இன்று, 23-12-2018 மாலை ஐந்தரை மணிக்கு கோவை ராஜஸ்தானி சங் [ஆர்.எஸ்.புரம்] கலையரங்கில் பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருந்து வழங்கும் விழா நடைபெறுகிறது. பேராசிரியர் ராஜ் கௌதமன் தன் துணைவியுடன் கோவைக்கு வருகை தந்துள்ளார்
நேற்று முதலே எழுத்தாளர் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. எழுத்தாளர்களை வாசகர்கள் நேரடியாகச் சந்தித்து வினாக்களை தொடுத்து பதில்களைப் பெறும் வகையிலான உரையாடல் அரங்கு இது.
விருது வழங்கிச் சிறப்பிக்கும்பொருட்டு வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி கல்கத்தாவிலிருந்து வருகைதந்துள்ளார். சிறுகதையாசிரியர், நடிகர், இயக்குநர் என்னும் தளங்களில் பங்களிப்பாற்றிய மலையாள எழுத்தாளர் மதுபால் விருதுவழங்கும் விழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து கோவைக்கு வருகைதந்துள்ளார்
நேற்று முதலே நடந்துவரும் எழுத்தாளர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி இன்றும் தொடரும். இன்று ராஜ்கௌதமன், அனிதா அக்னிஹோத்ரி, மதுபால் ஆகியோரை வாசகர்கள் சந்தித்து உரையாடுவதற்கான அரங்குகள் ராஜஸ்தானி சங்க் அரங்கில் ஒருங்கிணைக்கப்படும்
இன்று மாலை 5 30 மணிக்கு ராஜஸ்தானி சங் மையஅரங்கில் விருதுவிழா தொடங்கும். கே.பி.வினோத் இயக்கத்தில் ராஜ் கௌதமனைப்பற்றி உருவாக்கப்பட்டுள்ள பாட்டும்தொகையும் என்னும் ஆவணப்படம் திரையிடப்படும்
வாசகர்களும் நண்பர்களும் அரங்கில் நிகழும் எழுத்தாளர் சந்திப்புகளிலும் பின்னர் நடைபெறும் பரிசளிப்புவிழாவிலும் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டுமென்று கோருகிறோம்.