ஆய்வு- ஒரு கடிதமும் விளக்கமும்

Greetings,

I’ve recently heard of your works through a friend but can’t read Tamil myself so..well,that is a temporary barrier.But the way this friend spoke of you,I felt like writing to you.

I’ve just finished my bachelors in Applied Psychology and am realizing I’m very keen about studying.I want to do a masters in Anthropology.It’s not that I’m interested in it.It’s more that I have to know about this culture I live in.And that’s the thing.I’m fascinated by the Universe and her potential.I really want to explore the deeper knowledge of human evolution.

I really hope you do reply.

Have a beautiful year ahead.

Regards,
Supriya Talupuru.

அன்புள்ள சுப்ரியா

உங்கள் கடிதம் கண்டேன்

தமிழகச்சூழலில் இன்று நிகழ்ந்துவரும் முக்கியமான ஒரு வீழ்ச்சி என்பது தொழில்நுட்பம் அல்லாத துறைகளில் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் தகுதியானவர்கள் வருவதில்லை என்பதே. ஒரு மானுடவியல் ஆய்வாளர் பத்தாண்டுகள் ஆராய்ந்து ஒரு பதவிக்கு வந்து சம்பாதிப்பதை விட இருமடங்கை சாதரண பட்டப்படிப்பை கொண்டு தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ளவர்கள் சம்பாதிக்கமுடியும். ஊதியத்தை வைத்தே மனிதர்களை அளவிடும் நடுத்தரச் சூழலில் பிந்தையவருக்கு மதிப்பு அதிகம். அதைவிட மோசம் அவரே தன்னைப்பற்றி அப்படி நினைத்தும் கொள்வார்.

ஆகவே அறிவியலிலும் சமூகவியல்துறைகளிலும் இரண்டம்நிலை மூன்றாம் நிலை மாணவர்களே வருகிறார்கள். அவர்களால் எதுவும் உருப்படியாகச் செய்யமுடிவதிலை. கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் சென்ற ஆண்டு அறிவியல் முனைவர் ஆய்வுகளின் தரம் எந்த அளவுக்கு பரிதாபமாக உள்ளது என்று சொல்லியிருந்தார். வரலாறு, சமூகவியல், இலக்கியம் துறைகளின் தரவீழ்ச்சி பற்றி நானே நேரடியாக அறிவேன். நல்ல ஆய்வுகள் எனச் சென்ற முப்பதாண்டுகளில் மிகச்சிலவற்றையே சொல்ல முடியும். வரலாற்றாய்வே இல்லாத நிலை.

ஆகவே மானுடவியலில் ஆர்வத்துடன் நீங்கள் செயல்பட விரும்புவது மிகவும் முக்கியமானது. ஆனால் இன்றைய சூழலில், திறமையற்றவர்களின் நடுவே பணியாற்ற நேர்வதென்பது மிகுந்த சோர்வளிக்கக் கூடியது. அவர்களின் பாதுகாப்பின்மையுணர்வும் தாழ்வுணர்வும் உருவாக்கும் சிக்கல்களைச்சந்திக்க நேரும். அதைத் துணிவுடன் எதிர்கொண்டாக வேண்டும். உங்கள் திறனிலும் உறுதியிலும் நம்பிக்கை இருந்தால் அது எளிதே. சாதனையாளர்கள் அனைவருக்கும் அதுவே பாதை

மானுடவியல் போன்ற துறைகள் இன்று முழுக்கமுழுக்க அரசியல்மயமாக்கப்பட்டுள்ளன. அவற்றை அரசியல் நோக்குடன் செய்பவர்களே அதிகம். ஆகவே அந்தப் பொது அலைக்கு எதிராக முறைமை என்ற புறவயமான தர்க்கத்துக்குள் நின்றபடி செய்யப்படும் ஆய்வுகளுக்கே உண்மையான மதிப்பு. அத்தகைய ஆய்வுகள் மட்டுமே காலத்தின் போக்கில் நீடித்து நிற்க முடியும். அந்த திடம் உங்களுக்குள் உருவாகட்டும்

கடைசியாக, மானுடவியல் சமூகவியல் போன்ற துறைகளில் ஒரு மேலாதிக்கம் உள்ளது. அதை ஐரோப்பிய மேலாதிக்கம் என்றே சொல்லலாம். இங்குள்ள வாழ்க்கை இங்குள்ள வரலாறு குறித்து அவர்கள் ஒரு முன்வரைவு வைத்திருக்கிறார்கள். அதை ஒட்டி ஒருவர் ஆய்வுசெய்து அதற்கேற்ற முடிவுகளை அளித்தால் மட்டுமே அவர்களால் அவர் பொருட்படுத்தப்படுவார். அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ சமூகவியல் சார்ந்த துறைகளில் ஆய்வு செய்பவர்கள்,செய்து மீண்டவர்கள் பெரும்பாலும் அனைவருமே இந்த கருத்தியல் மேலாதிக்கத்துக்கு தங்கள் மூளையை விற்ற அடிமைகள்தான்

அதாவது இந்தியாவின் பண்பாட்டுக்கூறுகளை ஒன்றுடன் ஒன்று முரண்படக்கூடிய, ஒன்றை ஒன்று அழிக்கத்துடிக்கக்கூடியவை என்றே ஐரோப்பியமேலாதிக்க நோக்கு வரையறை செய்கிறது. அதற்கு மாறாக, அப்பண்பாட்டுக்கூறுகளை ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படக்கூடிய, ஒன்றை ஒன்று வளர்க்கக்கூடியவையாக உருவகித்து ஆராய்ச்சி செய்தால் அதை ஐரோப்பிய அறிவுலகம் ஏற்பதில்லை. அதை அடிப்படைவாதம் என்பாகள். பழமைவாதம் என்பார்கள். அல்லது வேறேதாவது ஒரு முத்திரையை குத்துவார்கள்.

ஐரோப்பிய -அமெரிக்க ஆய்வுச்சூழலில் உள்ள இறுக்கமான மேட்டிமைவாதம் பற்றி இப்போது பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நான் பத்து வருடங்களாக அதைச் சுட்டிக்காட்டி வருகிறேன். இரண்டாவது தரப்பு பிழை என்றே இருக்கட்டும். ஆனால் ஒரு கருத்துப்பரிமாற்றத்தில் அதுவும் ஒரு தரப்பு தானே? அது ஏன் முரட்டுத்தனமாக அடக்கப்படுகிறது?

மேலைநாட்டுப் பல்கலை ஆய்வுலகம் காட்டும் ஜனநாயக முகமும் , புறவயமான அறிவியக்கம் மீதான பற்றும் போலியானது. கிறித்தவ மதவாதத்தாலும் வணிகஏகாதிபத்திய சக்திகளாலும் உள்நின்று செலுத்தப்படும் கருத்தியல் கட்டுமானங்கள் அப்பல்கலைகள். நம்முடைய இந்தியப் பல்கலைகள் அந்தப் பல்கலைகளில் கற்றுவந்த அடிமைகளாலும் அப்பல்கலைகள் உருவாக்கும் நூல்களாலும் நூற்றுக்கணக்கான பண உதவி முறைகளாலும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஆகவே நம்முடைய அறிவுச்சூழல் இன்று முழுமையாகவே அடிமைப்பட்டுள்ளது. பல்கலைகளுக்கு வெளியே தன் சொந்த முயற்சியால் செய்யப்படும் ஆய்வுகள் மட்டுமே நேர்மையானவையாக உள்ளன.

ஆய்வு என்பது நம்மையும் நம் பண்பாட்டையும் கண்டுகொள்ளும் பயணம் என நீங்கள் நம்பினால் அதை நேர்மையாக எதிர்கொண்டாக வேண்டும். அதன் போராட்டங்களை நிகழ்த்தியாக வேண்டும். உடனடி லாபங்கள் குறையலாம். ஆனால் சுதந்திரமும் நேர்மையும் அதற்கான பலன்களை அளித்தாகவேண்டும். அத்தகைய ஓர் ஆய்வுக்குரலாக நீங்கள் ஆக என் வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைநான்காவது கொலை !!! 13
அடுத்த கட்டுரைஅறம்-அ.முத்துலிங்கம்