அனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதங்கள்

220px-Actor_Madhupal

புலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால்

ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- [சிறுகதை] மதுபால்

நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி

அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்

‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

அன்புள்ள ஜெ,

 

கதையை வெவ்வேறு படிமங்களை இணைப்பதற்கான ஒரு வகையான ‘பேச்சு’ ஆக வடிவமைத்திருக்கும் மதுபாலின் கதைகள் வாசிக்கையில் கொஞ்சம் அன்னியமாகத் தெரிகின்றன. ஆனால் அந்தக்கதையிலிருந்து படிமங்களை எடுத்துக்கொள்ளும்போது வேறு ஒரு கதை வெளிவர ஆரம்பிக்கிறது. கதையை இந்தவகையான எண்ணங்களின் ஓட்டமாக எழுதியவர்கள் தமிழில் நகுலன், ந.முத்துசாமி ஆகியோர்.

 

மதுபாலின் கதைகளுடன் நகுலன் கதைகளுடன் இருக்கும் நெருக்கம் ஆச்சரியமளிக்கிறது. நகுலன் இப்படித்தான் சிந்தனைகள், வெவ்வேறு புத்தக மேற்கோள்கள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு ‘பேச்சை’ உருவாக்கி கதையாக முன்வைப்பார். இது அவருடைய அபிப்பிராயமும் குறிப்புகளும்தானே என்ற எண்ணம் ஏற்படும். ’அவனுக்கு ராமகிருஷ்ணர் சொன்னது நினைவுக்கு வந்தது’ ‘அவனுக்கு கம்பனின் வரி நினைவுவந்தது’ என்றெல்லாம் நகுலனின் கதைக்குள் இயல்பாக வரும். ஆனால் ஒட்டுமொத்தமாக கதை முடியும்போது சில மனப்படிமங்களை விட்டுவிட்டுச்செல்வார். உண்மையில் அந்தக்கதையின் நோக்கம் அதுதான்.

 

இந்தக்கதைகள் எல்லாவற்றிலும் அதுதான் நடக்கிறது. அண்டைவீட்டார் வேகும் மணம் என்ற கதையில் ‘வேகிறது’ என்பது காய்ச்சலைக் குறிக்கிறது. வெந்து அவர்கள் ‘மணம்வீச’ ஆரம்பிக்கிறார்கள். கொடூரமான ஒரு படிமம். ஓடும்ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி? என்றகதையும் ரயில் என்றபடிமத்தையே முன்வைக்கிறது. ஓடும்ரயிலில் பாய்ந்தேறிக்கொண்டது அந்தக்குழந்தைதான். புலிகள் உறுமும்போது காடு வளர்கிறது கதையில் நீர் என்ற படிமம் ஒவ்வொரு பத்திக்கும் உருமாறிக்கொண்டே இருக்கிறது. புலியாகிறது. வற்றிப்ப்போன ஆறாகிறது. தலைக்குமேல் உள்ள குண்டாகிறது. துப்பாக்கி ஆகிறது. நகுலனுக்கு இப்படி ஒரு தொடர்ச்சி மலையாளத்தில் இருப்பது ஆச்சரியம்.

 

நான் நகுலனின் வாசகன். நிறையப்பேருக்கு நகுலன் பிடிக்காது. எனக்கு இருபது வருசங்களாக நகுலனின் பல படிமங்கள் நினைவில் நிற்கின்றன

 

ஸ்ரீனிவாஸ்

anita-agnihotri-3e63de95-7d6a-473c-bd30-fffe4c19f3d-resize-750

அன்புள்ள ஜெ

 

அனிதா அக்னிஹோத்ரியின் எல்லா கதைகளுமே அழுத்தமானவை. அதில் பெரும்பாலும் ஆட்சியின் பகுதியாக மாறிவிட்டிருக்கும் மனிதர்கள் வருகிறார்கள். எல்லா கதைகளிலும் திரும்பத்திரும்ப வருவது ஒன்றுதான். அந்த மனிதர்களுக்கோ அல்லது அரசுக்கோ பொறுப்பேற்றுக்கொண்டால் அழியவேண்டியதுதான். அரசு அழிக்கிறது. அல்லது மக்கள் [காடு] அழிக்கிறது. சர்வைவ் ஆக ஒரே வழிதான். பொறுப்பேற்றுக்கொள்ளாமல் இருப்பது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வருபவர்களைப்போல எங்கும் தொடாமல் உருண்டுகொண்டே இருப்பது.

 

ஆனால் நிலவொளியில் முற்றிலும் வேறுபட்ட கதை. அதன் கதைநாயகன் ஒரு கதாசிரியன். அவனிடம் வாழ்க்கை கேட்கிறது, நீ எந்தக்கதையை எழுதப்போகிறாய் என்று. நிலவொளியில் மனிதர்கள் ஒருவகை. பகலொளியில் அவர்கள் இன்னொரு வேசம் அணிகிறார்கள். எந்தக்கதையை எழுதப்போகிறாய்? அவன் தேர்வுசெய்யவே இல்லை. அவன் நிலவொளியில் கண்ட கடுமையான துக்கத்தை அப்படியே கனவாக மறந்துவிட்டு மேக்கப் போட்ட லீலாவின் முகத்தைத்தான் எழுதப்போகிறான். வேறுவழியில்லை.
ஆனா அதைக் கேக்காமலே நீ தூங்கிட்டே. இப்ப நீலக் கடலும் அதோட கரையும் தோட்டமும் சூரிய வெளிச்சத்துல மினுங்கிகிட்டிருக்கு. ஒவ்வொரு புது நாளும் இப்படித்தான் வருது, இரவோட நினைவெல்லாத்தையும் அழிச்சுகிட்டு. இருக்கட்டுமே. இதுக்குத்தான மனுசன் வாழுறான்.

 

என்று கதை முடியும்போது நிலவின் ஒளியில் நாம் எப்போதாவது பார்க்கும் ஆழத்தை எல்லாம் அழித்துவிட்டு இன்னொன்றை புனைந்துகொண்டு அதில்தான் வாழ்கிறோம் என்று நினைக்கத் தோன்றியது.

 

எம்.ராஜேந்திரன்

முந்தைய கட்டுரைராஜ் கௌதமன் பற்றி ஸ்டாலின் ராஜாங்கம்
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-8