நூல்கள் கடிதங்கள்

அன்பு ஜெமோ அவர்களுக்கு,

என் நண்பனும் நானும் வனவாசியைத் தேடி சாகித்ய அகாடமி (சென்னை)யில் கேட்டதற்கு பதிப்பு இல்லை, இனி மறுபதிப்பும் போடப்போவது இல்லை என தெரிவித்தார்கள். என் நண்பன் ஒன்பதாவது படிக்கும்போது வாசித்த மறக்கமுடியாத நாவல் கிடைக்காததில் மனமுடைந்து போனான். உங்கள் கவனத்திற்கு கொண்டுவரவே இதை எழுதுகிறேன்.
நன்றி.
கு.மாரிமுத்து

அன்புள்ள மாரிமுத்து

வனவாசி ஒரு மகத்தான நாவல். ஆனால் அது இப்போது கிடைப்பதில்லை. மறுபதிப்பு கொண்டுவர எவரேனும் முயலலாம்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

திசைகளின் நடுவே படித்தேன்.

எத்தனைதான், இணையத்தில் விடாது உங்கள் பதிவுகளைப் படித்தாலும், அவை உங்கள் கருத்துகளையும், சிந்தனையோட்டத்தையும், எழுத்துத்திறனையும் தான் வெளிப்படுத்துகின்றன. ஆனால், ஒவ்வொரு முறையும், புத்தகத்தில் உங்கள ஆக்கங்களைப் படிக்கிற போதுதான் உங்கள் படைப்புத்திறனின் வீரியம் முழுவதும் புரிகிறது. இத்தொகுப்பில் உள்ள ஆரம்பகாலக் கதைகளில் உங்கள் வேர்கள் வெளிப்படுகின்றன. இவை பிறகு பெரும் மரங்களாய் விரியக்கூடும் சாத்தியங்கள் அப்போது படித்தவர்களுக்கும் தென்பட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. எனக்கும் மாடன் மோட்சத்திலும், திசைகளின் நடுவேயும், படுகையிலும் பல விஷ்ணுபுரத்தின் வாயில்கள் தெரிகின்றன.

ஒவ்வொரு கதையைப் படித்துமுடிக்கும்போதும், இதுதான் இந்தத் தொகுப்பின் சிறந்த கதை போலிருக்கிறது என்று எண்ணுவேன். அந்த எண்ணம் அடுத்த கதை படிக்கிற வரைதான். பல்லக்கு, வலை, போதி, ஜகன்மித்யை, சவுக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தைத் தொடுகின்றன. வெவ்வேறு வகையில் ஆழமான பாதிப்புகளை விட்டுச்சென்றன. கதைக்களத்திற்கேற்ப உங்கள் மொழி,அப்போதே, வளைந்து நெளிந்து உருமாற்றிக் கொள்வதைக் கொஞ்சம் பொறாமையோடுதான் கவனித்தேன்.

இறுதியில் லங்காதகனம் என்னை உலுக்கியது. நதி முதலான மற்றவை அத்தனையும் தகனம் செய்து மனதில் தங்கிவிட்டது. அனந்தன் ஆசான் மட்டுமல்ல, ஜெயமோகனும் இதில் பூரண வேஷம் பூண்டுதான் கலையின் உச்சத்தில் நிற்கிறார்.

அன்புடன்
த.கண்ணன்
http://urakkacholven.wordpress.com/

அன்புள்ள கண்ணன்

நன்றி.

திசைகளின் நடுவே, லங்காதகனம் இரண்டிலும் ஒரு சுய அறிவிப்பு உள்ளது .மிக இளம் வயதில் என்னை நான் உருவகித்துக்கொள்வதன் விளைவாக உருவான கதைகள் அவை என்று இன்று படுகிறது

ஜெ

Sir,
I am a regular visitor to your website. I agree with most of your views on politics and literature. You bring interesting perspectives to any issue.

From a writer’s perspective, do you think a good writer should always assume altruistic or philanthropic stance and write on the likes of ‘Idalakudi rasa’ or ‘Pithamagan’? I understand the merits of those works. But by increasing the number of  works on these subjects, are we in the risk of creating a stereotype of different kind?

Can’t reading or watching or any such experience be also fun and still make the impact? Does it always need to come from ‘forgotten people’ in order to be unforgettable? Because, sometimes I think, in some level, its just another way of
juxtaposing us with them and feeling better about ourselves.

Please let me know your comments.

Thanks,
Bala

அன்புள்ள பாலா

நீங்கள் சொல்வது உண்மை

ஆனால் தமிழ் இலக்கியத்தில் அப்படி ஒரு பொதுவான போக்கு ஏதும் இல்லை. நாஞ்சில்நாடன் எழுதுவது கிராமிய யதார்த்தம். அதில் அத்தகைய கதாபாத்திரங்கள் உள்ளன. அசோகமித்திரன் கதைகளில் நடுத்தர வர்க்கத்துச் சாமானியர்களே உள்ளனர்

ஆனால் ஒன்றுண்டு, இலக்கியவாதியின் கவனம் எப்போதுமே அசாதாரணங்களில்தான் நிலைக்கும். சாதாரண மனிதர்களை எழுதும்போதும் அசாதாரண அம்சங்களைக் கவனிக்கும். அங்கேதான் மனிதனின் சாராம்சம் வெளிப்படுகிறது. நீங்கள் சாலையில் செல்லும்போதுகூட எல்லாரையும் கவனிப்பதில்லை அல்லவா

ஜெ

அன்புள்ள ஜெ,

எனக்கு வாசிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு, நானாகவே நூல்களைத் தேர்வு செய்து வாசித்துகொண்டு இருந்தேன், உங்கள் பட்டியல் எனக்கும் என்னை போன்ற வாசகர்களுக்கும் மேலும் இலக்கியத்தின் சீரான பாதையை முறை படுத்தி இருக்கும் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இருக்க முடியாது என்பது என் கருத்து. ஆனால் இதை போன்ற தரமான, உலக இலக்கியத்தையும் நீங்கள் அறிமுகம் செய்து வைத்தால் மேலும் என் போன்ற வாசகர்கள் தங்கள் வாசிப்பை பரவலாக்கி கொண்டு பயனடைய முடியும் என்று கருதுகிறேன்.

அன்புடன்

அருள்ப்ரசாத்

அன்புள்ள அருள்பிரசாத்

நன்றி

என் இணையதளத்தில் நூல்களும் ஆசிரியர்களும் தொடர்ச்சியாக அறிமுகமாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள். பட்டியல்கள் சிலசமயம். ஆனால் விவாதங்களில் எப்போதுமே கருத்துக்களாக ஆசிரியர்கள் வருகிறார்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஎனிக்மா
அடுத்த கட்டுரைகவிதைகள் சில (பின்தொடரும் நிழலின்குரல்)