விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

விஷ்ணுபுரம் விருதை ஒட்டி அந்த ஆசிரியர் பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுக்கும் எண்ணம் இயல்பாக உருவானது. ஞானக்கூத்தன் பற்றி ஓர் ஆவணப்படத்தை எடுக்கலாம் என்று நண்பர் கே.பி.வினோத் சொன்னார். அஜிதனின் காமிரா ஒன்று அவரிடம் அளிக்கப்பட்டது. அவரே இயக்குநர், ஒளிப்பதிவாளர். தொழில்முறை படத்தொகுப்பாளர் ஒருவர் ஏற்பாடு செய்யப்பட்டார். பதினாறாயிரம் ரூபாய் செலவில் அந்த ஆவணப்படம் உருவானது.

கே.பி.வினோத் அப்போது மிஷ்கினிடம் திரைத்தொழில் கற்றுக்கொண்டிருந்தார். ஆகவே மிகுந்த காட்சியொருமையும் கச்சிதத்தன்மையும் கொண்டிருந்தது அந்த ஆவணப்படம். ஞானக்கூத்தன் மிகவும் மகிழ்ந்து அதை இரு இடங்களில் அவருடைய நண்பர்கூடுகைகளில் வெளியிட ஏற்பாடு செய்தார். அவ்விழாவிலொன்றில் தமிழில் எழுத்தாளர்களைப் பற்றி எடுக்கப்பட்ட மிகச்சிறந்த ஆவணப்படம் அதுவே என அசோகமித்திரன் பேசினார்

கே.பி.வினோத்

அதன்பின் தொடர்ச்சியாக ஆவணப்படங்களை தயாரிக்கலானோம். எல்லாமே மிகக்குறைவான செலவில் எடுக்கப்பட்டவை. அண்மையில் மனுஷ்யபுத்திரன் ஒருங்கிணைப்பில், தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில், இந்தியாவின் முதல் ‘இலக்கியப்படைப்பாளிகள் ஆவணப்பட விழா’ நிகழ்ந்தது. அதில் பல படங்கள் விஷ்ணுபுரம் அமைப்பால் உருவாக்கப்பட்டவை. அது ஒரு வரலாற்றுக்கடமையைச் செய்தோம் என்னும் நிறைவை அளித்தன.

ஆனந்த்குமார், செல்வேந்திரன், சரவணவேல் ஆகியோர் விஷ்ணுபுரம் ஆவணப்படங்களை தயாரித்துள்ளனர். சாரு நிவேதிதா பற்றிய ஆவணப்படம் அவருடைய நண்பர் அராத்துவால் அவருடைய தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. சீ.முத்துசாமி பற்றிய ஆவணப்படம் மலேசியாவில் வல்லினம் சார்பில் ம.நவீன் அவர்களால் உருவாக்கப்பட்டது

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் வழக்கமாக சாகித்ய அக்காதமி போன்ற நிறுவனங்களாலோ பிற அறக்கட்டளைகளாலோ தயாரிக்கப்படும் ஆவணப்படங்களுடன் ஒப்பிட ஐந்திலொரு பங்கு செலவில் உருவாகின்றவை. ஆனால் எந்த சர்வதேச விழாவிலும் திரையிடப்படும் தரம் கொண்டவை. அந்த ஆசிரியரை முழுமையாக முன்வைக்கும் நோக்கம் கொண்டவை

இம்முறை யுவன் சந்திரசேகர் பற்றிய ஆவணப்படம் ஆனந்த்குமாரால் உருவாக்கப்பட்டுள்ளது. 17 டிசம்பர் மாலை நிகழும் விருதளிப்பு விழாவுக்கு முன் ஆவணப்படம் திரையிடப்படும்.

ஞானக்கூத்தன் ஆவணப்படம் இலைமேல் எழுத்து

இயக்கம் கே.பி,வினோத்

 

தேவதச்சன் ஆவணப்படம் நிசப்தத்தின் சப்தம்

இயக்கம் சரவணவேல் 

 

 

வண்ணதாசன் ஆவணப்படம் நதியின்பாடல்

இயக்கம் செல்வேந்திரன்

ராஜ் கௌதமன் ஆவணப்படம் பாட்டும் தொகையும்

எழுத்து இயக்கம் கே.பி.வினோத்

இசை பி.சி.சிவன்

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

சீ முத்துசாமி ஆவணப்படம் ரப்பர்விதைகளுடன் விளையாடும் கலைஞன்

இயக்கம் ம.நவீன்

தற்செயல்களின் வரைபடம் சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்

எழுத்து இயக்கம் கே.பி.வினோத்

இசை ராஜன் சோமசுந்தரம்

அந்தரநடை அபி ஆவணப்படம்

எழுத்து இயக்கம் கே.பி.வினோத்

இசை ராஜன் சோமசுந்தரம்

வீடும் வீதிகளும். விக்ரமாதித்யன் ஆவணப்படம்

ஒளிப்பதிவு இயக்கம் ஆனந்த் குமார்

இசை ராஜன் சோமசுந்தரம்

 

முந்தைய கட்டுரைதேவிபாரதிக்கு விருது, விளக்கம்
அடுத்த கட்டுரைபொன்முகலி கவிதைகள் – கடலூர் சீனு