எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி
அன்புள்ள ஜெ
அனிதா அக்னிஹோத்ரியின் கதைகள் தொடர்ச்சியாக இந்தத் தளத்தில் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சிறந்தது எரிகல் ஏரிதான். அற்புதமான மொழியாக்கம். சுசித்ரா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
அன்னையில் எரிந்த தீயைத் தேடிச்செல்லும் அவள் மகள்களின் கதை. அவர்களால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஏன் அங்கே வந்துகொண்டே இருந்தாள்? அங்கே எதைக்கண்டாள்?
அந்த ஏரியில் விண்ணிலிருந்து ஒரு கல் எரிந்துகொண்டே விழுந்தது. அங்கே ஆழத்தில் அது கிடக்கிறது. அதே தீயுடன் கிடக்கிறது. அவர்கள் காண்பது குளிர்ந்த ஏரியை மட்டும்தான்.
ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
“நினைவுகள்” சிறுகதையின் ஆரம்பமே அற்புதமாக இருக்கிறது. “புழுதி சுழன்றடித்தது….. மொத்த தூசித்துகள்களும் கீழேகிடந்த இளைதழைகளோடு சேர்ந்து உயிர்ப்போடு இருப்பதுபோல அல்லாடின”, புழுதியும் ,தூசி துகள்களும், உதிர்ந்த காய்ந்த இலைகளும் மறைவதில்லை அது பூமியின் மூச்சாகிய காற்றில் மிதந்து கொண்டே இருக்கிறது. காற்றின் அழுத்தத்திற்கு தக்க அது வேகமாகவோ சுழன்றோ தனது உயிர் துடிப்பை காட்டுகிறது. நாம் பெருமூச்சு விட்டோ ஏக்கத்தோடோ, அதிர்ச்சியோடோ நினைக்கும் நினைவுகளைபோல. நீங்கள் எழுதிய “இரயிலில்” கதையிலும் ஜனங்கள் இதைபோல் முண்டி அடித்து ஏறுவதுதான் தொடக்கத்தில் வரும். இது நமது தேசிய குணம், ஏனென்றால் நானும் பஸ்ஸில் அப்படிதான் ஏறுவேன் ஆனால் இப்போது எல்லாம் பஸ் வந்து நின்றவுடன் ஏற மனம் பொங்கும் போது இந்த இருகதைகளும் நியாபகத்தில் வந்து விடுகிறது.
அம்மா-மகன் உறவுகதை வெறும் உணர்ச்சியாய் இல்லாமல் கதைக்குள் கிராமத்தின் விவசாய,விவசாயிகளின் நிலைமை,ஊரைவிட்டு ஜனங்கள் வெளியேறுவது சொல்லப்படுகிறது. ஒரு சில கொடுத்துவைத்தவர்களையோ அல்லது சாபம் அடைந்தவர்களையோ தவிர பூமியில் எல்லாரும் பெரும்பாலும் எப்போதாவது ஊரை விட்டு வெளியேறியவர்கள் தான், காரணங்கள் தான் வேறுபடுகின்றன. நம் எல்லாரிடமும் நம் நிலத்தின் நினைவுகள் பின்னோக்கி பின்னோக்கி சென்று எங்கோ ஒரு புழுதியின் சுழற்சியில் முட்டி நிற்பதாகவே இருக்கிறதே தவிர முற்றுபுள்ளியில் இல்லை.
காற்றில் மிதந்துவரும் சாம்பாரின் வாசனை, நம் அருகில் நிற்பவர்களின் உடல், உடையின் வாசனை, புத்தகங்களின் வாசனை, நல்ல கெட்ட காரியத்திற்க்காய் நாம் செல்லும் வீடுகளில் இருக்கும் வாசனை எல்லாம் நாம் பிரிந்த மனிதர்களையும்,மண்ணையும் நம்மை அறியாமலே ஒரு நொடி நம் கண்முன் கொண்டு நிறுத்திவிட்டுத்தான் செல்கிறது.அந்த வாசனையில் இருந்து இன்னும் இன்னும் உள்நோக்கி செல்ல மனம் பதறத்தான் செய்கிறது.
டீபன்ராஜ் குலசேகரன்