இந்தப் போர்க்களம் இப்போது துயிலால் முற்றிலும் நிரம்பியிருக்கிறது. ஓய்ந்த உடல்களின் மீது மூதாதையரின் நெடுமூச்சுபோல புழுதி மணமும் தழை மணமும் கலந்து வீசிச் செல்கிறது. பந்தங்களின் சுடர்களுடனும் கூடாரங்களின் கூரைப்பரப்புகளுடனும், கொடிகளுடனும் அது விளையாடிச் செல்கிறது. இங்கே என்னைச் சூழ்ந்து களத்தின் ஒலிகள் நிறைந்திருக்கின்றன. இக்களம் ஒருபோதும் ஒலியிலாமல் ஆவதில்லை. போர் நிகழ்கையில் இது கோல் விழும் முரசுபோல் ஒலி கொப்பளிக்கிறது. போரிலாதபோது காற்று புகுந்து கார்வையென்றாகும் முரசின் உட்புறம் போலுள்ளது.
மூச்சொலிகள், பந்தங்களின் சுடர்கள் படபடக்கும் ஒலிகள், விலங்குகளின் குளம்பொலிகள், காவலர்களின் குறடொலிகள். அவ்வப்போது கடந்து செல்லும் பறவைகளின் ஒலிகள். அரிதாக குளம்படி ஓசையுடன் மரப்பலகைகளின்மீது ஓடிச்செல்லும் தூதர்களின் புரவியொலிகள் என இது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இவ்விரவில் நான் அறிந்துகொண்டிருப்பது இக்களம் முழுக்க நிறைந்திருக்கும் வலியை. புண்பட்டோரின் வலிக்கு நிகரானது புண்படாதோரின் வலி. நோய்கொண்டவர்கள் போலவே நோயற்றவர்களும் துயிலில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருக்கிறார்கள். முனகியபடியும் புலம்பியபடியும் அவ்வப்போது கொடுங்கனவு ஏதோ கண்டு எழுந்தபடியும் அவர்கள் தவிக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரிலிருந்து ஒவ்வொரு இல்லத்திலிருந்து கிளம்பி இங்கு வந்தவர்கள். எங்கிருந்து வந்தார்கள் என்றும், எவரென்றும் இன்று அவர்களுக்கு தெரியவில்லை. அனைவரும் இங்கேயே பிறந்து இங்கு நிகழ்வனவற்றிலேயே முற்றிலும் ஈடுபட்டு இங்கிருப்பவர்கள் போலிருக்கிறார்கள். அழுகலில் பிறந்து அதை உண்டு அங்கு திளைத்து அதிலேயே மறையும் புழுக்கள். குருக்ஷேத்ரப் புண்நிலத்தை இடைவெளியிலாது உடலால் நிறைத்திருக்கிறார்கள். மானுடரும் புரவிகளும் யானைகளும் அத்திரிகளும் கழுதைகளும் எருதுகளும் ஒன்றாகிவிட்டிருக்கின்றனர். ஒருவர் மூச்சை ஒருவர் இழுக்கிறார்கள். அனைவருக்குள்ளும் புகுந்து புறப்பட்டு அனைவரையும் கோத்து ஒன்றாக்கியிருக்கிறது காற்று.
இந்த மண் மேலும் மேலும் குருதி விழுந்து கரிய கதுப்பாக மாறிவிட்டிருக்கிறது. அதில் பலகோடி நுண்ணுயிர்கள் பிறந்து செறிந்துள்ளன. சிறிய வண்டுகள், வெவ்வேறு வண்ணங்களில் புழுக்கள், சிற்றெறும்புகள். அவை சிறுதுளைகள் வழியாக ஆழ்ந்திறங்கி மண்ணுக்கு அடியில் ஒரு மண்பரப்பாகவே ஆகிவிட்டிருக்கின்றன. ஒருகணமும் சலியாமல் அவை நெரித்து, கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று உண்கின்றன. பலநூறு குருக்ஷேத்ரங்கள். இருளில் அவை வெளியே வந்து பரவியிருக்கின்றன. விழிகூர்ந்து அந்த மண்ணை நோக்கினால் அது அசைந்துகொண்டிருப்பதை காணமுடிகிறது. அவற்றின் ரீங்காரத்தை கேட்கமுடிகிறது. அவற்றில் சிறகுகொண்டவை எழுந்து புகை என பரவி அலைகொள்கின்றன. நான் குனிந்து நோக்குகிறேன். அவை அந்தக் களத்தை ஒவ்வொரு கண்ணியென்றாகி தங்கள் உடலால் நெய்துகொண்டிருக்கின்றன.
இங்கு என் விழிகளால் நான் எங்கும் செல்ல முடியும். அதோ நெடுந்தொலைவில் நின்றிருக்கும் காவலனின் அருகே சென்று அவன் விழிகளை நோக்கி அவன் எண்ணமென்ன என்று அறியமுடியும். அப்பாலிருக்கும் குடிலுக்குள் துயின்றுகொண்டிருக்கும் படைத்தலைவனை அணுகி அவன் காணும் கனவென்ன என்று உணர முடியும். இங்கிருக்கும் அத்தனை படைவீரர்களுடனும் என்னால் ஆழ்ந்து உரையாட முடியும். விலகியிருப்பவரின் வாய்ப்புகள் எல்லையற்றவை. விலகியிருப்பவர்களால் உருவாக்கப்படுவதே இந்தப் புவிநாடகம். இங்குள அனைத்தும் விலகி இருந்தவர்களின் கனவுகளும் தயக்கங்களும் அச்சங்களுமே.
இக்கணத்தில் எங்கெங்கு எவரெவர் விலகியிருக்கிறார் என்று எண்ணிக்கொள்கிறேன். அடர் காடுகளில் பல்லாயிரம் முனிவர்கள் இங்கு ஒரு போர் நிகழ்வதையே இன்னும் அறியவில்லை. தொலைதூர நகரங்களில் இனிய கனவுகளில் ஆழ்ந்திருக்கும் கவிஞர் பிறிதொரு போரை அறிந்துகொண்டிருக்கிறார்கள். தனித்த பாதைகளில் கைமுழவொன்றையே துணைகொண்டு செல்லும் சூதர்கள் இப்போரை இனி என்றோ அறியப்போகிறவர்கள். மொழியெட்டாத நெடுந்தொலைவுகளில் வாழும் மக்களுக்கு அவர்களை சென்றடையும்வரை இப்போர் நிகழவேயில்லை. இன்னும் பிறக்காமல் கருவறை காத்து வெளியில் நின்றிருக்கும் குழந்தைகளுக்கு இனிமேல்தான் இது நிகழவிருக்கிறது. நான் இங்கு அவர்களில் ஒருவன்.
மேகவர்ணன் குடாரரில் எழுந்த தன் மூத்தவனின் குரலை கூப்பிய கைகளுடன் கேட்டுக்கொண்டிருந்தான். பார்பாரிகன் சொன்னான் “இந்த தனித்த குளிர்ந்த பின்னிரவில் நான் விரிந்துகிடக்கும் குருக்ஷேத்ரத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நோக்குந்தோறும் மடிப்புகள் விரிந்து இது பெருகுவது எப்போதும் தீராத விந்தை. பெருகுந்தோறும் இது வெறுமை கொள்வது எண்ணிச் சென்றடைய முடியாத பிறிதொரு விந்தை. துயில் நீத்தவர்களால் இயக்கப்படுகிறது இது. அடைவதற்கு ஏதேனும் உள்ளவர்கள் விழித்திருக்கிறார்கள். இழப்பதற்கு ஏதுமற்றவர்கள் இன்மையென்றாகி துயில்கிறார்கள். அவர்களின் நடுவே நான் செல்கிறேன். மெல்லிய காற்றுபோல.
இவ்விரவில் காந்தாரராகிய சகுனியின் பாடிவீட்டிற்கு முன்னால் கௌரவர் தலைவர் துரியோதனரும் தம்பியரும் கூடியிருக்கிறார்கள். பூரிசிரவஸும் ஜயத்ரதரும் உடனிருக்கிறார்கள். சகுனி அந்த அவைக்கூடுதலின் மையமாக தானிருப்பதை உணர்ந்தமையால் அங்கிலாதது போன்ற பாவனை காட்டி தன் கையிலிருக்கும் ஏடுகளை ஒவ்வொன்றாக புரட்டி விழியோட்டிக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் மூங்கில்தூணில் தொங்கி நின்றிருக்கும் பீதர்நாட்டு பளிங்கு விளக்கிலிருந்து செவ்வொளி விழுந்து அவர் தலை கம்பிச்சுருளாலான மணிமுடி சூடியிருப்பதுபோல தெரிகிறது. அவருடைய நிழல் நீண்டு அவர் முன் விழுந்து கிடக்கிறது.
தலைதாழ்த்தி நிலம்நோக்கி அமர்ந்திருக்கிறார் அஸ்தினபுரியின் அரசர். பூரிசிரவஸும் ஜயத்ரதரும் மார்பில் கைகளைக் கட்டி மரப்பெட்டிப் பீடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அங்கு ஓர் உரையாடல் இயல்பாக தொடங்குவதற்காக காத்திருக்கிறார்கள். ஏனெனில் ஓர் உரையாடலை எண்ணித் தொடங்கினால் எப்படி சொல்கூட்டினாலும் அது அவர்கள் அப்போது சந்தித்துக்கொண்டிருக்கும் இக்கட்டின் மையத்திலிருந்தே எழும். அந்த விசையை அவர்களால் தாள இயலாது. அவர்கள் அதை பேச விழைந்தனர், பேச அஞ்சினர்.
சகுனி சுவடிக்கட்டை அடுக்கி பட்டு நூலால் சுற்றி அருகிருந்த ஆமாடப்பெட்டியைத் திறந்து உள்ளே வைத்துவிட்டு நிமிர்ந்தார். துச்சகன் பிறிதொரு பெட்டி மேல் வைக்கப்பட்டிருந்த இன்நீர் குவளையை எடுத்து அவருக்கு நீட்டினான். அதை வாங்கி மும்முறை உறிஞ்சி குடித்து திருப்பி அளித்துவிட்டு மேலாடையால் மீசையையும் உதடுகளையும் துடைத்தபடி சகுனி கனைத்தார். உரையாடல் தொடங்கிவிட்டது போன்ற விதிர்ப்பை அவர்கள் அனைவரும் அடைந்தனர். சகுனி “நன்று. நாளைய படைசூழ்கையை நாம் முடிவு செய்யவேண்டியிருக்கிறது” என்றார். அது மிகச் சிறந்த தொடக்கமென்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான். சென்று நிகழ்ந்ததை சொல்லி தொடங்கியிருந்தால், வரவிருக்கும் இடர்களை எண்ணி சொல்லெடுத்திருந்தால், சிக்கியிருக்கும் இக்கட்டைப்பற்றிப் பேசியிருந்தால் அத்தருணம் சிதைந்திருக்கும்.
“நாளைய சூழ்கையை நான் ஓரளவு வகுத்திருக்கிறேன், காந்தாரரே. முறையாக வரைந்தும் கொண்டுவந்திருக்கிறேன்” என தன் கையிலிருந்த மூங்கில் குழாயை சகுனியிடம் நீட்டினான். சகுனி அதை வாங்கி அதற்குள்ளிருந்த தோற்சுருளை உருவி எடுத்து விரித்து விழியோட்டினார். மீண்டும் உள்ளே வைத்துவிட்டு “நன்று” என்றார். துரியோதனனை நோக்கிவிட்டு “இதில் எந்தெந்த வீரர்கள் எங்கெங்கு நிலை கொள்கிறார்கள் என்பதை நாம் பேச வேண்டியிருக்கிறது” என்றார். அதுவும் மிக இயல்பான ஒரு நுழைவென தோன்ற பூரிசிரவஸ் ஜயத்ரதனை பார்த்தான். ஜயத்ரதன் “நாம் இதில் அங்கநாட்டரசர் வசுஷேணரை சேர்த்துக்கொள்ளப்போகிறோமா என்பதுதான் இப்போது முதன்மையாக பேசப்படவேண்டியது” என்றான்.
துரியோதனன் நிமிர்ந்து சகுனியை பார்த்தான். அக்கணமே அங்கிருந்த அனைவரும் அவன் நோக்கை உணர்ந்தனர். ஜயத்ரதன் “நாம் உடனடியாக நாடுவது ஓர் அழுத்தமான பெருவெற்றி. ஐயத்திற்கு இடமில்லாத ஒன்று. நம் வீரர்கள் அனைவருக்கும் அது குலதெய்வம் காவலுக்கு எழுந்தது போன்ற நம்பிக்கையை அளிக்கும். ஆகவே இனி நம்மில் எஞ்சும் ஒரு துளி ஆற்றலைக்கூட விட்டுவைக்கக்கூடாது. நமது அனைத்துப் படைக்கலங்களும் போர்க்களத்திற்கு வந்தாகவேண்டும். நம் அனைத்துச் சொற்களும் குவிந்தாகவேண்டும்” என்றான். “நமது பெரும்படைக்கலம் அங்கர். இதுவரை இப்பெருங்களத்திற்கு அவரை கொண்டுவராதது போன்ற பெரும்பிழை ஏதுமில்லை.”
பூரிசிரவஸ் “ஆனால்…” என்று சொல்லெடுக்க “ஆம், பிதாமகரின் பொருட்டே இதுவரை காத்தோம். இன்று அவர் இல்லை. நமது வாய்ப்புகள் திறந்துள்ளன” என்றார் சகுனி. பூரிசிரவஸ் “காந்தாரரே, நாம் இங்கு கூடியிருப்பதே இந்த முடிவை ஆசிரியர் துரோணர் ஏற்பாரா என்று அறியும் பொருட்டுதான்” என்றான். சகுனி “ஆம், ஆனால் அவர் இதற்கு ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஏனெனில் இனி ஆணவத்தையோ சூளுரைகளையோ எண்ணிக்கொண்டிருக்க நமக்கு பொழுதில்லை. நாம் முழு வெற்றி ஒன்றிலன்றி வேறெதிலும் நின்றிருக்க இயலாத நிலையை வந்தடைந்திருக்கிறோம்” என்றார்.
துச்சாதனன் “ஆசிரியருக்கு மூத்தவர் கர்ணன் மேலுள்ள கசப்பு அனைவரும் அறிந்தது. அவரது கல்விநிலையிலிருந்து துரத்தப்பட்டவர் அங்கர். அங்கிருந்து சென்று மேலும் சிறந்த ஆசிரியரிடம் கற்று, முதன்மை வீரர் என்று ஆகி திரும்பி வந்திருக்கிறார். இந்தப் படைக்களத்தில் அவர் நின்றிருப்பதே ஆசிரியரின் தோல்வி என கருதப்படும். இக்களத்தில் அங்கர் அர்ஜுனனை கொல்வாரென்றால் என்றென்றும் வரலாற்றில் இழிசொல்லாகவே ஆசிரியரின் பெயர் நின்றிருக்கும். அங்கரின் புகழ் வரலாறு பின்னாளில் எழுதப்படுகையில் அதில் ஒரு கறையென அவர் இருப்பார். நம் எவரைவிடவும் அதை அவரே அறிந்திருப்பார்” என்றான்.
சுபாகு “இந்தப் போரில் அங்கர் கலந்துகொள்ளக்கூடாதென்று பிதாமகர் பீஷ்மர் எண்ணியதுகூட அங்கரை வரலாற்றிலிருந்து நீக்கிவிடவேண்டும் என்பதற்காகத்தான் என்று மூத்தவர் முன்பொருமுறை சொன்னார். இப்போர்க்களத்தின் வரலாறே சூதர்நாவில் நின்றிருக்கும். இதில் கலந்துகொள்ளாத அத்தனை வீரர்களும் இல்லையென்றே கருதப்படுவார்கள்” என்றான். ஜயத்ரதன் “மெய்தான். இந்தப் பத்து நாட்களில் நாம் மிக அரிதாகவே அங்கநாட்டாரைப்பற்றி எண்ணியிருக்கிறோம். அவர் அனைவர் சொல்லிலிருந்தும் அகன்றுவிட்டிருக்கிறார். அவரில்லாது இப்போர் முடியுமெனில் போருக்குப் பின் அவரது பெயரே சூதர் நாவில் இருக்காது. இப்போர் உருவாக்கும் பல்லாயிரம் கதைகளை சொல்லிச் சொல்லி பெருக்கி பரப்பி அவரிலாத வெளியொன்றை சமைத்துவிடுவார்கள்” என்றான்.
பூரிசிரவஸ் “ஆனால் இந்தப் போர் விசைகொண்ட பெருஞ்சுழிபோல. பாரதவர்ஷத்தில் எவரையும் இது வெளியே விட்டுவிடாது” என்றான். சகுனி “ஆம், அவன் பெருவீரன் என்பதனாலேயே இங்கு வந்தாகவேண்டும். பிதாமகர் பீஷ்மர் எதன் பொருட்டு அவனை வரவேண்டாம் என்று சொன்னார் என்று எனக்கு இன்னமும்கூட தெளிவில்லை. மருகன் சொன்னதுபோல் ஆசிரியரின் அறப்பிறழ்வை வரலாற்றிலிருந்து மறைக்கும்பொருட்டாக இருக்கலாம். அல்லது நாமறியாத எவையோ இங்கு திகழக்கூடாது என்பற்காக இருக்கலாம். எதுவாயினும் அங்கன் விலக்கப்பட்டமையில் முதன்மை மகிழ்ச்சி கொண்டவர் துரோணரே” என்றார்.
துச்சாதனன் “மெய், ஆனால் இன்று துரோணர் நம் அரசரின் கூற்றுக்கு செவி சாய்த்தாகவேண்டும். அவர் நமக்களித்த சொல் பாண்டவர்களை வென்று, தன் முதல்மாணவன் அர்ஜுனனை தன் கைகளால் கொன்று, வெற்றியை நமக்களிப்பேன் என்று. அதை அவர் காத்தாக வேண்டும்” என்றான். தாழ்ந்த குரலில் துரியோதனன் “நான் அவருக்கு ஆணையிட இயலாது. அவர் என் ஆசிரியர். அந்நிலையிலிருந்து அவரை நான் ஒருபோதும் விலக்கமாட்டேன்” என்றான். “அவர் உங்கள் குடி” என்றார் சகுனி. “ஆம், ஆனால் நான் அவர் மாணவன்” என்றான் துரியோதனன்.
“ஆணையிட வேண்டாம், கோரிக்கை வைக்கலாம்” என்று சகுனி சொன்னார். “வேண்டுமென்றால் நான் மன்றாடுகிறேன். என் பொருட்டு அங்கநாட்டரசன் களம் நிற்க அவர் ஒப்பவேண்டுமென்று கோருகிறேன்” என்றான் துரியோதனன். சகுனி “அக்கோரிக்கையையும் அவர் விலக்கக்கூடும். அவ்வாறு செய்யக்கூடியவரல்ல என்பதற்கான சான்றுகள் எதுவும் அவரிடம் இன்று வரை இல்லை” என்றார். “ஒவ்வொருவரையும் ஒரு மையஉணர்வு ஆட்டுவிக்கிறது. சிலரை விழைவு. சிலரை அச்சம். சிலரை விலக்கம். கல்வி மேம்பட்டவர்கள் எளிய ஆணவத்தால் இயக்கப்படுபவர்கள். அவர்களின் கல்வி மிகுந்தோறும் ஆணவம் சிறுமைகொள்கிறது. ஆசிரியர் துரோணரும் அவ்வாறே.”
“மெய்தான்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அரசர் சென்று கோரினால் பாண்டவர்களை வெல்வேன் என்று தான் அளித்த சொல்லில் உறுதியாக இருப்பதாகவும் ஆனால் ஒருபோதும் அங்கநாட்டரசரிடம் இணைநின்றோ தலைமைகொண்டோ போரிட இயலாதென்றும் அவர் கூறக்கூடும். நாம் வற்புறுத்தினால் தன்னை விலக்கி அங்கரை முன்னிறுத்தி போர்செய்யும்படி அவர் சொல்வார். அவர் பொருட்டு அங்கநாட்டரசரை நாம் விலக்கினோம் எனில் அங்கரைவிட அவர் சிறந்த வில்லவர் என்று நாமே இப்படைகளிடம் சொன்னதாக ஆகும் என்று கணக்கிடுவார். ஆகவே நேரிடையாக இப்போது சென்று சொல்வதில் எப்பயனுமில்லை.”
ஜயத்ரதன் “அவருடைய எண்ணமெல்லாம் இத்தருணத்தில் ஷத்ரிய அரசர்கள் தன்னைப்பற்றி எண்ணப்போவது என்ன என்றே இருக்கும்” என்றான். சுபாகு “ஆம், அவர் இன்றுவரை இயற்றிய அனைத்துமே ஷத்ரியர் அவையில் ஓர் இடத்திற்காக மட்டுமே” என்றான். ஒவ்வொருவரும் துரோணர்மேல் அவர்கள் கொண்டிருந்த ஐயமும் காழ்ப்பும் வெளிக்கிளம்புவதை கண்டனர். “அவர் பாண்டவர்களுக்காகவே மூத்தவர் கர்ணனை குருநிலையிலிருந்து வெளியேற்றினார் என்பதை நாம் மறக்கவேண்டியதில்லை. அங்கர் அர்ஜுனனைக் கொன்றால் அது ஆசிரியர் துரோணரின் தோல்வியாகவே கருதப்படும்” என்றான் துச்சாதனன்.
சகுனி அங்கு திகழ்ந்த அமைதியில் தன் இருக்கை கிறீச்சிட அசைந்தமர்ந்து “நான் ஒன்று சொல்ல முடியும்” என்றார். அவரை அனைவரும் நோக்க “ஒருவரை இயக்கும் மையவிசைக்கு இணையான எதிர்விசை ஒன்றும் அவருக்குள் இருக்கிறது. தெய்வங்கள் எந்த விசையையும் இணைவிசையின்றி இப்புவியில் நிகழ விடுவதில்லை” என்றார். “விழைவு கொண்டோர் சினத்தாலும், அச்சம் கொண்டோர் தனிமையாலும் நிகர் செய்யப்பட்டிருப்பார்கள். ஆணவம் கொண்டவரிடம் அதை நிகர் செய்வது பற்று. ஆசிரியர் துரோணரிடம் அது மைந்தன் மீது கொண்ட பேரன்பு.”
சகுனி சொல்லி முடித்ததுமே அனைவருமே முகம் மலர்ந்தனர். ஜயத்ரதன் “மெய். இதை அஸ்வத்தாமர் அவரிடம் சொல்லட்டும். அவர் தன் தந்தைக்கு ஆணையும் இட இயலும்” என்றான். “ஆனால் அஸ்வத்தாமர் ஒருபோதும் தன் தந்தையின் தன்னிலையை சிறிதாக்கும் எதையும் செய்ய ஒப்பமாட்டார்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆயினும் அவர் தந்தையிடம் பேச முடியும். அவருடைய எண்ணமென்ன என்று அணுகிச்சென்று தெரிந்துகொள்ள முடியும். அதை அறிந்தால் நாம் அதற்கேற்ப சொல்லுறுதிகளை அளிக்க இயலும்” என்று சகுனி சொன்னார். “ஆகவேதான் அவரை இங்கு அழைத்து வருவதற்கு துர்மதனை அனுப்பியிருக்கிறேன்.”
“அஸ்வத்தாமர் இங்கு வருகிறாரா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “ஆம், இங்கு நாம் பேசி ஒரு முடிவெடுத்த பின்னர் அவர் இங்கு வருவது நன்று என்று எண்ணினேன். அவரிடம் அரசர் சொல்லட்டும், தன் விழைவென்ன என்று. அங்கனை துரோணரின் ஒப்புதலுடன் இப்போருக்கு அழைத்து வந்து படைமுன் நிறுத்துவது அஸ்வத்தாமரின் கடமை. நம் படைகள் களம்வெல்ல வேறுவழியே இல்லை” என்றார் சகுனி. “அஸ்வத்தாமர் குருகுல மன்னரிடம் கொண்டிருக்கும் பற்று நாம் அறிந்ததே. இதை அவர் ஏற்பாரென்றுதான் எண்ணுகிறேன்.”
அத்துடன் அங்கு சொல்லமைவு உருவாகியது. ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்திற்குள் சென்று திசையழிந்து அலைந்துகொண்டிருந்தார்கள். சற்று நேரத்திற்குப் பின் தொலைவில் இரு புரவிகளின் குளம்படிகள் கேட்கத்தொடங்கியதும் மீண்டும் உயிர்கொண்டு அவ்விடத்திற்கு வந்தனர். பூரிசிரவஸ் எழுந்து “நான் அவர்களை வரவேற்று அழைத்துவருகிறேன்” என்று சொல்லி குடில்முற்றத்தின் விளிம்பிற்குச் சென்றான். துர்மதனும் அஸ்வத்தாமனும் இரு புரவிகளில் வந்தனர். இறங்கி அவர்கள் அருகணைந்ததும் பூரிசிரவஸ் தலைவணங்கி முகமன் உரைத்து அவர்களை அழைத்து வந்தான்.
துரியோதனனை நோக்கி அஸ்வத்தாமன் தலைவணங்க பீடத்தில் அமரும்படி அவன் கைகாட்டினான். அங்கு அமர்ந்திருந்தவர்களை ஒருமுறை விழியோட்டியதுமே என்ன நிகழ்கிறது என்பதை புரிந்துகொண்டு அஸ்வத்தாமன் அமர்ந்தான். துரோணரே அங்கு வந்து அமர்ந்திருப்பதுபோல் பூரிசிரவஸுக்கு தோன்றியது. மைந்தர்கள் தந்தையின் தோற்றத்தை எப்படி பெறுகிறார்கள் என்று அவன் வியந்துகொண்டான். முதுமை அடையும்தோறும் மைந்தரின் முகம் தந்தையரைப் போலாகிறது. களைப்பு என்பது ஒருவகை முதுமை.
சகுனி “உத்தர பாஞ்சாலரே, இங்கு நாங்கள் பேசி எடுத்த ஒரு முடிவை தங்களிடம் உரைக்க கடமைப்பட்டிருக்கிறேன். இந்த குருக்ஷேத்ரத்தில் நாளை நிகழும் போரில் நாம் உறுதியான வெற்றி ஒன்றை பெற்றாகவேண்டும். இல்லையேல் நாளையுடன் போர் முடியும். குருகுலம் முற்றழியும். குருகுலம் அழிந்தால் தட்சிண பாஞ்சாலம் எழுந்து உத்தர பாஞ்சாலத்தை வெல்லும். உங்கள் கொடிவழிகளை அழிக்கும். அத்துடன் பாரதவர்ஷத்தில் ஷத்ரிய மேலாண்மை மறையும். தொல்வேதம் சொல்லிழக்கும். அசுரவேதமும் நாகவேதமும் இங்கு நிலை கொள்ளும். இவையனைத்தையும் தடுக்கும் ஒரு வாய்ப்பு இன்று நமக்குள்ளது” என்றார்.
அஸ்வத்தாமன் சுருங்கிய விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தான். “இன்று பாரதவர்ஷத்தில் எஞ்சியிருக்கும் மூன்று பெருவில்லவர்களில் இருவர் நம்மிடம் இருக்கிறார்கள். பார்த்தன் நம் எதிரி. அங்கநாட்டரசன் கர்ணனும் தங்கள் தந்தையும் எஞ்சிய இருவர். அவர்கள் இருவரும் இணைந்து படைநிற்பார்கள் என்றால் நாம் வெல்ல முடியாதவர்களாகிறோம்” என்றார் சகுனி. அஸ்வத்தாமன் தலையசைத்தான். “ஆனால் பீஷ்ம பிதாமகர் அங்கநாட்டரசர் கர்ணன் இப்போரில் எவ்வகையிலும் ஈடுபடக்கூடாதென்று சொல்லி தடுத்து வைத்திருந்தார். அங்கநாட்டு இளவரசர்கள்கூட இப்போரில் படைத்தலைமை கொள்ள ஒப்பப்படவில்லை. அவர்கள் தங்கள் படைப்பிரிவுகளுடன் சூதர்களின் அடையாளம் தாங்கி தேர்வலர்களாகவே பின்னணியில் நின்றிருக்கிறார்கள்.”
அஸ்வத்தாமன் “ஆம்” என்றான். சகுனி மேலும் சற்று குனிந்து ஒளிரும் தாடியும் அனல்துளி மின்னிய விழிகளுமாக “நமக்கு இன்று வேறு வழியேதும் இல்லை. தங்கள் தந்தை அங்கநாட்டரசன் மீது கொண்ட உணர்வுகள் ஏதென்று அனைவருக்கும் தெரியும். அவர் கையிலிருந்து தவறி வெளியே விழுந்து முளைத்து அவரளவுக்கே எழுந்த பெருமரம் அங்கநாட்டரசன். அந்த உண்மையை இன்று வரை உங்கள் தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் இத்தருணத்தில் அவர் அத்தகைய தனியுணர்வுகளை வென்று எங்களுக்கு அருளியே ஆகவேண்டும்” என்றார். அனைத்தும் புரிந்து அஸ்வத்தாமன் சற்று நிமிர்ந்து பெருமூச்சுவிட்டான்.
அவன் புரிந்துகொண்டதை உணர்ந்தமையால் சகுனி எளிதானார். “நாங்கள் நேரடியாகச் சென்று அவரிடம் இதை சொல்வதில் பல தடைகள் உள்ளன. அவர் முதல் உணர்வெழுச்சியில் எங்கள் கோரிக்கையை மறுத்துவிட்டாரெனில் அவ்வாறு மறுத்த சொல்லிலேயே இறுதிவரை நின்றாகவேண்டிய நிலை ஏற்படும். ஆகவே இதை தாங்கள் அவரிடம் சொல்ல வேண்டும். தங்களை இங்கு அழைத்தது அதன் பொருட்டே.” அஸ்வத்தாமன் “மெய்தான். நான் அவரிடம் பேசுகிறேன்” என்றான்.
துரியோதனன் எழுந்து அஸ்வத்தாமனின் கைகளை பற்றிக்கொண்டு “பாஞ்சாலரே, என் பொருட்டு இதை செய்க!” என்று தணிந்த குரலில் சொன்னான். அஸ்வத்தாமன் பதறி எழுந்து “என்ன இது, அரசே! தங்கள் சொல்லை தலைசூடவேண்டியவன் நான். எனக்கு நீங்கள் ஆணையிடவேண்டுமேயொழிய ஒரு தருணத்திலும் மன்றாட்டென ஒரு சொல் உங்கள் நாவில் எழலாகாது. உங்கள் பொருட்டு என் வாழ்வை மட்டுமல்ல என் வீடுபேற்றையேகூட அளிக்கும் உறுதிகொண்டவன் நான். இது என் கடமை” என்றான்.
சகுனி “இதை எப்படி அவரிடம் சொல்லவேண்டுமென்று நான் வகுத்திருக்கிறேன். எந்நிலைமையிலும் கர்ணன் படைத்தலைமை ஏற்க அவனுக்குக் கீழே ஆசிரியர் போரிடும் நிலை வராதென்று அவரிடம் சொல்லுங்கள்” என்றார். அஸ்வத்தாமன் முகம் தெளிந்து “ஆம், நான் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். அது ஒன்றே அவரால் ஏற்கப்பட இயலாதது” என்றான். “இனி கௌரவப் படைகளின் தலைமை துரோணாசிரியருக்குரியது. அவர் பாண்டவர்கள் மீது வெற்றியை ஈட்டி எங்களுக்கு அளிக்கட்டும். குருக்ஷேத்ரம் வென்றவர் என்ற பெயர் படைவரலாறுகளில், சூதர்சொல்லில், நம் வருந்தலைமுறைகளில், கனவுகளில் நிலைகொள்ளட்டும். அவருக்குக் கீழே அவருடைய மாணவர்களில் ஒருவராக அவர் தாள் பணிந்து வில்லெடுத்து களம் நிற்பவராகவே அங்கர் அங்கு வருவார்” என்றான் துரியோதனன்.
அஸ்வத்தாமன் “அது போதும்” என்றான். “போர் தொடங்குவதற்கு முன்பு அங்கர் அங்கு வந்து, படைமுகப்பில் வைத்து ஆசிரியரின் தாள்முன் வில்தாழ்த்தியே போருக்கெழுவார், இது என் சொல்” என்றான் துரியோதனன். அஸ்வத்தாமன் “நாம் என்ன சொன்னாலும் அங்கர் களம் வந்து நின்றாலே போர்வெற்றியின் புகழ் அவரை நோக்கியே செல்லும் என்பதை தந்தை அறிவார்” என்றான். சகுனி “அல்ல, அங்கன் சூதன். அவனிடம் புகழ்செல்ல ஷத்ரியர் ஒப்பமாட்டார்கள்” என்றார். ஜயத்ரதன் “ஆம், அதோடு துரோணர் அந்தணர். அவருடைய வெற்றியைக் கொண்டாடவே அந்தணரும் விழைவார்கள்” என்றான்.
அஸ்வத்தாமன் புன்னகைத்து “ஷத்ரியர்களோ அந்தணரோ அல்ல, சூதர்களும் அவர்களின் சொற்களை செவிகொள்ளும் எளிய குடியினருமே இங்கே வரலாற்றை சமைக்கிறார்கள். அவர்கள் உளம்சூடி கொண்டாடிச் சொல்லிப்பெருக்குவது ஒன்றுள்ளது. அங்கர் பேரழகர், என் தந்தை அழகற்றவர். இன்றுவரை நம்மை வந்தடைந்த கதைகளை பாருங்கள், அறிவுக்கும் ஆற்றலுக்கும் நிகராகவோ ஒரு படி மேலாகவோ அழகு போற்றப்பட்டிருப்பதை காண்பீர்கள்” என்றான். அவன் சொன்னதுமே அது உண்மை என அனைவரும் உணர்ந்தனர். “கதிர்முடியும் மணிக்குண்டலங்களும் மார்பில் வெஞ்சுடர்கவசமும் அணிந்து அங்கர் வந்து களமுகப்பில் நிற்கும்போதே இப்போர் அவருடையதென்றாகிவிடும். அனைத்து விழிகளும் பிற எவரையும் அறியாதவையாக மாறும்” என்றான் அஸ்வத்தாமன்.
சகுனி “அது மெய். ஆனால் அந்தப் பகலொளி போன்ற உண்மையைக்கூட காணமுடியாமலாக்கும் விழித்திரை ஒன்று உண்டு” என்றார். புன்னகையுடன் முன்னால் சாய்ந்து “அதன் பெயர் ஆணவம். உங்கள் தந்தையிடம் சொல்லுங்கள், அவர் வில்லுடன் களம்வந்து நின்றால் அங்கன் ஒளிகுன்றி எளிய மாணவனாகவே தெரிவான் என்று. விழிகளிலும் சொற்களிலும் வெளிப்படையான ஏளனத்துடன் நீங்கள் அதை சொன்னாலும்கூட உங்கள் தந்தை அவ்வண்ணமே நேர்ப்பொருளென ஏற்பதை, ஆம் என்று பெருமிதம் கொண்டு மறுமொழி உரைப்பதை காண்பீர்கள். நான் சற்றுமுன் சொன்னேன், கல்விகொண்டோர் ஆணவம் மிக்கவர். பெருங்கல்வியாளர் பேராணவம் கொண்டவர். கல்வி அளித்த அனைத்தையும் ஆணவம் முற்றழிக்க துலாமுள் நிலைகொண்டிருக்கும்” என்றார்.
அஸ்வத்தாமன் வெண்ணிறப் பற்கள் ஒளிவிட வாய்விட்டுச் சிரித்துவிட்டான். பின்னர் தலையசைத்து “ஆம், நான் அவரிடம் பேசுகிறேன்” என்றான். “நீங்கள் அவரிடம் பேசத்தொடங்குகையிலேயே துரோணாச்சாரியரே கௌரவப் படைகளின் முதன்மைபடைத்தலைவராக இருக்க வேண்டுமென்று நாங்கள் விழைவதை சொல்லுங்கள். அவர் அதை ஏற்றுக்கொண்ட பின்னர் அவருக்குக் கீழ் ஒரு வில்லவனாக கர்ணன் நிலைகொள்வான் என்று கூறுங்கள். அவர் மறுக்கமுடியாது’ என்று சகுனி சொன்னார். “ஆம், அவ்வாறே” என்று அஸ்வத்தாமன் தலைவணங்கினான்.
அவர்கள் மெல்ல முகம் மலர்ந்து இயல்பானார்கள். துரியோதனன் “இனி இப்போர் வெல்லும். அந்த நம்பிக்கையை இதோ அடைந்தேன்” என்றான். “கர்ணன் வெல்ல முடியாதவன்” என்று சகுனி சொன்னார். “இதுவரை அனைத்து களங்களிலும் அவன் தன் தலைதாழ்த்தி மீளநேர்ந்தது. அனைத்துச் சிறுமைகளையும் இங்கே வெல்வதன் வழியாக அவன் நிகர்செய்தாகவேண்டும்.” துரியோதனன் “ஆம், இந்தக் களத்தில் எழுவதற்காகவே அவன் அத்தனை அவைச்சிறுமைகளை சந்தித்தான்” என்றான்.
“பீஷ்ம பிதாமகரை வீழ்த்தியது அவர் பெருந்தந்தை என்னும் இயல்பு. எங்கோ ஓரிடத்தில் தன் உடலை மைந்தர் உண்ணக்கொடுப்பது தந்தையரின் வழக்கம். மாந்தாதா தன்னையே அளித்ததுபோல்” என்று சகுனி சொன்னார். அஸ்வத்தாமன் “ஆம், அதை நானும் எண்ணினேன். இன்று அவர் உடலில் பாய்ந்திருக்கும் அம்புகள் அனைத்தும் அவர் மைந்தரின் நாவுகள். அவர் குருதியை அவை சுவைக்கின்றன. உடலெங்கும் முலைக்கண்கள் திறந்த பெரும்பன்றி என அவர் அங்கே கிடக்கிறார்” என்றார்.
சகுனி அதை கைவீசி தவிர்த்து “ஆனால் வெற்றி ஒன்றுக்கு மாறாத பிறிதொன்றில் அமையாத உறுதி கொண்டவன் அங்கன்” என்றார். “இக்களத்தில் எவர் மேலும் எவ்வகையிலும் அவன் கனிவுகொள்ள வேண்டிய தேவை இல்லை. எவருக்கும் எதையும் அளிக்கவேண்டியதும் இல்லை. இங்கிருக்கும் ஒவ்வொருவரும் அவனிடம் எவ்வகையிலோ நீ வேறு என்று சொல்லியிருக்கிறார்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் அவனுக்கு எவ்வகையிலோ கடன்பட்டிருக்கிறார்கள். இந்தக் களத்தில் எது செய்தாலும் பிழையில்லை. ஆகவே அனைத்து எல்லைகளையும் கடந்து அவன் வெல்ல முடியும்.”
“அர்ஜுனன் அவன் முன் நின்றிருக்க இயலாதென்பது பல முறை நிறுவப்பட்டுள்ளது. துரோணரும் கர்ணனும் இணைந்து வரும் நாளிலேயே அர்ஜுனனை கொன்றொழிப்பார்களெனில் இந்தப் போர் நிறைவுறும்” என்றான் ஜயத்ரதன். “பீமனை நான் கொல்வேன்” என்று துரியோதனன் தணிந்த குரலில் சொன்னான். துச்சாதனன் “கடோத்கஜனை நான் கொல்ல விழைகிறேன்” என்று சொன்னான். “அது நிகழ்க!” என்று சகுனி கூறினார். பின்னர் “அங்கநாட்டுக்கு தூதர் செல்லவேண்டும். கர்ணன் நாளை காலையிலேயே நமது படைமுகப்பில் தோன்ற வேண்டும்” என்றார்.
“இக்களத்திற்கு மிக அருகே யமுனைக்கரையில் சிபிரம் என்னும் சிற்றூரில் எவருமறியாது கர்ணன் தங்கியிருக்கிறான். ஒவ்வொரு நாளும் இங்கு நிகழும் போர்ச்செய்திகள் பறவைகள் வழியாக தன்னை வந்து அடையும்பொருட்டு அங்கு வந்துள்ளான். இப்போது சென்றால் இரு நாழிகையில் சென்றடையலாம்” என்றான் துரியோதனன். “நானே செல்கிறேன்” என்று துச்சாதனன் எழுந்தான். “கௌரவர் ஒருவர் சென்றால்போதும். உடன் சொல்லாடல் கற்ற ஒருவர் செல்லவேண்டும். பால்ஹிகர் செல்லட்டும்” என்றார் சகுனி. “ஆம் அரசே, நான் செல்கிறேன். நீங்கள் துயில்கொள்க!” என்றான் பூரிசிரவஸ். “கர்ணன் வருகிறான் என்னும் செய்திபோல் நற்துயிலளிப்பது பிறிதொன்றில்லை” என்றான் துரியோதனன்.