன் அவர்களின் படைப்புகளை வாசிக்க நேரம் கொடுக்கிறதல்லவா. இந்த சூழல்காெண்ட பேருந்துப் பயணத்தில்தான் அவரின் ஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக மாற்றமுமையையும் சிலுவைராஜ் சரித்திரத்தையும் வாசித்தேன். அவரைப்பற்றித் தெரியாமலே அவரின் காலச்சுமையை சென்ற வருடமே நண்பன் வாசிக்கச் சொன்னதால் வாசித்து முடித்திருந்தேன். அவரின் துயரத்தையும் கொண்டாட்டத்தையும் இன்னுமதிக ஆழமாக உணர்ந்திருக்க நேரிட்டிருக்குமோ என்னவோ முதலில் சிலுவைராஜ் சரித்திரம் வாசித்துவிட்டு காலச்சுமையை வாசித்திருந்திருந்தால் என்று சிலுவைராஜ் சரித்திரத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் தோன்றியது. ஆனால் அதேநேரம் அதுவுமே விஷ்ணுபுர இலக்கிய வட்டம் அவரை நவீன இலக்கிய விருதுக்குத் தேர்ந்தெடுத்து அவரை எனக்கு அறிமுகப்படுத்தியிராவிட்டால் எனக்கு அவ்வாறு தோன்றியிருக்குமா என்றும் கேள்வி எழுந்தது. ஆனால் அக்கேள்வி அவரின் அபுனைவு ஆய்வு நூலின் முன்னுரையை வாசிக்க ஆரம்பித்தவுடனே எழுந்த வேகத்தில் மறைந்தது.
பள்ளிக்கல்வியில் நான் கண்டுகொள்ளாத நிலப்பகுதிகளை மண்ணின் மாந்தர்களை அம்மாந்தர்களை அம்மண்ணுக்கு சொந்தமில்லாதவர்களாக மாற்றிய ஆதிக்க சக்திகளைத் தெளிவாகக் கண்டுகொண்டேன். பகடியுடன் கூடிய துயரம் துயரத்துடன் கூடிய பகடி இரண்டும் அறிவுத்தளத்தில் பெருஞ்சக்தியாக உருவெடுத்து செயல்பட்டிருப்பதை அவரின் புனைவுகளில் கண்டேன். ஆதங்கம் கோபம் வெறுப்பு எதிர்ப்பு இவற்றை அவரின் ஆரம்ப கட்ட முதலாளித்துவமும் தமிழ்ச் சமூக மாற்றமும் நூலில் கண்டேன். அவ்வாறான உள எழுச்சியொன்றைத் தூண்டிவிட்டுக் கொண்டே அந்நூல் என்னை முழுமையாக உள்ளிழுத்துத் தன்னை முழுமையாக வாசிக்க வைத்தது. எவ்வாறெல்லாம் உழைப்பு அடிமைக்குரித்தான குணமாக மாற்றப்பட்டது என்ற ஆய்வை வாசிக்கையில் ஒரே நேரத்தில் இப்படியெல்லாம் சிந்தித்த மாந்தரின் முட்டாள்த்தனத்தை எண்ணி சிரிப்பும் சூழ்நிலை சந்தர்ப்பவாதத்தால் அகப்பட்டுக் கொண்ட மனிதர்களை எண்ணி பரிதாபமும் தோன்றியது. ஆனால் மனிதர்களிடம் பேராசையும் ஆணவமும் இருக்குமட்டும் இந்த முட்டாள்த்தனத்திலிருந்து விமோச்சனமே இல்லை என்பதைத் தொடர்ந்து வாசிக்கையில் தெளிவாகவே புரிந்துகொள்ள முடிந்தது.
ஓரளவு இம்மாபெரும் வலையிலிருந்து விடுபட அதே அடிமைக்குரிய குணமாகக் கருதப்பட்ட உழைப்பைக் கோரும் கல்வியறிவும் சமயோசித புத்தியும் மட்டுமே வழி என்று தன் வாழ்வின் மூலம் நிரூபித்துக்காட்டியிருக்கிறார் பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்கள்.
ஒரு படைப்பை வாசிக்கையிலேயே படைப்பாளியை மிக அணுக்கமாக உணர்பவர்கள் அவரை நேரில் முகமுகமாக தரிசிக்கவேண்டும் என விரும்புவது உண்மைதான் போலும். விஷ்ணுபுர விருதுவிழாவிற்கு வருகைபுரிந்திருந்த அவரை எதேச்சையாக பின்பக்கமாகப் பார்த்தே என் மனம் கண்டுகொண்டதையும் அனிச்சையாக என் கால்கள் என்னை இழுத்துக்கொண்டு அவரை நோக்கி ஓடியதையும் அவர் முன் நின்று என்ன பேசுவது என்றறியாமல் என் இதயம் படபடவென அடித்துக்கொண்டிருப்பதையும் நான் கண்டு வியந்தேன். நல்லவேளை, “சாருடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்” என ஷாகுல் சார் பேச்செடுத்துக்கொடுத்ததால் என்னால் அச்சூழலைக் கடக்க முடிந்தது. நான் சுதாரிப்பதற்குள் என்னைப்போல அவரைக் கண்டு ஓடிவந்தவர்களின் படையால் அவர் நான்கு புறங்களும் சூழப்பட்டமையால் அவரிடம் அப்போது பேசமுடியவில்லை. கொஞ்சம் அவர் விடுதலைபெறட்டும் என்றெண்ணி என் வாசக நண்பர்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன். அவரின் அமர்வின்போதுதான் அதற்குப்பிறகு அவரைக் காண முடிந்தது. அப்போது அதுவரை அடங்கியிருந்த உளவெழுச்சியோ என்னை மீறி எழுந்து ஆளுக்கு முன்பாக மைக்கை வாங்கி வைத்துக்கொண்டு தயார்நிலையில் இருக்க வைத்தது. ஆனால் பேராசிரியரோ என்னைவிட அதிக உளவெழுச்சியில் இருந்திருக்கிறார் போலும். பேசிக்கொண்டேயிருந்தார். நானும் எழுவதும் அமர்வதுமாக இருந்தேன். இது அவருக்கு வகுப்பில் மாணவி ஒருத்தி அவரைக் கிண்டல் செய்ய எத்தனிப்பதுபோலத் தோன்றிவிட்டது. இதை ஜெ சாரும் கவனித்துவிட்டார். ஆனால் பேராசிரியர் எப்போது நிறுத்துவார் என அவரும் காத்திருந்திருக்கிறார் என்று உடன் அவர் கேள்வியெழுப்பியதிலிருந்து தெரிந்துகொண்டேன். மிகவும் மல்லுக்கட்டி எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அவர் என்ன கேள்வி கேட்டார் என்பதும் அதற்கு பேராசிரியர் என்ன பதில் சொன்னார் என்பதும் என் மூளைக்கு எட்டவேயில்லை.
இப்படியெல்லாம் எனக்கு நேர்வது இயற்கைதான். எனவே பதட்டத்தில் சொல்ல முனைந்ததை மறந்துவிடக்கூடாது என்றுதான் முன்ஜாக்கிரதையாக என் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டுவந்திருந்தேன். அவரிடம் கேட்பதற்கு ஒரு கேள்வியும் சிலுவைராஜ் சரித்திரம் புத்தகத்தில் குறித்தும் வைத்திருந்தேன். எல்லோரையும் போல் எனக்கு பதில் சொல்லிவிட்டு கேள்விகேட்கத் தெரியவில்லை. என்னைப்போல் கேள்விகேட்கும் முன் நான் கண்டடைந்த கேள்விகளுக்கான பதில்களைச் சொல்ல ஆரம்பித்தேன். ஆனால் கேள்விகள் மட்டும்தான் கேட்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகையில் ஆசான் ஒருகணம் சிலுவையின் கணக்கு வாத்தியார் போல தோற்றமளித்ததால் எனக்குக் கொஞ்சநஞ்சம் தெரிந்த தமிழும் மறந்துவிட்டது. தலை கிறுகிறென சுழல இப்போது அமர வேண்டுமோ என்றெண்ணிக் கொண்டிருக்கையில் நான் கேள்வி கேட்டு பதிலும் பெற்றுதான் அமைதியாக நிற்கிறேன் என வங்காளத்து விருந்தின எழுத்தாளர் அனிதா மேடம் தன் கேள்விக் கணையைத் தொடுக்க ஆரம்பித்திருந்தார். அப்போதுதான் நான் ஆஹா நானும் ஒரு கேள்வியை புத்தகத்தில் குறித்து வைத்திருந்தோமே என உடனே சுதாரித்து அதைக் கொஞ்சம் கூட நிமிராமல் வாசித்து முடித்தேன். கேள்வி போன்ற தோரணை வரவேண்டும் என உடனே அமர்ந்துவிடாமல் அந்த பதிலைக் கொஞ்சம் விளக்கிச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டு அமர்ந்தேன். ஆனால் அப்பொழுதும் அது கேள்வி போன்ற தோரணையை ஆசானுக்கோ பேராசியருக்கோ அளிக்கவில்லை என நான் சிதிலமடைந்திருந்த நேரத்தில் அனிதா மேடமால் கேட்டுமுடிக்கப்பட்டிருந்த கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் உணர்ந்தேன். அப்போது அப்பாவிடம் அடிவாங்கி அப்பாவியாக நின்றுகொண்டிருந்த சிறுவன் சிலுவையே என் கண்முன் நின்றான். அடிவாங்காமலேயே கண் மூக்கு காது கன்னம் என அனைத்தும் சிவந்து ஜிவ்வென்று என்னிடமிருந்து அச்சமும் நடுக்கமுமாக உஷ்ணம் வெளியேறிக் கொண்டிருக்கையில் என்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என ஒரு நிமிடத்திற்கு சிந்திக்க முடியவில்லை. பிறகு நிதானமாக சிந்திக்கையில், நம்மால் ஒரு சிறிய புறக்கணிப்பையே தாங்க முடியவில்லையே, எப்படித்தான் சிலுவைகள் காலங்காலமாக ஆரம்பகட்ட முதலாளித்துவத்துவமும் தமிழ்ச்சமூக மாற்றமும் எனும் புத்தகத்தில் கூறப்படும் சாதியாதிக்கத்தைத் தாங்கிக் கொண்டு வருகிறார்களோ என்றெண்ணுகையில் உள்ளமும் பதறவே செய்தது.
இதற்கு ஒரே வழி, சிலுவையே கண்டடைந்த, “கல்வியறிவு பெற்று வாழ்க்கையில் உயர்வடைவதுதான்”. என் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டிருந்தால் இதுதான் அப்பதிலாக இருந்திருக்குமென நம்பினேன்.
இதை உணர்ந்துகொண்ட கணத்தில் நான் மீண்டும் இயல்பு நிலையடைந்துவிட்டதால் விழா முடிவடைந்ததும் பேராசிரியருடன் எப்படியும் ஒருவார்த்தையாவது நேரில் பேசிவிடவேண்டும் என்று உள்ளம் திரும்பவும் இழைய ஆரம்பித்தது. எனக்கு என் அம்மா போல மூன்று என்ற எண்தான் ராசி என்று இந்த தடவையும் நம்புமாறு நான் எண்ணியது சரியாக நிகழ்ந்தது. ஆமாம். நான் பேராசிரியர் ராஜ் கௌதமன் சாரிடம் பேசி அவரின் அறிவுரைகளை வீட்டு முகவரியுடன் பெற்றுக்கொண்டேன். நான் மனநிறைவடைந்த தருணம் அது.
அதுபோல எதிர்பாராவகையில் இன்னொரு மிக முக்கியமான கண்டடைதல் ஒன்றும் இவ்விழா நிறைவடைந்து வீட்டிற்கு அவரவர் திரும்பும் நேரத்தில் எனக்குக் கிடைத்தது. அது “படைப்பிலிருந்து படைப்பாளியைக் கண்டுகொள்தல்” பற்றியது. எள்ளலும் பகடியுமாக எவரிடத்தும் நம்பிக்கையின்றி நீ கற்றுவிட்டால் எவரையும் பொருட்படுத்தாமல் வாழலாம் என்று கூறவருவதுபோல பேராசிரியர் அவர்களின் புனைவும் ஆய்வும் மேடைப்பேச்சும் அமைந்திருக்கிறதே அல்லது நாம்தான் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சிந்திக்கிறோமா என குழப்பத்துடன் யாேசித்துக் காெண்டே ஊருக்குப் புறப்பட்டு நண்பனுக்காக பைகளுடன் அரங்கிற்கு வெளியே போர்டிகோவிலிருந்த சிறிய சுவற்றுத் திண்ணையில் அமர்ந்திருந்தேன். அப்போது அரங்கிலிருந்து அவர் ஒரு வாசகருடன் பேசிக்கொண்டே அப்பக்கமாக வந்தார். மரியாதையின் நிமித்தமாக அமர்ந்திருந்த நான் அவர் என்னைக் கடந்துசெல்லும் வரை எழுந்து நின்றேன். என்னைக் கடந்து சென்றுவிட்ட அவர் என்னை நோக்கித் திரும்பி, “போய்ட்டுவாப்பா” என்று கையசைத்துவிட்டுச் சென்றதைக் கண்டதும் சிலுவை ஒன்பதாவது படிப்பதற்காக மதுரைக்கு கிளம்பிச் செல்கையில் பேருந்தில் ஏறிக்கொண்டு ராக்கம்மா பாட்டியிடமும் அம்மையிடமும் “போய்ட்டுவரேன்த்தா” என்று விடைபெற்றுச் செல்வதைப் போல் தோன்றியது. நிறைப்பூரிப்புடன் என் உள்ளத்தில் பொங்கிய உணர்வை எவ்வித வார்த்தைகளுமின்றி என் எக்காலத்துக்குமாய் என் ஆழுள்ளத்தில் சேமித்து வைத்துக் கொண்டேன். ஏனெனில் அதுதான் அப்பாேது அந்த சிறிய சுவற்றுத் திண்ணையில் குழப்பத்துடன் அமர்ந்து நான் தேடிக் காெண்டிருந்த கேள்விக்கான பதில் ஆகும்.
அன்புடன்,
கிறிஸ்டி.