அன்புள்ள ஜெ ,
விழா சிறப்பாக நிகழ்ந்தது .எனக்கு ராஜ் கவுதமனின் இயல்பான பேச்சு மிக பிடித்தது.
விவாத நிகழ்வில் தேவிபாரதி மிக கவர்ந்தார் , அவர் தால்ஸ்தோய் ,காந்தி இருவரின் பாதிப்பினால் தன்னில் உருவான முதிர்ச்சியை பகிர்ந்த இடம் , தால்ஸ்தோய் காந்தி இருவருக்குமான வித்யாசம் மற்றும் தால்ஸ்தோய் வரலாற்றினை சொன்ன இடங்கள் பிரமாதமாக இருந்தன . பொதுவாக எழுத்தாளர்களை காந்தியும் தால்ஸ்தோயும் ‘வெஜிடேரியன்’களாக மாற்றிவிடுகிறார்கள் என இவர் பேசும் போது நினைத்தேன் :)
ஸ்டாலின் ராஜாங்கம் (திருக்குறள்) திரி எனும் வார்த்தைக்கு அளித்த விளக்கம் புதிய திறப்பு அளித்தது , திராவிட எனும் சொல்லின் மூலம் இதிலிருந்து போனது என்பது கேட்க ஆச்சிரியமாக இருந்தது , திரமிளம் ( தமிழகம் / ராஜ் கவுதமன் / அயோத்தி தாசர் ஆய்வு நூல் ) எனும் வார்த்தை கூட இந்த இணைவில் வரும் ஒன்றோ என எண்ணினேன் .
ஸ்டாலின் உரை மிக மிக செறிவாக இருந்தது , நான் ஒரு கேள்வி கேட்கலாமோ என நினைத்து பின்பு அது தவறாக மாறிடுமோ என பயந்து விட்டு விட்டேன் , அது பறையர்/ பிராமணர் இரு சாதிகளுக்கிடையிலான மோதல் /நெருக்கம் பற்றி அறிந்து கொள்வதற்காக வேண்டி , நாட்டுப்புற கதைகளில் சகோதரர்களாக இவர்கள் வருகின்றனர் ( நூல் : நான் ஏன் தலித்தும் அல்ல / t.தர்மராஜ் ) , இந்த கதைகளில் பிற சாதிகள் இல்லை . முன்பு பறையர் இருந்த இடத்தை அபகரித்து கொண்டு அந்த இடத்தை பிராமணர்கள் அடைந்தனர் என்பதுதான் இந்த இணைவிற்கான காரணமாக இருந்திருக்கலாம் என நினைத்தேன் , ஆனால் அதை தாண்டி வேறு ஏதாவது மேலதிக காரணம் கிடைக்க கூடும் என கேட்க எண்ணினேன் .
சாம்ராஜ் மற்றும் பிறரின் விவாதங்களும் பிடித்திருந்தது .
ராதாகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ,
சிஎஸ்கேவின் அமர்வின் போது என்னிடம் ஒரு முன் தீர்மானம் இருந்தது. அவருடைய இறுதி இரவு தொகுப்பின் முன்னுரையில் அவரே குறிப்பிட்டிருந்த ஒன்றுதான். தான் வணிகம் மற்றும் இலக்கியம் என இரண்டிலும் பொருந்தாமல் அதற்கிடையே செல்கிறேன் என்பது. ஆனால் வணிக எழுத்து அவரது இலக்கு அல்ல. ” இறுதி இரவு” தொகுப்பில் அவரின் கதைகளை வாசிக்கையிலேயே அதை உணரமுடியும். அது ஒரு ஆரோகணம்தான். ”ஆப்பிளுக்கு முன்” நாவல் அந்தவகையில் அவரது குறிப்பிடத்தக்க நாவலாக நிற்கும். பெரும்பான்மையாக உரையாடல்களில் கதையையும் கதாபத்திரங்களின் உணர்வினையும் கடத்தியபடி நகரும் நாவல் என சமீபத்தில் நான் வாசித்தது இதுதான். அவர் அதில் எல்லாவித சுதந்திரங்களும் எடுத்துக்கொள்கிறார். உதாரணமாக “நினைவில் காடிருக்கும் மிருகம்” என்கிற வரி காந்திக்குப்பின் புழக்கத்தில் வந்த ஒன்று. ஆனால் அதை நாவலின் உரையாடலில் வைக்கிறார். இவைகள் ஒரு சம்பவத்தை மீண்டும் எழுதும் முயற்சியாக இல்லாமல், அதன்மூலம் அவர் தன்னைப்புரிந்துகொள்ளும் முயற்சியாகவே இருக்கின்றன. எதிர்பார்த்தது போலவே ஒரு வெளிப்படைத்தன்மையும், நேர்மையும் அவர் பேச்சில் வெளிப்பட்டன. அதில் ஒரு குறை என சொல்லவேண்டுமனால், அந்த நேர்மை அவரை வாசித்திருக்காத பார்வையாளர்கள் சிலரை அவருக்கு ஒரு கருத்து சொல்லத் தோன்றியதைச் சொல்லவேண்டும். அதைக்கண்டு சிரிப்பும் வந்தது. அவர் சீண்டப்படாமல் தலையாட்டிக் கேட்டுக்கொண்டது அவரது முதிர்ச்சி.
அந்த அமர்வில் சற்றும் எதிர்பாராதவகையில் தன் இன்னொரு முகத்தைக்காட்டியவர் கலைச்செல்விதான். அவர் சிறு வயதில் கிட்டத்தட்ட சாமியாராக இருந்தவர் என்பதும் அவர் எழுத்தின் வழியாக தன்னை மீட்டுக்கொண்டதும் இப்போது நான் அழுவது குறைந்திருக்கிறது என்றதும் மிகவும் அந்நியோன்னியமானவை. அவற்றை மேடையில் பகிர்ந்துகொண்டதும் ஆச்சரியமாக இருந்தது. அவர் 90 கதைகள் எழுதியிருப்பதும் தெரியாது. நான் வாசித்திருந்த கதைகள் வழியாக ஒரு “அறத்துப்பால்” எழுத்தாளராக நினைத்திருந்தேன். இதற்குமுன் ஒரு மேடையில் அவர் உரையை கேட்டபோது அது மிக சம்பிரதாயமாக இருந்ததை உணர்ந்தேன். எளிதில் செல்லுபடியாகிற, நெஞ்சைத்தொடுகிற வகை எழுத்துக்களை எழுதி யாருக்கும் பிரச்ச்னையில்லாமல் பேசிவிடவும் விரும்புகிற ஒருவர் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் நேற்றைய தினம் அதை மாற்றிவிட்டது. அவர் கேள்விகளை அநாயாசமாக எதிர்கொண்டவிதம் மிகவும் ரசிக்கும்படியும் இருந்தது. தன் எழுத்தில் ஆசிரியர் குரல் தெரிவது தனது ஒரு எழுத்துவகைதான் என்று கூறிய போது எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடன் ஒப்பிட்டு செல்வா அதை விளக்கிய இடம் அந்த உரையாடலில் மிக முக்கியமானது. அது, எழுத்தில் தன் இடம் தெரியவில்லை என்று அவர் கூறியபோது இது உங்கள் வரிசை என்று சொன்னதுபோல தோன்றியது
அன்றைய நாளின் நாயகன் என்றால் அவர் சரவணன் சந்திரன்தான் ( என் போன்ற சாம்ராஜ் இயர்கள் மன்னிக்க :-) ). சென்றவருடம் போகன். அதற்கு முன் ஹெச் எஸ் சிவபிரகாஷ். 2015 ல் ஜோ.டி.குரூஸ். இது என் மதிப்பீடு. ஒரு கூட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் கலை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. சரவணன் சந்திரன் இன்றைய 2018ம் வருடத்தின் வாட்சப் ஃபார்வேர்டு நீதிகளை ஐந்து முதலைகளின் கதை காலத்திலேயே கூறிவிட்டு இப்போது 1990 களுக்குத்திரும்பியிருப்பவர். அவர் தனது காட்சிஊடக எபிசொடுகளுக்காக ஐயாயிரம் கதைகளைக்கேட்டு அதில் ஆயிரத்தை ஒளிபரப்பியவர் என்றார். பேசாம, 1947க்கே திரும்பிடு சிவாஜி என்று சொல்லத்தோன்றியது…அவரின் அலைதல்கள், அவர் இமேஜாக ஒருவரை நினைவில் பதியவைக்கும் திறன் என அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவிதமும் சிறப்பாக இருந்தது. ஃபேஸ்புக் வகை எழுத்து என்ற உங்கள் வரியில் புண்பட்டது ஏன் எனக் கூறியது அவையைக் குதூகலப்படுத்தியது. அடுத்த அமர்வு சுநீலுக்கானது. அவர் செட்பிராபர்ட்டி என்பதாலும் நான் மட்டுறுத்திய அமர்வு என்பதாலும் லஞ்ச் பிரேக் முடித்து வருவோம்.
ஸ்டாலின் ராஜாங்கத்திடம் ஒரு பொறுமை இருக்கிறது. ஒவ்வொரு கேள்வியையும் விளக்குகையில் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு நீண்ட விளக்கங்களை அளித்தார். தான் களத்தில் பெறும் தரவுகளை முதன்மையானதாவும், புத்தகத்தில் உள்ளதை இறுதியானதாவும் எடுத்துக்கொள்வதாகக் கூறி அது எங்கெங்கு என மீண்டும் விளக்கினார். அவைகள் அவர் புத்தகங்களில் உள்ளவைதான் என்றாலும் அபுனைவு என்பதால் மீண்டும் கூறியது தேவையானதாகவே இருந்தது. அருமை என்பதை விட பொறுமை என்று சொல்லவேண்டும். உணவுக்குப்பிந்தைய அந்த அமர்வில் தூங்குபவர்களை போட்டோ எடுக்க எண்ணித்தேடிச் சலித்தார் ஆளுநர்.ஸ்ரீநிவாஸ். மேலும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் உரையில், தான் மேலும் மேலும் உரையாட விரும்புகிறேன் என்ற தொனி இருந்துகொண்டே இருந்தது.
அடுத்து நிகழ்ந்த இரட்டையர் அமர்வில் நரனும் சாம்ராஜும் பங்கேற்றனர். ஒரு ஓவியத்தைக்காணும் உணர்வை எழுத்தில் கொண்டுவருகிறேன் என்று கூறிய நரன் ஒரு சம்பவத்தைப் பகடியாக்குகிறேன் எனக்கூறிய சாம்ராஜ் என இரு வேறு வகையினரை ஒன்றாக்கிய மேடை. நரேனின் ( நரன் அல்ல) அறிமுக உரையும் செறிவானதாக இருந்தது. கவிஞர்களின் மேடை என்று கூறப்பட்டாலும் சிறுகதைகள் பற்றியே அதிகம் பேசப்பட்டன. எம் எல் குழுக்களின் மதிய உணவு பற்றியும், ரோந்து போலீசுடன் விளையாடுவது பற்றியும் கூறி அவர்க்ளின் அப்பழுக்கற்ற நேர்மையும் ஈடுபாடும் பற்றி ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தை சாம்ராஜ் அளித்தார். அவரது கதைகள் வெறும் பகடிகள் அல்ல என்பதை அவர் வலியுறுத்திக்கொண்டே இருந்தார். நரன் தன்னுடைய வாழ்வில் தான் சந்தித்த பொருளாதார மோசடியிலிருந்து மீண்டுவந்ததை கூறினார். இந்த அமர்வில், கேள்வி நேரம் முடிந்தும் கேட்க வேண்டிய பல கேள்விகள் வாசகர்களுக்கு இருந்தன.
அதன்பின் இரவுணவிற்கு முந்தைய அமர்வு எழுத்தாளர். தேவிபாரதிக்கானது. அவரது நாவல்கள் மற்றூம் அவருக்கும் சுந்தர ராமசாமிக்குமான உரையாடல்கள் குறித்து விளக்கினார். அவர் ஒரு சுவாரசியமான உரையாடல்காரர் என்பது அவர் உரைகளை அதிகம் கேட்டிராத எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்பொழுது வாசிப்பு பழக்கம் எப்படி இருக்கிறது என்கிற கேள்விக்கு நல்ல முன்னேற்றம் இருக்கு. என் நாவல்லாம் படிக்கிறாங்களே என்று ஆதாரத்துடன் விளக்கினார். காந்தியைப்பற்றிய தன் கருத்து பிற்காலத்தில் மாறியது பற்றியும் பிறிதொரு இரவு கதையை எழுதியது பற்றியும் கூறியபோதும், நட்ராஜ் மகராஜில் எந்தளவு புனைவு எந்தளவு உண்மை என்று கூறிய போதும் அசாதாரணமான சம்பவங்களை மிகவும் சரளமாக சொல்லிச்சென்றார்.
மறுநாள், முதல் அமர்வு லீனா மணிமேகலைக்கானது. அந்த உரையாடல் இரண்டாவது கேள்விக்கான பதிலிலேயே பெண்ணியம் சார்ந்து சென்றுவிட்டது. நீண்ட நேரம் சென்ற அந்த விவாத்தில் பல கேள்விகளை அவர் பலவிதங்களில் ஏற்கனவே எதிர்கொண்டிருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. ஒரு செயல்பாட்டாளர் கவிஞராக இருக்கையில் கவிதை செயல்பாட்டிற்கான கருவியாக ஆகிவிடுகிறது என்பதால் உரையாடல் கவிதைக்கு வெளியே அதிகம் நிகழ்கிறது போலும். இருப்பினும் அதில் நீங்கள் தெரிவித்த ஒரு கருத்து முக்கியமானதாக தோன்றுகிறது. லீனா, மஹாஸ்வேதாதேவியை தன் ஆதர்சம் என்று குறிப்பிடுகையில், அதை மறுத்து பேசுகையில் , அவர்கள் மேலோட்டமாக அதிரடி கருத்துக்களைக் கூறும்போது அது ஆம் என்று சொல்லி நகர்ந்து போக வைத்துவிடுகிறது என்றும் ஆனால் மன அடுக்கின் பல லேயர்களை அசைக்க ஆழ்நிலை மனதை கவிதை சென்று தொடவேண்டும் என்று கூறினீர்கள். அதற்கு உதாரணமாக ஆஷாபூர்ணதேவியை குறிப்பிட்டீர்கள். அதன் தொடர்ச்சியை அடுத்த அமர்வு முடிந்தபின்னும் அவருடன் பேசினீர்கள் என்று நினைக்கிறேன். அவ்வாறிருந்தால் அதை நேரம் கிடைக்கையில் தொகுத்து எழுதினால் ஒரு உரையாடலுக்கான பேருதவியாக இருக்கும் என்று மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
அனிதா அக்னிஹோத்ரியின் கதையுலகம் பற்றிய உரையாடல் சற்று திசைமாறி, ஆட்சிப்பணிக்குச்சென்று சுசித்ராமூலம் நிர்வாகத்திலிருந்து இலக்கியத்திற்கு விவாதத்தை மீட்டுக் கொண்டுவந்தது. தளத்தில் வந்த சிதைவுகள், எரிகல் ஏரி ஆகிய சிறுகதைகள் அதிகம் பேசப்பட்டன. அதில் peacock கதை கனவன் மனைவிக்கிடையிலான ஒரு பரஸ்பர ஒப்படைப்பைக் கூறுவதையும் ஆனால் அது பெண்ணியம் சார்ந்து புரிந்துகொள்ளப்பட்டு எதிர்க்கப்பட்டதையும் அவர் கூறினார். சுநீல் தற்கால வங்க இலக்கிய நிகழ்வுகள் குறித்து கேட்ட கேள்விக்கு சில எழுத்தாளர்களின் பெயரைக்குறிப்பிட்டார். சத்யஜித்ரே என்று சொல்லவே வாய் குளறும் செல்வாவின் சக குழுமத்தினனால் அதை நினைவில் கொள்ள இயலவில்லை. சுநீல் எழுத்க்கூடும். ஆனால் கடலூர் சீனுவின் ஒரு நீண்ட கேள்வியை “சாருக்கு ஒரு ஊத்தப்பம்…” என ராம் மொழிபெயர்த்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும் என்பது சுநீலின் விருப்பம்.
மதுபால் அவர்களின் உரையாடல் தமிழில் கேள்விகள் மலையாளத்தில் பதில்கள் என ஒரு புதுவிதமாக இருந்தது. நீங்களும் சாம்ராஜும் கேபி வினோத்தும் ஆரம்பத்தில் தமிழ் மலையாளம் என இரண்டிலும் மாறி மாறி கூறினாலும் ஓரளவிற்கு மேல் இதுவே பழகிவிட்டிருந்தது. அவர் சிறுகதையின் தலைப்புகள் முக்கியமானவை.. ஓடும் ரயிலில் ஏறுவது எப்படி என்பது போல, அது பற்றி கேட்டதற்கு தலைப்பு கிடைக்கும் வரை நான் காத்திருப்பேன் அதற்குக் காரணம் தலைப்பும் கதை சொல்ல வேண்டும் என்று கூறியது ஒரு புது கருத்தாக எனக்குத் தோன்றியது
இவற்றிற்கிடையே விருது நாயகர் ராஜ் கெளதமனின் அமர்வு. அவரது பதில்களில் புதுமைப்பித்தன் பற்றிய கருத்து அவர் பற்றி அறிந்துகொள்ள ஒரு திறப்பாக இருந்தது. ஒரே சமயத்தில் மார்க்ஸிஸ்ட்டாகவும் போஸ்ட்மார்டனிஸ்டாகவும் இருப்பது பற்றிய கேள்விக்கு காலையில் அப்படி இருப்பேன் மாலையில் இப்படி இருப்பேன் என்று கூறி கலகலப்பூட்டினார். தான் மிக பசியோடு இருந்த காலத்தில்தான் இந்தளவு புரிதலை அடந்தேன் என்றும் கூறினார். ஒவ்வொரு கேள்விக்கும் பதிலாக அவரிடம் இன்னும் சொல்ல எராளமாக நிறைந்து கிடக்கின்றன. அச்சில் வந்தவை அதில் ஒரு பகுதிதான். ஒரு சங்கிலித்தொடர்போல ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு அவர் இயல்பாக உரையாடிக்கொண்டே சென்றார். ஒவ்வொருமுறையும் அடுத்த கேள்வி கேட்பவர் எழுந்து நின்று கவனத்தை ஈர்த்து கேள்விகளைக் கேட்டார். அதன் பதிலும் அவ்வாறு பல செய்திகளை தரவுகளை அடுக்கியபடி சென்றன. ஆகையால் அவரின் பதில்களுக்காக பல கேள்விகள் காத்திருந்தன. பல பதில்களும் கேள்விகளும் அவரிடமும் காத்திருக்கின்றன… உங்கள் வரிகளைக் கொண்டே இப்படிச் சொல்லிப்பார்க்கிறேன்… அவைகளை சொல்லிமுடிக்க நம் பேராசிரியருக்கு இந்த ஒரு அமர்வு போதாது.. இன்னும் நூறு அமர்வுகள் வேண்டும்
அன்புடன்,
R.காளிப்ரஸாத்