திரு ஜெய மோகன்.
இன்று தங்கள் நண்பர் தண்டபாணியின் கடிதத்துக்கு நீங்கள் போட்ட பதிலில் , பெரு முதலீட்டுடன் கூடிய வேளாண்மை தேவை என்று எழுதியிருந்தீர்கள்.
முதலில் ‘விவசாயம் ‘ மற்றும் ‘வேளாண்மை’ போன்ற சொற்கள் உழவு முறைக்கு பெருமை சேர்க்கும் சொற்கள். ‘விவசாயம் ‘ என்ற சொல் கீதையில் நான்கு முறை கீதாச்சார்யனால் பிரயோகிக்கப் பட்டது. நான்கு முறையும் அதன் பொருள் ‘தீர்மானம்’ என்றே வருகிறது. பதினெட்டாம் அத்தியாயத்தில் உழவுக்கு ‘க்ரிஷி ‘ என்ற தற்போதைய கால சமஸ்கிருதச் சொல்லையே கையாள்கிறார். வள்ளுவரும் ‘விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு ‘ என்று கூறும் போது உழவைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
ஆனால் வெறும் உழவுக்கு இத்தனை பெருமையான சொற்கள் ஏன் சேர்ந்தன என்று எண்ணிப் பார்த்தீர்களா ? வெறும் மக்கள் தொகை உயர்வைக் காரணம் காட்டி , உயர் விளைச்சலை எட்ட உரம் மற்றும் பூச்சிக் கொல்லி சார்ந்த உழவு முறையை கையில் எடுக்கச் சொல்வது எந்த வகையில் சரி ? இன்று , பெரும் பாலான ஆராய்ச்சியாளர்கள் பூச்சிக் கொல்லி களை சாடும் போது அதனை ஊக்குவிக்கும் பெரும் பண்ணை முறையை வளர விடலாமா ? பூமிக்கு உயிர் உள்ளது என்பதனை நாம் மறந்ததாலேயே இத்தனை விபரீதம்.
என் கண்களைத் திறந்த ஒரு சிறு புத்தகத்தை இதோ இந்த இணைப்பில் படிக்கலாம். இறக்கியும் கொள்ளலாம். அந்த புத்தகத்தின் பெயர் ‘ ஒரு வைக்கோல் புரட்சி ‘ . ஜப்பானிய விஞ்ஞானி புகுஒகா எழுதியது. நிலத்தை உழுகாமல் , நீர் குறைவாக இறைத்தும், களை வெட்டாமலும் இந்த கர்ம யோகி தன் நாட்டிலேயே உயர் விளைச்சலைக் காட்டியிருக்கிறார்.
http://gyanpedia.in/tft/Resources/books/onestraw.pdf
இந்த விவசாயம் ஒரு தியானம் போன்றது. நிலத்தோடு பேசுவது. அதனுடைய ரகசியங்களை அறிவது. உங்களுக்கு இது உண்மையான ‘வேளாண்மை’ யை சுட்டிக் காட்டினால் மகிழ்ச்சி அடைவேன்.
வேங்கடசுப்ரமணியன்
அன்புள்ள வேங்கட சுப்ரமணியம்
புகுவோகா பற்றி கிட்டத்தட்ட இருபதாண்டுக்காலமாக எழுதி வருகிறேன். அவரை ஒருமுறை மங்களூரில் பார்த்திருக்கிறேன்.
இயற்கை வேளாண்மை பற்றி எனக்கு நல்ல புரிதல் உண்டு. சில இயற்கை வேளாண்மை பண்ணைகளையும் பார்த்திருக்கிறேன்
ஆனால் இயற்கை வேளாண்மை உலகமெங்கும் வெற்றி பெறாது போய்விட்டது. அதாவது அது இன்றுவரை வெற்றி பெறவில்லை. நாளை என்னாகுமென சொல்ல முடியாது
இயற்கை வேளாண்மை இன்று சந்திக்கும் முக்கியமான சிக்கல் என்பது அதற்குத் தேவையாகும் மானுட உழைப்பு. உலகமெங்கும் வேளாண்மையில் மனித உழைப்பு இல்லாமலாகி வருகிறது. ஆகவே இயந்திர மயமாதல் நிகழ்கிறது. அது இயற்கை வேளாண்மைக்கு எதிராக உள்ளது
ஜெ
ஜெ
நான் நலமாக இருக்கிறேன்! மிக்க நன்றி.
குழு அமைதலின் முயற்சிகள் குறித்து தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் பங்கு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதன் திட்டங்கள் பற்றி பின்வரும் இணைப்பில் காணலாம். உங்களை பண்ணைகளை பார்வையிட அன்போடு அழைக்கிறேன்!
http://www.businesseconomics.in/?p=௪௬௬
வணக்கம்!
தண்டபாணி