குடும்பமும் ஊழலும் ஒருகடிதம்

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். நான் தங்களின் மாவோயிசம் மற்றும் ஊழல் தொடர்பான கருத்துகளை படித்தேன். மிகவும் வித்தியாசமான, நினைத்து பார்த்திராத கோணம்.

இங்கே எனக்கு ஒரு சந்தேகம், இந்த ‘இந்திய’ ஊழலில் , குடும்பம் என்ற அமைப்பு மிகவும் முக்கியமான ஒரு பங்கு வகிப்பதாக நினைக்கிறேன் , மேற்கத்திய சமூகங்கள் போல் தனி மனிதன் என்ற சிந்தனை இல்லாமல் குடும்பம் என்ற அமைப்பு மிகவும் இறுகி இருக்கும் இந்த சமூகத்தில் , தனக்கு மட்டுமே சொத்து, தான் அனுபவிக்க மட்டுமே செல்வம் என்று இல்லாமல் தான், தனது மகன், பேரன் , ஏழு தலைமுறைகள் என்ற நினைப்பும் , மனைவி பெயரில் சொத்து, மச்சான் பினாமி என்ற வசதியும் இங்கே இருப்பதும் மிக அதிக அளவு ஊழலுக்கு வித்திடுவதாக நினைக்கிறேன்.

இது ஊழலுக்கு மட்டும் இல்லாமல், பதவி , செல்வாக்கு என்ற அனைத்திற்கும் பொருந்துகிறது. சினிமா துறையில் இருப்பவர்கள் தங்களது வாரிசுகளை நடிக்க வைப்பதும், அரசியல் துறையில் தனது வாரிசுக்கு எம்.எல்.ஏ , எம்.பி சீட் வாங்குவதும் , இந்த குடும்ப அமைப்பு மூலமாகத்தானே!

சுருக்கமாகக் கேட்டால் திருமண முறை மாறினால் , குடும்ப அமைப்பு சிதைந்தால் ஊழல் குறைந்து மக்களின் வாழ்க்கை தரம் உயருமா?

இது ஊழலுக்கு மட்டுமல்ல, குடும்ப அமைப்பு சிதைந்தால் தன் வீடு, தன் மக்கள் என்ற நினைப்பு போய், பல சமூக சேவகர்களும், சமூக அநியாயங்களை எதிர்க்கும் போராளிகளும் தோன்றலாம் அல்லவா? Please correct me if I am wrong.

குடும்பம் அமைப்பின் நிறைகளை நான் அறிவேன் ஆனால் குறைகளும் உண்டல்லவா? தங்களின் கருத்தை தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறேன்.

நன்றி
கோகுல்

அன்புள்ள கோகுல்

ஐரோப்பாவில் குடும்பஅமைப்பு வலுவாக இல்லை. அமெரிககவிலும் தந்தை மகன்களுக்காக சொத்து சேர்த்து வைத்துவிட்டுச் செல்லும் வழக்கம் இல்லை. ஆனால் வணிகத்துறைகளில் ஈவிரக்கமற்ற போட்டியும், சதிகளும், பிரம்மாண்டமான ஊழல்களும் அங்கேதான் அதிகம். அறமற்ற முறையில் கோடானுகோடி மக்களை அடிமையாக்கி உலகையே சுரண்டிக்கொழுக்கும் பெரும் முதலாளிகள் அங்குதான் இருக்கிறார்கள். அவர்களை இயக்குவது குடும்பமுறையா என்ன?

இந்தியாவில் ஊழல் உள்ளது, முதலாளிகள் உள்ளனர். ஆனால் நைக்கி ஷூ நிறுவனம் போல உழைப்பாளர்களின் குருதியில் நடந்துசெல்லும் ஒரு நிறுவனம் இன்னும் உருவாகவில்லை.

குடும்ப அமைப்பு என்ன செய்யும்? அது மனிதனுக்கு ஒரு உணர்வுப் பாதுகாப்பையும் லௌகீகமான இலட்சிய உணர்வையும் அளிக்கிறது. நீங்கள் சொல்வதற்கு நேர் எதிராகவும் யோசிக்கலாமே. தன் மக்களுக்கு அவப்பெயர் அல்லது பழி ஏற்பட்டுவிடக்கூடாதென்ற உணர்வால் அறக்கட்டுப்பாட்டுக்குள் வரும் மனிதர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

குடும்ப அமைப்பு என்பது குழந்தைகளுக்கு பாதுகாப்புக்காக இயற்கையால் உருவாக்கப்பட்டது. அது இல்லாமலாவதே செயற்கையானது. மூளைவளர்ச்சிக்கு அதிக நாள் பிடிக்கும் எல்லா உயிர்களிலும் ஏதேனும்முறையில் குடும்ப அமைப்பு உள்ளது.

ஊழலுக்குக் காரணம் அதைக் கட்டுப்படுத்தும் எதிர்விசையான மக்கள்பிரக்ஞை இல்லாததே. ஊழலுக்கு மக்கள் ஓட்டளிக்கும்வரை ஊழல் இருக்கும், ஆளும்

ஜெ

முந்தைய கட்டுரைநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு
அடுத்த கட்டுரைநான்காவது கொலை!!! -9